தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழர் பூமியில் புத்தரின் 'ஆக்கிரமிப்பு'-சிதைந்து போன தமிழர் அடையாளங்கள்

வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை...

புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார்.

இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார்.

எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை.

- சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் -

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான்.

மூன்று வருடங்களின் பின்னர் தாயக மண் நோக்கிய எனது பயணம் கடந்த டிசம்பர் 31ஆம் நாள் ஆரம்பமானது. வவுனியா நகரில் இருந்து எங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி "தேக்கவத்தை" என்ற இடத்தில் இறக்கி விட்டது.

இந்த ஊர் முன்னர் 'தேக்கங் காடு' என்றே அறியப்பட்டிருந்தது.

ஈரப்பெரிய குளத்திற்குப் பதிலாக படையினரின் சோதனை நிலையமாக இப்போது அந்த இடம் மாற்றப்பட்டிருக்கிறது.

அது ஒரு பழைய விளையாட்டுத் திடல். முகமாலை மாதிரியே அரைச் சுவர் வைத்த சோதனைச் சாவடிகள் அங்கேயும் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் ஓய்விடத்திற்கு அருகிலேயே பேருந்துகள் தரிப்பிடத்திற்கான நிலம் செம்மையிடப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்தச் சோதனை நிலையம் இன்னும் பல பத்தாண்டுகள் சிறப்பாக இயங்குவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்தும் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்து அங்கே வரத் தொடங்கின.

பிற்பகல் 2 மணிக்கு 6 பேருந்துகள் ஒரே அணியாக அங்கிருந்து புறப்பட படையினர் அனுமதித்தார்கள்.

நாங்கள் 12 மணிக்கே அங்கே போயிருந்தோம். எமது பொதிகள், பைகள் சோதனையிடப்படவில்லை அடையாள அட்டைகளின் பிரதிகள் வாங்கப்படவில்லை.

ஆனாலும் ஓய்விடத்தில் படை ஆட்கள் சொல்லும் படியே அமர்ந்து, அடையாள அட்டைகளை அவர்கள் பார்வையிட்ட பின்னர், அவர்கள் காட்டிய வழியில் நடந்து, அவர்களின் வழிகாட்டலில் பேருந்துகளில் ஏறிக்கொண்டோம்.

அந்த மைதானத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் இருந்து பயணிகளுக்கு பழங்களும் தேநீரும் விற்கப்படுகின்றன. விற்பவர்களில் சிங்களவர்களும் அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

பேருந்துகள் தாண்டிக்குளம் ஜோசப் முகாம் தாண்டி ஓமந்தையை அடைகின்றன. அங்கே எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன.

சோதனைச் சாவடிகளுக்கு பேருந்துகளில் இருந்து இறங்கி நெருக்கி அடித்தபடி ஓடும் மக்களையும் சோதனைக்காக கால்கடுக்கக் காத்திருப்பவர்களையும் மட்டும் தான் காணவில்லை.

அமைதிக்காகக் காத்திருந்த 2000 முதல் 2006 வரையான ஆண்டுகளில் இந்தச் சோதனைச் சாவடி வழியாக பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சென்று வந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் பல தடவைகள் சிங்களப் புலனாய்வாளர்களுடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்திருக்கின்றது.

அந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் தமது பொற்காலத்திற்காக ஏங்கி அப்படியே கிடக்கின்றன.

பழையபடியே பிரதான சாலையைத் தவிர்த்து சாவடிகளைச் சுற்றிக் கொண்டு பயணிக்கின்றன பேருந்துகள்.

தமிழீழம் வரவேற்கிறது பலகையைக் கண்கள் தேடுகின்றன. ஒன்றும் இல்லை. அங்கே முன்பு ஏதோ இருந்தது என்பதற்கான தடயங்களே கிடையாது.

அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த "பாஸ்" வழங்கும் இடம், தமிழீழ காவல்துறைப் பணியகம், தமிழீழ வருவாய்த்துறை நிலையங்கள் எல்லாமும் அழிக்கப்பட்டு விட்டன, எதுவும் இல்லை, இருந்த இடம்கூடத் தெரியவில்லை.

வெறும் பச்சைப் பசேல் என்ற புல் வெளிகளாக வீதி ஓரங்கள் அனைத்தும் விரிந்து கிடக்கின்றன.

ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரு மருங்கும் சுமார் அரைக் கிலோ மீட்டருக்கு இப்போது ஒன்றுமே இல்லை.

செம்புழுதி படிந்தபடி கிடந்த காட்டு மரங்கள் இல்லை. பாலை மரங்களும் ஏனைய பெரிய மரங்களும் அங்கு இருந்ததற்கான அடையாளங்களும் இல்லை.

மேற்கு நாடுகளின் முற்றங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட புல் தரைகளாக அவை காட்சி அளிக்கின்றன. ஏன் அகற்றினார்கள் தமிழீழத்தின் அத்தனை பெரிய மரங்களையும் அடிக்கட்டை கூட இல்லாமல்.....? புரியவில்லை.

அந்தப் புல் வெளிகளுக்கு நடுவே 200 மீட்டர் தூரத்திற்கு ஒன்றாக காவல் அரண்கள் -- கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

காட்டு மரங்கள் நட்டு, ஓட்டுக் கூரை போட்டு, அரை வாசிக்குச் சரிவாக அணைக்கப்பட்டுள்ள மண்ணில் அறுகம் புற்கள் வேர்விட்டு பசுமையாய் படர்ந்திருக்கின்றன. இந்த காவல் அரண்களுக்கு இடையே தான் மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

அவர்களுக்கு எல்லாமும் கொடுக்கப்படும் தகரங்கள் தான். காட்டுத் தடிகளால் நான்கு கப்பு நட்டு, கூரை போட்டு மேலேயும் தகரம், சுற்றி வரவும் தகரம். இது தான் இப்போதைக்கு அவர்களின் இல்லம்.

பக்கத்தில், மிக நெருக்கமாக, அவர்களுக்கு இருக்கும் துணை - படை ஆட்களின் காவல் அரண்கள் மட்டும் தான்.

மீளக் குடியமர்ந்த மக்களின் வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் காவல் அரண்கள் கண்ணுக்குப்படுகின்றன.

இல்லை.... நான் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்.... சரியாகச் சொன்னால், காவலரண்களில் இருந்து 20 அடி தூரத்தில் கொட்டகை அமைப்பதற்கு தான் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

வெய்யில் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மேலேயும் சுற்றி வரவும் தகரங்களும் தரப்பாள்களும் கொண்ட கொட்டகைகளில் வாழ்வு எப்படி இருக்கும் என்பதன் அனுபவம் 1996-இல் கிளிநொச்சியை விட்டு ஓடி ஒட்டுசுட்டானில் இருந்த போதே எனக்குத் தெரியும்.

அந்தத் தற்காலிகக் கொட்டகைகளின் அருகிலேயே பெண்களும், சிறுமிகளும், இளைஞிகளும் காணப்படுகிறார்கள். காவல் அரண்களில் படை ஆட்கள் இருக்கிறார்கள்.

சில இடங்களில் காவல் அரண்களுக்குப் பதில் காவல் துறையினரின் நிலைகள். மக்களின் தற்காலிகக் கொட்டில்களை விட அவை உறுதியானவையாகவும், அரை நிரந்தரமானவையாகவும் ஓடு போடப்பட்டவையாகவும் காட்சி தருகின்றன.

கிணறுகளுக்கு அருகில் காணப்படும் இந்தக் காவல் நிலையங்களில் உள்ளவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைப் பேருந்தில் இருந்தபடியே பார்க்க முடிகிறது.

பேருந்து அந்த இடத்தைக் கடக்கையில் 10 அடி தூரத்தில் அடுத்த கொட்டில் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களைப் பேருந்தில் இருந்தும் பார்க்க முடிகிறது.

வீதியோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இன்னும் உயிர் வாழும் வாய்ப்பு அரச மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அரச மரங்கள் காணும் இடங்களில் எல்லாம் அதைச் சுற்றி வெள்ளை வெளீர் என்று சுவர்கள் கண்ணைப் பறிக்கின்றன.

கௌதம புத்தர் அந்த மரங்களின் கீழே சத்தியத்தையும், அமைதியையும், வாழ்க்கையின் நிலையாமையையும், அகிம்சையையும் போதித்தபடி அமர்ந்திருக்கிறார்.

பேருந்துகள் மாங்குளத்தை நெருங்கிவிட்டன. முறிகண்டியில் அவை ஓய்வுக்காக நிறுத்தப்படும் என்றும் அங்கே ஒட்டுசுட்டான் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சாப்பாட்டுக் கடை ஒன்று திறந்திருக்கிறது என்றும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது உறவினர் முறிகண்டியில் தான் இருப்பார் என்பதும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.

பல வருடங்களின் பின்னர், முக்கியமாக கடைசிப் போரில் எப்படியோ உயிர் தப்பிய அவரைப் பார்க்கும் ஆவல் என்னிடம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமாகி விட்ட தமிழர்களில் நான் விதிவிலக்கா என்ன...? மாங்குளத்தில் உள்ள படைகளின் உணவு விடுதியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

சிற்றுண்டிகளுக்கான பட்டியல் முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலுமாக எழுதப்பட்டு நீட்டாகத் தொங்க விடப்பட்டிருக்கிறது.

புறப்படும் போது மதியச் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை எனினும் அங்கே எதையும் சாப்பிட மனம் இடங்கொடுக்கவில்லை. முறிகண்டியில் இனி பேருந்துகள் நிற்காது என்ற ஏமாற்றமும் எரிச்சலும் வேறு மனதை அலைகழித்தது.

சலத்தையாவது கழிப்போம் என்று எதிர்ப் புறத்தில் Toilet என எழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனேன். உள்ளே என்ன கந்தறு கோலமோ என நினைத்துக் கொண்டே பற்றைப் பக்கமாக ஒதுங்கினேன்.

சரசரப்புடன் ஏதோ ஒன்று நகர்ந்தது. கூர்ந்து பார்த்தபோது பச்சை உடையில் கைகளில் ஆயுதங்களுடன், தன் மீது தெறித்து விடாதபடிக்கு அந்த மனிதன் நகர்ந்து கொண்டான்.

இழுத்த ஜிப் அரைவாசியில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறையப் பேர் அந்த மனிதன் போன்றே நின்றிருந்தார்கள்.

பேருந்துகளில் வந்தவர்கள் காடுகளுக்குள் போய் விடாமல் இருக்கக் காவல்.

அந்த நாற்றத்திற்குள் நின்று காவல் செய்ய வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டிருந்தால், நான் என்ன செய்வது...? என் வேலை முடித்து வந்து பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

மாங்குளம் முகாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஏ-9 வீதிக்குக் கிழக்காக விரிந்து கிடக்கிறது. 200 ஏக்கரா அதற்கும் மேலா என்று எனக்கு மதிப்பிடத் தெரியவில்லை.

(மாங்குளம் சந்தியி்ல் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை. ஊர்களின் பெயர்கள் சிங்களத்தில் இரு முறை எழுதப்பட்டுள்ளன: ஒன்று - அந்த ஊர்களுக்கு உரிய சிங்களப் பெயர்கள் (யாப்பாணய). அடுத்தது - சிங்களவர்களால் அந்த ஊர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் (யாப்பா பட்டுவ)

முகாமைக் கடந்ததும் மீண்டும் ஒரு அரச மரம், சுற்றி வெள்ளைச் சுவர் அமைதியைப் போதிக்கும் பெரிய கௌதம புத்தர். இதுவரை பார்த்தவர்களிலேயே பெரியவர்.

மீண்டும் வீதியின் இரு மருங்கும் அதே காட்சிகள். எங்கெல்லாம் ஓடு போட்ட கட்டடங்கள் தெரிகின்றனவோ, அவை எல்லாம் ஒன்றில் படையினரின் முகாம்களாக, அல்லது காவல்துறை நிலையங்களாக இருக்கின்றன.

தன் தாய் நிலத்தில் தகரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறான் தமிழன்.

கனகராயன் குளத்தில் பாடசாலைக் கட்டம் அப்படியே இருக்கின்றது. வெள்ளைச் சீருடையில் சில மாணவர்களைக் காண முடிகிறது.

ஆனால், பாடசாலைகளைக் கடக்கும் போது எப்போதும் கேட்கும் அந்தத் தனித்துவமான இரைச்சல் சத்தம் கேட்கவே இல்லை.

ஆங்காங்கே இடிந்து போன கோயில்களின் எச்சங்கள் தங்களைப் புனரமைக்கப் போகும் மீட்பர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.

பேருந்துகள் கிளிநொச்சியை நெருங்குகின்றன.

அமைதிக்காகக் காத்திருந்த காலங்களில் எனக்கு மிக நெருக்கமான ஊர் அது. பணி நிமித்தம் பல தடவைகள் அந்த நகரத்துக்கு வந்து போயிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திற்குப் பின்னர் எனது பாதங்கள் அதிகம் நடந்தது அந்த நகரத்தில் மட்டும் தான்.

55 ஆம் கட்டையில் புலிகளின் குரல் ஒலிபரப்புக் கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது வேறு கோபுரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒன்றல்ல இரண்டு.

கிளிநொச்சியை நெருங்குகையில் புலிகளின் குரல் வானொலிப் பணியகம் இருந்த இடத்தில் சிறிலங்கா படைகளின் சமிக்ஞை மத்திய நிலையம் நின்று கொண்டிருக்கின்றது.

முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வலுவாக நிரந்தரக் கட்டங்களுடன் அது காட்சி தருகிறது. அந்த இடமே சமிக்ஞை தருவதற்குத் தான் உகந்தது போல் இருக்கிறது.

கிளிநொச்சி நகரைப் பார்ப்பதற்கு கண்களும் இதயமும் துடிக்கின்றன. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் ஓட்டையாகிப் போன சுவர்கள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அருகில் வேறு எவற்றையும் காணவில்லை.

பாண்டியன் உணவு விடுதி இருந்த இடம் தெரியவில்லை.

முன்னாலேயே பூங்காவில் முதிர்ந்த மரங்கள் தவிர பெரிதாக நினைவிடம் ஒன்று எழுந்து நிற்கிறது. போரில் இறந்த படையினருக்கானது அது.

மேலிருந்து வெடித்துப் பிளந்து பூமி நோக்கி ஒரு வேர் போவதாக அமைத்திருக்கிறார்கள். மிகப் பிரமாண்டமாக இருக்கிறது.

அதே இடத்தில் முன்னர் ஏதோ இருந்ததாக எனக்கு ஞாபகம். நினைவுபடுத்திப் பார்க்க விருப்பம் வரவில்லை.

கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதையின் மேற்குப் புறத்தில் ஒன்றும் இல்லை. கற்குவியல்கள் மட்டுமே கிடக்கின்றன.

சந்தை, கடைகள், மதுக் கடை, எதிர்ப் புறத்தில் இருந்த சேரன் வாணிபம்... கற்குவியல்களுக்குள் தேடினால் தடயங்கள் கிடைக்கக் கூடும்.

எல்லாமும்... எல்லாமுமே... போய்விட்டன. எஞ்சி இருக்கும் கடைகளில் சிங்களம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.

நெஞ்சு விம்மி வெடித்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

பேருந்தில் மயான அமைதி. எல்லோர் கண்களும் கடப்பதற்குள் பார்க்க முடிந்தவற்றைப் பார்வையால் விழுங்கிக் கொள்கின்றன.

புதிதாகக் கட்டப்பட்டிருந்த தமிழீழ காவல்துறை அலுவலகம் கூரைகள் ஏதும் இன்றி எஞ்சி நிற்கிறது.

முன்பு - அடிக்கடி போய் வந்திருக்கிறேன். சில வேளைகளில் இரவு நேர ஓய்வுகூட அங்கே தான் எடுத்திருக்கிறேன். மூன்று வருடங்களில் எல்லாமும் மாறி விட்டன.

அந்தத் தண்ணீர் தொட்டி மீண்டும் உடைந்து கிடக்கிறது. முன்னர் அதன் தண்டுப் பகுதி நொருங்கி தொட்டிப் பகுதி மண்ணில் அரைவாசியாகப் புதையுண்டு கிடந்தது. இப்போது அடியில் தண்டுப் பகுதியுடன் முறிந்து கிழக்கு நோக்கிச் சாய்ந்து கிடக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறைச் செயலகம், மாணவர் அமைப்புச் செயலகம் அமைந்திருந்த அந்தப் பகுதி இப்போது அதி உயர் பாதுகாப்ப வலயமாகத் தோன்றுகின்றது.

அந்த இடத்தில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை தொடங்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் படை முகாம்கள் மட்டுமே தெரிகின்றன.

அந்தப் பக்கத்தில் கடைகள் கொஞ்சம் எஞ்சி இருக்கின்றன. தமிழர்கள் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக அவற்றின் மேல் எழுதப்பட்டுள்ள தமிழ் வாசகங்கள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன.

மறு புறத்தில் - மருத்துவமனைப் பகுதியை கடந்து நிமிர்ந்தால், ஞானம் கிடைக்காதவர்கள் மனிதர்களே இல்லை.

அங்கும் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் கௌதம புத்தர். நயினாதீவு நாக விகாரை சின்னதாகத் தோன்றியது எனக்கு.

பெரிய அரச மரத்தை விட்டு சற்று வெளியே அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தால் தனது இருப்பு மறைக்கப்பட்டு விடும் என்று நினைத்தாரோ என்னவோ வீதியில் செல்வோரைப் பார்த்தபடியே தியானம் செய்கிறார்.

கண்ணைப் பறிக்கும் வெள்ளை மதில் சுவர்கள் கணிசமான பிரதேசத்தைச் சுற்றி வளைத்து நிற்கின்றன.

கிளிநொச்சிப் பிள்ளையார் கோயில் குண்டுக் காயங்களுடன் ஆனாலும் ஓட்டுக் கூரையுடன் முடிய கதவுகளுடன் இன்னும் அங்கேயே இருக்கின்றது.

இனி பேருந்துக்கு வெளியே பார்ப்பதை நிறுத்திக் கொள் என்று மூளையில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதனை மதிக்கத் தவறும் உணர்வுகள் பரந்தன் சந்தியில் அலை மோதுகின்றன.

விசுவமடு நோக்கிச் செல்லும் பாதையின் மூலையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் நிறுவனம் ஒன்று கட்டிவிட்ட ‘பருவகால வாழ்த்துக்கள்’ பதாகை தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தக் கட்டத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குச் சிங்களம் படிக்கவோ பேசவோ வராது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எதிரே இருந்த கடைகளில் சில திறந்திருக்கின்றன. சிற்றுண்டிச் சாலைகள் என்பது பார்த்தால் தெரிகிறது.

ராணுவ உருமறைப்பு உட்சட்டை அணிந்தவர்கள் சிலர் அங்கே அமர்ந்து தேநீர் அருந்துகிறார்கள். அங்கே எழுதி இருப்பவையும் அவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

இத்தனைக்கு மேல் இனியும் பார்க்க வேண்டுமா...? மனம் அங்கலாய்க்கிறது.

நான் பார்க்க விரும்பவில்லை என்பதற்காக உண்மைகள் மறைந்துவிடப் போவதில்லையே!

ஆணையிறவு....!

முகமாலை சோதனைச் சாவடியை மூடிவிடப் போகிறார்களே என்ற காரணத்திற்காக மாலை 4.30 மணிக்கு உந்துருளியில், கண்களில் நீர் தாரையாக வழிய, 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே, முகத்தில் வந்தறையும் உப்புக் காற்றை எதிர்த்து நான் ஓடித் திரிந்த பாதை.

பளையின் அந்த வளைவுகளைக் காணும் போது மட்டுமே என் உந்துருளியின் வேகம் குறையும். அந்தப் பக்கம் தமிழீழ காவல்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆட்கள் நிற்பார்கள் என்ற பயம்.

உப்புக் கடலைத் தாண்டி, வாடி வீடு இருந்த இடத்தில் முதலில் உடைந்து போன பீரங்கி வண்டி ஒன்று முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது எதுவும் இல்லை.

2000-இல், சிறிலங்கா படைகளிடம் இருந்து ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவிடம் நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருந்த இடத்தில் இப்போது ‘ஆனையிறவு மாடி வீடு’ என்ற மிகப் பிரமாண்டமான நினைவிடம் நின்று கொண்டிருக்கிறது.

சிமென்ட்டினால் போடப்பட்ட அடித்தளத்தின் மேலே செப்புப் படிமங்களால் ஆக்கப்பட்ட பல கைகள் முழு இலங்கையைத் தூக்கிப் பிடித்து நிற்கின்றன.


தாமரைப் பூவும் மொட்டும், அந்த இலங்கையின் ஆனையிறவுப் பகுதி வழியாகப் பின்னிருந்து முன்பாகக் கவிழ்ந்து கிடக்கின்றன.

பணிகள் இன்னும் நடைபெறுகின்றன. கீழே மலர்ச் செடிகளும் வண்ணத் தாவரங்களும் வளர்ப்பதற்கும் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், கட்டத்தைச் சுற்றி இருந்த மறைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதுவரை அதனைத் திறந்து வைக்கவில்லை. ஆனாலும், சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள்.

பளையில் விடுதலைப் புலிகளின் சோதனை நிலையங்களும் "பாஸ்" அலுவலகங்களும் இருந்தன என்பது என் நினைவில் மட்டுமே இப்போது இருக்கின்றது.

பளை நகருக்கு அருகிலேயே எனது தோழிக்கு பல ஏக்கர் தென்னந் தோட்டம் இருக்கிறது.

இப்போது வந்தால் அவளுக்கு அது எங்கிருந்தது என்று அடையாளம் தெரியுமா...? சொல்லத் தெரியவில்லை.

எறிகணைகளும் குண்டுகளும் கழுத்தறுத்த தென்னைகள் நின்றிருக்க வேண்டுமே..? 2001-இல் வந்த போது அவற்றைத் தானே முதலில் கண்டோம்.

இப்போது அந்தக் கழுத்தறுந்த தென்கைள் கூட இல்லை. ஆங்காங்கே சில மீட்டர் தூரங்களில் இருக்கும் காவல் அரண்கள் அதற்கான காரணத்தைச் சொல்லக்கூடும்.

இந்தப் பாதை முழுவதும், மீணடும், இடை இடையே கௌதம புத்தர் ஞானம் வேண்டித் தியானம் செய்து கொண்டே இருக்கிறார்.

முகமாலை சோதனை நிலையம் இருந்த இடம் இது தானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கக் கடினமாக இருக்கிறது. மிருசுவில் வந்துவிட்ட பின்னர்தான் இந்த இடங்களை எல்லாம் நாம் தாண்டி வந்து விட்டோம் என்பது உறைக்கிறது.

ஒரு நாடு ஒரே மக்கள் ((one nation one people) எழுத்துக்கள் மஞ்சள் பலகையில் கறுப்புப் படிமங்களாகச் சிரிக்கின்றன.

இந்தப் பயணத்தின் முடிவில் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதில் தவறு இருப்பதாக எனக்கு கிஞ்சித்தும் தோன்றவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்டதன் அடையாளமாக நிறுத்தப்படும் வரையில் கௌதம புத்தனும் ஒரு ஆக்கிரமிப்பாளனே தான்.

சித்தார்த்தனாகத் தான் பிறந்த போது செய்யத் தவறியதை சிறிலங்காவில் அவன் செய்கிறான்.

யாழ்ப்பாணம் அப்படியே தான் இருக்கிறது. அபிவிருத்தி அடைந்ததாய் ஊடகங்கள் சொன்னவற்றைக் கண்களால் காண முடியவில்லை.

வங்கிகள் மட்டுமே அவசர அவசரமாக குக்கிராமங்களையும் ஒழுங்கைகளையும் தேடிச் சென்று கிளைகள் திறக்கின்றன.

மதுச் சாலையின் முன்பாகத் தான் வங்கிக் கிளை அமைக்க இடம் கிடைக்குமா...? அது பற்றிக் கவலையில்லை; எங்கே இருந்தாலும் கிடைக்க வேண்டியது பணம் தானே...?

வாழ்ந்த இடங்களும் திரிந்த இடங்களும் இப்படிக் கிடக்கையில் மக்கள் என்ன சொல்கிறார்கள்...?

தாங்கள் பட்ட துன்பங்களின் வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.

ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த பழைய நண்பன் ஒருவனுடன் தெருவோரக் கடை ஒன்றில் தேனீர் அருந்தினேன்.

உதயன் படித்துக்கொண்டு அரசியல் பேசிய பெரியவர் ஒருவரிடம், "தளர்ந்து போகாதங்கோ, ஐயா, எல்லாம் வெல்லலாம். பேராட்டத்தை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது" என்றான் என் நண்பன்.

பத்திரிகையிலிருந்து கண்களை எடுத்து அவனை நேரே பார்த்து அவர் சொன்னார் -

“வெளிநாட்டில இருந்துவிட்டு வந்து இங்க போராடுறதைப் பற்றிக் கதைக்கக் கூடாது, ராசா. இங்கயே சீவிச்சால் தான் இங்க என்ன நிலைமை எண்டு விளங்கும்."

திரும்பி என்னைப் பார்த்தான் நண்பன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

நன்றி
தட்ஸ் தமிழ்




இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம் திரைப்பட விமர்சனம்

அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.

கதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவர் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.
அன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

காங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.



கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை


அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.

கருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.

கொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.



கதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த கதையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.

துப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.

எம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.

எம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.

இதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.

இதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட தலைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.

தத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.

ரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.

வந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.




அய்யோ கொலை பண்றாங்க


கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.

சிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.




கருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.

துப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.



துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.

இதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.

இதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.



கருணாநிதியின் மகள்


இன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.



தள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்


இறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விறுவிறுப்பான திரைக்கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.

தேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.


ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.


பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.


சண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


சவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

வைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.

மக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் கொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.


எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.


மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.


நன்றி
சவுக்கு



ராஜ பக்சே வெற்றி தமிழர்களை கொன்றதற்கு அல்லது இன அழிப்பு செய்ததிற்கு சிங்களவனின் பரிசு ?

ராஜ பக்சே வெற்றி தமிழர்களை கொன்றதற்கு அல்லது இன அழிப்பு செய்ததிற்கு சிங்களவனின் பரிசு ?

இலங்கை தீவின் அதிபர் தேர்தலில் ஆளும் அதிபர் ராஜபக்சே மற்றும் பொன் செகாவிர்க்கும் இடையில் நடந்த தேர்தல் போட்டியில் ராஜ பக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
ஊடகங்கள் கணித்த பொன்சேகாவின் வெற்றி பொய்யாகி உள்ளது. இது ஊடக வழி வந்த கணிப்பினால நடந்தது . களத்தின் நிலைமை, களத்தின் அட்டகாசங்களை, உண்மைகளை காரணமாய் கொண்டு யாரும் கணிக்க இயலவில்லை.
ஆனால் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கான வாழ்வும் உரிமையும் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை.
சரத் வெற்றி பெற்றிருந்தால் சிங்களவனிற்கு பிடிக்காத செயலை அதாவது தமிழர் இன அழிப்பை ராஜ பக்சே செய்தான் என்று சொல்லி இருக்கலாம் . ஆனால் அதிபரே திரும்பவும் வென்றிருப்பது , சிங்களவனுக்கு பிடித்த செயலைத்தான் அதிபர் செய்தார் என்ற பார்வையையும் நாம் பார்க்கவேண்டி உள்ளது.
சிங்களவனின் நோக்கம் தமிழன் அங்கே இருக்க கூடாதென்பதில் தெளிவாய் ஒவ்வொரு சிங்களனும் உள்ளான் .
தமிழன் சாவதை அரசியல் லாபமாய் மாற்ற பார்க்கிறது இந்திய அரசு . எரிகிற கொள்ளியில் பிடுங்கியது லாபம் என்ற நோக்கில் சீன உள்ளது .
தமிழ் நாட்டில் தமிழர்களை காப்போம் என்று அரசியல் கோடுகளை மீறி யாரும் வெளியில் வரவில்லை. பல கட்சிகள் ஈழதமிழர் பார்வையில் , இன்னும் தெளிவில்லாமல்தான் உள்ளன.
ஈழ தமிழர் விடயத்தில், சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் கொள்கைகளையும் மாற்றி பேசுகின்றன.
இந்திய அரசின் பிடியை மீறி தமிழக அரசு ஏதும் இலங்கையில், தமிழர் நன்மைகளை செய்த மாதிரி தெரியவில்லை. நிவாரண பொருட்களை அனுப்பியதை தவிர .
பல விடயங்களை நோக்கும் பொது உலக தமிழர் ஒன்று பட வேண்டிய காலம் இது. உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் ஒன்று பட்டு கோரிக்கைகளை போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால் இலங்கை தீவில், ஈழத்தில் ஒரு தமிழனும் வாழ முடியாது இது நிச்சயம்.

இது விதியின் பிழையல்ல - இந்தியாவின் பிழை. சில தமிழக அரசியல் அமைப்பின் அல்லது குழுக்களின் பிழை.

இது விதியின் பிழையல்ல - இந்தியாவின் பிழை. சில தமிழக அரசியல் அமைப்பின் அல்லது குழுக்களின் பிழை.
விதியின் பிழை என்ற தினமணியில் கீழ்க்கண்ட தலையங்கம் கண்டேன், அதை அப்படியே இங்கு மீள் பதிகிறேன் , எனது கருத்தை நமது தலையங்கத்தில் நான் சொல்லி விட்டேன்.

தினமணியின் தலைப்பு - விதியின் பிழை

இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, வேதனையைத்தான் தருகிறது.

வேதனைக்குக் காரணம் அதிபர் ராஜபட்ச மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பது அல்ல; மக்களாட்சித் தத்துவம் இப்படியெல்லாம் கேலிப் பொருளாகிறதே என்பதால்தான்.

70 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதும், எதிர்பாராத வித்தியாசத்தில் ராஜபட்ச வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தலைப்புச் செய்தி என்கிற அளவில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நம்பகத்தன்மை உடையதாக இருக்கிறதா என்றால் ராஜபட்சவின் மனசாட்சிகூட (அவருக்கு அப்படியெல்லாம் இருக்குமேயானால்) ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றவில்லை.

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை போட்டியில் களம் இறக்கியதுகூட ராஜபட்சவின் ராஜதந்திரம்தானோ என்று சந்தேகித்தவர்களுக்குத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில், ""எனது முன்னாள் தளபதியான பொன்சேகா என்னிடம் நேரிடையாகப் பேசுவதில் என்ன தடை இருக்க முடியும்'' என்று அதிபர் ராஜபட்ச வெளியிட்டிருக்கும் கருத்து மேலும் வலு சேர்க்கிறது.

தன்னை எதிர்த்தபோது வேறு எந்த எதிர்க்கட்சியும் போட்டியிடாமல் தனது நம்பிக்கைக்குரிய முன்னாள் தளபதியை நிற்க வைத்து, தோல்வி அடையச் செய்யும் ராஜதந்திரம் ராஜபட்சவுக்குத் தெரியாது என்று நம்ப முடியுமா?

அதெல்லாம் முடிந்துவிட்ட கதை. தேர்தல் என்று ஒன்றை நடத்தி, தனது பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார் அதிபர் ராஜபட்ச. பெருவாரியான தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பது மட்டுமல்ல, தமிழர்களின் மொத்த மக்கள்தொகையே கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் வெற்றியோ, தோல்வியோ தமிழர்களைப் பொறுத்தமட்டிலும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒன்றாகவே இருக்கும்.

குடியரசுத் தலைவரை முன்னிறுத்திய ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சி முறை என்றுதான் கருதப்பட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக முறையிலாவது, சிறுபான்மையினரின் குரலைப் பிரதிபலிக்க அந்தந்தப் பகுதியிலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடாளுமன்ற ஜனநாயக முறை இருப்பதால்தான் இந்தியாவில் பல்வேறு மாநில,இன, மொழி உணர்வுகள் மத்திய அரசிலும் ஆட்சி முறையிலும் பிரதிபலிக்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயக முறை இலங்கையில் இருந்தபோது இந்திய வம்சாவளித் தமிழர்களும், தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், யாழ்ப்பாணத் தமிழர்களும் ஆட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் பங்கு வகித்தனர் என்பதால்தான், நாடாளுமன்ற நடைமுறையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றினார்கள். இனஉணர்வு மிக்க சிங்களர்கள் பெருவாரியாக வாழும் இலங்கையில் சிங்கள இனத்தவர் மட்டுமே அதிபர் ஆக முடியும் என்கிற நிர்பந்தம் இந்த மாற்றத்தினால் நிலை நாட்டப்பட்டது.

இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மீண்டும் ஏற்பட்டு, தமிழ் பேசும் பகுதிகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிப்பு நடைபெறாதவரை தேர்தல் நடைபெறுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதும் கண்துடைப்பாகத்தான் தொடருமே தவிர, அதனால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இதை வலியுறுத்தித் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய இந்தியாவே மெüனமாக வேடிக்கை பார்க்கும்போது, ராஜபட்ச மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதொன்றும் அதிசயமில்லை.

உலக அரங்கில் தம்மை ஜனநாயகவாதியாகவும் மக்களின் பேராதரவு பெற்ற அதிபராகவும் நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ராஜபட்ச வெற்றி பெற்றுவிட்டிருக்கிறார். இனிமேல் அவர் சீனாவுடனான தனது நெருக்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதோடு, இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் கைகோர்த்து காய்களை நகர்த்தப்போவதும் நடைபெறப் போகும் நிகழ்வுகள். இந்துமகா சமுத்திரத்தில் இதுவரை இந்தியாவுக்கு இருந்த ஆளுமை பறிபோகப் போகிறது.

அதுமட்டுமல்ல, தமிழர்களுக்கும் மறுவாழ்வு தருகிறோம் என்கிற பெயரில் வட மாகாணங்களில் பெருவாரியாக சிங்களர் குடியேற்றம் நடைபெற இருப்பதும், தான் எல்லோருக்கும் பொதுவானவர் என்று காட்டிக்கொண்டு தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ராஜபட்ச அரசு ஈடுபடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அதைத் தட்டிக் கேட்கவும் முறியடிக்கவும் ஈழத்தமிழர்களுக்கு அங்கே சரியான தலைமை இல்லை. இந்திய அரசுக்கும் இனிமேல் தைரியம் இருக்காது. அப்படி நடைபெறாமல் இருக்க இறைவனின் திருவுளம் இரங்க வேண்டும்.

தானே ஒரு தேர்தலை நடத்தி, தானே முன்னின்று வெற்றியும் பெற்றுவிட்ட இலங்கை அதிபர் ராஜபட்ச, முதலில் தமிழர்களை ஏமாற்றினார். பிறகு இந்தியாவை ஏமாற்றினார். அப்புறம் உலகை ஏமாற்றினார். இப்போது ஒரு தேர்தல் நாடகத்தை நடத்தி சிங்களவரையும் ஏமாற்றி வெற்றி பெற்று இருக்கிறார். இது விதியின் பிழை அல்லாமல் வேறென்ன?

அழகிரியின் பிறந்த நாள் - ஒரு நூலும் - செய்திக்கு வந்த விமர்சனங்களும்.

மத்திய அமைச்சர் அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


தினமலரின் இணைய செய்தியை இங்கு மீள் பதிகிறேன் . அந்த செய்திக்கு வந்த விமர்சனங்களையும் அப்படியே இங்கு மீள் பதிகிறேன்.

ஒருவரை திட்ட வேண்டும் அல்லது திட்டியதை பார்த்து மகிழ வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகளும் பதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும் போது, அனைவரும் மதிக்கும் வகையில் 'பெருந்தன்மை' என்ற அரசியல் பண்போடும், அரசியலின் ஒவ்வொரு நிகழ்வும் படிகளும் மக்கள் ஜனநாயகத்தை உறுதி படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.

அரசியல்வாதியை நினைக்கும் போதெல்லாம், மக்கள் நிம்மதி பெறவேண்டும் நம்பிக்கை பெறவேண்டும்.

அரசாங்க பொறுப்பில் இருக்கும் போது கூடுதல் கவனத்தோடு கட்சி மாச்சர்யங்களை விட்டு விட்டு மக்கள் அனைவருக்குமான அமைச்சர் அல்லது மக்களுக்கான அரசியல்வாதி என்ற பெயர் பெறவேண்டும்.

அதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அதைத்தான் விமர்சனம் செய்பவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.

தினமலரின் செய்தி இங்கே :

மதுரை : தேர்தலில் தொடர் வெற்றியின் காரணங்கள் குறித்து மதுரையில் நடந்த, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விளக்கினார். அவர் பேசியதாவது: ஏழைகளுக்கு உதவத்தான் நான் மத்திய அமைச்சரானேன். வெறும் அழகிரியாக இருந்தால், நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். மத்திய அமைச்சர் எனில் உடனே கேட்பர். குடிநீர், சாலை வசதிகளை உடனே நிறைவேற்றுவர்.



முதல்வர் கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். நான் அப்போது தேர்தல் பணியாற்றினேன். கருணாநிதி இரவு, பகல் பாராமல் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று பார்வையிடுவார். கட்சி நிர்வாகிகள் அங்கு யாரும் இல்லையெனில் கண்டிப்பார். தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டதால், தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறுகிறேன்.



சைதாப்பேட்டை (1967) தேர்தல் பணியின் போது, கருணாநிதியை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பித்து குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு உதவி செய்தனர். துணிச்சலை நான் அவரிடம் கற்றேன்.



திருமங்கலம் இடைத்தேர்தலில், நான் சொன்னது போல் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வென்றதால் எனக்கு இப்பதவி கிடைத்தது. இந்த மத்திய அமைச்சர் பதவியே உங்களுக்கு உழைக்கத்தான்.



திருமங்கலம், கம்பம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணியாற்றும் போது கருணாநிதி, தொகுதி நிலவரம் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்பார். ஆனால், திருச்செந்தூர் தொகுதி தேர்தலின் போது அவர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு. பின், நான் சென்னை சென்றபோது, என் தாயிடம் இது பற்றி கூறினேன். அவர் கருணாநிதியிடம், "அழகிரி உங்கள் மீது கோபமாக இருக்கிறான்' என்றார். கருணாநிதி என்னிடம், "என்னடா கோபம்' என்றார். நான், " தொகுதி நிலவரம் குறித்து என்னிடம், ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே' என்றேன். அவர், " நீ வெற்றி பெற்று விடுவாய் என்பது தெரியும்' என சாதுர்யமாகக் கூறினார். இந்த சாதுர்யத்தை அவரிடம் கற்றேன். என்னைப் பற்றி இப்புத்தகம் எழுதியதால், எதிர்காலத்தில் பிரச்னை வரலாம் என ரத்தினவேல் நினைத்திருக்கலாம். ஆனால், நான் சொல்கிறேன்; 2011க்கு பின் அ.தி.மு.க.,வே இருக்காது; இதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.

வாசகர் விமர்சனங்கள் :

ஒருத்தர் கூட உன்னை பற்றி நல்ல கமெண்ட் எழுதவில்லை , அப்படியிருக்க , தி மு க விற்கு எதிர்காலம் ரொம்ப நாளைக்கு இல்லை. நீ சொல்லுகின்ற உதாரணம் ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட இப்படி பேசமாட்டான்.
by seeni முருகன்,london,India 1/30/2010 6:52:15 AM IST

அற்பத்தனம் கேவலம் !! மானமிகு என வாழ்ந்த திராவிட கழகத்தில் மானமற்ற ஒரு நபரின் பேச்சு !! என்ன செய்வது பணம் என் மக்களின் கண்களையும் காதுகளையும் குருடு செவிடாக மாற்றி விட்டதே !! ஐயோ
by j பிரதி,cbe,India 1/30/2010 6:48:04 AM IST

Both Dad & Son are Culprit.
You are the Right person to ''Relase the Book''

by S Ganesh,Chennnai,India 1/30/2010 6:40:03 AM IST

அப்பாவுக்கு தப்பாத பொறந்த தமிழ்நாட்டு திருடன்...தமிழ்நாட்ட வித்துடாதீங்க.
by Murugan,chennai,India 1/30/2010 6:27:27 AM IST

''அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை'' இத்தனை வருடம் கழித்து இதில் என்ன சந்தேகம் வந்தது?
by J Revolt,Malaysia,Malaysia 1/30/2010 6:26:42 AM IST

Don''t think urself.Think people.Most of the people can''t run the life.
by g vetrivel,chennai,India 1/30/2010 6:05:41 AM IST

கேள்வி : அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்? கேள்வி : முக ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது ஏன்?. கேள்வி: கனிமொழிக்கு மதிய அமைச்சர் பதவிகேட்டு டெல்லிக்கு கருணாநிதி சென்றது ஏன்?. இதற்கெல்லாம் காரணம் கருனநீதியிடம் கேட்டால் திறமையனவர்களுக்காக பதவி கேட்டேன் என்றார். அப்படிஎன்றல் திமுகவில் உள்ள மற்ற தலைவர்களெல்லாம் திறமையற்றவர்கள் என்றுதானே அர்த்தம். இதற்க்கு எல்லாம் ஒரே பதில் என்ன ?
by SELVA SELVARAJU,singapore,India 1/30/2010 6:04:00 AM IST

கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். இன்று கருணாநிதியே ஒரு மகா பெரிய பண முதலை. எதிர்க்க யார் இருக்கா ???
by siva SANKARKUMAR,lyon/france,India 1/30/2010 5:33:30 AM IST

காசு காசு காசு
by v சுரேஷ்,tamilnadu,India 1/30/2010 4:53:00 AM IST



இது ரொம்ப ஓவர் .....ஆணவத்துல ஆடறது உங்க பேச்சுல தெரியுது ....... தன்னை புகழ்ந்து எழுதின புத்தக வெளியீட்டு விழாவுல ..தன்னை பத்தி தானே புகழ்ந்துகிறது ரொம்ப கேவலமா, சில்லரைதனமா இருக்கு
by R PRABHU,SINGAPORE,JURONG WEST,India 1/30/2010 4:49:36 AM IST

ஆமாம் தொகுதி நிலவரம் பற்றி உங்களிடம் கேட்கவில்லை. ஏன் என்றால் உன் அப்பாவுக்கு தெரியும் நீ வெற்றி பெற்று விடுவாய் என்று, பணம், கள்ள வோட்டு மற்றும் ரவுடிசம் செய்வதற்கு தான் உன்னிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் உன் அப்பாவுக்கு. திருமங்கலத்தில் நீங்கள் நாற்பது ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று புள்ளி விவரத்தோடு சொல்லி வெற்றிபெற்றீர்கள். ஆனால் நான் நீங்கள் நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தேன். இந்த செய்தியை படித்துவிட்டு இதனை ஆதரிபவர்கள் ஒரு முட்டாள்கள், திரு ரிஸ்வான், உங்கள் கடைசி கருத்தை நான் படித்தேன், எல்லா வாசகர்களும் உங்களை கேலி செய்தார்கள், அதற்க்கு நீங்கள் கவலைபடாதீர்கள், கருணாநிதி எதை செய்தாலும் நல்லது, அம்மா எதை செய்தாலும் தவறு என்று கூறும் ஜென்மங்கள் இருக்கும் வரை நம்மை போன்றவர்களுக்கு சத்ய சோதனை. ஆட்சியில் உட்கார்ந்து இலவசங்கள் மற்றும் ரவுடிகளை வைத்து ஆட்சி செய்வதை விட கொடநாட்டில் இருப்பது எவ்வளவோ மேல். கொடநாட்டில் ரெஸ்ட் எடுப்பது என்ன தவறு, அம்மா என்ன முதல் அமைச்சராக இருந்துகொண்டு கொடநாட்டிற்கு செல்கிறாரா???? நீங்கள் கோடைகாலத்தில் சுற்றுலா செல்வதே இல்லையா????? கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் அன்பர்களே, சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சியில் இருக்கிறதா என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் இல்லை, யோசித்து, படித்தவர் போல கருத்து கூறுங்கள் திரு ரிஸ்வானை போல. என்ன ரிஸ்வான் நான் சொல்லுவது சரி தானே. தயவு செய்து ஸ்ரீதர் கலிபோர்னியா மற்றும் லியோ பரமக்குடியை தவிர்த்து.
by g சந்தோஷ்,vellore, tamilnadu,India 1/30/2010 4:33:43 AM IST

ஆமாம் மிஸ்டர் அழகிரி, உண்மைதான்! இருக்கும் பணத்தில் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கி விடுவீர்கள். அதிமுக எம்மாத்திரம்? அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை!!! உங்கள் குடும்பமே ''ஏழைப் பங்காளர்களாச்சே!!!'' அப்படியே தமிழ் நாட்டையும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்.
அப்பா பாராட்டுவார், தயாளு அம்மா பாராட்டுவார். குடும்பமே பாராட்டும், தமிழ் பேசும் மக்கள் தவிர்த்து.....
by r sugumaran,chnnai,India 1/30/2010 4:29:28 AM IST

As per Alagiri,there will not be AIADMK,in 2011.If AIADMK is not there,then MDMK,PMK,BJP,CPM,CPI, Vijayakant party,Puthiya Thamiligam etc,will also not be there,in TN,as per Alagiri.
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 1/30/2010 4:22:54 AM IST

இதல்லாம் ரொம்ப ஓவரா தெரியல ?
by பிரபு இராமசாமி ,new jersy,India 1/30/2010 4:09:30 AM IST

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை தான்.
by s காசி,ny,United States 1/30/2010 3:41:04 AM IST

தொடர் வெற்றிக்கு காரணம்தான் எல்லோருக்குமே தெரியுமே, பணம் தான்!
by K SK,BOSTON,India 1/30/2010 3:25:56 AM IST

இது ரொம்ப ஓவர் .....ஆணவத்துல ஆடறது உங்க பேச்சுல தெரியுது .......தன்னை புகழ்ந்து எழுதின புத்தக வெளியீட்டு விழாவுல ..தன்னை பத்தி தானே புகழ்ந்துகிறது ரொம்ப கேவலமா, சில்லரைதனமா இருக்கு
by SD SD,Oklahoma,United States 1/30/2010 3:24:16 AM IST

அழகிரி கடின உழைப்பாளி, திறமைசாலி, தன்னம்பிக்கைவாதி மேலும் சாதுரியமானவர். ஆனாலும் அதிமுகவை இருக்காது என்று உறுதியாக சொல்வது ஆணவம். தந்தைக்குப்பின், ஸ்டாலினுக்கும் இவருக்கும் ஏற்படும் சண்டையில் திமுக இருக்குமா?

by ரவி,TORONOTO,Canada 1/30/2010 3:12:01 AM IST

1967, தேர்தலின் பொது இவர் அப்பா குடிசைக்குள் போனாராம். ஏன் போனார் எதுக்கு போனார் என்று, கவிஞர் கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் மிக தெளிவாக எழுதி உள்ளார். தம்பி அழகிரி அந்த புத்தகத்தை ஒரு முறை படித்து பார்த்து பிறகு கருத்து சொல்லுங்க.... by G வைகோ priyan,karaikudu,Singapore 1/30/2010 7:03:03 AM IST


மத்திய மந்திரி அழகிரி அய்யாவுக்கு. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனா இவ்வளோ தூரம் ஜோக் அடிப்பீங்கன்னு நிச்சயமா நாங்க எதிர்பாக்கல. தமிழ் நாட்டுல தன்மானத்தை விற்க தமிழர்கள் தயாரா இருக்கற வரைக்கும் (அதான் வோட்டுக்கு காசு) உங்களுக்கு ஜே தான்.



உங்கள் வெற்றியின் ரகசியம் ஊர் அறியும். நீங்க எதுவும் சொல்லவே வேண்டாம். ?
by வெங்கடேசன்,Chennai,India 1/30/2010 2:31:49 AM IST

நன்றி
தின இதழ்





அண்ணா வெக்கி தலைகுந்து நிற்கிறேன்!

அண்ணா உன் முன், இன்று நான் மௌனித்து இருந்த அந்த இரண்டு நிமிடம், நான் உனக்கு வீரவணக்கம் செலுத்த அல்ல என் அண்ணா,எங்களின் ஆற்றாமையால் வெக்கி தலைகுந்து நின்றேன் அண்ணா.

உன்னை இழந்த அந்த மாபெரும் இழப்பிற்கு பின்னும் நாங்கள் 60,000 தொப்புள் கொடியின் இழப்பை விதியின் சதி என்றே விட்டு விட்டோம் அண்ணா, அது எங்களின் இயலாமை அல்ல ஆழிப்பேரலை என்று நாங்கள் எழுந்திருந்தால் எந்த அரசும் எங்களை அடக்க முடிந்திருக்காது என் அண்னா, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடக்கும் நம் மக்களை இனி "நாம் தமிழர்" என்று இணைய கூறினோம் அண்ணா, உறங்கி கிடக்கும் இந்த தமிழ் சாதியை எழுப்ப முயன்றோம் அண்ணா, துங்குகின்றவனை எழுப்பிவிடலாம் என் அண்ணா தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது அண்ணா. இருப்பினியும் எங்கள் முயற்சி தொடருந்து கொண்டே இருக்கிறது அண்ணா.

நமது தொப்புள்கொடி உறவுகள் அவர்களுக்கான உரிமையை பெற்றபிறகே நான் உன் முன் தலை நிமிரிந்து உன் கண்களை நோக்கி வீரவணக்கம் செலுத்துவேன் அண்ணா, அதுவே உண்மையான வீரவணக்கமாக இருக்கும் என்பதை நீ அறிவாய் என் அண்ணா... அது வரை உன் முன் தலை குனிந்தபடியே மௌனித்து இருப்பேன் அண்ணா.

நீ வைத்தகொண்ட தீயில் எரிந்துகொண்டு இருக்கும் உன் தங்கை...

நன்றி
லாவண்யா சம்பத்


'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா?

விருதுகள் பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை... வாங்கப்படுகின்றன, என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய மொழிப் படமாக 'வாரணம் ஆயிரம்' தேர்வு செய்யப்பட்டிருப்பதே அதற்கு சான்று என்கிறார்கள் திரையுலகில் நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற பொருமலில் தவிக்கும் தமிழ்ப் படைப்பாளிகள்.

'வாரணம் ஆயிரம்' என்ற தமிழ்ப் படம் தமிழரின் கலாச்சாரத்தையோ, வாழ்வியலையோ சொன்ன படம் அல்ல. ஆனாலும், அந்தப் படத்தை தமிழ் பிராந்தியத்துக்கான சிறந்த படம் என்று தேர்வு செய்துள்ளது விருதுக் குழு.

இதன் நிஜமான பின்புலம் என்ன?:

"எல்லாம் நக்மாதான். தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அவர், தனது தங்கையின் கணவர் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக 'வாரணம் ஆயிரம்' படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படம் என்ற விருதினைக் கொடுத்திருக்கிறார்கள். நல்ல தமிழில், தமிழ் படைப்பாளிகளால், தமிழ் மண்ணின் பெருமையும் வாழ்க்கை முறையையும் பறைசாற்றிய 'சுப்பிரமணியபுரம்' படம் இவர்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லை" என்கிறார் ஒரு படைப்பாளி.

சேரன் நடித்து கரு.பழனியப்பன் இயக்கிய 'பிரிவோம் சந்திப்போம்' படமும் விருதுக் குழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் படம் தமிழரின் ஒரு பிரிவினரான நகரத்தாரின் வாழ்வியலை மிகச் சிறப்பாகவே சித்தரித்திருந்தது.

இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் இப்படிச் சொன்னார்: "உண்மையில் கூட்டுக் குடும்பத்தின் அருமைகளை, மிகவும் நாகரீகமாக, நல்ல நெறிகளுடன் சொன்ன படம் 'பிரிவோம் சந்திப்போம்'. ஆனால் அவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருக்கிறது என்றார்.

இந்த ஆண்டில் வெளியான 'பூ' என்ற படத்தைப் பாராட்டாதவர்கள் இருக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்துக்கும் எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை. கரிசல் மண்ணில் பிறந்த ஒரு பெண்ணின் உணர்வுகளை, கந்தகத்தோடு கலந்துவிட்டு அந்த மக்களின் வாழ்க்கையை நெகிழ்வுடன் சொன்ன படம் அது.

அட, தமிழரின் வாழ்க்கை முறை என்ற விஷயத்தை விட்டுவிட்டாலும் அபியும் நானும், பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என சிறந்த திரைக்கதையுடன் வந்த நல்ல படங்களை விருதுக் குழு கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது சரி... இவற்றிலெல்லாம் நக்மாவின் சொந்தக்காரர்களா நடித்தார்கள் அல்லது டெல்லியில் 'வேலையைக் காட்டி' விருதை 'வாங்கும்' அளவுக்கு மேனன்களும் கேரளத்தை சேர்ந்தவர்களுமா இயக்கியிருக்கிறார்கள்?


நன்றி
தட்ஸ்தமிழ்



முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

2009 ஜனவரி 29 அன்று காலை 10.45 – லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ”இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்… எரிந்து கொண்டிருக்கிறார்” என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான் நினைத்தேன்.

என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ”அங்கே என்ன இருக்கு?” என்றேன். ”நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது” என்றார். ”நீ உடனே அந்த பேப்பரை எடு”என்று சொல்லி விட்டு நானும் அங்கே சென்றேன்.

அந்த இளைஞர் விழுந்து கிடந்த இடத்தில் கரும்படலம் பரவியிருந்தது. இருபத்தைந்து லிட்டர் தண்ணீர் பிடிக்கக் கூடிய வெள்ளை நிற கேன் ஒன்று அங்கே காலியாகக் கிடந்தது. எரிந்து கிடக்கும் அந்த மனிதர் தன் மேல் ஊற்றுவதற்கான பெட்ரோலை அந்த வெள்ளை நிற கேனில்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். போலிசார் அவரோடு சேர்ந்து அந்தக் கேனையும் எடுத்துச் சென்றனர். முதலில் அவர் குப்புற விழுந்து கிடந்ததாக நினைவு. போலீசார் வந்து கூட்டத்தை விலக்கி விட்டு எரிந்து கிடந்த அந்த இளைஞரின் அருகே அமர்ந்து வாக்குமூலம் பெறும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். குடும்ப பிரச்சனையா? காதல் தோல்வியா? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தனர். முழுக்க கருகி கரிக்கட்டையாகிக் கிடந்த அந்த இளைஞனோ ”யோவ் அதான் எரிஞ்சுட்டேன்ல தூக்கிட்டுப் போய்யா” என்று ஈனஸ்வரத்தில் வெறுப்போடு முனகிக் கொண்டிருந்தான். காக்கிச் சட்டைகள் கைபிசைந்து நின்றார்கள். பிறகு முத்துக்கமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை அருகிலேயே செய்வதறியாது யோசித்துக் கொண்டிருந்தேன்.

முத்துகுமாரின் கடிதம் – வாசிக்க படத்தின் மேல் சொடுக்கவும்

அப்புறம்தான் அந்தக் கடிதத்தை நான் வாசித்த போது அந்த நேரத்தில் இந்த மரணமும் அவர் எழுதி வைத்துள்ள மரணசாசனமும் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். உடனடியாக அக்கடிதத்தை ஸ்கேன் செய்வதற்காக வெளியில் வந்தேன். சாலையின் சந்திப்பில் இருந்த கடையில் ஸ்கேன் செய்து அக்கடிதத்தின் ஜெராக்ஸ் நகலை ஒரு முக்கியமான ஊடகவியலாளருக்கும் கொடுத்தேன். என்னுடன் இருந்த பத்திரிகை நண்பர் ஒருவர் அங்கிருந்த படியே முக்கியமான சில முக்கிய பிரமுகர்களுக்கு அக்கடிதத்தின் முக்கியத்துவம் உள்ள வரிகளை வாசித்துக் காட்டத் துவங்கினார். அவர் வாசித்துக் காட்டிய அந்த பிரமுகர்கள் அனைவருமே ஈழத் தமிழர் போராட்டங்களை வழி நடத்தியவர்கள். ஈழப் போராட்டத்திற்கு தாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தோற்றத்தையும் உருவாக்கியிருந்தார்கள்.

“உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.”

”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” என்ற வரிகளை வாசித்துக் காட்டி விட்டு, அத்தோடு நிற்காமல் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் கடிதத்தை வாசித்துக் காட்டி “இதை விடக் கூடாது, ஈழத் தமிழ் மக்கள் மீதான போரை முன்னெடுக்கும் இந்தியாவுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டவும், போர் நிறுத்தம் கோரவும் வந்து வாய்த்திருக்கும் அரிய தருணம் இது. ஒரு மாபெரும் எழுச்சியையும் மக்கள் திரள் போராட்டங்களையும் தூண்டி விடும் சாத்தியங்களை இக்கடிதம் கொண்டிருக்கிறது. ஆகவே நாம் போராட்டங்களைத் தூண்டி விட வேண்டும்” என்று சொன்னேன்.

நான் தொலைபேசியில் வாசிப்பதைக் கேட்ட சில நண்பர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு அப்படியே அலுவலக வேலைகளைப் போட்டு விட்டு ஒன்று கூடினோம். கடிதத்தை முதலில் டைப் செய்து சில இணையதளங்களில் சில மணிநேரங்களில் வெளியிட முடிவு செய்தோம்.

முத்துக்குமாரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே நெடுமாறன், வைகோ, வெள்ளையன் ஆகியோர் முத்துக்குமாரின் உடலருகே இருந்தனர். அங்கு எடுத்துச் செல்லப்பட்ட முக்கால் மணிநேரத்திற்குள் முத்துக்குமார் இறந்து போனார். பொதுவாக அறுபது சத தீக்காயம் அடைகிறவர்கள் கூட இரண்டு நாள் உயிரோடு இருந்துதான் மரணிப்பார்கள். ஆனால் முத்துக்குமார் எரிந்து ஒரு மணிநேரம் கூட உயிரோடு இருக்க வில்லை. ஏனென்றால் அவரது உடலில் எரிந்த தீ நின்று எரிந்த தீ. அது உடலை மட்டுமல்ல இதயத்தை கடுமையாக பாதித்தபடியால் உடனடியாக உயிர் போகும்படியாயிற்று.

சாவது என்று முடிவெடுத்து அதை ஒரு உண்மையான வீரனாக செய்து முடித்தவன் முத்துக்குமார். பொதுவாக தற்கொலையை அமல்படுத்துவது கண நேர முடிவு என்பார்கள். அந்தக் கணத்தில் சிந்தனை தடுமாற்றம் ஏற்பட்டால் அவர் அந்த முடிவைக் கைவிட நேரும். ஆனால் முத்துக்குமார் செத்தே தீருவது என்ற முடிவோடும், யாரும் தன்னைக் காப்பாற்றி விடக் கூடாது என்பதிலும் உறுதியாக நின்றான். தான் பலியாகி தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஒரு எழுச்சியை உருவாக்குவது; தனது மரணத்திற்கான சாசன வாக்குமூலம் ஒன்றை எழுதுவது என்பதும்தான் முத்துக்குமாரின் இறுதித் திட்டம்.

உண்மையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி எது என்று யாராவது கேட்டால் மரணசாசனத்தை விட அவர் செத்துப் போவதென்று முடிவெடுத்த அந்த தருணம். ஆம். அந்தக் காலத்தில் இங்குள்ள ஆட்சியாளர்கள் ஈழ மக்களுக்காக ஏதாவது செய்து விட மாட்டார்களா? என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருந்தது. எங்கே ஈழம் என்கிற இழவு வீடு நம் சந்தோசத்தை பிடுங்கி பதவியைப் பறித்து விடுமோ என்று பதறினார் கருணாநிதி. அந்த பயம்தான் கருணாநிதியை அசிங்கமான பல நாடகங்களை அரங்கேற்றத் தூண்டியது. கருணாநிதி மட்டுமல்ல ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என எல்லோருமே கருணாநிதிக்கு இணையான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஊடகங்களுக்கோ, ஆளும் வர்க்கங்களுக்கோ, தமிழார்வலர்களுக்கோ, கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ, நடிகை, நடிகர்களுகோ யாருக்குமே ஈழ மக்களின் கண்ணீர் பற்றிய அக்கறை இல்லை. போரால் கொல்லப்பட்ட மக்களின் கொடூரப் படங்கள் முதலில் இணையதளங்களில் மட்டுமே வெளியாகின . ஜெயா, கலைஞர், சன் என எந்தத் தொலைக்காட்சிகளும் போர் குறித்தும் தமிழ் மக்கள் கொல்லபடுவது குறித்தும் ஒரு வார்த்தை கூட வாயே திறக்கவில்லை. ஊடகங்களின் மௌனம், கருணாநிதியின் நாடகம், ஜெயலலிதாவின் பொறுப்பற்ற பேச்சுக்கள் என மக்கள், ஈழம் தொடர்பாக அருவறுப்படைந்திருந்தார்கள்.

இந்த அருவறுப்பு மக்களிடம் இருந்தது என்று சொல்வதை விட தமிழார்வலர்கள், முற்போக்குச் சக்திகள், அறிவுஜீவிகள் மத்தியில் அதிகம் இருந்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திடமும் இருந்தது கழிவிரக்கமும்,கையாலாகாத்தனமும் மட்டுமே. இந்த இரண்டு உண்மைகளையும் புரிந்து கொண்ட முத்துக்குமார் தன் உடலை முதல் முதலாக பலீபிடத்தின் மீது வைத்தான். தானே பலியானான் அதுதான் தீக்குளிப்பின் வரலாற்றுத் தருணம்.

சரி சம்பவத்திற்கு வருவோம். கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண அங்கே கொஞ்சம் இளைஞர்கள் கூழுமியிருந்தனர். அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மீது இளைஞர்கள் கோபத்தைக் காட்டினார்கள். அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முத்துக்குமார் தொடர்பாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் எனது பத்திரிகை நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு முக்கியமான தலைவரிடம் பேசியதைக் கூறினார். அதன்படி முத்துக்குமாரின் உடலை கொளத்தூருக்குக் கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க தீர்மானித்திருப்பதை அறிந்தேன்.

இந்த செய்தி எனக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்தத் தலைவரிடம் பேசும் போது ‘‘முத்துக்குமாரின் உடலை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் முன்னால் வைத்தி நீதி கேட்க வேண்டும்’”’ என்றிருக்கிறார். அவர் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிருக்கிறார். இப்போதோ அவர் சொன்ன பதில் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் அவரிடம் உணர்ச்சிவசப்பட்டு ‘‘முத்துக்குமாரின் உடலை சட்டக் கல்லூரி மாணவர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் ஒப்படைத்து விடுவதுதானே சரி. வேண்டுமென்றால் நீங்கள் பின்னால் இருந்து அவர்களுக்கு வழிகாட்டலாம் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார். அவர் என் நண்பருக்கு உருப்படியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

பல பிரமுகர்களிடம் பேசிய போதும் முழுமையான விபரங்களையோ, என்ன செய்யப் போகிறார்கள் என்பதையோ மறுத்து விட்ட்னர். நானும் எனது நண்பரும் கொளத்தூருக்குக் கிளம்பினோம், அங்கே ஒரு பந்தலின் கீழ் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சாயங்காலம் 6.45 மணி இருக்கும். அப்போது சுமார் முப்பது பேர் அங்கு குழுமியிருந்தனர்.

அப்போதே தலைவர்கள் மீதாதன நம்பிக்கை தகர்ந்து விட்டது. நாங்கள் எங்கள் கைகளில் இருந்த பணத்தைப் போட்டு முத்துக்குமாரின் கடிதத்தை நம்மால் முடிந்தவரை மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் கொண்டு செல்வோம் என்று இரவோடு இரவாக பிரதி எடுத்தோம். முத்துக்குமாரின் செய்தியை மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் கொண்டு சென்று சம்பவ இடத்திற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இது போன்ற எண்ணம் ஏராளமான இளைஞர்களுக்கு இருந்த படியால் அவர்களும் இது போன்ற போராட்டங்களை தூண்டி விடும் வேலைகளில் இறங்கினார்கள். கிளர்ச்சியை நம்பும் ஒருவன் என்ன செய்வானோ அதை நேர்மையாகச் செய்தோம்.

ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனம் குறித்து திருமாவளவனின், ராமதாஸின், வைகோவின், நெடுமாறனின் ஆதரவாளர்கள் இன்று வரை மௌனம் சாதிக்கிறார்கள்.

அப்பந்தலின் வலது புறமாக உள்வாங்கியிருந்த ஒரு வீட்டினுள் முக்கியஸ்தர்கள் அமர்ந்து ஆலோசனை நடத்தினார்கள்….நடத்தினார்கள்… நடத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள்? முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள், என்பது குறித்த கேள்விகள் அந்த இரவே பலருக்கும் எழுந்தது.

ஆனால் அந்தக் கேள்வியை கேட்கும் துணிச்சலோ, இவர்களுக்கு மாற்றாக முத்துக்குமாரின் விருப்பங்களை நிறைவேற்றும் மாற்று அரசியல் தலைமையோ அங்கு இல்லை. தலைமையற்ற இந்த கையறு நிலைதான் வைகோவையும், நெடுமாறனையும், திருமாவளவனையும் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தின் அதாரிட்டிகளாக தாங்களே அந்த உரிமையை எடுத்துக் கொள்ள வைத்தது. ஆனால் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவருமே முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் இவர்களுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் வேக வேகமாக முத்துக்குமாரின் சடலத்தை புதைக்கத் திட்டமிட்டவர்கள், எழுந்து வரும் எதிர்ப்பை சமாளித்து எப்படியாவது சவ அடக்கத்தை நடத்தி முடித்து விடுவது என்று காய் நகர்த்தினார்கள். முத்துக்குமாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் அவரது உடலை அடக்கம் செய்யாமல் ஈழப் போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இதுதான் முத்துக்குமார் சொல்கிற போராட்டத்தை கூர்மையாக்குதல். இரண்டாவது அவர் சுட்டிக் காட்டுகிற சட்டக்கல்லூரி மாணவர்கள். அவர்களிடமும், தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்த வழக்கறிஞர்களிடமும் முத்துக்குமாரின் உடலை ஒப்படைத்திருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளின் முதிர்ந்த வடிவமாக இன்னொரு கோரிக்கையும் அங்கு முன் வைக்கப்பட்டது. முத்துக்குமாரின் உடலை தமிழகம் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு சென்று தூத்துக்குடியில் இருக்கிற அவனது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. (இவர்களோ முத்துக்குமாரின் அஸ்தியை ஒரு அம்பாஸ்டர் காரில் கொண்டு சென்று கடலில் கரைத்தார்கள். அது யாருக்கும் தெரியாமல் போனது.)

மறு நாள் எப்படியாவது உடலை புதைத்து விட வேண்டும் என்பதுதான் அங்கிருந்த நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமா, ஆகியோரின் முடிவு. முத்துக்குமாரின் விருப்பத்தை மீறி, அங்கு குழுமியிருந்த ஏராளமான உணர்வாளர்களின் விருப்பத்தையும் மீறி அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் மாணவர்களும், வழக்கறிஞர்களும் வந்து நிலைமை சிக்கலான பின் அவர்கள் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டார்கள். தலைவர்கள் அவசரப்படுவதன் நோக்கமென்ன? ஒரு தன்னெழுச்சியான கிளர்ச்சி பிறந்து அது கையை விட்டுப் போய்விட்டால், ஈழத்திற்கான போராளிகள் என்ற வேடம் கலைந்து விடும் என்ற அச்சமே. தேர்தல் வழியில் அதிகார வர்க்க முறையில் இந்திய அரசின் ஒப்புதலோடுதான் ஈழத்தில் தலையிட முடியும் என்ற அடிமைத்தனமாக சிந்தனையும் யதார்த்தமும் அவர்களை இயக்கின.

அதனால்தான் “உண்ணாவிரதம், மனுகொடுப்பது என சம்பிரதாய போராட்டங்களை தூக்கி எரிந்து களம் காணுங்கள்” என்று அறைகூவல் விட்ட முத்துக்குமாரின் விருப்பத்திற்கு மாறாக முத்துக்குமாரின் உடலை உடனே புதைப்பதில் அக்கறை காட்டினார்கள். முத்துக்குமாரின் உடலை வைத்து கிளர்ச்சியை உருவாக்கும் அளவுக்கு மாணவர்களிடம் அரசியலோ, தலைமையோ இல்லாத சூழல். ஆதலால் தலைவர்கள் முத்துக்குமாரின் வீரச்சாவை ஒட்டி இயல்பாக எழும் ஈழ ஆதரவு கொந்தளிப்புகளை மீண்டும் மீண்டும் சடங்காக மாற்றுவதன் மூலம் அந்த சடங்கிற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த கருணாநிதிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

சந்தர்ப்பவாதிகளிடம் எப்படித் தோற்றோம்?

சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரு எதிர்ப்பியக்கத்தை கட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஒரு உதாரணம். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக வைத்துக் கொண்டே ஈழப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக போராடுவதாக நாடகமாடினார் டாக்டர் இராமதாஸ். அதனால்தான் ”யாரும் யாரையும் திட்டக் கூடாது, துண்டறிக்கை வெளியிடக் கூடாது, கொடும்பாவி கொளுத்தக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, பந்த் நடந்தால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும்” என்றெல்லாம் பேசி ஈழப் போராட்டங்களுக்கு ஆப்பு வைத்தார் ராமதாஸ்.

இப்படி ஈழத் தமிழினத்திற்காக போராட வந்த தைலாபுரத்து நாயகன் கடைசியில் போயஸ் கார்டனில் போய் கூட்டு வைத்தார். அந்தக் கூட்டு காங்கிரஸ், திமுகவின் கூட்டணிக்கு முன்னால் தோல்வியுற்ற பின்பு இப்போது மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர தூது விடுகிறார் இந்த தமிழினப் போராளி.

சாதாரதண போராட்ட வடிவங்களையே தவிர்க்கச் சொல்லும் தமிழினப் போராளிகளின் காலத்தில்தான் முத்துக்குமார் ” உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! ” என்று ஒடுக்கபப்டும் மக்கள் குறித்து சரியாகவே உணர்த்தி விட்டுச் செல்கிறான்.

திருமா அப்போது திமுகவோடும் கருணாநிதியோடும் அனுசரணையோடு இருந்தார். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் பதவியை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். தா.பாண்டியன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் முடிவில் இருந்தார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த நெடுமாறனோ ஜெயலலிதா கூட்டணியின் ஆதரவாளராக இருந்தார். திருமா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், இவர்களுடன் இல.கணேசன் உள்ளிட இந்துத்துவ சக்திகள். இந்த இந்துத்துவ சக்திகளையும் தமிழார்வலர்களையும் இணைக்கும் புள்ளியாய் நெடுமாறன். இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை.

இவர்கள்தான் ஈழப் போருக்கு எதிராக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்று களம் கண்டவர்கள். புலிகளும் தங்களின் தமிழக ஆதரவாளர்களாக நம்பியது இவர்களைத்தான். ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனமோ கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட எல்லா ஒட்டுண்ணி துரோகிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்து எழுச்சிக்கான புதிய பாதையைக் கோரி நின்றது. ஆனால் உணர்வு கொண்டு எழும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் முத்துக்குமாரை கொண்டு போய் வெகு வேகமாக புதைத்ததன் மூலம் இவர்கள் துரோகம் செய்தது முத்துக்குமாருக்கு மட்டுமல்ல ஈழத்தை ஒரு கருவியாகக் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் எழுச்சியையும் பாழ் படுத்து தமிழ் மக்களுக்கும் சேர்த்தே இவர்கள் துரோகம் செய்தார்கள். அந்த மரணசானத்தை வைகோவோ, திருமாவளனோ, ராமதாஸோ மேடையில் கடைசி வரை வாசிக்கவே இல்லை.

ஏனென்றால் அதை வாசித்தால் கருணாநிதி மனம் புண்படும் என்று திருமாவளவன் நினைத்தார், சோனியாவின் மனம் புண்படும் கூட்டணிக்கு குடைச்சல் வரும் என்று இராமதாஸ் நினைத்தார், ஜெயலலிதாவின் மனம் புண்படும் என்று வைகோ நினைத்தார், உண்மையிலேயே தமிழகத்தில் கிளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடுமோ என நெடுமாறன் நினைத்தார். அத்தனை பேரும் சேர்ந்து முத்துக்குமாரை ஊத்தி மூடினார்கள்.

”உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.” என்று முத்துக்குமார் எச்சரித்தது கருணாநிதியை…. ஆமாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திருடி அதை வைத்து பதவிக்கு வந்த சந்தர்ப்பவாதியான கருணா குறித்த எச்சரிக்கைதான் அது. ஆனால் ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் துரோகத்தை மட்டுமே பேசிய இவர்கள் முத்துக்குமாருக்குச் செய்த துரோகத்தை நாம் என்ன பெயரிட்டு அழைப்பது? முத்துக்குமார் சொன்ன சுயநலமிகள் என்ற வார்த்தை இவர்களுக்கு எவ்வளவு கச்சிதமாக கடைசியில் பொருந்திப் போயிற்று….

முப்பதாம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து அவரது பாட்டி உள்ளிட்ட சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் போய் நாங்கள் பேசினோம். ஆனால் அவர்களிடம் பேச விடாமல் எங்களை தடுத்தார்கள் சிலர், அவர்கள் நிலத் தரகர்கள் சங்க நிர்வாகிகள். அவர்கள் நாடார் என்கிற சாதியின் அடிப்படையில் முத்துக்குமாரின் உறவினர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். கடைசியில் முத்துக்குமாரின் உடலை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முடியாமல் ஊர்வலமாக கொண்டு சென்று புதைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் கருணாநிதி போலீசின் கொடூரமான அடக்குமுறை, இன்னொரு பக்கம் சந்தர்ப்பவாத ஓட்டுண்ணி அரசியல் தலைவர்கள் என மாணவர்களும் இளைஞர்களும் அவர்களால் தாக்கப்படும் சூழலும் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தது.

ஜனவரி 31&ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு மேல் முத்துக்குமாரின் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்ட போது பெரும் உணர்ச்சி நெருப்பும் மக்கள் வெள்ளமும் அந்த இடத்தை நிறைவித்திருந்தது. சாலையெங்கும் மக்கள் வெள்ளம். அவனது உடலை எடுத்துச் செல்ல ஊர்வலம் புறப்பட்ட போது தன்னெழுச்சியாக ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டிருந்தார்கள். வீதியெங்கும் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். வட இந்திய மார்வாடிப் பெண்கள் தண்ணீரும் மோரும் கொடுத்தார்கள். பலரும் தங்களின் வீடுகளுக்கு முன்னே வாசலில் நின்றபடி மெழுகுவர்த்தி ஏந்தி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவர்கள் எல்லாம் யார் திருமாவின் தொண்டர்களா? அல்லது வைகோவின் ரத்தத்தின் ரத்தங்களா? அல்லது இராமதாஸின் கைப்பிள்ளைகளா? இல்லையே? பொது மக்கள்………… எங்கோ நடக்கும் ஒரு பிரச்சினையைப் பார்த்து பொறுக்க முடியாமல் தன்னை எரித்துக் கொண்ட ஒரு தியாகிக்கு வணக்கமாவது செலுத்துவோம் என்று வீதிக்கு வந்தவர்கள்.

உண்மையில் இவர்கள் உட்பட, நாங்கள் உட்பட அனைவருமே தமிழகத்தில் நாம் எதிர்பாத்த எழுச்சி ஏற்பட்டு விட்டது என்றே நம்பினோம். அது உண்மையும் கூட. எழுச்சிக்கான கருவியைத்தான் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சடலமல்ல. மாறாக தமிழக மக்களை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய ஆயுதம் அது. ஒரு எழுச்சியை ஏற்படுத்த வல்ல எல்லா சாத்தியங்களோடும்தான் முத்துக்குமார் மரணித்திருக்கிறான். ஆனால் எழுச்சிக்கான மிகச் சிறந்த கருவியாக இருந்த………….. இனி எப்போதும் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பில்லாத முத்துக்குமாரை இவர்கள் வீணடித்து விட்டார்கள் என்கிற கோபம் எல்லோருக்குமே அந்த இடத்தில் இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் நீளமான ஊர்வலப்பாதை எங்கிலும் மக்கள் வெள்ளம். இறுதிவரை நாங்கள் சோர்ந்து போகவில்லை. மக்களும் சோர்ந்து போகவில்லை. சுடுகாட்டை ஊர்வலம் நெருங்கிய போது தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் காலவரையற்று இழுத்து மூடியது கருணாநிதி அரசு. இந்தச் செய்தி மாணவர்களுக்கு எட்டியதும் சினமடைந்த அவர்கள் முத்துக்குமாரின் உடலோடு சாலையிலேயே அமர்ந்தனர். உடலை திருப்பி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டுக்குக் கொண்டு செல்வோம் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார்கள். ஆனால் அப்போது மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைத்தவர்கள் யார் தெரியுமா?

“நான் ராஜபட்சேவை நேரில் பார்த்தால் கொல்வேன்” என்று சொல்லி விட்டு பின்னர் கொழும்புவிற்குச் சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி பொன்னாடை போர்த்தி பரிசும் வாங்கி சிரித்துப்பேசி வந்துவிட்டு… இப்போது மீண்டும் இனப்படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா, அந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்தான் மாணவர்களைக் கடுமையாக அங்கே தாக்கினார்கள். அவர்கள்தான் முத்துக்குமாரின் உடலை தரதரவென இழுத்துச் சென்று புதைத்தார்கள். ஆனால் முத்துக்குமாரின் உடல் எரிந்த சுடுகாட்டில் போடப்பட்டிருந்த மேடையில் எல்லா சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னால் முதல் ஆளாக மேடையில் ஏறி நின்றார் உலகத் தமிழர்களின் உள்ளூர்க் காவலன் திருமாவளவன்.

இப்படித்தான் முத்துக்குமார் மூட்டிய தீயை ராமாதாசும், வைகோவும், திருமாவும், நெடுமாறனும் சேர்ந்தே நீரூற்றி அணைத்தனர். கருணாநிதியோ அதை மணல் மூடி புதைத்தார். முத்துக்குமார் இன்று ஒரு நினைவாக மட்டுமே வேதனை கலந்த நினைவாக மட்டுமே நம்மிடம் இருக்கிறான். இவ்விதமாய் அந்த நாடகம் நள்ளிரவு ஒரு மணிவரை நீண்டது. சுடுகாட்டில் எரிந்த நெருப்பை விட கனதியான தீயொன்று எங்கள் உள்ளங்களின் எரியத் துவங்கியது அன்றுதான்.

முத்துக்குமாரின் மரண சாசனம் ஒரு அப்பாவியான புலி ஆதரவாளரின் கோணத்தில் முக்கியமாக ஈழமக்களின் துயரங்களை நினைத்து எழுதப்பட்டதுதான். அந்தக்கடிதம் அரசியல் தொலைநோக்கில் எழுதப்பட்டத்தல்ல. ஆனால் தமிழகத்தின் இயலாமை குறித்து உணர்ச்சிப் பிழம்பாய் எழுதப்பட்டது. அதில் கருணாநிதி, ஜெயாவைத் தாண்டி மற்ற தலைவர்களின் சந்தர்ப்பவாதங்கள் குறித்து இல்லை. எல்லோரையும் போல முத்துக்குமாரும் அவர்களை நம்பியிருக்கக்கூடும். முத்துக்குமாரை விடுங்கள், புலிகளும் கூட தேர்தல் முடிவு வரை இவர்களைத்தானே நம்பினார்கள். இன்று முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் துரோகிகளின் பட்டியலை முழுமையாக உணர்ந்திருப்பார். ஈழத்திற்கான வீழ்ச்சியை அறிவுப்பூர்வமாக பரிசீலிக்க முனைந்திருப்பார். ஆயினும் இன்று அவர் இல்லை. ஆனால் தமிழார்வலர்களும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்களாவது முத்துக்குமாருக்குப் பதில் அந்த சுயபரிசீலனையை செய்வார்களா?

மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி அதிகாலை அங்கிருந்து கலைந்து சென்றோம். முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்து ஒரு வருடம் ஓடிக்கழிந்து விட்டது. இப்போது மறுபடியும் இவர்கள் முத்துக்குமாரின் நினைவைப் போற்றுவதாக அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். ஊர்வலங்கள், மலர்க் கோபுரம், என முத்துக்குமாரை நினைவு படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு……….


நன்றி

வினவு



இந்தியாவில் 'தேசிய மொழி' கிடையாது,அதிரடித் தீர்ப்பு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.

சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில்,

உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்களில் உணவின் விலை, அதில் அடங்கியுள்ள பொருட்கள், தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிடும்போது கண்டிப்பாக இந்தியிலும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

காரணம், இந்தி நமது தேசிய மொழியாகும். நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியில்தான் புரிந்து கொள்கிறார்கள். எனவே இந்தி மொழியில் இவை இடம் பெறாமல் போவதால், அவர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் விவரம் தெரியாமல் போய் விடுகிறது என்றார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஜே.முகாபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தனர்.

மேலும் மனுதாரரின் வக்கீலைப் பார்த்து, இந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்று அங்கீகரித்து எங்காவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு எதிர் மறை பதிலை அளித்தார் வக்கீல்.

தொடர்ந்து நீதிபதி முகோபாத்யாயா பேசுகையில், இந்தி என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று மட்டுமே. அது தேசிய மொழி அல்ல. இதுவரை இந்தியை தேசிய மொழியாக அறிவித்து எந்த உத்தரவையும் யாரும் பிறப்பிக்கவி்லை.

நமது அரசியலமைப்புச் சட்டமும் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக கூறவில்லை.

எனவே இந்தி அல்லது தேவநாகரி மொழிகளில் பொருட்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை பயன்படுத்துவது அவரவர் உரிமை என்று தீர்ப்பளித்தனர்.



பாம்பாற்றில் தடுப்பணை: அமராவதி ஆற்றுக்கும் ஆபத்து! கேரள அரசின் அடுத்த அத்துமீறல்


தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையே இன்னும் முடிவுக்கு வராமல் இரு மாநில அரசுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் தலையில் இடிவிழுந்ததுபோல் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறது கேரள அரசு!

கேரளாவின் ஆணைமுடி சிகரத்தில் உற்பத்தியாகி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக வரும் பாம்பாற்றை தடுத்து கோவில் கடவு என்ற இடத்தில் அணை கட்டப்படும் என அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. அதற்காக 230 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது என்ற செய்திதான் திருப்பூர், கோவை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பையும், கோபத்தையும் உருவாக்கியதோடு, அம்மக்களின் உறக்கத்தையும் கெடுத்திருக்கிறது.

முதலில் உடுமலை அமராவதி அணையைப்பற்றி தெரிந்துகொள்வது நல்லது. காமராஜர் முதல்வராக வந்ததுமே கோவை, கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீர் ஆதாரங்களை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படும்படி அணை கட்டித்தர வேண்டும் என காமராஜரிடம் கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை மட்டுமல்ல. பல கோடி ரூபாயையும் திரட்டிக் கொடுத்தார்கள். வியந்துபோன காமராஜர், ‘நீங்களாக முயற்சி எடுக்கும்போது, இந்த அரசு சும்மா இருக்காதுண்ணேன்’ என்று சொல்லி 90 அடி உயரமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் உள்ளபடி, நான்கு டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட அமராவதி அணையை 1958ம் ஆண்டு கட்டிக்கொடுத்தார்.

இந்த அமராவதி அணைக்கு நீர் ஆதார பகுதியாக, கொடைக்கானல் மலையிலிருந்து உற்பத்தியாகும் தேனாறு, வால்பாறை, டாப்சிலிப் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு மற்றும் கேரள மலைப்பகுதியில் உற்பத்தியாகி வரும் பாம்பாறு இவை அனைத்தும்தான் அமராவதி அணையை நிரப்பி வருகிறது. இந்த மூன்று ஆறுகளும் சிறு சிறு ஓடைகளையும், அருவிகளையும் இணைத்து வந்து அமராவதியில் கலக்கிறது.

இந்த அமராவதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் கல்லாற்றில் தொடங்கி கரூர் வரையிலும் நேரடியாக 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், முப்பதுக்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்களும் பயன்பாட்டில் இருக்கிறது.

திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்நாடியாக இருக்கும் அமராவதி அணைக்கு, 60 சதவிகிதத்திற்கு மேலான நீர் ஆதாரம் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் பாம்பாறுதான். இந்த பாம்பாற்றை கேரளா வனப்பகுதியிலேயே தடுத்து அணை கட்டிவிட்டால் அமராவதி அணைக்கு நீரவரத்து பெருமளவு குறைந்துவிடும். அதனால் பசுமையாக இருக்கும் அமராவதி ஆற்றின் பாசனப்பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக் கூடாது என்றுதான் விவசாயிகள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் வரிந்து கட்டிக்கொண்டு இடைவிடாத போராட்டங்களை நடத்திவருகிறது ம.தி.மு.க. பாம்பாறு பிரச்னை குறித்தும் களத்தில் இறங்கியிருக்கும் அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பனிடம் பேசினோம். ‘‘அமராவதி அணையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதிக்குட்பட்ட ஆணைமுடி சிகரத்தில், பாம்பாறு தொடங்குகிறது. முழுவதும் கேரள வனப்பகுதியிலே பயணித்து வரும் பாம்பாற்றை தடுத்து கோவில்கடவு என்ற இடத்தில் அணை கட்ட ஜனவரி மாதம் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அமராவதி அணையின் தற்போதைய நிலைமையே மிகவும் மோசமானது. நான்கு டி.எம்.சி. கொள்ளளவு உள்ள அணைக்கு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை சரியாகப் பெய்தால் மட்டுமே மூன்றுமுறை அணை நிரம்பி முப்போகம் விளையும். முப்போகம் என்பது உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான். அடுத்து திருப்பூர், கரூர் மாவட்டங்களில் எல்லாம் இருபோகம், அல்லது ஒரு போகம்தான்.

அமராவதி ஆற்றை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய நிலங்கள் மட்டுமல்ல, உடுமலையை ஒட்டியே 13 காகித தொழிற்சாலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட இதர தொழிற்சாலைகள் உள்ளன. கேரள அரசாங்கம் தன்னிச்சையாக நீதிமன்றத்தின் ஆணையைக்கூட மதிக்காமல் பாம்பாறு பயணித்து வரும் காந்தலூர் பகுதியிலும், கோவில் கடவிற்கு அருகிலும் இரு செக் டேம்களை கட்டி தண்ணீரைத் தேக்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதைக்கூட நாம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மலைப்பகுதியிலே 230 கோடி ரூபாய் செலவில் அணையைக் கட்டி நமக்கு வரும் நீரை தேக்கி மின் உற்பத்தி செய்யப்போகிறார்களாம். இதெல்லாம் நம்முடைய அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது. ஆனால், கேரள அரசாங்கம் நம்மை சட்டை செய்யாமல் மத்திய அரசின் அனுமதியைப் பெற முயற்சிக்கிறார்கள். இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் முல்லைப் பெரியாறு அணையைத் தாரைவார்த்து கொடுத்ததைப் போல, பாம்பாற்றையும் கொடுத்துவிட்டு, செழிப்பான கொங்கு மண்டல மக்கள் குடிநீருக்குக் கூட கையேந்தி நிற்க வேண்டிய நிலை வந்துவிடும்’’ என்றார் ஆதங்கமாய்.

தென்னை வாரியத்தின் துணைத்தலைவரும், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவருமான செல்லமுத்துவிடம் பேசினோம். ‘‘கோவில் கடவு பகுதியில் கட்டப்படும் அணையின் மூலம் தேக்கப்படும் தண்ணீரை மூன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு மலைகளைக் குடைந்து டனல் அமைத்தும், 80 மீட்டர் அகலத்திற்கு பைப்களை அமைத்து தினமும் 40 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாக, கேரள அரசு தெரிவித்துள்ளது.

மின்சாரம் தயாரித்துவிட்டு தன்ணீரை மீண்டும் கீழேதானே விடுவார்கள். அதனால் நமக்கு நீர்வரத்து பாதிக்காது என்று நினைக்கக் கூடாது. அந்தத் தண்ணீரை அப்படியே திருப்பி பன்னாட்டு குளிர்பான நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதனால் நமக்கு பாம்பாறு மூலம் கிடைக்கின்ற தண்ணீர், முழுமையாகத் தடைபட்டுப்போகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கேரள அரசாங்கம் இந்த அணையைக் கட்டுவதே முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்கவும், தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்து பணம் ஈட்டவும்தான். நம்மைப்போல அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கி பாசனம் செய்ய அவர்களுக்கு வறட்சியான பூமி கிடையாது.

பாம்பாற்றைத் தடுத்து அணையைக் கட்டிவிட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதுபோல், அமராவதியின் கிழக்கு கரையோர திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் விளையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மஞ்சள் விவசாயம் முழுவதும் பட்டுப்போகும். பாம்பாற்றின் நடுவே அணை கட்டுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசும் அனுமதி தரக் கூடாது என விவசாயிகள் சங்கம், பாசன சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சேர்ந்து, வரும் பிப்ரவரி 6ம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்தப்போகிறோம்’’ என்றார் செல்லமுத்து.

முல்லைப் பெரியாறு கேரளத்திற்கும், காவிரியை கர்நாடகத்திற்கும், பாலாற்றை ஆந்திரத்திற்கும் தாரைவார்த்து கொடுத்ததைப்போல், பாம்பாற்றை பறிகொடுத்துவிடாமல் தடுக்கவேண்டும் என்பதே அமராவதி அணையை நம்பியிருக்கும் லட்சோப லட்சம் தமிழர்களின் வாழ்வாதார எதிர்பார்ப்பு!

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?