தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தலித் அடையாளம் எழுத்தாகி வந்த வரலாறு

ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் குறிப்பிட்ட ஒரு போக்கை முக்கியமானது எனத் தீர்மானிக்கலாம் என்றால் அதை எப்படி, யார் தீர்மானிப்பது? தலைவர்களா அறிவாளிகளா? அல்ல. குறிப்பிட்ட அந்தக் கட்டத்தின் இயங்கியல் விதியே அதைத் தீர்மானிக்கிறது. அக்காலகட்டத்தின் குரலைப் பிரதிப்பலிப்பவர்களாகத் தலைவர்களும் அறிவாளிகளும் இருந்துவிடும்போது அவர்களது குரலும் முக்கியமானதாகிவிடுகிறது. கடந்த இருபதாண்டு காலத் தலித் அடையாள உருவாக்கத்திற்கும் இதுவே பொருந்தும். 1990களில் தொடங்கி இதுவரையான தலித் அடையாளம் அரசியல், இலக்கியம், பதிப்புத் துறையில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அதன் விளைவுகளையும் குறித்த ஒரு விரிவான, ஆழமான பரிசீலனை அவசியமாகிறது.

தமிழில் தலித் இலக்கியம் சார்ந்த பதிப்பு முயற்சிகளின் தொடக்கமாக அம்பேத்கர் நூல்களின் பதிப்பு முயற்சிகளையும் சமூக அரசியல் தளத்தில் தலித் சமூகத்தைப் பாதித்த சில நிகழ்வுகள் தொடர்பான பிரசுரங்களையும் குறிப்பிடலாம். தொடக்கத்தில் அம்பேத்கர் எழுதிய நூல்கள், அவரது வாழ்வையும் பங்களிப்பையும் குறித்து எழுதப்பட்ட நூல்களின் பதிப்பு முயற்சிகள் அவ்வகையில் முக்கியமானவை. ஆனால் இத்தகைய நூல்களின் வெளியீடும் வாசிப்பும் அன்றைய தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் மத்தியில் மட்டுமே புழக்கத்திலிருந்தன. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் தலைவர் என்னும் அடையாளம் அழுத்தம் பெற்றிருந்தது.

1983இல் அம்பேத்கர் எழுதிய Mr.Gandhi and the Emancipation of Untouchables என்னும் நூலில் ஒரு பகுதி ‘இந்துக்களிடமிருந்து விடுதலை’ என்னும் பெயரில் நீலக்கொடி வெளியீடாக வந்தது. நீலக்கொடி சென்னையிலிருந்து வந்துகொண்டிருந்த மாதமிருமுறை இதழ் - இவ்விதழ் விற்பனையிலிருந்து கிடைக்கப் பெறும் லாபம் சென்னை நகரில் தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பு மக்களுக்கு இடம் வாங்குவதற்காக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அம்பேத்கரின் நூல்களில் காந்தியம் குறித்தும் பூனா ஒப்பந்தம் குறித்தும் எழுதப்பட்டவை மட்டுமே தமிழில் வெளியிடப்பட்டன. 1968இல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் சிந்தனைக் கூடம் சார்பாக ‘வட்டமேஜை மாநாடும் பூனா ஒப்பந்தமும்’ எனும் நூலை அன்பு பொன்னோவியம் பதிப்பித்தார். அதே ஆண்டில் பொன்னோவியத்தின் முன்முயற்சியில் 1927இல் எம். சி. ராஜா ஆங்கிலத்தில் எழுதிய Oppressed Hindus எனும் நூல் ஐவரின் கூட்டு மொழிபெயர்ப்பாகத் தமிழில் வெளியானது. 1980களில் பேரா. பெ. தங்கராசு அம்பேத்கர் குறித்து எழுதிய சில நூல்கள் முக்கியமானவை. அண்ணல் அம்பேத்கரின் அரும்பணி - ஓர் ஆய்வு, அம்பேத்கரின் மதமாற்றம், காந்தி - அம்பேத்காரின் கருத்து மோதல் போன்ற நூல்கள் அடிப்படையான ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டவை. 1990க்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் பல எளிய நடையில் எழுதப்பட்டவை. அவற்றில் பிரச்சார நோக்கம் மேலோங்கியிருக்கும்.

இம்முயற்சியின் தொடக்கமாக தலித் எழில்மலை ‘தலித் சாகித்திய அகாடமி’ எனும் அமைப்பின் மூலம் வெளியிட்ட அம்பேத்கரின் நூல்களைக் கூறலாம். 1985இல் அம்பேத்கர் எழுதிய Untouchables நூலின் மொழிபெயர்ப்பு ‘மண்ணின் மைந்தர்கள்-மறைக்கப்பட்ட வரலாறு’ என்னும் பெயரில் வெளியானது. தொடர்ந்து அம்பேத்கரின் இந்துமத மாற்றம் ஏன்? (1988), ராமனும் கிருஷ்ணனும் ஓர் புதிர், காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன? (1998) என்னும் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் வெளியாயின. 1912முதல் கோலார் தங்க வயல் சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்டு வந்த அயோத்திதாசரின் நூல்களைத் தொகுத்து ஐந்து தொகுதிகளாகத் தலித் சாகித்திய அகாடமி வெளியிட்டது. அயோத்திதாசரின் தமிழன் இதழ்களைக் கொண்டு ஞான. அலாய்சியஸ் தொகுத்த அயோத்திதாசர் சிந்தனைகள் (3 தொகுதிகள்) நூலுக்கு முன்பும் பின்பும் அந்த ஐந்து தொகுதிகள் வெளியாயின. அதே போல இரட்டைமலை சீனிவாசன் எழுதிய ஜீவிய சரித்திரச் சுருக்கம் (1999) என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் தலித் சாகித்திய அகாடமியால் வெளியிடப்பட்டது. தலித் சாகித்திய அகாடமி வெளியிட்ட நூல்களின் தொகுப்பிலும் மொழிபெயர்ப்பிலும் ரவிக்குமார், கு. மு. ஜவகர், கண்ணன். எம் போன்றோர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

அதன் அடுத்த கட்டமாகப் பல்வேறு அரசியல் மாற்றங்கள், விவாதங்கள் ஊடாக மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் முற்போக்கு இயக்கப் பின்னணி கொண்ட அறிவுஜீவிகளும் அம்பேத்கர் எழுதிய நூல்களை வெளியிட்டனர். திருப்பூர்ச் சமூகநீதிப் பதிப்பகம், பார்ப்பனியத்தின் வெற்றி என்னும் நூலை வெளியிட்டது. மதுரைக் கார்முகில் பதிப்பகம் வெளியிட்ட இந்தியாவில் சாதிகள், காந்தியம் ஆகிய நூல்களை வெளியிட்டது. தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலை 1992இல் வே. ஆனைமுத்துவின் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக முகிலன் மொழிபெயர்த்து வெளியிட்டார். தலித் அடையாளத்தை நவீனச் சொல்லாடல்களுடன் கட்டி எழுப்பிய அறிவாளிகளின் துணையோடு உருவான ‘விளிம்பு ட்ரஸ்ட்’ தலித் நூல்களை மட்டுமே வெளியிட்டது. ராஜ்கௌதமனின் தலித் பண்பாடு உள்ளிட்ட தொடக்க நூல்களையும் அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரது நூல்களையும் வெளியிட்டது ‘விளிம்பு ட்ரஸ்ட்’. இதன் பின்னர் உருவான ‘விடியல் பதிப்பகம்’ இம்முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது. இதே காலத்தில் அம்பேத்கர் குறித்த அருண்சோரியின் அவதூறுகளை மறுத்து ஒரு நூலை கி. வீரமணி எழுதினார். இவர்களுள் பெரும்பான்மையோர் பிராமண எதிர்ப்பும் இட ஒதுக்கீடு ஆதரவும் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் ஒன்றுதாம் என்ற கருத்தியல் பின்னணி கொண்டு அம்பேத்கர்-தலித் நூல்களை வெளியிட்டனர். இக்கருத்தியல் வரம்பை மீறித் தலித் அரசியலும் அம்பேத்கர்மீதான வாசிப்பும் செயல்படுவதை அவர்கள் பிராமண ஆதரவாகவும் ஷிசி-ஙிசி ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் காட்டி வருகின்றனர். இது ஒரு வகையில் ஆதரவு எனும் பெயரில் தலித் அரசியலைக் குறுக்கி நிறுத்தும் போக்காகும். பெரியார் காலத்தில் பேசப்பட்ட அம்பேத்கர் பற்றிய பேச்சுகளும்கூடப், பிராமண எதிர்ப்புத் தளத்தில் மட்டுமே வைத்து விளக்கப்பட்டன. தலித்துகளின் தனித்துவம், போராட்டக் களங்கள், அமைப்பாக்க முயற்சிகள் சார்ந்து பெரியாரின் ஆதரவு வெளிப்பட்டதில்லை. காந்தி, காங்கிரஸ், பிராமணர் ஆகியோர் எதிர்ப்பு எனும் அடிப்படையில் பெரியாரின் கருத்தியலுக்கு அணி சேர்ப்பதுபோல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு எனும் நூலைக் குத்தூசி குருசாமி மொழிபெயர்ப்பில் 1937இல் சுயமரியாதை இயக்கம் வெளியிட்டது. ஆனால் அவ்வாறான முயற்சிகள் நீடிக்கவில்லை. பிற்காலத்தில் அம்பேத்கர் தனித்த இயக்கத்தை உருவாக்கித் தமிழ்நாட்டு தலித் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார். அந்த இயக்கங்கள் பற்றிய பேச்சு வந்தபோது தலித்துகள் அவை குறித்து இருக்கட்டும் என்று சொல்ல முடிந்த பெரியார் அந்த இயக்கங்கள் குறித்த ஒவ்வாமையைக் கொண்டிருந்தார் என்று சொல்ல முடியும். 1954 குடியாத்தம் இடைத்தேர்தலில் ஒருவரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி. திமுகமீதான ஈகோவின் காரணமாகக் காமராஜரை வலியப்போய் ஆதரித்தார் பெரியார். இந்திய அரசியலமைப்பில் ஷிசி/ஷிஜி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டபோது அம்பேத்கர் பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு அவர் மக்களுக்கு மட்டுமே வழியமைத்துக்கொண்டார் என்னும் பொருள்படப் பேசினார் பெரியார். ( ஈவெரா சிந்தனைகள், தொ: வே. ஆனைமுத்து, பக்:813) இதே பிரச்சினை இன்றுவரையிலும் கருத்தியல் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்படுகிறது.)

தலித் பதிப்பு முயற்சியைப் பொறுத்தவரையில் 1990களில் உருவான தொண்டு நிறுவனப் பின்புலம் குறிப்பிடத்தக்கதாகும். மதுரை ஐடியாஸ் மையம் தேவகோட்டைப் பகுதியில் தலித் மக்கள் பெற்ற வழிபாட்டு உரிமை குறித்த போராட்ட நூலை 1992இல் சிறுவாச்சியில் ஒரு வெறியாட்சி எனும் பெயரில் வெளியிட்டது. தொடர்ந்து தேவகோட்டை திருவாடனை சாதியாக்க எதிர்ப்புப் போர் (1994). கிளர்ந்தெழுகிறது கிழக்கு முகவை(1996) 14. 3. 1992இல் திருநெல்வேலி குறிஞ்சாக்குளத்தில் நான்கு தலித்துகள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டதைக் குறித்து நெய்வேலி வெண்மணி கலைக்குழு வெளியிட்ட சிறுநூல் ஆகியன குறிப்பிடத்தக்கவை. பாமாவின் கருக்கு நாவலை வெளியிட்டதும் மதுரை ‘ஐடியாஸ் மையம்’தான். மதுரை ‘தலித் ஆதார மையம்’ சார்பாக 1995இல் வே. அலெக்ஸ் வெளியிட்ட பேரையூர் பெருமாள் பீட்டர் குறித்த கரிசலில் ஓர் ஊருணி எனும் நூல் களஆய்வு, ஆதாரங்கள், பின்னிணைப்புகளுடன் வெளியானது. இந்நூலும் 1996இல் ரவிக்குமார் கொணர்ந்த தலித் இதழ் மூலமாக வெளியிடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுவெளியீடுகளும் தலித் கருத்தியல் தளத்தை விரிவாக்கின. இதே காலத்தில் சற்று முன்னும்பின்னுமாக வெளியிடப்பட்ட பள்ளிகொண்டா கிருஷ்ணகுமார் தனித்தும் வேறு சிலருடன் இணைந்தும் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘அண்ணலின் கடைசி செய்தி’, ‘மதமாற்றம் ஏன்?’, ‘அமைச்சர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்தேன்?’ போன்ற அம்பேத்கர் நூல்களின் சிறு வெளியீடுகளும் குறிப்பிடத்தக்கவை.

தொண்டு நிறுவன வெளியீடுகள் தவிர்த்து தலித் செயல்பாட்டாளர்களாக இருந்த பலரும் தொண்டு நிறுவனப் பின்புலத்திலிருந்தும் தனித்தும் நூல்களைப் பதிப்பித்தனர். தலித் முரசு, கலகம், துடிபாரதிபிரபு ஆகியவை இவ்விதத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. விடியல் பதிப்பகமும் புத்தர் வழிகாட்டு மையமும் இணைந்து வெளிட்ட நூல்கள், திருச்சி சமூகச் சமத்துவப் பாசறை வெளியிட்ட வசந்த்மூனின் எழுத்துகள், ஆதித் தமிழர் பேரவையின் சார்பாக ம. மதிவண்ணன் எழுதிய ‘அருந்ததியர்களாகிய நாங்கள்’ என்னும் அருந்ததியர் இன மக்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்த நூல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. திருமாவளவன் இந்தியா டுடே இதழில் எழுதி நூலாக்கம் பெற்ற அடங்க மறு, அத்துமீறு ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இம்முயற்சிகளின் தீவிரம் காரணமாக இன்றைக்குத் தலித் நூல்களுக்குப் பதிப்பக வாய்ப்பு பெருகியுள்ளது.

புத்தாயிரத்தில் தமிழ் தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் சில புதிய போக்குகள் அழுத்தம் பெற்றன. தலித் படைப்புகள் பலவும் நூலாக்கம் பெற்றதோடு, பதிப்பகங்களின் விரிந்த ஆதரவையும் பெற்றன. புதிய படைப்பாளிகளின் வருகையை இது ஊக்குவித்தது. 1990களில் எழுதத் தொடங்கிய அழகிய பெரியவன், இமையம், என். டி. ராஜ்குமார் ஆகியோரது தொகை நூல்கள் அதிக அளவில் வெளியானது இக்கால கட்டத்தில்தான். இவர்களில் இமையம் தவிர்த்த பிறர் தலித் அரசியல் ஓர்மை பெற்றவர்களாக இருப்பதை விரும்புகிறவர்களாக உள்ளனர். இக்காலத்தின் புதிய படைப்பாளிகளாக ஜே. பி. சாணக்யா, ஆதவன் தீட்சண்யா, சோ. தர்மன், சுகிர்தராணி ஆகியோரைக் கூறலாம். தன் மொத்தப் படைப்புகளின் அளவை ஒரே நாவலின் மூலம் தாண்டிய சோ. தர்மனின் கூகை நாவல், தலித் இலக்கியத்தின் முக்கிய வரவு. தலித் இலக்கியம் எனும் வகைக்குள் மட்டுமே அடக்க முடியாதவை ஜே. பி. சாணக்யாவின் படைப்புகள். ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகளில் அரசியல்ரீதியான அழுத்தம் அதிகம். கு. உமாதேவி, பாரதி நிவேதன், யாழன் ஆதி, வெ. வெங்கடாசலம் போன்றோரும் இக்காலத்தில் எழுதியுள்ளனர். தலித் விமர்சனம், கலை என்று செயல்பட்ட ராஜ்கௌதமனும் கே. ஏ. குண சேகரனும் சுயசரிதை நூல்கள் தந்தனர். பாமா, சிவகாமி, இமையம் ஆகியோரின் படைப்புகளும் ரவிக்குமாரின் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன.

இக்கால வெளியில் நிலைபெற்ற தலித் இலக்கியத்திற்கு அடிப்படையாக 1990களில் நடத்தப்பட்ட விவாதங்களும் சில அழுத்தமான படைப்பு முயற்சிகளும் இருந்தன. இப்புத்தாண்டில் எழுதப்பட்ட படைப்புகள்தாம் புத்தாயிரத்தில் தொகுப்புகளாயின. தலித் இலக்கியத்தின் போக்கு குறித்த குழப்பங்களும் அக்காலத்தில் எழுந்தன. தலித் வாழ்வைப் படைப்பாக்குதல், பொதுவான இலக்கியச் சூழலின் அங்கீகாரத்தைக் கோருதல் எனும் அம்சங்களை நிறைவுசெய்துவிட்ட தலித் இலக்கியம் அடுத்து என்ன செய்வது? என்று குழம்பி நிற்பது உண்மைதான்.

தற்காலத்தில் தலித் வாழ்வை எழுதிமுடித்துவிட்டதாகக் கருதும் எழுத்தாளர்கள் பலரும் எழுதுவதைக் குறைத்துக்கொண்டதோடு புனைவல்லாத எழுத்துக்களிலும் கவனம் செலுத்துபவர்களாக மாறிவிட்டனர். 1990களில் தலித் இலக்கியம் குறித்து முன்வைக்கப்பட்ட வரையறைகள் இவ்வெழுத்துக்களைக் கட்டுப்படுத்திவிட்டன. தலித் வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை முன்வைப்பதற்கு மாறாக வாழ்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளவும் காரணமாகிவிட்டன. தலித் இலக்கியம்-பண்பாடு குறித்த வரையறைகளை சாதியச் சமூகம் தங்களுக்கு எதிரான ‘கலகமாக’க் கருதாமல் தலித்துகளுக்குரிய அடையாளங்களாக அங்கீகரித்ததுதான் மிச்சம். வரையறைகளை வகுத்தவர்களே அதைக் காப்பாற்ற முடியாமல் தடு மாறிப்போய்விட்டார்கள். பதிப்புச் சூழலின் சாதகமான நிலை, வரையறைக்கு வெளியே எழுதப்பட்ட படைப்புகள் ஆகிய பின்புலத்தில் தங்களின் எழுத்தைப் பொதுவான எழுத்தாகப் பார்க்கக் கோரும் தலித் படைப்பாளிகளின் குரல் இக்காலத்தில் முனைப்பாக வெளிப்பட்டது. அதைப் புரிந்துகொள்வதற்கு மாறாக இக்குரல்களைத் தலித்துகளுக்கு எதிரானதாகச் சித்தரிப்பதில் பயனேதுமில்லை. அடையாளம்சார் எழுத்தின் இவ்வகை “மயக்கம்” குறித்துத் தலித் படைப்பாளிகளே உப்பக்கம் காண வேண்டும்.

திராவிட இயக்கம், பெரியார் மீதான விமர்சனத்தை 1990களில் எழுந்த புதிய அரசியல் சொல்லாடல்களின் பின்னணியில் விவரித்த வகையில் தலித் அறிவுலகம் திருப்பத்தை எட்டியது. பிராமணரல்லாத திராவிடக் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற இடைநிலைச் சாதியினரின் வன்முறைகள், வலிமைபெற்ற தலித் அமைப்புகள் ஆகியவற்றின் பின்புலத்தில் எழுப்பப்பட்ட இவ்விமர்சனங்களைத் தமிழ் அறிவுலகம் கடுமையாக எதிர்கொண்டது. இதன் தொடர்ச்சியாகத் தலித்துகளின் தனித்துவத்தை நிறுவிக்காட்டும் தலித் வரலாறு சார்ந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனத்திற்கு மாற்றாகத் தலித் அடையாளத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் தலித் வரலாற்றைக் கட்டமைக்க, தலித் அறிவுஜீவிகள் எடுத்த முயற்சிகளைத் தலித் அரசியல் அமைப்புகளால் இனங்காண முடியவில்லை. எதிர்ப்பைக் கட்டமைக்கத் தேர்தலை மட்டுமே ஒரே வாய்ப்பாக அவை நம்பி இயங்கின. தேர்தல் அரசியல் தரும் நெருக்கடிகளும் தொலை நோக்குப் பார்வையற்ற அரசியல் தலைமைகளும் தலித் அரசியல் கட்சிகளைக் கூட்டணி, கூட்டணிக்கான சமரசம் என்னும் நிலைமையை நோக்கி விரட்டின. அமைப்பின் பயன், அரசியல் ஆதாயம் என்னும் எல்லைக்குள் அது சுருங்கிப்போனது. தலித் அடையாளங்களை நிறுவும் கருத்தியலை அந்த இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. திராவிட இயக்கம் குறித்த விமர்சனங்களையும் தலித் வரலாறு குறித்த ஓர்மையையும் முன்னிறுத்தி இயங்கிய ரவிக்குமார் அரசியலில் நுழைந்ததோடு திராவிடக் கட்சி அரசியல் குறித்த விமர்சனத்தைக் கைவிட்டுவிட்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால் தலித் வரலாறு எனும் திசையில் நம்பிக்கை தரத்தக்க முயற்சிகள் வெளிப்பட்ட காலமாகப் புத்தாயிரத்தின் இந்த முதல் பத்தாண்டுகளைச் சொல்ல முடியும்.

ரவிக்குமார் 2003 முதல் 2004வரை தாய் மண் இதழில் நந்தன் வரலாறு குறித்து எழுதிய தொடர், சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள கௌதம சன்னாவின் க. அயோத்திதாசர், கோ. ரகுபதியின் ஆதி மருத்துவர், பூவிழியன் எழுதிய கே. பி. எஸ். மணி, தலித் தலைவர்களுள் ஒருவரான டி.எம். மணி எழுதிய செந்தமிழ் நாட்டுச்சேரிகள், சாதி ஒழிந்தது ஆகிய நூல்கள், முதன்முறையாக 400 பக்க அளவில் நூலுருப் பெற்றுள்ள அன்பு பொன்னோவியத்தின் உணவில் ஒளிந்திருக்கும் சாதி, தமிழவேளும் வடிவேல் ராவணனனும் எழுதியுள்ள இம்மானுவேல் சேகரன் குறித்த நூல்கள், எழில். இளங்கோவன் எழுதிய அருந்ததியர் இயக்க வரலாறு உள்ளிட்ட சிறிதும் பெரிதுமான நூல்கள், 1920களில் இலங்கையிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடன் இதழின் இரா. பாவேந்தன் தொகுத்த முதல் தொகுதி, நான் எழுதிய தீண்டப்படாத நூல்கள், வரலாற்றை மொழிதல் ஆகிய நூல்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளியாகியுள்ள வரலாறு சார்ந்த நூல்களாகும். 2009இல் மதுரை எழுத்துப் பதிப்பகம் வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் தலித் வரலாறு குறித்த திசையில் முக்கிய வரவுகளாகும். இக்காலகட்டத்தில் மறுபதிப்பு பெற்ற நூல்கள் முதுகுளத்தூர் கலவரம், முதுகுளத்தூர் பயங்கரம், புத்தர் அருள் அறம் ஆகியவை. அ. ஜெகநாதன் பதிப்பித்த முதுகுளத்தூர் குறித்த நூல்கள், தலித் அடையாளம் தீவிரமாகப் பேசப்பட்ட 1990களில் வெளியாகியிருந்தால் அதன் அர்த்தம் மேலும் பொருத்தம் பெற்றிருக்கும். மதுரையிலிருந்து அ. தமிழ்முரசு தொகுத்துள்ள சிவப்பு ஏடு எனும் நூல் பேசப்பட வேண்டிய ஒன்று. 1990களில் மதுரை வட்டாரத்தில் கொல்லப்பட்ட 27 தலித்துகளின் வரலாற்றை வாழ்க்கைக் குறிப்புகளோடும் புகைப்படத்தோடும் இத்தொகுப்பு தந்துள்ளது. இவை தவிர தீண்டப்படாத தியாகம், விடுதலை வீரர் ராஜீ, ரெட்டியூர் பாண்டியன், வஞ்சிநகரம் கந்தன், புதைந்த பாதை போன்ற சிறு நூல்கள் வெளியாகி வட்டார வரலாறு, நுண் வரலாறு என அர்த்தப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு திருமாவளவனின் பிறந்த நாளை ஒட்டி 25 நூல்கள் வெளியிடப்பட்டன. திருமாவளவன் குறித்த நூல்களோடு சகஜானந்தர் போன்றோரின் நூல்களும் அவற்றில் அடங்கும். போதி, கலகம், பரிணாமம் போன்ற தலித் வரலாற்றைப் பேசும் இதழ்களும் இக்காலத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பத்தாண்டு என்னும் காலக் கோட்டில் வெளியான இவ்வரலாற்று நூல்கள் கூறும் சேதிகள் பல. தலித் ஆளுமைகள், போராட்டங்கள், இதழ்கள் என்று வெளிப்பட்ட இவற்றுள் தலித் இயக்கங்களின்/தலைவர்களின் கருத்தியல், வெற்றி தோல்விகள், அரசியல் பயணம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. நம் வரலாற்று நம்பிக்கைகளைப் புரட்டிப் பார்க்கும் வலிமைகொண்ட ஆதாரங்கள் இவற்றில் உள்ளன. இக்காரணத்தினாலேயே இவை மௌனமாக்கப்படவும் செய்கின்றன. இந்நூல்கள் முன்வைக்கும் கருத்தியலுக்கு எந்த மதிப்பையும் தந்துவிடக் கூடாதென்று தமிழ் அறிவுலகம் விரும்புகிறது. தலித் அரசியலை, சூழலில் செல்வாக்குப் பெற்றிருக்கும் பெரும் அதிகார அரசியலின் உப அடையாளமாகக் காட்டும் போக்கை மறுப்பதோடு, இது போன்ற ஏமாற்றங்களிலிருந்து விடுபடும் விழிப்புணர்வையும் இப்பிரதிகள் கொண்டிருக்கின்றன.

ஆதிதிராவிடன் இதழ் குறித்து தொகுப்பு ஒன்று வெளியான பின்னாலும் அவ்விதழைக் கற்பனை இதழ் என்று சொன்ன பொய்யை யாரும் மாற்றிக்கொள்ளவில்லை. (எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலின் முதல் பதிப்பில் (1996) இடம்பெற்ற இத்தவறான கருத்து அந்நூலின் திருத்தப்பட்ட பதிப்பிலும் (2009) மாற்றப்படவில்லை.) எம். சி. ராஜா பற்றித் தமிழில் உலவிய அத்துணை கதைகளும் அவரைக் குறித்த ஒருவரியைக் கூட வாசிக்காமலேயே உருவானவை என்பதைத் தற்போது வெளிவந்துள்ள எம். சி. ராஜா சிந்தனைகள் எனும் தொகுப்பைக் காணும்போது அறிய முடிகிறது. தலித் ஆவணங்களைப் பாதுகாத்து ஒன்றிரண்டு நூல்களை மட்டுமே எழுதிய அன்பு பொன்னோவியம், தி. பெ. கமலநாதன் ஆகியோரும் தலித் ஆளுமைகள் குறித்து எழுதிய ஏ. பி. வள்ளிநாயகமும் புத்தாயிரத்தில் மறைந்தனர். தலித் இயக்கம் குறித்த ஸ்தூலமான ஆதாரங்களோடு எழுதிய அன்பு பொன்னோவியம், தி. பெ. கமலநாதன் ஆகியோரைவிடவும் அரசியல் விருப்பத்தை எழுத்தாக்கிய ஏ. பி. வள்ளிநாயகம் தமிழ் அறிவுலகத்தால் கொண்டாடப்பட்டதன் காரணம், அவர் திராவிட அரசியலிலிருந்து தலித் அரசியலை வேறுபடுத்திக் காட்டாததுதான்.

இத்தலித் வரலாற்று நூல்களில் சில தவிர மற்றவை தேர்ந்த கோட்பாட்டு அணுகுமுறைகளோடு எழுதப்படாமல் பதிவு என்னும் அளவில் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன என்பது ஒரு பலவீனம் என்றாலும் வளர்த் தெடுக்கப்பட வேண்டிய கூறுகள் இவற்றுள் நிரம்பவே உள்ளன. மேலும் இவ்வரலாற்று நூல்களிலிருந்து திரட்டப்படும் கருத்தியலை அரசியலோடு இணைக்கும் ஓர்மையும் அதற்கான சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க அரசியல் அமைப்புகளும் இல்லாமல் போய்விட்டன. இந்நிலையில் பழைய வரலாற்றைத் தேடுவது, எழுதுவது ஓர் அடையாளம் என்கிற அளவிலேயே நின்றுவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. இந்நூல்கள் குறித்துத் தலித் அல்லாதோர் மட்டுமல்ல, தலித் அடையாளத்தின் மூலம் ஊடக வாய்ப்பைப் பெற்றுவிட்ட தலித் அறிவுஜீவிகள் சிலரும் மௌனம் காக்கின்றனர். அவர்களே இந்தப் பத்தாண்டுகளில் எதுவுமே நடைபெறவில்லை என்கிற தன்னல நோக்குடைய கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.

தலித் சாதிகளாகச் சொல்லப்படும் வகுப்பினரின் தனித்த வரலாற்றுத் தேடலும் வரலாற்று எழுதியலும் முக்கிய விடயங்களாக உள்ளன. தேவேந்திரர்களின் இம்மானுவேல் சேகரன் குறித்த வரலாறும் முதுகுளத்தூர் கலவரம் குறித்து அவ்வரலாற்றாளர்கள் பேசும் நோக்கும் புதியவை. அருந்ததியர்களின் வரலாற்றுத் தேடல் தொடக்க நிலையிலேயே உள்ளது எனினும் அது குறித்த தீவிர விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தலித் அரசியலில் தங்கள் பிரதிநிதிகளின் இடம் குறித்த வேட்கை நிகழ்கால அரசியலில் தங்களின் இருப்பு குறித்த ஆதங்கமாகவும் இருக்கிறது. தீவிரம் பெற்றுள்ள தலித் அரசியல் கட்சிகள் சொந்தச் சாதி அடையாளத்தில் சுருங்கிப் போனதின் விளைவாகவே இதனைப் பார்க்க முடியும். அதே வேளையில் தங்களைத் தனித்த சாதியாக நிறுத்திக்காட்டிப் பிற தலித் சாதிகளைத் தாழ்ந்தவையாகப் பார்க்கும் சாதிய மனோபாவமும் வரலாற்றுரீதியான நியாயத்தைப் பெற்றுத் தந்துவிட இவ்வரலாற்று நூல்கள் முயல்கின்றன. இவ்வாறான நியாயங்கள் தவிர இத்தகைய போக்கிற்குப் பின்னால் நின்று தங்கள்மீதான தலித் விமர்சனத்திலிருந்து காப் பாற்றிக்கொள்ளும் பிராமணரல்லாத அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இதிலிருக்கிறார்கள். தலித்துகள் இலக்கியத் தளத்திலும் அரசியல் தளத்திலும் நடத்திய போராட்டங்களுக்கான பயன்களையே 2000த்தில் பதிப்பு வாய்ப்புகளாக அரசியல் அங்கீகாரமாகப் பெற்றனர். ஆனால் கடந்த காலத்தைப் போன்றே போராட்டங்கள் இப்பத்தாண்டில் குறைந்துள்ளன. அவர்கள் படைப்புத் தளத்திலும் அரசியல் தளத்திலும் எவ்விதச் சலுகையையும் கோராமல் செயல்பட்டால்தான் கடந்த காலப் போராட்டங்களின் மதிப்பு காப்பாற்றப்படும்.