தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்!

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகரராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது,

ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்றநாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

···

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா öரட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேöரழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள் முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தரவர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல்குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிöராலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப்போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014க்குள் தெலுங்கானா தனிமாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நிலமாஃபியாசுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத்துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித்தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிöராலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக்காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து செளராஷ்டிரா எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில் சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள் சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனிமாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும்

பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிம சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனிமாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், 80களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இனமொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் "தேசிய' ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும் எதிöராலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கானஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப் போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டா போட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

· பாலன்