மனிதர்களைப் போன்று உயர் அறிவுத் திறன் படைத்த ஓர் உயிரினம் ஏதாவது நமது பால்வெளிவீதி மண்டலத்திலோ பிரபஞ்ச வெளியின் வேறு ஏதாவது நட்சத்திர மண்டலத்திலோ இருப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானி எர்ன்ஸ்ட் மேயர், ‘‘இயற்கைத் தேர்வு, உயர் அறிவுத்திறனுக்குச் சாதகமானதாக இல்லை’’ என்றார். இது சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் சமீபத்தில் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்துமுடிந்த பருவ நிலை மாறுபாடு உச்சி மாநாட்டின் தோல்வியைப் பார்க்கிறபோது மேயர் கூறிய கருத்து சரியானதாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சினைகள் என்று மூன்றைச் சொல்லலாம்: 1. வறுமை 2. வன்முறை 3. பருவநிலை மாறுபாடு. இன்றைய சர்வதேச அரசியலில், உலகமயமாக்கல் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கும் நமது சகாப்தத்தில் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. கம்யூனிஸ்டு அறிக்கை கூறியதைப்போல் மனிதச் செயல்பாடுகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை முதன் முதலாகக் காட்டியது முதலாளித்துவம்தான்.
அறிவியல், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட சாதனைகள் அதற்கு முன்னர் மனித வரலாற்றில் நடந்திருந்த அத்தனை சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கின. ஆனால் இன்று மனித குலமும் மற்ற உயிரினங்களும் அதற்குத் தந்துகொண்டிருக்கும், இனித் தர வேண்டியிருக்கும் விலை, ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்: பேரழிவு. இதன் அர்த்தத்தை அறிவியல், தொழில்நுட்பம், தொழிற்புரட்சி ஆகியவை ஆபத்தானவை, தவிர்க்கப்பட வேண்டியவை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்து, அதே நேரத்தில் இன்றைய ஆற்றல் தேவையையும் பூர்த்திசெய்வதற்கு நாம் இன்னமும் நம்பியிருப்பது அறிவியல், தொழில்நுட்பத்தைத் தான். அழிவை முற்றிலுமாகத் தவிர்த்துவிட முடியாது என்றாலும் பெருமளவு குறைக்க மனிதர்களுக்கு இன்னமும் ஒரு வாய்ப்பிருக்கிறது என்பதுதான் ஒரே ஆறுதல். ஆனால் அப்படி ஆறுதல்பட முடியாதபடி வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா நடந்துகொண்ட விதமும் சீனாவும் இந்தியாவும் கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்ட விதமும் இந்தப் புவிக்கோளை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
கோபன்ஹேகன் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவந்தது ஏறக் குறைய ஒரு துப்பறியும் நாவலைப் படித்ததைப் போன்றிருந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் படிக்கிற வாசகர்களுக்குத்தான் முடிவு எப்படி இருக்குமோ என்கிற படபடப்பு இருக்குமே தவிர அந்தக் கதைகளை எழுதிய ஆர்தர் கானன் டாயலுக்கு அல்ல. கதையின் முடிச்சுகளை எப்படி அவிழ்ப்பது என்று முடிவுசெய்த பிறகுதான் கானன்டாயல் எழுதவே தொடங்குவார். அதைப் போல கோபன்ஹேகனில் என்ன நடக்கப் போகிறது என்பது அதன் கதாசிரியரான அமெரிக்காவிற்கு மட்டும் நன்கு தெரிந்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்கும் இது தெரிந்திருந்தது. ஆனால் அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் கோபன் ஹேகன் தோல்விக்குச் சீனாவின் பிடிவாதத்தைக் காரணம் காட்டுகின்றன. உண்மை இதற்கு நேரெதிரானது. 1997, டிசம்பர் 11இல் ஜப்பானின் கியோட்டோ நகரில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம், கியோட்டோ புரோட்டோகால் மிகப் பலவீனமாக்கப்பட்டதற்கு அமெரிக்காவே காரணம். மேலும் இந்த மிகப் பலவீனமான ஒப்பந்தத்தையும் அமெரிக்காவின் செனட் அவை நிராகரித்ததால் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது (இதைப் பற்றிச் சற்று விரிவாகப் பின்னர் பார்ப்போம்).
‘பசுமைக்குடில் விளைவு’ (புவி வெப்பமடைதல்) என்னும் கருத்தாக்கம் 1770களிலேயே உருவான ஒன்று. சூரியக் கதிர்களால் வெப்பமடையும் பூமி வெளிவிடும் வெப்பமானது அதன் வளிமண்டலத்தை விட்டு வெளியேறாதபடி தடுக்கப்படுவதாலேயே புவி வெப்பமடைகிறது என்று 1820களில் பிரான்சைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜோசப் பூரியர் யூகித்தார். 1859இல் ஜான் டின்டால் என்ற இயற்பியலாளர் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் 0.04% இருந்த போதிலும் அது புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக்கொள்வதன் மூலமும் புவியின் வெப்பம் வளிமண்டலத்தை விட்டு வெளியேறாதபடி ஒரு போர்வையைப் போன்று செயல்படுவதாலும் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது என்பதை நிரூபித்தார். கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், நீராவி ஆகியவை பசுமைக் குடில் வாயுக்கள் எனப்படுகின்றன. இதில் மிக முக்கியமானது கார்பன் டை ஆக்சைட். நீர் ஆவியாவது, எரிமலை வெடிப்பது போன்ற இயற்கையான நிகழ்வுகளாலும் வளிமண்டலத்தில் நிகழும் வேதியியல் மாற்றங்களாலும் பசுமைக்குடில் விளைவு நிகழ்ந்தாலும் மனிதச் செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைட் வாயுவால் ஏற்படும் பசுமைக்குடில் விளைவு மிக அதிகம். கடந்த 25 ஆண்டுகளில் நடந்த ஆயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுகள் இதை ஐயம்திரிபற நிரூபிக்கின்றன.
பசுமைக்குடில் விளைவு என்பதே பொய் அல்லது அதற்குக் காரணம் கார்பன் டை ஆக்சைட் என்று கூறுவது தவறெனக் கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இதில் அறிவியலாளர்கள் சிலரும் அடங்குவர். இக்கருத்து படுமுட்டாள்தனமானது என்பதை அறிவியல் சமூகம் நிரூபித்திருக்கிறது. (இந்தச் சர்ச்சையைப் பற்றி விவாதிப்பதற்கு இக்கட்டுரையில் இடமில்லை.) பசுமைக்குடில் விளைவு மட்டும் இல்லையென்றால் இன்று பூமியில் மனித இனம் உட்படப் பல உயிரினங்கள் இருப்பதே சாத்தியமாகியிருக்காது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஏனெனில் பசுமைக்குடில் விளைவே இல்லாத பூமியின் சராசரி வெப்பநிலை இன்றிருப்பதைவிட மிகக் குறைவாக இருந்திருக்கும். அதே நேரத்தில் இந்த விளைவு அதிகரிக்கும்போது அதுவும் பேரழிவைக் கொண்டுவருவதாக இருக்கிறது.
தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்களில் புதைபடிவ எச்சங்களான நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படுவதே வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதற்கான காரணம். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், அதாவது 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம்வரை நமது வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 280 parts per million (280 ppm) அதாவது பத்து லட்சத்தில் 280 பங்காக இருந்தது. புவி வெப்பமடைதலைத் தவிர்க்க இது 350ppmஐ மிகக் கூடாது. ஆனால் இது ஏற்கனவே 350ppmஐத் தொட்டாகிவிட்டது. இதன் விளைவாகப் புவியின் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தி இருந்ததைவிட 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாது கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பது பருவநிலை மாறுபாடு குறித்து ஆராயும் அரசாங்கங்களுக் கிடையிலான குழு [Intergovernmental Panel on Climate Change (IPCC)] எடுத்துள்ள அறிவியல்பூர்வமான நிலை. இதற்குக் கார்பனின் அளவு 450 ppmஐ மீறக் கூடாது. ஆனால் அப்படிக் கட்டுப்படுத்தும் பட்சத்திலும் வெப்ப நிலை உயர்வு 2டிகிரியை மிகாது என்று உறுதி கூற முடியாது என்பது பல அறிவியலாளர்களின் கருத்து.
புவி வெப்பமடைவது என்பது ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன் விளைவாக இதுவரை வறட்சியைச் சந்திக்காத ஆஸ்திரேலியாகூடக் கடந்த வருடம் வறட்சியைச் சந்தித்தது. இந்தியாவில் இமயமலையில் பெரும் பனிப்பாறைகள் உருகுவது என்பது இதன் விளைவே என்பதும் உறுதியாகியுள்ளது. ஆக இப்போது மனித குலத்தின் முன்னுள்ள பணி எந்த அளவிற்கு வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான். வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரியைத் தாண்டும் பட்சத்தில் மாலத் தீவு போன்ற பல குட்டித் தீவு நாடுகள் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முற்றிலுமாகக் கடலில் மூழ்கியிருக்கும். இன்று வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளில் நிலை மிக மிக மோசமாகும். இதன் காரணமாக, குட்டித் தீவு நாடுகளின் கூட்டணியும் ஆப்பிரிக்க நாடுகளின் குழுமமும் வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரியை மிகக் கூடாது என்று கோபன்ஹேகனில் வாதிட்டன. இந்தக் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கானதுதான் மிச்சம்.
இந்த விவகாரத்தில் ஒரு மாபெரும் வரலாற்று முரண்நகை இருக்கிறது. எந்தெந்த நாடுகள் இன்று கார்பன் அளவு அதிகரித்திருப்ப தற்குக் காரணமோ அவை இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதை ஒப்பிடும்போது எந்தெந்த நாடுகள் காரணமேயில்லையோ அவை மிகமிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இன்று வளிமண்டலத்தில் இருக்கும் கார்பனில் 75% அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் வெளியேற்றப்பட்டவை. உலக வங்கி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி பருவ நிலை மாறுபாட்டால் ஏற்படும் அழிவுகளில் 75இலிருந்து 80%வரை வளரும் நாடுகளில் ஏற்படும். ஓரிரு ஆண்டுகள் முன்புவரை கார்பன் வெளியேற்றத்தில் முதலிடத்தில் இருந்தது அமெரிக்கா. இப்போது சீனா. ஆனால் தனிநபர் விகிதத்தில் பார்க்கும்போது ஆண்டொன்றுக்கு ஓர் அமெரிக்கருக்கு 22 டன்கள் வீதத்தில் அமெரிக்கா கார்பனை வெளியேற்றுகிறது. இது ஐரோப்பாவில் 15 டன்களாகவும் சீனாவின் விஷயத்தில் 4.3 டன்களாகவும் இந்தியாவில் 1.3 டன்னாகவும் இருக்கின்றன.
ஒரு சராசரி இந்தியரோடு ஒப்பிடுகிறபோது ஒரு அமெரிக்கர் வெளியேற்றும் கார்பன் சற்றொப்ப இருபது மடங்கு அதிகம். வெறும் 5% மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா மொத்த கார்பனில் 35% வெளியேற்றுகிறது. ஆக புவி வெப்பமடைதலைக் குறைப்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்கு மிக அதிகமாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் இந்த விஷயத்திலும் அமெரிக்கா நடந்து கொண்ட விதம் நேரெதிரானது.
கார்பன் வெளியேற்றமானது 1990ஆம் ஆண்டு கார்பன் வெளியேற்றத்துடன் ஒப்பிடுகிறபோது 2010இல் 15%ஆகக் குறைக்கப்பட வேண்டுமென 1997இல் கியோட்டோ நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியம் வாதிட்டது. ஆனால் அமெரிக்காவோ அதை 2012இல் என்று நீட்டித்ததுடன் 5% என்று குறைத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்கியது ஆல்பர்ட் அர்னால்ட் கோர். ஆம், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்குப் பாடுபட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு (மிறிசிசி அமைப்புடன் சேர்ந்து) பெற்ற அதே அல் கோர்தான் அவர். பிரச்சினை அல் கோரிடம் இல்லை. அது அமெரிக்க செனட் அவையிடமும் செனட்டர்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் கார்ப்போரேட் நிறுவனங்களிடமும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கார்பன் வர்த்தகம் என்ற வர்த்தகத்தையும் கியோட்டோ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கொண்டுவந்தது. இந்த அளவிற்குக் கியோட்டோ ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்த பிறகும் அமெரிக்க செனட் அவை இதை முற்றிலும் நிராகரித்தது. 2001இல் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்கா கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற இரு பிரிவாக உலக நாடுகள் கியோட்டோ ஒப்பந்தத்தில் பிரிக்கப்பட்டு அவற்றின் பொறுப்புகளும் வேறுபடுத்தப்பட்டிருந்தன. அதன்படி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது. வளரும் நாடுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் சமீப காலமாகத்தான் தொழில் வளர்ச்சி பெற்று வருவதால் அவற்றின் மீது கார்பன் வெளியேற்றக் குறைப்பு என்ற சுமை ஏற்றப்பட்டால் அந்நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்பது பெரும் தடைக்குள்ளாகும் என்ற நியாயமான காரணத்தாலேயே இந்த விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவோ வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு ஒரே மாதிரியான பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டுமென வாதிட்டது. எக்காரணம் கொண்டும் வளரும் நாடுகள் இதை ஏற்காதென்று தெரிந்தே இதை அமெரிக்கா செய்தது. அமெரிக்காவோடு ஒப்பிடுகிறபோது இவ்விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடு எவ்வளவோ மேலானது. ஆனால் ஈராக், ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் அமெரிக்க நிர்ப்பந்தத்திற்குப் பணிந்ததைப் போலவே இவ்விஷயத்திலும் ஐரோப்பிய ஒன்றியம் பணிந்தது. கியோட்டோ ஒப்பந்தம் சட்டபூர்வமானது. இதுவரை சுமார் 185 நாடுகள் அதை அங்கீகரித்துள்ளன. அதை நிராகரித்த ஒரே முக்கியமான நாடு அமெரிக்கா மட்டுமே. இவ்வொப்பந்தம் 2005இல் அமலுக்கு வந்தது. இது 2012இல் காலாவதியாகிறது.
1990இலிருந்து 2006வரையில் பார்க்கிறபோது வளர்ந்த நாடுகளில் கார்பன் வெளியேற்றம் 4.7 சதவிகிதமும் குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம் அவை எடுத்த நடவடிக்கைகள் அல்ல. மாறாகத் தொழில் வளர்ச்சியில் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பெரும் சரிவே இதற்குக் காரணம். இந்நாடுகளைத் தவிர்த்துப் பார்க்கிறபோது வளர்ந்த நாடுகளில் கார்பன் வெளியேற்றம் 10% அதிகரித்திருக்கிறது. கார்பன் வர்த்தகத்தின் காரணமாக வளர்ந்த நாடுகள், ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வெளியேற்றாத அவர்களின் கார்பன் பங்கை விலைக்கு வாங்கிவிட்டன. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க அமெரிக்காவில் பாரக் ஒபாமா அறிமுகப்படுத்தியிருக்கும் Cap-and-Trade என்ற திட்டத்தின்படி ஒரு தொழில் நிறுவனம் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் அளவிற்கு மீறி கார்பனை வெளியேற்றினால், தனக்கு விதிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாக வெளியேற்றியிருக்கும் தொழில் நிறுவனத்திடம் அதற்குரிய பணத்தைக் கொடுத்து ஈடுசெய்துகொள்ளலாம். கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதைக்கூட வர்த்தகமாக மாற்றிய பெருமை அமெரிக்காவையே சேரும். இப்பிரச்சினை இப்படிச் சந்தைமயமாக்கப்படுவதால் நிலைமை மோசமாவதற்கே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கார்பன் வர்த்தகம் இரு வழிகளில் நடைபெறும். சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதன் மூலம் பெரும் லாபம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்கள் மாற்று வழிமுறைகளை (புதுப்பிக்கத் தகுந்த மற்றும் தூய ஆற்றலை உற்பத்தி செய்வது) உருவாக்குவதில் அக்கறை செலுத்தாது கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து மிச்சம் பிடித்திருக்கும் நிறுவனங்களிடம் பணம் கொடுத்து கார்பன் கிரெடிட்டுகளை வாங்கிக்கொள்ளும்.
இரண்டாவது வழி மேலும் ஆபத்தானது. இதன்படி ஒரு தொழில் நிறுவனம் வேறொரு நாட்டில் மரங்களை நடுவதன் மூலம் (தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உட் கொள்கின்றன) அது சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைப்பதால் அதே அளவு கார்பனை வெளியேற்றிக் கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுவிடுகிறது. இது carbon offset என்றழைக்கப்படுகிறது. இந்த முறையில் பல கார்ப்போரேட் நிறுவனங்கள் ஏராளமாகக் கொள்ளையடிக்க முடியும். உதாரணமாக சினார் மாஸ் கார்ப்போரேஷன் என்ற நிறுவனம் இந்தோனேசியாவில் பெருமளவில் இயற்கைக் காடுகளை அழித்துக் கொள்ளையடித்தது. அதைச் சமன் செய்ய காடுகள் அழிக்கப்பட்ட அதே இடத்தில் பனை மரங்களை நட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் கேடு ஈடுசெய்ய முடியாதது.
கியோட்டோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோபன்ஹேகன் ஒப்பந்தம் அமைய வேண்டும், அதாவது கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் வளர்ந்த நாடுகள் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பது வளரும் நாடுகளின் முக்கியமான கோரிக்கை. வளர்ந்த நாடுகள் வெளியேற்றும் கார்பனின் அளவு 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது 2020இல் 40% குறைக்கப்பட வேண்டுமென்றும் 2050இல் அது 80%முதல் 90%வரை குறைக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது. ஆனால் அமெரிக்காவோ 2005ஆம் ஆண்டை அடிப் படையாகக் கொண்டு ஒப்பிட்டு 2020இல் 17 சதவீதம்தான் குறைக்க முடியுமெனக் கூறிவிட்டது. அதாவது 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற போது 4%க்கும் குறைவாக. முதலில் 30%தைக் குறைக்கத் தயாராக இருந்த ஐரோப்பிய ஒன்றியமோ அதை 20%மாகக் குறைத்துக்கொண்டுவிட்டது. சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய வளரும் நாடுகள் வெளிவிடும் கார்பனின் அளவு சமீப காலமாக அதிகரித்திருப்பதால் அவையும் தாங்கள் உட்படுத்தப்படும் அதே நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டுமென அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கோரின. குறிப்பாக சீனாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடைவதன் மூலம் அது உலக வல்லரசாக மாறும் வாய்ப்பை இதன் மூலம் தடுக்க முடியுமென்பது அவற்றின் எண்ணம். 2030ஆம் ஆண்டுக்குள் தொழில் துறையில் நிலக்கரி பயன்படுத்தப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டால்தான் வெப்பநிலை உயர்வு 1.5% மிகாது பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் வளர்ந்த நாடுகளே இதற்குத் தயாராக இல்லாதபோது சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அது சாத்தியமேயில்லை. சீன மற்றும் இந்திய தொழில் துறை பெருமளவிற்கு நிலக்கரியையே நம்பியிருக்கின்றன. இதுவே விலை மலிவானதும் ஆகும். தான் குறைப்பதாக ஒப்புக் கொண்ட கார்பன் அளவை சர்வ தேசக் கண்காணிப்பிற்கு உட்படுத்துவதைச் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த விஷயத்தில் அமெரிக்கா மிகவும் கடுமை காட்டியதால் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்குச் சென்றது. கோபன்ஹேகன் ஒப்பந்தத்திற்குள் அமெரிக்காவைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகக் கியோட்டோ ஒப்பந்தத்தைக் கைவிட ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தயாராக இருந்தன. ஆனால் சீனாவும் ஜி-77 நாடுகளும் இதற்கு அனுமதிக்கவில்லை. கோபன் ஹேகன் மாநாட்டின் இறுதி நாளன்று, டிசம்பர் 18இல் மாநாடு முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பல பத்திரிகைகள் தங்கள் வலைதளங்களில் பேச்சு வார்த்தை தோல்வி என்றே அறிவித்துவிட்டன. ஆனால் கோபன்ஹேகனில் இறுதியாக நிறைவேறியது அமெரிக்காவின் எண்ணமே.
மாநாட்டை நடத்திய டென் மார்க் அமெரிக்காவின் கையாளாகவே நடந்துகொண்டது. கோபன் ஹேகன் ஒப்பந்தத்தின் (இதை ஒப்பந்தம் என்று அழைப்பதே தவறு) வரைவு நகலான டேனிஷ் டெக்ஸ்ட் உருவான விதமே 193 நாடுகள் கலந்துகொண்ட இந்த மாநாடு எப்படி நடந்தது என்பதற்கு நல்ல உதாரணம். சீனா, இந்தியா முதல்கொண்டு எந்தவொரு வளரும் நாடும் இந்த வரைவு நகல் உருவாக்கத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்பதுடன் முதலில் அது லண்டன் கார்டியன் பத்திரிகைக்குக் கசியவிடப்பட்டது. இதைப் பற்றி இந்தியாவின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, வளரும் நாடுகள் இதில் கலந்தாலோசிக்கப்படவேயில்லை என்றும் அந்த வரவு நகலில் என்ன இருக்கிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் டென்மார்க் காட்டிய தயக்கத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றிக் கூறுகிறபோது, ‘‘அவர்கள் உள்ளே (மாநாட்டு விவாதங்களில்) பேசுவதும் ஊடகங்களிடம் பேசுவதும் வேறுவேறாக இருக்கிறது” என்றார் சீனப் பிரதிநிதி ஒருவர். சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்திச் சில மாற்றங்களுடன் இந்த வரைவு நகலை அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட ஒப்பந்தமாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துவிட்டன. இது ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சிறு தீவு நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தன.
இந்த மாநாட்டில் இந்தியாவின் செயல்பாடுகள் அமெரிக்காவுக்குச் சாதகமானவையாகவே இருந்தன. 1992இல் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டு காலத்திலிருந்து சீனா மற்றும் ஜி-77 நாடுகளுடன் இணைந்து பணியாற்றிவந்த இந்தியா முதல்முறையாக 2009 அக்டோபர் மாதம் தனது நிலையை மாற்றிக்கொண்டது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில், இந்தியா ஜி-77 அமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுடன், கியோட்டோ ஒப்பந்தத்தைக் கைவிடத் தயாராக இருக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார் (தனது இந்த அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்த இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதற்குக் காரணம் புவி வெப்பமடைதல்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஓர் எளிய உண்மையை மறுக்கும் அளவிற்குச் சென்றார் அமைச்சர்). மேலும் வளர்ந்த நாடுகளிடம் எந்த நிபந்தனையையும் விதிக்காமல் இந்தியா தானாகவே கார்பன் வெளியேற்றக் குறைப்பைச் செய்யவும் அதைச் சர்வதேசக் கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கும் இந்தியா தயார் என்பதாகவும் அக்கடிதம் கோடிட்டுக் காட்டியது. அமெரிக்காவுடன் தான் கைகோப்பதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பு நாடாக முடியும் என்பதுடன் தனது வல்லரசுக் கனவையும் சாதித்துக்கொள்ள முடியுமென்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. இதன் காரணமாகவே கோபன்ஹேகனில் இந்தியா அமெரிக்க நிலைப்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பை நல்கியது. கார்பன் வெளியேற்றக் குறைப்பு நடவடிக்கையில் இந்தியாவும் சீனாவும் நேரடிச் சர்வதேசக் கண்காணிப்பிற்கு உட்படத் தேவையில்லை என்ற சலுகையை அமெரிக்கா தந்தது.
புவி வெப்பமடைதலால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து தங்களை ஓரளவு காத்துக்கொள்ளவும் தகவமைத்துக்கொள்ளவும் வருடத்திற்கு 500 பில்லியன் டாலர், அதாவது வளர்ந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் தர வேண்டுமென ஆப்பிரிக்க நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் ஹிலாரி கிளிண்டன் அறிவித்ததன்படி 2020வரை ஆண்டுக்கு 30 பில்லியன் டாலரும் 2020க்குப் பிறகு ஆண்டிற்கு 100 பில்லியன் டாலரும் நிதியாகத் தரப்படும். அமெரிக்கா விரும்பும் வகையிலான ஒப்பந்தம் நிறைவேறினால் மட்டுமே இந்த நிதி என்ற நிபந்தனையுடன்தான் இதை ஹிலாரி அறிவித்தார். இது மிரட்டலன்றி வேறொன்றுமல்ல. இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால் ஒபாமா வந்தால் ஒரு பெரும் திருப்பம் ஏற்படும் என்பது போலப் பத்திரிகைகள் எழுதியதுதான். ஏதோ மாயாஜால நிபுணர் தொப்பியிலிருந்து முயல் குட்டியை வரவழைப்பது போன்று ஒரு தீர்வை ஒபாமா கொண்டு வரப்போகிறார் என்பதாகப் பல பத்திரிகையாளர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். இந்த விஷயத்தில் ஜார்ஜ் புஷ், அல் கோர், பாரக் ஒபாமா அனைவரும் ஒன்றுதான் என்பது ஒபாமாவின் கோபன்ஹேகன் சொற்பொழிவிற்குப் பின்னர்தான் பலருக்குப் புரிந்தது.
இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கோபன்ஹேகன் ‘ஒப்பந்தத்தின்’படி புவியின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ்வரை உயரும். 2 டிகிரி உயர்வதே மிக ஆபத்து என்ற நிலையில் 4 டிகிரி உயர்வு என்பது பல தீவு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மரண சாசனம் என்பதில் சந்தேகமேயில்லை. இதன் காரணமாகத்தான் சூடானைச் சேர்ந்தவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஜி-77 நாடுகளின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவருமான லுமும்பா ஸ்டானிஸ்லா டி-பிங் இந்த ஒப்பந்தத்தை யூதர்களைக் கொன்று குவித்த நாஜிகளின் ஹோலோகாஸ்டிற்கு ஒப்பிட்டார். வெனிசுலா, பொலிவியா போன்ற ஓரிரு நாடுகளைத் தவிர சீனா, இந்தியா உட்பட எந்தப் பெரிய வளரும் நாடும் ஏழை நாடுகளைப் பற்றிக் கவனத்தில் கொள்ளவில்லை. இவையனைத்தும் தத்தமது பொருளாதார, அரசியல் நலன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டன.
கோபன்ஹேகன் மாநாடு தொடங்கும் முன்னரே இந்த மாநாட்டில் ஓர் அறைகுறை ஒப்பந்தம் உருவாவதைவிட அது முழுமையான தோல்வியில் முடிவது நல்லது எனக் கடந்த 25 வருடங்களாகச் சுற்றுச் சூழல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட் டிருக்கும் அறிவியலாளரான ஜேம்ஸ் ஹேன்சன் கூறினார். ஏனெனில், அத்தகைய தோல்வி இந்தப் பேச்சு வார்த்தையைச் சரியான பாதைக்குத் திருப்புவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றார். அப்படியொரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமெரிக்கா இப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. இனி அரசாங்கங்கள் தாங்களாக முன்வந்து ஏதாவது செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் அதன் மூலம் ஒரு நீதியான ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கான நிர்ப்பந்தத்தை ஆளும் அரசுகளுக்குத் தருவதன் மூலமே இந்தப் புவியைக் காப்பாற்ற முடியும். உலகம் முழுவதிலுமுள்ள தொழில் துறையும் போக்குவரத்துத் துறையும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விடுபட்டுப் புதுபிக்கத்தகுந்த மற்றும் தூய ஆற்றல் மூலங்களுக்கு விரைவில் மாற வேண்டும். மேலும் ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழ்க்கையின் தேவைகளை, நீடிக்கத் தகுந்த வளர்ச்சிக்கு (Sustainable development) ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் அல்ல, மாறாக மக்கள் இனி ஒரு விதி செய்வதன் மூலமே இதைச் சாதிக்க முடியும்.