தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் வரலாற்றுப் பின்னணி சொதப்பல்?


இதுவரை யதார்த்தத் தளத்திலேயே கதை சொல்லி வந்த செல்வராகவன் முதல் முறையாக வரலாறு, ஃபாண்ட்ஸி என்று புதிய களத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

வரலாற்றுப் பின்னணியில் ஒரு புனைவைக் கட்டமைத்து அதில்மாயாஜால அம்சங்களைச் சேர்த்து சமகாலப் பின்னணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் செல்வா. காணாமல் போகும் புதைபொருள் ஆய்வாளரைத் தேடிச் செல்லும் சாக்கில் பழைய கணக்கு ஒன்றைச் சரிசெய்ய ஒரு குழு வேலை செய்கிறது (இதில் முக்கிய நபர்ரீமா). 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் எடுத்துச் சென்ற பாண்டிய நாட்டின் குல தெய்வச்சிலையைத் தேடிச் சென்று காணாமல்போகும் தன் அப்பாவைத் (பிரதாப் போத்தன்) தேடிச் செல்லும் ஆண்ட்ரியாவும் கூலியாளாக வந்து இந்தக் குழுவில் மாட்டிக்கொள்ளும் கார்த்தியும் இந்தப் பயணத்தில் சங்கமமாகிவிடுகிறார்கள்.

திடீர் திடீரென்று பற்றி எரியும் நெருப்பும் காலைச் சுற்றும் பாம்புக் கூட்டங்களும் ராட்சதப் புதை குழிகளும் ரத்தம் கக்கும் அனுபவங்களும் நரமாமிச பட்சிணிகளும் நிறைந்த இந்த ஆபத்தான பயணம் கடைசியில் துப்பாக்கிகளின் துணையோடு முடிகிறது. பழங்குடியினர் மீதான ஈவிரக்கமற்ற போராக மாறும் பயணம் அலுப்பூட்டுமளவுக்கு நீண்டுகொண்டே போனாலும் வித்தியாசமான பயணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் பார்த்திராத காட்சிகள் (பழங்குடியினருடனான சண்டைகள், ஆயிரக்கணக்கான பாம்புகளுடன் போராட்டம், புதை குழிகள் கொண்ட பாலை நிலம்) ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு. படத்தின் பலவீனம் அதன் நீளமும் திரைக்கதைத் தர்க்கத்தில் இருக்கும் ஓட்டைகளும். ஃபேண்டசியை அடிப்படையாகக் கொண்ட படத்தில் தர்க்கத்தை எதிர்பார்க்ககக் கூடாது என்றாலும் படம் தான் தேர்ந்துகொண்ட கதைக் களத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நடராஜன் நிழலில்அண்டித் தப்பிக்கும் கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா ஆகியோர் ரத்தம் கக்குவதும் விசித்திரமாக நடந்துகொள்வதும் படத்தை வேறு திசையில் செலுத்துகிறது.

துப்பாகியையும் அறிவியலையும் உடலழகையும் ஆயுதங்களாக ஏந்தியிருக்கும் ரீமா திடீரென்று பாண்டிய வம்சத்து வாரிசாக அவதாரம் எடுப்பதும் சோழர்களின் தூதுவராகத் தன்னை நம்பவைக்க அவர் காட்டும் மந்திர வித்தைகளும் நம்பும்படி இல்லை. எனினும் சோழனுக்கு போடும் சொக்குப்பொடியில் ரீமா கவர்கிறார்.

இரண்டாம் பாதி பல கேள்விகளை எழுப்புகிறது:

* சோழர்கள் கிபி முதல் நூற்றாண்டிலேயே விவசாயம், நகர அமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள். அவர்களது வழி வந்தவர்கள் நர மாமிசம் சாப்பிடும் காட்டு மிராண்டிகளாக இருப்பது எப்படி?

* சோழர்கள் ஏன் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் போல இருக்கிறார்கள்?

* கன்னங்கரேலென்று இருக்கும் ‘சோழர்களின் மகாராணி மட்டும் எப்படி வெளுப்புத் தோலுடன் இருக்கிறாள்?

* 800 ஆண்டுகளாக வெளி உலகத்துக்குத் தெரியாத ஒரு இனம் வியட்நாமில் வாழ்ந்துவருகிறது. அந்த இனத்தின் மேல் ஆயுதப்படை நடவடிக்கை எடுக்க அதிகாரி ஒருவரின் செய்தியே போதுமானதா? அவ்வளவு பெரிய கூலிப்படை எங்கிர்ந்து வந்தது? அவர்களுக்கு இந்த நடவ்வடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தையும் ஹெலிகாப்டர்களையும் யார் கொடுத்தது?

* இவ்வளவு கஷ்டப்பட்டு இவர்கள் போகும் இடத்துக்கு பிரதாப் போத்தன் எப்படித் தனியாகப் போனார்?

செல்வராகவன் தனது மேலோட்டமான பார்வையால் மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டார். பல காட்சிகள் ஆங்கிலப் படங்களை அப்பட்டமாக நினைவுபடுத்துகின்றன (நடராஜர் சிலை நிழலில் ஓடும் காட்சி - மெக்கனாஸ்கோல்ட் மைதானத்தில் நடக்கும் சண்டை – கிளேடியேட்டர்).

அழகாலும் நடிப்பாலும் கவரும் ரீமா தனித்து நிற்கிறார். கிளாமர் என்று அடிக்கோடு போட்டுக் காட்டாத இயல்பான வசீகரத்துடனும் தெனாவட்டான உடல் மொழியுடனும் முதல் பாதியில் அட்டகாசமாக நடிக்கிறார். இரண்டாம் பாதியில் காமரசப் பாடலுக்கு ஆட்டம், வாள் சண்டை என்று பட்டையைக் கிளப்புகிறார். ஆண்ட்ரியாவுடன் சண்டை போடும் வேகம், ஜொள்ளு விடும் கார்த்தியின் இடுப்புக்குக் கீழே துப்பாக்கியை நீட்டும் அலட்சியம் என்று ரீமாவின் கொடி பறக்கிறது. சொந்தக் குரலில் பேசியிருந்தால் விருது கனவுகூடக் காணலாம்.

ரீமாவின் அதிரடிக்கு முரணாக அமைதியான பெண்ணாக வரும் ஆண்ட்ரியா தன் அழுத்தமான முக பாவங்களால் கவருகிறார். அழகான தன் கண்களாலேயே அதிகம் பேசுகிறார். குடித்துவிட்டு ஆட்டம் போடும் இடத்திலும் ரீமாவுடன் வாய்ச் சண்டை போடும் இடத்திலும் வித்தியாசமான அவதாரம் எடுக்கிறார்.

அடாவடி, தடாலடிப் பேர்வழியாக வரும் கார்த்தி சட்டென்று நம் மனதுக்குள் இடம்பிடித்துவிடுகிறார். இரண்டு பெண்களையும் படு கூலாகப் படுக்க அழைக்கும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. மனசில்லாத மாப்பிள்ளையாக இந்தக் குழுவில் மாட்டிக்கொள்ளும் கார்த்தி, அடுத்தடுத்து ஆபத்து நேரும்போது தன் அதைச் சமாளிக்கும் காட்சிகளில் ஹீரோத்தனம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசி சண்டைக் காட்சி தவிர மற்ற எல்லா இடங்களிலும் இவரை யதார்த்தமான பாத்திரமாகவே காட்டியிருக்கும் செல்வராகவனைப் பாராட்டலாம்.

சோழ அரசனாக வரும் பார்த்திபனுக்கு இது வித்தியாசமான வேடம்தான் என்றாலும் ஓயாமல் கத்துவதைக் கேட்கும்போது எரிச்சலாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகள் தொழில்நுட்ப நேர்த்தியோடு கையாளப்படவில்லை. படத்தின் பலங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய கிராஃபிக்ஸ் காட்சிகள் பலவீனங்களில் ஒன்றாகவே தெரிகிறது.

அந்தப் பழங்காலக் கட்டிடங்கள், சோழர் காலத்திய அணிகலன்கள் என்று பல இடங்களில் கலை இயக்குநர் சந்தானம் உழைத்திருந்தாலும் படத்தின் நம்பகமற்ற தன்மை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் நெல்லாடிய பாடலும் உன் மேல ஆசதான் பாடலும் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசை பரவாயில்லை.

குறைகளை மீறி முதல் பாதி பரவாயில்லை. சகல அம்சங்களிலும் சொதப்பும் இரண்டாம் பாதி எரிச்சலையும் ஆயாசத்தையும் மட்டுமே கொடுக்கிறது.

இந்தப் படம் தரும் மிகப் பெரிய அதிர்ச்சி செல்வராகவனின் அலட்சியம்தான். வெறும் அதிர்ச்சிப் படிமங்களுக்காக படம் எடுப்பவரோ என்னும் பிம்பம்தான் மிஞ்சுகிறது. நீங்கள் செல்வராகவன்?

உங்கள் கடும் முயற்சி உங்கள் கவன குறைவால் வீண் போனதாகவே உணர்கிறோம்.அதே சமயத்தில் உங்கள் இந்த கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

எத்தனை குறைகள் நாங்கள் கூறினாலும் தமிழ் சினிமாவின் பாதையை மாற்றிய பெருமை உங்கள் படத்தை சாரும்.எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் இந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டு இருந்தால் விருதுகள் குவிந்து இருக்கும் என்பதுதான் தமிழ் ரசிகர்களின் எண்ணம.எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் இது வித்தியாசமான பார்வைக்கு வெற்றி படமே.!


PAGALAVN