‘தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு’ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும், தங்கபாலுவும், மயிலாப்பூரில் அண்மையில் நடத்தியிருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் தீவிரவாதத்தை எதிர்த்து, இவர்கள் செய்த “வீரமுழக்கங்களை” ‘தினத்தந்தி’ நாளேடு (5.1.2010) வெளியிட்டிருக்கிறது. அந்த ‘சிந்தனை முத்துகளை’ப் படிக்கும் ‘அரிய’ வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, தங்கபாலுவும், இளங்கோவனும் தனியே சந்தித்துப் பேசியிருந்தால், எப்படிப் பேசியிருப்பார்கள்?
தங்கபாலுவும், இளங்கோவனும், கருத்தரங்கு முடித்து, தனியறையில் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து, முகம் மலர சிரித்து, தங்கள் உரையாடலைத் தொடங்குகிறார்கள்:
இளங்கோவன்: தங்கபாலு சார், தீவிரவாத எதிர்ப்பை நான் மட்டும்தான், காங்கிரசில் தனியாகப் பேசி வந்தேன். இப்போது நீங்களும் என்னுடன் சேர்ந்திருப்பது, மிகவும் மகிழ்ச்சி.
தங்கபாலு: எனக்கு மட்டும் மகிழ்ச்சி இருக்காதா? தீவிரவாதத்தை இப்போது எதிர்த்தே தீர வேண்டிய கட்டாய நெருக்கடி, கட்சிக்குள் நமக்கு இருக்கிறதே?
இளங்கோ : நீங்க, என்ன சொல்ல வர்றீங்க…
தங்கபாலு: என்ன சார், தெரியாததுபோல நடிக் கிறீங்க? கட்சிக்குள்ள, நம்ம இரண்டு அணிகளுக்கும் எதிரா, வாசன், வேகமாக வளர்ந்துகிட்டு வர்ராறே; அதைத்தான் சொல்கிறேன். இது நமக்கு எதிரான பயங்கரவாதம் தானே! இந்த பயங்கரவாதத்தை எதிர்க்கிறதுக்கு – நாம இரண்டு பேரும் தீவிரவாத எதிர்ப்பு அணியிலே கை கோர்த்து நிற்க வேண்டியிருக்கே!
இளங்கோ : சரியாகச் சொன்னீங்க… உங்க பேச்சிலேயே, தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப் பட்ட கட்சி, நம் கட்சி தான்னு குறிப்பிட்டீங்களே…. அப்போதே புரிஞ்சுகிட்டேன். ஆனாலும், என்னை விட, நீங்க, பெரிய துணிச்சல் காரராயிட்டீங்க….
தங்கபாலு: எப்படி, சொல்றீங்க…
இளங்கோ: “நாம் அரசியலை சேவையாக செய் கிறோம்; தீவிரவாதிகள், தொழிலாக நடத்து கிறார்கள்” என்று, ஒரு போடு போட்டீர்களே, அதைத்தான் சொன்னேன்.
தங்கபாலு: இந்த கிண்டல்தானே வேண்டாம்ங் குறேன். நான், பொறியியல் கல்லூரிகளை நடத்துறதைத் தானே குத்திக் காட்டுறீங்க…. எனக்கு தெரியாதாக்கும்.
இளங்கோ: சே…. சே…. அப்படி எல்லாம் இல்லீங்க…. நீங்க, கல்வி வியாபாரம் நடத்துறத ஏன், ஒரு தொழிலாக நினைக்கிறீங்க. அது பெரிய மக்கள் சேவையாச்சே… இந்த விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற தீவிரவாதிகள்தான் அடிக்கடி சிறைக்குப் போவதை தொழிலாக வச்சிருக்காங்க. நாம சேவை செய்யறோம்; அவுங்க தான் தொழில் நடத்துறாங்க; இப்போ புரியுதா?
தங்கபாலு: இப்போ நல்லா புரியுது. ஆனாலும் ஒரு சந்தேகம். காந்தி, நேரு காலத்திலேயிருந்து, ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் குரல் கொடுத்து வருதுன்னும், ஈழத் தமிழர்களுக்கு, நேரு தான், வாக்குரிமை வாங்கித் தந்தாருன்னும் அதிரடியாக பேசியிருக்கிறீங்களே, அது என்னங்க புது வரலாறு?
இளங்கோ: எனக்கு மட்டும் தெரியுமா? என்ன கேள்வி கேக்குறீங்க? எல்லாத்தையும், காந்தி செய்தார்; நேரு செய்தார்ன்னு பேசுவதுதானே நமக்கு வரலாறு. 125 வருட காங்கிரஸ் வரலாறு தெரிஞ்சுகிட்டு, என்ன கிழிக்கப் போறோம்! வாசனை எதிர்க்க இது துரும்புக்காவது பயன்படுமா? சோனியா, ராகுல், பிரியங்கா பற்றித் தெரிஞ்சா போதும். மற்றபடி காமராசர் ஆட்சி அமைப்போம் என்று, அவ்வப் போது பேச வேண்டும். காமராசர்ன்னு, தமிழ்நாட்டில ஒரு தலைவர் இருந்தார் என்கிற அந்த ஒரு வரலாறு மட்டும் தெரிஞ்சா போதும்.
தங்கபாலு: காங்கிரஸ் வரலாறு, தத்துவம் எல்லாத்தையும் இப்போதான் தெளிவா புரிய வெச்சுருக்கீங்க. ஆனாலும், தமிழ்நாட்டுல தீவிரவாதம் தலைதூக்கி ஆடுதுன்னு நாம, தீவிரமா பேசியாகணும். இப்போ பாருங்க, எனக்கு மிரட்டல் கடிதம் வருது. உங்க வீடு, பூட்டியிருக்கும்போதே, பெட்ரோல் குண்டுகள வீசுறாங்க… இப்படி எல்லாம் சட்டத்தை கையில் எடுத்தால் நாடு என்னவாகும்?
இளங்கோ: ஓகோ, இப்ப என்ன குத்தி காட்டு றீங்களா? ஈரோட்டில் – நம்ம ஆட்கள் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு, பிரபாகரன் படம் போட்ட பேனர்களை எல்லாம், கிழித்து தள்ளச் சொன்னேன் என்பது உண்மைதான். நாம் சட்டத்தைக் கையில் எடுக்கலாம்; அது தேசபக்தி. அவர்கள் எப்படி பிரபாகரன் படத்தை வைக்கலாம்? அது சீனா – பாகிஸ்தான் ஊடுருவலைவிட ஆபத்தானதாயிற்றே.
தங்கபாலு: சரியாச் சொன்னீங்க. இப்போ சத்தியமூர்த்தி பவன் கூட்டத்துலேயே நாம அரிவாளால் வெட்டிக்கிறோம்; அடிச்சுக்கிறோம்; மாற்றி மாற்றி செருப்பால அடிச்சுக்குறோம்; சட்டையைக் கிழிச்சுக்குறோம்; வெளி மாநில பார்வையாளர் உள்ளாடையாக கதர் போட்டிருக்கிறாரா என்று வேட்டியைக் கிழிச்சு சோதிச்சுப் பாக்குறோம்; சுதந்திரம் வாங்கித் தந்த நமக்கு இந்த உரிமைகூட கிடையாதா? அவசரத்துக்கு காவல்துறையைக் கூட அழைக்கிறோம். இதெல்லாம், தேதசபக்திக்காக நாம நடத்துற போராட்டங்களே தவிர, தீவிரவாதம் ஆகாது. தமிழ்நாட்டில் பிரபாகரனை ஆதரிக்கிறவங்களுக்கு, இதெல்லாம் ஒரு எழவும் புரியவே மாட்டேங்குது. அதனாலதான், பிரபாகரன் படத்தையே மாட்டக் கூடாதுன்னு நாம, ஒரு போராட்டத்தை உடனே தொடங்கியாக வேண்டும்.
இளங்கோ: அப்படின்னா, நாடாளுமன்றத் திலேயே குண்டு வீசிய பகவத்சிங் படத்தை, நாடாளுமன்றத்திலேயே மாட்டியிருக்கிறீர்களே, அது சரிதானா என்று கேக்குறாங்களே, அதற்கு என்ன சார் பதில் சொல்றது? நம்ம தெலுங்கானா காங்கிரஸ்காரங்க, தனி மாநிலம் கேட்டு, பதவியை தூக்கி எறிஞ்சிட்டு, வீதிக்கு வந்து சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு போராடுறாங்களே.
தங்கபாலு: இதெல்லாம் ஒரு கேள்வியா? தெளிவா சொல்லுங்க. நாம சட்டத்தை கையிலே எடுத்தா அது தேசபக்தி; பிரபாகரன் படத்தை வைத்தாலே அதுக்கு பேரு பயங்கரவாதம்.
இளங்கோ : நல்லா, புரிஞ்சுகிட்டேங்க…. நீங்க, காங்கிரசை, இப்பதான் காந்தி காட்டிய வழிக்கு அழைச்சிக்கிட்டுப் போறீங்க…
தங்கபாலு : அது, எப்படி சொல்றீங்க?
இளங்கோ: காந்தி, சுதந்திரம் வாங்கின கையோட காங்கிரசை கலைச்சிடுங்கன்னு சொன்னாரே, நாம கேட்காம விட்டுட்டோம். நீங்கதான், காந்தி கண்ட கனவை, நினைவாக்குறீங்க. அது சரி, கூட்டணி மாறுவது கொள்கையான்னு, பேசியிருக்கீங்களே, இதை எப்படிங்க சகிச்சுக்குறது? நம்ம தமிழக காங்கிரசு வரலாறே – அவ்வப்போது கூட்டணி மாறுவது தானே?
தங்கபாலு : நாம கூட்டணி மாறினா, அதுக்குப் பேரு கொள்கை கூட்டணி. மற்ற கட்சிகள் மாறினா, அது கொள்கையற்ற கூட்டணி. நாம சட்டத்தைக் கையில் எடுத்தா – அது தேச பக்தி. மற்றவங்க புலிகளை ஆதரித்து கூட்டங்களில் பேசினாலேயே – அது தீவிரவாதம். அம்மா இந்திரா சுடப்பட்டபோது மூவாயிரம் சீக்கியர்களை டெல்லியில் ஒரே நாளில், நம்ம ஆளுங்கதானே காலி பண்ணுனாங்க. அதெல்லாம் தேசபக்தி தானே. நல்லா புரிஞ்சுக்குங்க. தேசபக்தி, தேச கவுரவம் என்பதில் நமக்குன்னு
தனி பாரம்பர்யம் இருக்கு! நாமெல்லாம் காந்தி
வழி வந்தவங்க. காந்தி குல்லா போடுற பாரம்பர்யம்.
இளங்கோ: ஆமாங்க; நம்ம ஆந்திர ஆளுநர் என்.டி. திவாரிகூட காந்தி குல்லா போடுறவருதான். அது பாருங்க. பெண்களுடன் படுக்கையறைக் குள்ளே போறப்ப, குல்லாவை கழட்டி வச்சிட்டு, அதற்கான மரியாதை தராரு பாருங்க. அவரோட அந்த தேசபக்தி புல்லரிக்குதுங்க.
தங்கபாலு: அதனாலதான், பெருந்தன்மையோடு பதவி விலகி, ஜனநாயகத்தின் ‘கற்பை’ காப்பாத் திட்டதா, நம்ம கட்சியே அறிக்கை விட்டிருக்கு; இதெல்லாம், இந்த விடுதலைப் புலி ஆதரவாளர் களுக்கு புரியவே புரியாது!
இளங்கோ: இப்படி, நாம அடிக்கடி கலந்து பேசி, மனம் விட்டு விவாதிச்சா தான் நமக்குள்ள ஒருமைப்பாட்டை வளர்த்து, வாசன் கோஷ்டியை தனிமைப்படுத்தி, தேசபக்தியைக் கட்டிக் காப்பாத்த முடியும்.
தங்கபாலு: ஆமாம்! ஆமாம்! கடைசியா ஒரு விண்ணப்பம். கள்ளுக்கடைய திறக்கக் கூடாதுன்னு நீங்க போராட்டம் நடத்தினப்போ, நான் கள்ளுக் கடைகளை திறக்கனும்னு அறிக்கை விட்டதை யெல்லாம், இப்ப மறந்திடுங்க. கடந்த தேர்தலில், உணர்ச்சியுள்ள தமிழர்கள் இருந்ததாலேதான், நாம இரண்டு பேருமே மண்ணைக் கவ்வினோம். எனவே தமிழன்ங்குற உணர்ச்சிய மழுங்கடிச்சாதான் நமக்கு வாழ்வு, எதிர்காலம். அதுல மட்டும் சத்தியமா நாம உறுதியா இருக்கணும். வரட்டுமா?
- கோடங்குடி மாரிமுத்து,மீனகம்
நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம்