உப்பு. அறுசுவைகளில் ஒன்று. உணவில் இன்றியமையாதது. என்றாலும் மிகக் குறைவாகச் சேர்க்கப்படுவது. இதை வைத்துக்கொண்டு ஒரு தேசத்தையே எழுச்சி பெறச் செய்ய முடியுமா? ஒரு சாம்ராஜ்யத்தையே அசைத்துப் பார்க்க முடியுமா?
நேராகக் கடலுக்குச் செல்லுங்கள். உப்பளத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுங்கள். அதற்கு வரி கொடுக்காமல் எடுத்து வாருங்கள். இதைச் செய்தால் அரசு ஆட்டம் காணும். இப்படி ஒரு கருத்தை யாராவது சொல்லியிருந்தால் அனைவரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் இந்திய வரலாற்றில் அலாதியானதொரு நிகழ்வாக நிலைபெற்றுள்ளது.
1930 மார்ச் 12ஆம் தேதி மாதம் மகாத்மா காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்தில் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கினார். மிகச் சிலர்தான் அவருடன் கிளம்பினார்கள். காந்தியடிகள் நடைப் பயண மாகத் தண்டியை நோக்கிச் சென்றார். அவரது பயணம் ஏப்ரல் 6 அன்று தண்டிக் கடற்கரையில் முடிந்தது. இந்த 25 நாள் பயணத்தின்போது வழி நெடுகிலும் மக்கள் அவரது பயணத்தில் இணைந்துகொண்டார்கள். ஆங்கிலேய அரசின் சட்டத்தை மீறித் தண்டிக் கடற்கரையில் காந்தியடிகள் உப்பு எடுத்தது நாடெங்கிலும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பெரும் திரளாகச் சென்று கடற்கரையில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தார்கள். ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். இத்தனை பேர் இந்த இயக்கத்தில் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஆங்கிலேய அரசு எதிர்பார்க்கவில்லை.
உப்புச் சத்தியாக்கிரகம் நடந்ததற்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தான் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் வன்முறைப் பரிமாணங்களைக் கைக்கொண்ட பிறகு காந்தியே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதன் பிறகு வேறு எந்தப் போராட்டமும் பெரும் அளவில் வெகுஜனப் போராட்டமாக உருப்பெறவில்லை. உப்புச் சத்தியாக்கிரகம்தான் அதைச் சாதித்தது. அதன் பிறகும் வேறு எந்தப் போராட்டமும் அந்த அளவு வெற்றிபெறவில்லை என்பதோடு, வெகுமக்கள் தன்மையையும் பெறவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஆங்கிலேய அரசு தன் உப்பு வரிச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. 1946இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால அரசுதான் அந்தச் சட்டத்தை நீக்கியது. ஆனால் உப்புச் சத்தியாக்கிரகத்தின் வெற்றி ஆங்கில அரசை உலுக்கியது. வரலாறு காணாத இந்த வெகுமக்கள் போராட்டம் உலகம் முழுவதும் பெரும் செய்தியாகப் பரவியது. இதற்குக் கிடைத்த அபரிமிதமான ஆதரவைக் கண்டு அயர்ந்த ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்கு வருமாறு காந்தியை அழைத்தது. தண்டி யாத்திரை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக மாறியது.
o
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை சுதேசி உணர்வினின்றும் தனித்த ஒன்றாகக் காந்தியடிகள் பார்க்கவில்லை. அவரது போராட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அடக்குமுறை எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தை மறுத்துப் பன்முகத்தன்மையுடன் ஆழமான மாற்றங்களை விழைந்தது. அவரது போர் முறை, சுதேசி, தன்னிறைவு, சுயமரியாதை ஆகியவற்றை அடிப்படையாகவும் இலக்காகவும் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை மேற்கொண்டது. சுதேசி உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இயல்பாக ஒருங்கிணைத்த காந்தியடிகளுக்கு உப்பு வரியை எதிர்த்து உப்பின் மீதான உரிமையை நிலைநாட்டுவது என்பது மிகவும் பொருத்தமானதொரு போராட்டமாக அமைந்தது. உப்பு ஒரே சமயத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆயுதமாகவும் சுதேசி உணர்வின் வெளிப்பாடாகவும் மக்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டமாகவும் விளங்கியது காந்திக்கு மிகவும் வசதியாக அமைந்துவிட்டது.
ஆங்கில அரசு, திடீரென்று உப்புக்கு வரி விதித்துக் காந்தியின் போராட்டத்துக்கு வசதியான ஒரு ஆயுதத்தை வழங்கிவிடவில்லை. சொல்லப்போனால் காந்தியடிகள் அந்தப் போராட்டத்தைத் தொடங்கும்போது உப்பு வரிச் சட்டத்துக்குக் கிட்டத்தட்ட 100 வயது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனி 1835இல் இந்தியாவில் தயாராகும் உப்புக்குச் சிறப்பு வரி விதித்தது. இது இங்கிலாந்தில் உற்பத்தியான உப்பை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் உப்பை இங்கே எடுத்து வந்து விற்ற கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அபரிமிதமான லாபம் கிடைத்தது.
சிப்பாய்க் கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் சொல்லப்படும் ராணுவப் போராட்டம் 1857இல் நடந்தது. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்ட பிறகு 1858இல் இந்தியாவை ஆளும் பொறுப்பைப் பிரிட்டிஷ் அரசே ஏற்றுக்கொண்டது. அதன் பிறகும் உப்பு வரிச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை. இந்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் உப்புக்கு அதிக வரி கட்டிவந்தார்கள். பலர் அன்னிய உப்பை மலிவு விலைக்கு வாங்கிவந்தார்கள். எனவே திடீரென்று இந்தப் பிரச்சினை உருவாகிவிடவில்லை என்பது வெளிப்படை.
கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல், சுதந்திரமாக வணிகம் செய்வதைத் தடுத்தல் என்று பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களும் பல முனைகளில் சுரண்டல்களும் நடைமுறையாக இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் உப்பைப் போராட்டக் கருவியாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் காந்திக்கு எப்படித் தோன்றியது? அந்தக் கருவி வெற்றிகரமாகத் தன் இலக்கை அடையும் என்ற உறுதி அவருக்கு எப்படி ஏற்பட்டது?
போராட்டம் என்று வரும்போது நேரடியான ஆயுதப் போராட்டம் என்பது மிகவும் எளிமையானது. பலத்தைத் திரட்டு, பலத்தைப் பெருக்கு. எதிரியுடன் மோது. வெல் அல்லது வீர மரணம் அடை. இதுதான் நேரடி மோதலின் எளிமையான இலக்கணம். ஆனால் வன்முறை அல்லது உடல் சார்ந்த மோதல் தவிர்த்த போராட்டம் என்பது அத்தனை எளிமையானதல்ல. அகிம்சை என்பதை வெறும் போராட்ட வழிமுறையாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாகவே கண்ட காந்தியடிகள் வன்முறை தவிர்த்த போராட்டங்களின் மூலம்தான் இந்தியா விடுதலை பெற முடியும் என்று ஆழமாக நம்பினார். வன் முறை என்பது இருபுறமும் கூரான கத்தி என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. அது மனிதத் தன்மைக்கே எதிரான அம்சம் என் பதிலும் அவருக்கு ஆழ்ந்த தெளிவு இருந்தது. அகிம்சை முறை என்பது அவரைப் பொறுத்தவரை வெறும் போராட்ட உத்தி அல்ல. மோதினால் ஆங்கிலேயனை வெல்ல முடியாது என்னும் கணிப்பிலிருந்து பிறந்த மாற்று வழியும் அல்ல. மாறாக, எதிரியையும் நேசிக்கும் ஆன்மீக அணுகுமுறை. விடுதலை என்பதை இரத்தக் கறை படியாத, வெறுப்பின் நிழல் அண்டாத மானுட விடுதலையாகக் காந்தி உருவகித்தார். எதிரியின் மனசாட்சியைத் தொடுவதாகவும் போராடுபவர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் தன் போராட்ட வழிமுறைகள் அமைய வேண்டும் என்று விரும்பியதுதான் காந்தியின் தனித்தன்மை. இப்படிப்பட்ட அணுகுமுறையுடன் ஒரு போராட்டக் கருவியைக் கண்டுபிடிப்பது எளிமையான செயலல்ல. ஆனால் அதில் அசாத்தியமான எளிமையைப் பின்பற்றியது காந்தியின் மேதைமை என்று சொல்லலாம்.
கத்தி, கம்பு, துப்பாக்கி, அடிதடி போன்ற வெளிப்படையான போராட்டக் கருவிகளை விலக்கிய காந்தி, மக்களின் உணர்வில் கலந்த பண்பாட்டுக் கூறுகளின் புற அடையாளங்களைப் போர்க் கருவிகளாக மாற்றினார். நாட்டில் நிலவிய நடைமுறைப் பிரச்சினைகளை அவற்றின் துணையுடன் எதிர்கொண்டார். தவிர, விடுதலை என்பது அதன் சாரத்தில் சுயத்தன்மையைக் காப்பது, எல்லா விதங்களிலும் சுயச்சார்பை எய்துவது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இந்த அம்சங்களையெல்லாம் அவர் மிக இயல்பாகவும் மிகத்திறமையாகவும் ஒருங்கிணைத்தார். இதை மக்களிடையே கொண்டுசெல்லப் பல்வேறு குறியீடுகளை அவர் உருவாக்கி, இடையறாத முயற்சியின் மூலம் மக்களிடையே அவற்றைப் பிரபலப்படுத்தினார். இந்த ஒருங்கிணைவிலும் குறியீடுகளின் தேர்விலும் இருந்த எளிமையும் கலாபூர்வமான அழகும் ஈடு இணையற்றவை.
ராட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அன்னியத் துணிப் புறக்கணிப்பு என்பது ஒரு அணுகுமுறை. உனக்கு வேண்டிய உடையை நீயே ஏன் நெய்துகொள்ளக் கூடாது என்பது இன்னொரு அணுகுமுறை. காந்தி முன்வைத்த இந்த அணுகுமுறை மக்களை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம் அது மிக எளிமையானதும் நேரடியானதுமான குறியீடாக இருந்ததுதான். இந்தக் குறியீட்டை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த அவரால் முடிந்தது. அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு. பிறரிடம் கையேந்தாத நிலை. நமக்கு வேண்டியதை நாமே செய்துகொள்வது. அதாவது சுயவழிமுறைகள், சுயமரியாதை. இதன் சாரம் சுதந்திரம்.
உணவு, மருந்து என்று வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இந்த எளிய சூத்திரத்தைப் பொருத்திக்காட்ட ராட்டை என்ற குறியீடு காந்திக்கு உதவியது. ராட்டை என்பது மலிவாக ஆடைகளைத் தயாரித்துக்கொள்ளும் உத்தி அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. அதே சமயம் தன்னிறைவின், விடு தலையின் குறியீடு. ஹரிஜன ஆலயப் பிரவேசம், விதவையர் மறுமணம், கிராமத் தன்னிறைவு ஆகியவையும் அப்படிப்பட்டவைதாம்.
இதே போன்றதொரு குறியீடுதான் உப்பு. முன்பே குறிப்பிட்டதுபோல், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உப்புக்கு வரி விதிக்கப்பட்டிருந்தது. உப்பு மட்டுமல்ல. கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இதர ஆங்கிலேய வர்த்தகர்களுக்கும் பலன் தரும் வண்ணம் இந்தியச் சட்டங்களில் பல அம்சங்கள் ஆங்கிலேயரால் புகுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் கையில் எடுக்காமல் காந்தி உப்பைத் தன் போராட்டக் கருவியாக மாற்றினார். விடுதலைப் போரின் குறியீடுகளில் ஒன்றாக மாற்றினார். மிக வெற்றிகரமான குறியீடுகளில் ஒன்றாகக் காலம் அதை மாற்றிக் காட்டியது என்றால் அதற்குக் காரணம், காந்தியின் தேர்வில் இருந்த எளிமையும் மக்களின் ஆன்மாவோடு உறவாடும் தன்மையும்தான்.
வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்ற வேகத்தோடு ரத்தக் கொதிப்பு ஏறியிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலரை அகிம்சாவாதிகளாக மாற்றிய காந்திய ரசவாதம் இங்கும் வெற்றிகரமாக இயங்கியது. காரணம், உப்பு என்னும் குறியீட்டின் எளிமையும் வலிமையும். உப்பு அறுசுவைகளில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமானதாகக் கருதப்படும் சுவை. எனவே இது உணவுக்கே அடையாளமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை. தின்ற சோற்றுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்னும் கருத்தைத் தின்ற உப்புக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்பதாக வெளிப்படுத்தும் இந்தியச் சமூகத்தை உப்பின் குறியீட்டுத் தன்மை கவர்ந்ததில் வியப்பில்லை. இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் உப்பு என்பது உணவு, நன்றியறிதல், விசுவாசம், சுரணை ஆகியவற்றின் குறியீடாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது (இந்தியில் துரோகி என்பதை நமக் ஹராம் என்பார்கள்; நமக் என்றால் உப்பு எனப் பொருள்).
உப்பைச் சுரணையின் குறியீடாகக் கண்டு பழகிய இந்திய மக்களுக்கு அதைத் தங்கள் சுய மரியாதையின் குறியீடாகப் பார்ப்பது மிக எளிதாக இருந்தது. எனவேதான் அந்நிய அரசுக்கு வரி கொடாமல் உப்பை எடுத்து இந்த நாட்டில் என் உரிமையை நிலைநாட்டப்போகிறேன் என்று ஒரு முதியவர் சொன்னதும் நாங்களும் வருகிறோம் என்று லட்சக்கணக்கான மக்கள் கூடவே சென்றார்கள். நாங்களும் உப்புப் போட்டுத்தானே சாப்பிடுகிறோம், எங்களுக்கு மட்டும் சுரணை கிடையாதா என்பதே இந்த எழுச்சிக்கு ஆதாரமான உணர்வு நிலை. இந்த உணர்வு மக்களின் மன ஆழங்களில் வலுவாக வேரூன்றிய உணர்வு. இதைத் தட்டி எழுப்பியதுதான் அந்தக் கிழவரின் மேதைமை.
மேதைமை என்பதுகூடச் சரியல்ல. இந்தியாவை, அதன் மரபை, பண்பாட்டின் ஆழத்தைப் புரிந்துகொள்வதில் அவருக்கு இருந்த ஆழம் என்று சொல்வதே பொருத்தமானது. எந்த நரம்பை எப்படிச் சுண்டினால் எந்த ஸ்வரம் எப்படி எழும் என்பதைத் துல்லியமாக உணர்ந்த இசைக் கலைஞனின் தேர்ச்சியை ஒத்த திறம் இது. இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து ஆழமாகப் புரிந்துகொண்ட ஒரு மனிதருக்குத்தான் இது சாத்தியப்படும். காந்தியடிகளுக்கு இது சாத்தியப்பட்டதில் வியப்பு என்ன இருக்கிறது.
o
நீ விரும்பும் மாறுதலாக முதலில் நீ மாறு என்பது காந்தியடிகளின் மிகப் பிரபலமான கூற்றுகளில் ஒன்று. சபர்மதி ஆசிரமத்தில் நடைப் பயணத்தைத் தொடங்கிய காந்திக்குத் துணையாக இருந்தது தன் போராட்டக் கருவியின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். மக்கள் உப்பை எடுக்கட்டும் என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று அவர் காத்திருக்கவில்லை. விளைவுகளைப் பார்த்துக்கொண்டு வியூகங்களை மெருகேற்றும் தந்திரங்களை அவர் கையாளவில்லை. வரி கொடாமல் உப்பை எடுப்பது சுயமரியாதையின் அடையாளம், விடுதலை உணர்வின் வெளிப்பாடு என்று நீ கருதுகிறாயா? முதலில் நீ அதைச் செய் என்று காந்தியின் அந்தராத்மா அவருக்குக் கட்டளையிட்டது. அவர் கிளம்பினார். தேசம் அவர் பின்னால் சென்றது. வரலாறு உருவாயிற்று.