தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பிரபாகரனியமும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும்!


ஈழத் தமிழ் மக்களின் விடுதலையை மட்டுமே தன்வாழ்வின் இலட்சியமாக வரிந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். தலைவரது போராட்ட தலைமைத்துவ வல்லமையின் காரணப்பெயராக கூறப்படும் ‘பிரபாகரனியம்’தான் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனியத்தின் தோற்றம், மறைவு அல்லது பிற்பட்ட காலம், முற்பட்ட காலம் என்ற கற்பிதங்கள் எல்லாம் வெறும் மடமைத்தனமான சிந்தனையே ஒழிய, என்றென்றும் தமிழினத்தினுடைய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தின் உருவாக்க மையமாக இருக்கும் ‘பிரபாகரனியம்’தான் அவர்களை எக்காலத்திலும் வழிநடத்தும் ‘இயக்கவிசை’ என்பது மறுக்கமுடியாத உண்மை.

எனவே பிரபாகரனியம் என்பது சிறு பொருள் கோடலுள்ள சொல் அல்ல. தமிழினத்தின் தன்மானத்தை, போரிடும் ஆற்றலை, அரசியல் மதிநுட்பத்தை, விலைபோகாத தன்மையை, பற்று உறுதியை, கொள்கை வழுவாப்பண்பை, இலட்சியத்திற்காக மரணிக்கும் வீரத்தியாகத்தின் உன்னதத்தை, தீர்க்கமான அரசியல் போராட்ட ஆளுமையை தமிழினத்திற்குள் வெளிக்கொணர்ந்து, உருவாக்கி, விதைத்து, வளர்த்த இந்த பிரபாகரனியம் இன்றும் என்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இரண்டறக் கலந்து வழிநடத்திக்
கொண்டேயிருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை அமைதிவழியில் முன்னெடுத்த தந்தை செல்வா அவர்கள் “தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் உரிமை கேட்ட தமிழினத்தின், அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஒரு திசையற்ற அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டது. அப்போது தந்தை செல்வா அவர்கள் கூறியது போலவே கடவுளாக வந்து தமிழினத்தின் கௌரவமான அரசியல் விடுதலையை சிறுவயது முதலே சுமந்து செம்மையாக வழிநடத்தி,
அதன் வழிபற்றி பிறழ்வில்லாது, பற்று உறுதியுடன் செயற்பட்டவர் தலைவர் பிரபாகரன்.

பிறப்பிலேயே தலைமைத்துப் பண்பைக் கொண்ட தலைவராக (charismatic leadership) பிறந்தவர் தான் பிரபாகரன். இவரைப்போன்ற பண்புடனமைந்த தலைவர்கள் இருந்தாலும், மறைந்தாலும் அவர்களது சிந்தனையும் செயற்பாடும் மிகச்சிறந்த வழிகாட்டும் தன்மையைக் கொண்டவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் பிரபாகரனியமும். இது தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆத்மா. இன்று அதன் இயக்கவிசை சுற்று வட்டத்தில் சுழன்றவர்கள், அறியப்பட்டவர்கள்தான் இப்போதும் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் சரியான வழிபற்றி நடக்கின்றனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈழத் தமிழர்களின் சக்திக்கு மேம்பட்ட வல்லாதிக்க சக்திகளின் அழுத்தங்கள் இருந்த போதிலும் கொள்கையிலிருந்து வழுவாது அதை முன்னெடுத்தவர். தலைமைக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களினால் விடுதலைப் போராட்டம் திசைமாறி, ஈழவிடுதலைக் கருத்தியலே இல்லாமல் போயிருக்கக்கூடிய வாய்ப்புகளிருந்தும் அந்தச் சமயங்களில் எல்லாம் கொள்கை மாறாமல் உறுதியாக தொடர்ந்து போராடி, ஈழவிடுதலைப் போராட்ட சிந்தனை மாறாமல் வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்.

“தலைவர் பிரபாகரன் மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாயக்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமல் மறைந்து போனார்” என சிலர் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். சுயநலத்திற்காக புலித்தோல் போர்த்தியிருந்த இப்படிப்பட்டவர்களின் சாயம் இப்போதாவது வெளிப்படுவது நன்மை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைவர் அவர்கள் 2006 மாவீரர் தின உரையில் “விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் சமூகம் முன்னெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்”

மேலும் இறுதிக்காலத்தில் போர் உக்கிரமடைந்த போது விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளாராக கே.பி பத்மநாதன் அவர்களை நியமித்து “நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட போராட்ட வழிமுறையை காட்டாமலா தலைவர் அவர்கள் ‘மறைந்தார்’. அதுமட்டுமில்லாமல் “இனஅழிப்பு” விடயத்தை சரியாக கையாண்டு சிங்களப் பேரினவாத அரசுடன் வாழமுடியாது என்பதனூடாக இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை நிலைநாட்டி, அடுத்தகட்டப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாய்ப்பில்லாமலா உள்ளது! முள்ளிவாய்க்கால் வரை வீரத்துடன ; போராடி கொண்ட கொள்கைக்காகவும், விலைபோகாமலும், வீரமரணமடைந்த அத்தனை போராளிகளும் தங்களின் வீரமரணத்தினூடாக ஒரு செய்தியும் சொல்லவில்லையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயக வழியில் அரசியல் விடுதலைப் போராட்டத்தை நகர்த்த தமிழ்த் தேசியத்தை வழிபற்றும் தமிழ்க் கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைத்ததானது இன்னொரு வகையான வடிவமே. சிலவேளை ஆயுதப்பொறிமுறை பின்னடைவைச் சந்தித்தாலும் இரண்டாவது பொறியமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை கொண்டு நடாத்தும் என்பதில் தலைவருக்கு தெளிவிருந்தது. அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்காக தலைவரின் சிந்தனையில் உருவெடுத்த இந்த இரண்டாவது பொறியமைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்க பாடுபடவேண்டும். என்றாலும் தெளிவில்லாதவர்களும, தலைவர் பிரபாகரனை காழ்ப்புணர்வுடன் பார்க்கும் குறிப்பிட்ட சிலரும் “பிரபாகரனியம்” தோற்றுப்போனதொன்றாகவே காட்டமுனைகின்றனர். அதிலிருந்து விடுபட்டு புதியதொருவகை காலத்திற்குள் தமிழ் மக்களின் போராட்டம் நகர்த்தப்படுகின்றது என்ற தொனியைக் காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தின் மூன்றாவது காலகட்டம் (ஆதாவது பிரபாகரனியத்திற்கு பின்) என்ற சிந்தனையை புகுத்த நினைக்கின்றனர்.

பிரபாகரனியத்தின் இயக்கவிசை சுழற்சியால் அறியப்பட்ட இவர்கள் தங்கள் அறிவை பொருத்தமாக பயன்படுத்தினால் அதுவே தமிழ் மக்களுக்குப் பயன்தரும். எனவே அறிவை பயன்படுத்தி தமிழ் மக்களின் விடுதலையை அழிவின் பக்கம் கொண்டுசெல்லாமல் ஆக்கபூர்வமாக இரண்டாவது பொறிமுறையிலிருந்து விடுதலைப் போராட்டத்தைச் சரியாக நகர்த்த வழிகாட்டுவதும், கருத்துத் தெரிவிப்பதும் தான் அறிவும் தெளிவும்.

தமிழினத்திடம் அரசியல் வெற்றிடமும் சிந்தனைச்சிதைவும் ஏற்பட்டுள்ளது, ஆளுமைக் குலைவுள்ள தலைமைத்துவமற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் உள்ளது, வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஒரு அவமானம் என்று கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றன. அதுவே அவர்களின் அறிவு-தெளிவு-துணிவு என கற்பிதப்படுத்தப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்கு பின் கருத்துக்கூறும் இவர்கள் அதற்கு முன் பிரபாகரனியத்தின் துதிபாடுதலையே கொள்கையாக கொண்டிருந்தவர்கள் என்பதை
மறுக்கமுடியாது. தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டுக்கு தேவையான அறிவும் தெளிவும் துணிவும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு அறிவையும் தெளிவையும் கொண்டு பலம் சேர்க்கவும் அதை நோக்கிய நகர்வை துணிவாக செய்வதற்கும் தேவையே ஒழிய தற்போதைய அரசியல் நகர்வுகள் மீது சேறுபூசுவதற்கும் வசைபாடுவதற்குமல்ல.

அத்துடன் குழாயடிச் சண்டையை ஏற்படுத்துவது போன்று பொருத்தமறற் விவாதங்களையும் கருத்துருவாக்கங்கங்களையும் ஏற்படுத்துவதில் குறியாகக் கொணடு; செயற்படுவதை தவிர்க்கவேண்டும். தமிழினத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் செயற்பாடுகள் மீது விதண்டாவாத கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதால்தான் ஆபத்துக்களும் தமிழ் மக்களிடம் நம்பிக்கையீனமும் ஒற்றுமைக்குலைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, தமிழ் மக்கள் அடுத்தகட்டமாக தமது போராடத்தை நகர்த்திச்செல்வதற்கான
முனைப்புகளையும் செயற்பாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

அத்துடன் தலைவர் அவர்களது சிந்தனைகளையும் ஆளுமையான கருத்துக்களையும் வழிபற்றி செயல்வழி செயற்பட சிந்திக்கும் தன்மையுள்ள மிகப்பெரிய இளைஞர் சக்தியும், தமிழ்த் தேசியத்தின்பால் உழைக்கக்கூடிய புத்திஜீவிகளும், மக்களும், உணர்வாளர்களும் ஒன்றுபட்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போதுள்ள அரசியல் சூழலில் தமிழ்மக்களின் அரசியல் போராட்ட நகர்வை ஆபத்துக்குள்ளாக்காமல், தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்குச் சிறிது சிறிதாகப் பலத்தைச் சேர்க்கும் அரசியல் செயற்பாடுகளை வீணே விமர்சித்துக் கொண்டிருக்காமல் எல்லோரும் சேர்ந்து வடம்பிடித்து விடுதலைத் தேரை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக தமிழ் மக்கள் தமக்கிடையில் வீண் விமர்சனங்களை தெரிவிப்பது எந்தப் பயனையும் தராது. தமிழர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தத்தேவையில்லை என்பதை போன்று “அவர்களே அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள் எனவே இனி அவர்களைப்பற்றி பெரிதாக அக்கறை கொள்ளத்தேவையில்லை” என மற்றவர்களின் குறிப்பாக சிங்களத்திடம் நகைப்பிற்கிடமாக்காமல் செயற்படுவதே தமிழினத்தின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும். முதலில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளையும் அரசியல் நகர்வுகளையும் பலவீனப்படுத்தும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதை விடுத்து, சரியான கருத்துகளில் காலத்திற்குப் பொருத்தமாக சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சரியாக சொல்வதே எமது நாட்டிற்கும் மக்களிற்கும் நாம் செய்யும் கடமை.

உலக வரலாற்றில் பின்பற்றப்படும் பல தத்துவங்கள் இன்றும் பலரால் பின்பற்றப்படுகின்றது.. அதுபோலவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எந்தக்காலத்திலும் வழிநடத்தும் தன்மை; “பிரபாகரனியத்திற்கு” உண்டு என்பதுடன் அதுவே தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் செயலூக்கமும் நம்பிக்கையும் தெளிவும் உள்ள தத்துவ வடிவம். தமிழ் மக்களின் அரசியல் விடுதலையானது “பிரபாகரனியம்” என்ற தத்துவத்திற்குள் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விடுதலை நோக்கி செயல்பட்டு அரசியல் விடுதலையை அடைவது மட்டுமே தமிழ் மக்களின் முன் உள்ள கடமை. எனவே தமிழ் மக்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு பொருத்தமான கருத்துக்களை வழங்குவதுடன் பொய்யான கருத்துக்களையும் வக்கிரம் நிறைந்த சொற்களையும் தவிர்த்து சரியான பாதையில் தமிழ் மக்களை வழிநடத்துவார்கள் என நம்புவோம்.

நன்றி,

தமிழ்வின்