தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காவல்துறை பொதுமக்களின் நண்பனா?



சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் சமீபத்தில், “காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார், போக்குவரத்தைச் சீர் செய்யும் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் போலீஸார் பற்றி பெருமளவுக்குப் பொது மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். மற்ற போலீஸ் பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு முழுவதுமாகத் தெரிவதில்லை” என்று கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து மிகச் சரியானது.

கண்ணுக்குப் புலப்படாத காவல்துறையின் பணிகள் பற்றிய விவரங்கள் பொதுமக்களை சென்றடையாத வகையில்தான், இன்றளவும் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறைத்துறை இயக்குனராக நடராஜ் இருந்தபோது செய்த அயராத பணிகள் தமிழகச் சிறைச்சாலைகளும், பெரும்பாலான சிறைவாசிகளும் சீர் அடைய காரணமாகி உள்ளன. ஆனால், பொதுமக்களுக்கு இதுபற்றி முழுமையாகத் தெரிவதில்லை.

ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என பேதம் பாராட்டாமல் பணியாற்றும் காவல்துறை நண்பர்களின் வாழ்வில் அன்றாடம் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அதேசமயத்தில் ஆளும்கட்சியைச் சார்ந்து நிலைப்பாடு எடுக்கும் ‘பச்சோந்தி’ காவல் துறையினருக்கு என்றுமே வசந்த காலம்தான். ஆள்பவர்களின் ஏவல் சேவகனாக, ஆள்பவர்கள் கை காட்டுபவரையெல்லாம் கைது செய்து, பிறகு காரணம் தேடும் கர்ம வீரர்களாக, காக்கி உடையில் கம்பீரமாக வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகக் காவல்துறையில், ‘போலி போலீஸாரே’ இன்று ‘ரோல் மாடல்’களாக முன்னிறுத்தப்படும் கேவலம் தமிழகத்தில் நிலவி வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மூன்று மந்திரங்களான ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ ஆகியவற்றைப் பின்பற்றும் காவல்துறையினரை பூதக் கண்ணாடி கொண்டு தேடவேண்டிய சூழல்தான் இன்று நிலவுகிறது. தமிழக முதல்வர் கலைஞர்கூட ஒரு காலத்தில், ‘தமிழகக் காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி கெட்டுவிட்டது’ என்று குற்றம் சாட்டினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய டி.ஜி.பி.யான லத்திகா சரண் ஒரு தலைபட்சமாகச் செயல்படுவதாக முன்பு ஒருமுறை துளைத்து எடுத்துள்ளார்.

பழைய காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு பல காவல்துறை அதிகாரிகள் ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவது இன்னும் தொடர்கிறது. ஓர் ஆட்சியில் உயர்பதவி வகித்த பல போலீஸ் அதிகாரிகள் அடுத்த ஆட்சியில் ‘பத்துக்குப் பத்து’ அறையில் தனக்குக் கீழ் வெறும் மூன்று, நான்கு அலுவலர்களுடன் செயல்படும் துர்பாக்கிய சூழ்நிலையில்தான் நமது தமிழகக் காவல்துறை இருக்கிறது. பழிவாங்குவதற்கும், சிறுமைப்படுத்தவும் காவல்துறையில் பணி இல்லாத இலாகாக்கள் பல உள்ளன. நமது சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் கூறியதுபோல, காவல்துறையின் இதுபோன்ற பணிகள் எல்லாம் பொதுமக்களின் கவனத்துக்கு வருவதில்லைதான்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, அவரது மனைவி ஜானகி பயணம் செய்த கார், சென்னையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை சங்கிலியிட்டு தூக்கி எடுத்துச் சென்றுவிட்டார் நெஞ்சுரம் மிக்க ஒரு காவல்துறை அதிகாரி. அவரைப் போன்றவர்கள் இன்று நம்மிடையே இல்லை. அதற்குக் காரணம், சகிப்புத் தன்மை அற்ற அரசியல்வாதிகள்தான்.

கடந்த 7ம் தேதியன்று நெல்லை, கடனா நதி மேலுள்ள ஆம்பூர் பாலத்திற்கு அருகில் எஸ்.ஐ. வெற்றிவேல் மீது நடந்த கொடூரத் தாக்குதலின் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகளும் தமிழக போலீஸாரின் பணிகள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அந்த அவமானச் செயலை எங்கு போய் கழுவினாலும், கறை போகாது. ‘காவல்துறை பொதுமக்களின் நண்பன்’ என ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.

காக்கி உடையில் காவல் பணியினை முடித்துவிட்டு வரும் வழியில், குறுக்கே வழி மறிக்கப்பட்டு, கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்து சின்னாபின்னமாகிப் போனார் எஸ்.ஐ. வெற்றிவேல். குற்றுயிரும் குலையுயிருமாக அவர் துடித்த நிலையிலும்... அவருக்கு உடனடியாகத் தண்ணீர் கொடுக்க, தூக்கிவிட, முதல் உதவி செய்திட மற்றும் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த ஏதாவது ஒரு வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நட்புக்கரம் நீட்ட காவல்துறை நண்பர்கள் உட்பட யாருமே முன்வரவில்லை. தங்களது சக காவலருக்கே நண்பராக இல்லாத இவர்கள், பொதுமக்களுக்கு எப்படி நண்பர்களாக இருக்க முடியும்?

பொதுமக்கள் பணத்தில் ஓடும் சொகுசு கார்களில் ரத்தக்கறை படிய விடக் கூடாது என சிலர் எண்ணியதன் விளைவு, ஆம்புலன்ஸ் வரும் வரை ஏராள ரத்தம் வெளியாகி, வெற்றிவேல் உரிய மருத்துவச் சிகிச்சை இன்றி இறந்துவிட்டார். இதை என்னவென்று சொல்வது?

அமைச்சர்களும், அதிகாரிகளும், காவல்துறையினருமே இப்படிச் சிலையாக நிற்கும்போது, எதிர்காலத்தில் பொதுமக்கள், கண் முன் நடக்கும் ஒரு தவறை தட்டிக் கேட்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இனி பாதிக்கப்பட்டவரை காப்பாற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல யார் முன் வருவர்? அதிலும், சம்பவ இடத்தில் முன் நின்றதே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எனும்போது, கண்முன் துடிக்கும் ஓர் உயிரின் அருமை தெரியாத ஒருவர் நமது மாநில மருத்துவத் துறையை எப்படி நிர்வகிக்க முடியும்? எனும் பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது.

அன்று அரிவாள், குண்டுகளுடன் வந்த கூலிப்படையினர் திட்டமிட்டபடி காரியத்தை அரங்கேற்றிவிட்டனர். ஆனால், நவீன துப்பாக்கியுடன் இருந்த காவல் அதிகாரிகள் மூன்று ரவுண்டு சுட்டதில் காகத்துக்குக் கூட காயமில்லை. எந்த ஒரு பதற்றச் சூழ்நிலையையும் கையாள காவல்துறைக்கு அரசு கற்றுக்கொடுக்கும் பாடமும், பயிற்சியும் இதுதானா? நாளை தீவிரவாதிகள் ஊடுருவும் சூழ்நிலை வரும்போதும், ராணுவம் வரட்டும் என தமிழகக் காவல்துறையினர் ஒதுங்கி விட்டால் பொதுமக்களின் கதி என்னாகும்?

இறந்து போன உதவி ஆய்வாளர் வெற்றிவேல் குடும்பத்திற்குத் தேவையான அரசு நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அன்று நடந்த கொடூர சம்பவ சமயத்தில் பத்திரிகைகள் விதவிதமாகப் படங்கள், வீடியோ எடுக்கும்வரை அங்கிருந்து வேடிக்கை பார்த்த அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து உண்மை நிலையை வெளிக் கொணர வேண்டும். இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் ஒன்றை அரசு உடனடியாக அமைக்கவேண்டும். அந்த கமிஷனின் முடிவுப்படி தமிழக அரசு அன்று வெற்றிவேல் துடிதுடித்ததை வேடிக்கை பார்த்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகக் காவல்துறையில் கடமையைச் சரிவர செய்தாலும், பணியில் ஏதாவது ஒரு வகையில் தாம் இறந்த பிறகு, தத்தம் குடும்பத்தினர் நிர்க்கதியாய் தான் இருப்பர் எனும் எண்ணம் காவல்துறையினர் மனதில் வராமல் இருக்க அரசு இனி எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்தான் உதவும், உதவும் வகையில் அவை அமைய வேண்டும்.