'தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பதற்காக' கூட்டணி சேர்வதென்று முடிவெடுத்திருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். கூடவே வருகிற ஏப்ரல் முதல் இந்த 'தர்ம' யுத்தத்திற்காக டிவி சேனல் ஒன்றையும் தொடங்குகிறார். அதன் பெயர் கேப்டன் டிவி. கலைஞர் டிவி இருக்கும் போது, கேப்டன் டிவி இருக்கக்கூடாதா? அதனால் சன் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி, வசந்த் டிவி வரிசையில் இன்னொரு அரசியல் பின்புலம் கொண்ட சேனல் தமிழக 'தொலைக்காட்சி ஜனநாயகத்திற்கு' உரம் சேர்க்கப் போகிறது. தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களின் வீட்டு வரவேற்பறையில் செய்தி என்ற பெயரில் சற்று அதிகமாக கொட்டப் போகிறது அரசியல் குப்பை.
விஜயகாந்த் இந்த இடத்திற்குத்தான் வந்து சேர்வார் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அந்த நாள் வந்து சேரும் என்று நினைக்கவில்லை. தொடர்ச்சியான இடைத் தேர்தல் தோல்விகள், டெபாசிட் இழப்புகள் அவரை கனவுலகிலிருந்து யதார்த்த உலகிற்கு இழுத்து வந்திருக்கிறது. தனிக் கட்சியாகவே ஆட்சியை பிடிக்க முடியும் அல்லது அதிகாரத்தை அடைய முடியும் என்ற கனவை அவர் நம்பினார் என்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். ஆனால் விஜயகாந்தின் ரசிகர்களும் அரசியல் முகவரி தேடி அவர் பின்னால் அடைக்கலமானவர்களும் அதை நம்பினார்கள். அந்தக் கனவு அவர்கள் மத்தியில் கலையத் தொடங்கிய சமயத்தில் அவர்களுக்கு வேறு கனவுகளை விற்க வேண்டியிருக்கிறது. அதனால் இப்போது கூட்டணிக் கனவுகளை வளர்க்கிறார் விஜயகாந்த். திராவிட நாடு கனவை வளர்த்தவர்கள் ஓர் நாளில் அதை உடைக்கவில்லையா? பி.சி.சொர்க்காருக்கு திராவிட அரசியல்வாதிகள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ராபின்சன் பூங்காவில் அவதரித்த இரு இயக்கம் பின்னாளில் வெளிப்படுத்திய அரசியல் தந்திரங்களை ராம அவதாரம் கோலிவுட் வரை பரப்பிவிட்டதை விஜயகாந்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலும் காட்டுகிறது.
ஒரு உயரிய சமூக நோக்குடன் உருவாகி, பல புரட்சிகளை சாத்தியமாக்கி, நடுவில் வழி தவறி, இன்று சீரழிவின் விளிம்பில் நிற்கிறது திராவிட இயக்கம். ஆனால் எடுத்தவுடனேயே அதன் சீரழிவுகள் அத்தனையையும் பிரயோகிக்கும் கட்சியாக உருவாகியுள்ள ஒரு புதிய கட்சி தன்னை அந்த திராவிடக் கட்சிகளின் மாற்று என்று சொல்லிக்கொள்கிறது. 'தனியாக ஆட்சியைப் பிடிப்போம்' என்ற பொய்யை போட்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்று வேறொரு நம்பத்தகுந்த பொய்க்கு மாறியிருக்கிறது. பெயருக்குகூட கொள்கை, சித்தாந்தம் பற்றி சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் தே.மு.தி.கவுக்கு இல்லை. விஜயகாந்த் சொல்வதெல்லாம் அந்தக் கட்சியின் கொள்கை. அவர் மனைவியும் மச்சானும் சொல்வதெல்லாம் கட்சியின் சித்தாந்தம். அதிகாரத்தில் பங்கெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அவரது கட்சிக்காரர்களுக்கு இதில் ஆட்சேபணைகளோ கருத்து வேறுபாடுகளோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பொது மக்கள் என்று அறியப்படுகிறவர்களுக்கு? தனி நபர் துதிபாடல் மேலோங்கியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் இதில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. கட்சியின் தானைத் தலைவர் அல்லது தலைவி அன்றன்றைக்கு என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சியின் கொள்கை. ஏற்கனவே அ.தி.மு.கவில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது. ஒரு கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற செயற்குழு கூடி, முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவரிடம் ஒப்படைக்கும் அரிய அரசியல் 'ஜனநாயகத்தைக்' கொண்ட தேசம் இது.
இன்றைய தமிழகச் சூழலில் தங்கள் கட்சியை வளர்க்கவும் காக்கவும் சொந்தமாக ஒரு சேனல் வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் நினைக்கின்றன. வெற்றி பெற்ற படத்தை காப்பியடிக்கும் சினிமா இயக்குனர்கள் போல ஒவ்வொரு கட்சியும் தி.மு.கவின் பாணியில் சொந்தச் சேனல்கள் தொடங்குகின்றன. மச்சான் சுதீஸின் கட்டுப்பாட்டில் விஜயகாந்தின் சேனல் 'செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளையும்' ஒளிபரப்பப் போகிறது. உண்மையான நோக்கம் அதுதானே. அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வரவேற்பை பயன்படுத்தி தங்கள் அரசியல் செய்திகளை கலந்து அனுப்ப வேண்டியதுதான் (நியாயப்படி அரசியல் சார்ந்த சேனல்களின் செய்தியை கலப்பட தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து, அதை வெளியிடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்!).
இந்தியா சுதந்திரம் பெற்ற காலக் கட்டத்தில் சினிமா தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சினிமாவின் சாத்தியங்கள் முழுமையாக அறியப்பட தொடங்கின. அந்தக் காலக் கட்டத்தில் சினிமாவை தனது கருவியாகக் கொண்டு தி.மு.க தன்னை வளர்த்துக்கொள்கிறது. அதற்கு இணையாக, தொலைக்காட்சியின் சாத்தியங்கள் தெரியத் தொடங்கிய 90களில் சன் டிவி வடிவத்தில் தி.மு.க சின்னத் திரையையும் தனது அரசியல் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியது. மு.கருணாநிதியின் நள்ளிரவுக் கைது, தர்மபுரி பஸ் எரிப்பு என பல்வேறு அரசியல் நிகழ்வுகள், தி.மு.கவுக்கு எவ்வளவு சாதகமாகத் திருப்ப முடியுமோ அவ்வளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக அல்லது நாடகத்தனமாக காட்டப்பட்டன. சமீபத்தில் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தற்காலிக பிளவு காரணமாக கலைஞர் டிவி என்ற புதிய வாகனமும் தி.மு.கவிற்கு கிடைத்திருக்கிறது. தி.மு.கவிடமிருந்து பிந்தங்கிவிடக்கூடாது என்பதால் அ.தி.மு.கவிடம் முன்பு ஜே.ஜே டிவி இருந்தது, இப்போது ஜெயா டிவி இருக்கிறது. அதன் வீச்சையும் வீரியத்தையும் தி.மு.கவின் டிவி ஆயுதங்களுடன் ஒப்பிட முடியாது என்றாலும் அவர்களுக்கும் சில தாக்குதல் சம்பவங்களும் அரசியல் பிரச்சனைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன. சினிமாவில் தி.மு.கவால் செய்ய முடிந்ததை பிற கட்சிகளால் நகலெடுக்க முடியாவிட்டாலும் தொலைக்காட்சி அதற்கான பலவீனமான வாய்ப்பைக் கொடுக்கிறது. டிவி சேனல் நடத்துவதற்கான அலைவரிசை, ஒளிபரப்புவதற்கான கருவிகளுக்கான செலவு முன்பைவிட கணிசமாக குறைந்துவிட்டது. தொலைக்காட்சி பெட்டி உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் விளம்பரதாரர்களும் கிடைக்கிறார்கள்; குறைந்தபட்ச உத்தரவாதமாக ராசிக்கல், நியூமராலஜி, ஆன்மீகம் என எதற்காவது நேரத்தை விற்றுவிடலாம். 2006ல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த் வரை டிவி சேனல் மோகம் வந்திருக்கிறது.
டிவியை பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு ரிமோட் கன்ட்ரோல் பெரிய சுதந்திரத்தைக் கொடுக்கிறது. எந்தக் கட்சி எந்த சேனலை வைத்திருக்கிறது என்பது வெளிப்படையானது என்பதால் பொது வாக்காளர்களை எட்டுவதற்கு பதில் அந்தந்த கட்சி சார்ந்த சேனல் தங்கள் கட்சியினரையே பிரதானமான பார்வையாளர்களாகக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒட்டுமொத்த சந்தையை ஏகபோகமாக வைத்திருப்பது, ஒன்றோடு ஒன்று தொடர்புடைய தொழில்களை வளைத்துப் போடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்களே இல்லாததுதான் இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்துக்களை உண்டாக்குகிறது. இதன் மூலம் மக்கள் என்ன செய்தியை பார்க்க முடியும், என்ன செய்தியை பார்க்க முடியாது என்பதை ஒரு தனிநபர் தீர்மானித்துவிட முடியும்; ஈழப் பிரச்சனையில் நடந்ததைப் போல. மக்கள் எந்த சேனலை பார்க்க முடியும், எதை பார்க்க முடியாது என்பதைக்கூட ஒரு குறிப்பிட்ட குழுமத்தால் தீர்மானிக்க முடிகிற, தீர்மானிக்கப்படுகிற ஆபத்துக்கு நடுவில் நாம் வாழ்கிறோம். இவ்வாறு அரசியல்மயமாகிவிட்டதால் தமிழ் டிவி உலகிற்கு புரஃபஷனலிசத்தின் வருகை மேலும் தள்ளிப் போகிறது. ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் கண் முன்னால் உயிருக்குத் துடிப்பதை தமிழக அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்று தேசிய சேனல் மிகப் பெரிய தார்மீக கேள்வி எழுப்பிய போது தமிழக ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவே . ஆளுங்கட்சி சேனல் அது தங்கள் ஆட்சிக்கு எதிரானது என்பதால் போடவில்லை. நாளிதழ்கள்கூட அந்த சம்பவத்தின் கொடூரத்தை உணராமல் அல்லது அரசு விளம்பரங்கள் குறித்த பயத்தால் அது பற்றி பெரிதாக எழுதவில்லை.
உங்கள் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு டிவியில் நீங்கள் பார்க்கும் 'செய்தி' ஏதோ ஒரு கட்சித் தலைவரின் உத்தரவால் உருவாக்கப்பட்ட அப்பட்டமான பொய் என்றால் அல்லது நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு செய்தியை ஏ.சி அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சித் தலைவரால் தடுத்து நிறுத்த முடியும் என்றால் அது உங்கள் உரிமைகளையே பறிப்பதாகும். இந்த தேசத்தின் நீங்கள் வாழும் பொதுச் சூழல் உங்களுடையது. அதை திரிக்கும், மறைக்கும் எந்த முயற்சியும் சிவில் சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய ஒன்று. ஒரு படத்தைத் தயாரிக்கும் ஒருவர், அவரே நடத்தும் சேனலில், அவரே நடத்தும் டாப் படங்கள் நிகழ்ச்சியில், அவரே நடத்தும் செய்தி நிகழ்ச்சியில் தனது படத்தையே சிறந்த படம் என்று சொல்லி புகழ்வது ஆபாசமானது. எனினும் அரசியல்மயமாகியிருக்கும் ஊடகங்கள் தங்களது வீழ்ச்சியின் பள்ளத்தாக்குகளை விரைவாகவே எட்டுவது நல்லதுதான். அனைவருக்கும் பொதுவான ஊடகங்களின் நம்பகத்தன்மை காணாமல் போகப் போக, ட்விட்டர், புளாக், செல்போன் போன்ற சமூக இணைப்பு ஊடகங்களின் எழுச்சி வேகம் பிடிக்கும். அவற்றின் வளர்ச்சி வேகத்திற்கு உதவும் விஜயகாந்திற்கு நன்றி சொல்வோம்.