தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பாசு காட்டிய வழியில் கலைஞர் நடப்பாரா?



1992... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பஃபே முறையில் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்களுடன் வரிசையில் கையில் தட்டுடன் தன் முறைக்காகக் காத்து நின்றிருந்தார் அந்த முதியவர். அவரைப் பார்த்துவிட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர்... ‘காம்ரேட்... ஆர் யூ ஹியர்?’ என புருவம் உயர்த்தி ஆச்சரிய ஆங்கிலத்தில் கேட்க... ‘வாட் ஹேப்பன்... ஐ ஆல்சோ அமாங் யூ...’ என சிரித்தபடியே வரிசையில் தொடர்ந்து நகர்ந்தார் அந்த முதியவர்.

அப்போது மேற்குவங்காளத்தின் முதல்வராக இருந்த தோழர் ஜோதிபாசுதான் அந்த முதியவர்.

21 வயதில் லண்டன் சென்றதிலிருந்து தன் 95&வது வயதில் இப்பூவுலகை விட்டு சென்றது வரை எளிமையால் நிரம்பிய வலிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜோதிபாசு.

கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு லண்டனில் இந்தியன் சிவில் சர்வீஸ் படிக்கச் சென்ற ஜோதிபாசு, அங்கே ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. இந்திய ஆட்சிப் பணி பற்றி வெள்ளையர் நடத்திய தேர்வில் தோற்றுப்போன ஜோதிபாசுதான், இந்தியாவிலேயே தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே முதல்வர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் என்பதை இங்கே குறிப்பிடவில்லையென்றால் அது குற்றம்.

அம்மா பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பாவோ டாக்டர். இப்படிப் பணத்துக்குப் பஞ்சமில்லாத குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு, ஐ.சி.எஸ்ஸில் தோல்வி அடைந்ததும் லண்டனில் சட்டப்படிப்பை படிக்க ஆரம்பித்தார். அப்போது லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் நடத்திய ‘இந்தியா லீக்’ அமைப்பில் உறுப்பினரானார். இங்கிலாந்து நாட்டின் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து நாட்டிலேயே சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தார். இதுமட்டுமல்ல... கிழக்கு லண்டன் பகுதியில் ஏராளமான இந்தியர்கள் கப்பல் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

கல்வி அறிவு கொடுக்கப்படாமல் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட அவர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஜோதிபாசு, அவர்களுக்கு எழுத்தறிவு கற்றுத் தரும் பயிற்சிகளை உடனடியாகத் தொடங்கினார். மக்களுக்காக மக்களோடு முதன் முதலாக ஜோதிபாசு களமிறங்கியது இங்கேதான். பாசுவின் நடவடிக்கைகளும், கருத்துக்களும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியினரை வெகுவாக ஈர்த்தன. அவர்கள் பாசுவை பாராட்ட... அவர்களுடனான நெருக்கம் பாசுவுக்கு அதிகரித்தது. மேலும், படிக்கும்போதே லண்டனுக்கு வந்த காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் அங்கிருந்தபடியே தன்னை இணைத்துக் கொண்டார் பாசு.

1940&ல் படிப்பை முடித்துவிட்டு பாசு கொல்கத்தா திரும்பியதும், ‘என்ன செய்வதாய் முடிவெடுத்திருக்கிறாய் மகனே?’ என்றனர் வீட்டில். பாசு சொன்ன பதில்... ‘கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போகிறேன்’.

லண்டனில் கப்பல் தொழிலாளர்களுக்காக களமிறங்கியவர், கொல்கத்தாவில் ரயில்வே தொழிலாளர்களுக்காகக் களமிறங்கினார். சுதந்திரப் போராட்டம், தொழிலாளர் போராட்டம் என பாசுவின் அரசியல் பணி எழுச்சியோடு தொடங்கியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்றல் மிக்க சக்தியாகத் தொடர்ந்து செயல்பட்ட பாசுவுக்குக் கட்சிப் பதவிகளும், மக்கள் பிரதிநிதி பதவிகளும் தேடிவந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக பாசு தேர்ந்தெடுக்கப்பட்டது, அக்கட்சியின் மதுரை மாநாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்டானபோது, ஜோதிபாசு மார்க்சிஸ்ட் கட்சியின் தூணாக விளங்கினார். அதற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர் என பல படிகளைக் கடந்து 1977&ல் மேற்கு வங்காள முதல்வராகப் பதவியேற்ற ஜோதி பாசு... 23 வருடங்கள் தொடர்ந்து ‘நாட் அவுட்’முதல்வராக இருந்து உடல்நிலை சரியில்லாததால் மக்கள் பணியை முழுமையாக ஆற்ற முடியாது என காரணம் கூறி, 2000&ம் வருடம் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜோதிபாசுவுக்கும் தமிழகத்துக்குமான உறவுகளைப் பற்றி தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், ‘தீக்கதிர்’ நாளிதழின் இணை ஆசிரியருமான சு.பொ. அகத்தியலிங்கம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘தமிழகத்தில் நடந்த பெரும்பாலான தேர்தல் பிரசாரங்களுக்கு வந்ததின் மூலம்... தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களோடும் பேசியிருக்கிறார் ஜோதிபாசு. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் பலருக்கு ஜோதிபாசு என பெயர் சூட்டப்பட்டிருப்பதை வைத்தே தமிழகத்துக்கும் அவருக்குமான உறவை அறியலாம். தமிழகத்தில் 1967லிருந்தே காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்துவருவதை உன்னிப்பாகக் கவனித்த ஜோதிபாசு, மாநில உரிமைகளுக்காகப் போராடும்போது, தமிழகத்தையும் தன் தோழனாக்கிக் கொண்டவர்’’ என்றார் அகத்தியலிங்கம்.

நம்மிடம் பேசிய சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள்... ‘‘நிலச் சீர்திருத்தம் உட்பட பல வகைகளிலும் இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜோதிபாசு, தமிழ் ஈழப் பிரச்னையை தீர்ப்பதிலும் தமிழகத்துக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டவர்’’ என ஆச்சரியம் கொடுத்துத் தொடர்ந்தனர்.

‘‘வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஜோதிபாசு 2009 ஜனவரி 31&ம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டார். அதில் ஒரு முக்கியமான வரலாற்று உண்மையைக் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். ‘நான் முதல்வராக இருந்தபோது வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். அப்போது மேற்குவங்காளத்தில் உள்ள பராக்கா அணை சம்பந்தமாக இருதரப்புக்கும் நிலவும் நீண்ட கால பிரச்னைக்கு உடன்பாடு செய்துகொள்வதென முடிவு செய்தோம். ஆனால், அந்த உடன்பாட்டில் மாநில முதல்வர் என்ற முறையில் நான் கையெழுத்திட முடியாது. இந்தியாவின் பிரதமர்தான் கையெழுத்திட முடியும். இதனால் உடனடியாக அப்போதைய பிரதமர் தேவகவுடாவிடம் வலியுறுத்தி... நானும் வங்கதேச பிரதமரும் செய்துகொண்ட உடன்பாட்டை செயல்பட வைத்தேன்’ என கூறியிருக்கிறார் ஜோதிபாசு.

இந்த ஒப்பந்தத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் நாடாளுமன்றத்தில், ‘இன்று வங்கதேசத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள உடன்பாட்டை உருவாக்குவதற்கு மேற்குவங்க முதல்வர்தான் முக்கியக் காரணம்’ என்றார்.

மேற்குவங்காள மக்களை பாதித்த பராக்கா அணை பிரச்னையில், மாநில முதல்வராக இருந்தபோதும் அடுத்த நாட்டுடன் பேசி சுமுகத் தீர்வு கண்டார் ஜோதிபாசு. ஆனால், இலங்கையில் ஈழத் தமிழர்கள் துடிக்க... அதைப் பார்த்து தமிழகத் தமிழர்களும் துடிக்கிற நிலையில், ‘எல்லாம் இந்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது’ எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் கலைஞர். ஜோதிபாசுவின் நண்பர் என சொல்லும் கலைஞர் எல்லாவற்றையும் டெல்லியிடமே ஒப்படைத்துவிட்டார். ஈழ விஷயத்தில் நண்பர் ஜோதிபாசுவின் வழியை கலைஞர் பின்பற்றலாமே?’’ என ஆதங்கத்துடன் சொல்லி முடித்தனர்.

நேர்மைக்கும், எளிமைக்கும், தூய்மைக்கும் ‘பாஸ்’ ஆக என்றும் விளங்கும் ஜோதிபாசுவின் மரணம் உலக சமுதாயத்துக்கே இழப்புதான்!