என் தந்தையை அமெரிக்காவால் கொல்ல முடியாதது அந்த நாடு செய்த அதிர்ஷ்டம். அவர் மட்டும் கொல்லப்பட்டு இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகி இருந்து இருக்கும். அவர் மட்டும் கொல்லப்பட்டால், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி பேரழிவை ஏற்படுத்துவார்கள். என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் 11 மகன்களில் ஒருவரான ஒமர் பின்லேடன். கூறியுள்ளார்.
ஓமர் பின்லேடன், சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் தங்கி தீவிரவாத பயிற்சி பெற்றார். 2001ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் தன் தந்தையை விட்டு பிரிந்து விட்டார். 2007-ம் ஆண்டு அவர், தன் வயதை விட இரு மடங்கு அதிக வயதுள்ள இங்கிலாந்து நாட்டு பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் தன் மனைவியுடன் இங்கிலாந்து நாட்டில் வசிக்க முயன்றார். அவரை அந்த நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. கத்தார், எகிப்து, ஸ்பெயின் நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டன.
ஓமர் பின்லேடன் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு அதிக துருப்புகளை அனுப்பியதன் மூலம் ஒபாமா தவறு செய்துவிட்டார். நான் அவர் இடத்தில் இருந்தால், தீவிரவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டு இருப்பேன். ராணுவத்தை திருப்பி அனுப்பி இருப்பேன். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. இதற்கு என் தந்தை காரணம் இல்லை. ஆப்கானிஸ்தானியர்களின் போர்க்குணம் தான் காரணம்.
2000ஆம் ஆண்டு புஷ் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது என் தந்தை ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ஏனெனில், புஷ் தான் அமெரிக்காவுக்கு அப்போது தேவைப்பட்ட தலைவர் என்று அவர் கூறினார். பிறநாடுகளின் மீது தாக்குதல் நடத்தி, அதற்காக பணத்தை செலவிட்டு நாட்டை அழித்து விடுவார் என்று என் தந்தை கணித்து இருந்தார்.
என் தந்தை மதப்பற்று உள்ளவர். அவருக்கு என்று லட்சியம் உள்ளது. தேவை ஏற்பட்டால் மட்டுமே கொலைகளை செய்வார். மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவேண்டிய தேவை அவருக்கு இப்போது இல்லை என்றே நான் கருதுகிறேன். அமெரிக்காவை அவர் நிலைகுலைய செய்து விட்டார். அந்த அளவில் இது அவருக்கு சாதனை தான். ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க வீரர்கள் சென்றதுமே அவர் நினைத்த திட்டம் செயல்பட தொடங்கி விட்டது. அவர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார். இவ்வாறு ஒமர் பின்லேடன் குறிப்பிட்டுள்ளார்.