உலகில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, அதற்கெதிராக சட்டவாக்கங்களும் கொண்டு வரப்பட்ட பின்னரும், மக்கள் இவ்விதம் அடிமைகளாக நடாத்தப்படுவதை ஐக்கியநாடுகள் சபை அடங்கலாக மனிதவுரிமைகளுக்கு குரல் கொடுக்கிற சர்வதேச அமைப்புகள் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பது புரியவில்லை.
இங்கு தடுத்து வைக்கப்ட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் தமது முன்னைய வாழ்விடங்களிற்கு அல்லது தீவின் மற்றய பாகங்களுக்குச் சென்று தமது வாழ்வைத் தொடர விரும்பினாலும், அவர்கள் வலோத்காரமாக முகாம்களி;ல் அடைக்கப்பட்டு, அகதிகள் என்றும் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் அழைக்கப்படுகிறார்கள. இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் வேறு, நலன்புரி கிராமங்கள் என சிறிலங்கா அரசால் அழைக்கப்படுகிறது. அப்பெயரையே புலம் பெயர்நாடுகளிலிருந்து இயங்கும் தமி;ழ் ஊடகங்களும் சிலவும் பாவித்து வருவது அவர்களது அடிமை உணர்வையே காட்டுகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை, முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களைக் காட்டி, வெளிநாடுகளில் நிதியுதவி பெற்று, அதன் மூலம் தமது பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய விழைகிறது. வெளிநாடுகளும் இந்த மக்களுக்கு உதவுவது போன்று, சிறிலங்கா அரசுடன் பேரம்பேசி, தமது அரசியல், வர்த்தக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகின்றன. இந்தியாவும், தன் பங்கிற்கு, புனர்நிர்மாண நடவடிக்கையில் ஈடுபடும் போர்வையில், தமது பொருளாதார நலன்களை விருத்தி செய்யம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இன்னொரு புறத்தில், இம்மக்களுக்கு உதவுவதாகக்கூறி புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி வசூலிப்பதில், உள்ளுரிலும், சிறிலங்காவிலும், சில முகவர்கள் முனைப்புடன் செயற்படுகிறார்கள். மொத்தத்தில் எமது மக்களுக்கு ஐனநாயகத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறி அவர்களது வைத்து வியாபாரம் நடாத்தப்படுகிறது.