தமிழன் வாழ்ந்த வரலாறு
தரணிக்கெல்லாம் தகராறு;
பொங்கலோ பொங்கல்!
ஆறு போகம் வெளஞ்ச மண்ணில்
வீரமெங்கே போச்சிதோங்க
பொங்கலோ பொங்கல்!
நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது
வயித்து பொழப்பு நடக்கலையே
பொங்கலோ பொங்கல்!
தமிழன் தானே ஆளுறான்
தமிழன் தானே சாகுறான்
கேட்க நாதி ஒண்ணுமில்லே
பொங்கலோ பொங்கல்!
பழைய கந்த கொளுத்தல
பானை கூட வாங்கல
கேஸ் ஸ்டவ்வு நெருப்புல கலாச்சாரம் எரியுதே
பொங்கலோ பொங்கல்!
காலம் மாறி போச்சிடா
விதியை நம்பும் வாழ்க்கைடா
இளைஞனெல்லாம் தூங்குறானே
பொங்கலோ பொங்கல்!
கரும்பு பாக்கெட் பையில
மஞ்ச கொத்து கிடைக்கல
மாடு கழுவி வணங்கலடா
பொங்கலோ பொங்கல்!
ஏறு புடுச்சி உழுவுல
வயல கூட காணல
ஈர வயிறும் காயலடா
பொங்கலோ பொங்கல்!
ஏழை வாழ்வு மாறலை
ஜாதி வெறி ஒழியல
தமிழன் ஓட்டம் நிக்கலடா
பொங்கலோ பொங்கல்!
ஈழ தமிழ் நாட்டுல -
ரத்த ஆறு ஓடுது
ரத்த ஆறு ஓடுது
முள்ளுக் கம்பி மேல தான்
பிள்ளைகுட்டி சாகுது
லிட்டர் பாட்டில் தண்ணில
தமிழன் குடும்பம் குளிக்குது
லச்சம் லச்சம் உயிருடா
போன இடம் தெரியலடா
பொங்கலோ பொங்கல்!
சிங்களந்தான் ஆளுறான்
சீனன் கூட ஆடுறான்
இந்தியாவின் துரோகத்தில
ஈழத் தமிழன் சாகுறான்
மெத்தனமா கும்பிடுவோம்
மொத்தப் பேரும் ஒழிஞ்சிடுவோம்
உலக படம் வரையும் பொது
தமிழனை தான் தேடிடுவோம்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பகலவன்