1999ம் ஆண்டு இயக்க வந்து இதுவரை மொத்தமே நான்கு படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ள பாலா, இதுவரை 4 தேசிய விருதுகளை தனது படங்களின் மூலம் பெற்றுள்ளார்.
மதுரை அருகே உள்ள பெரியகுளம் நகரைச் சேர்ந்தவர் பாலா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவரான இவரது பின்னணிக்கும், இப்போது திரையுலகில் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
இன்றைய தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்த பிதாமகர்களில் பாலாவும் முக்கியமானவர்.
மிகச் சிறந்த இயக்குநராக தனது முதல் படமான சேதுவிலேயே முத்திரை பதித்தார் பாலா. விக்ரம் என்ற அட்டகாசமான நடிகரை கண்டுபிடித்துக் கொடுத்தவர் பாலா.
பாலாவின் முதல் படமான சேது, சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதை தட்டிச் சென்றது.
அடுத்த படம் நந்தா. இதில் சூர்யாவை சிறந்த நடிகராகக் காட்டி அவருக்கு புது வாழ்வளித்தார் பாலா. இப்படத்தின் மூலம் அறிமுகமான கருணாஸ், இன்றைய காமெடியன்களில் முக்கியமானவர்.
அடுத்த படம் பிதாமகன். சேதுவில் கிடைக்க வேண்டிய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இந்தப் படத்தின் மூலம் தட்டிச் சென்றார் விக்ரம். இந்தப் படம் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியது.
இப்போது நான் கடவுள் படத்துக்காக 2 விருதுகளை அள்ளியுள்ளார் பாலா.
இதில் வேடிக்கை என்னவென்றால் திறமையான நடிகர்களை, கலைஞர்களை அறிமுகப்படுத்தி விருது வாங்கிக் கொடுத்தவரான பாலாவுக்கே இப்போதுதான் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்பதுதான்.
ஆனால் அதை விட முக்கியமானது, இயக்கிய நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றுள்ள முதல் தமிழ் திரைப்பட இயக்குநர் பாலா தான்.