‘நாமக்கல் ஓசை’ என்ற பெயரில், மாவட்ட நிர்வாகம் பொங்கல் விழாவை நடத்தியது. அதில் ஒரு பகுதியாக காவிரிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதி மோகனூரில் நடந்தது. பொதுவாக டெல்டா மாவட்டங்களில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வு, முதன் முதலில் நாமக்கல்லில் அரங்கேறியது.
காலையிலேயே பெண்கள் பக்தியோடு தலையில் முளைப்பாரி தூக்கியும், கையில் விளக்கேந்திக்கொண்டும் பின்னால் போக, மக்கள் படைகளோடு கலெக்டர் முன்னால் அணிவகுத்தார். மத்திய இணையமைச்சர் காந்தி செல்வனும் இணைந்துகொள்ள, மோகனூர் அண்ணா சிலையில் தொடங்கி, கடைவீதி, அக்ரஹாரம் வழியாக ஒரு மணி நேரம் நடந்து காவிரியை அடைந்தபோது, மக்கள் கூட்டம் காவிரிக்கு மரியாதை செய்ய பொங்கியது.
கூட்டத்தில் இருந்த மோகனூர் விவசாய வல்லுனரான அஜிதன் நம்மிடம், ‘‘கலெக்டர் சொன்னதன்பேரில்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ‘காவிரியைக் காண்போம், காவிரியைக் காப்போம்’ என்கிற இந்த நிகழ்ச்சிக்கு நிறைய அதிகாரிகள் வருவது எங்களுக்குச் சந்தோஷம்தான். ஏனென்றால், காவிரித் தண்ணீரைக் குடிக்கிற, அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் காவிரி எவ்வளவு மாசுபட்டிருக்கிறது என இதுவரை கண்டதும் இல்லை. கவலைப்பட்டதும் இல்லை. அதிகாரிகள் தரப்போ இதை நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்த நிகழ்ச்சி மூலமாக, அதிகாரிகள் இங்கே வந்து காவிரியைப் பார்க்கும்-போது, அவர்களுக்கே கவலை வரும். இனிமேலாவது, காவிரியில் கழிவுநீர் கலப்பதாகப் புகார் வந்தால் கண்டிப்பாகக் கவனிப்பார்கள். வெப்பமயமாதல் வேகமா நிகழ்கிற பூமியில், இருக்கிற வளங்களை காப்பாற்றும் எண்ணம் வருங்கால தலைமுறைகளுக்கு உருவாவதற்கு இது மாதிரியான நிகழ்ச்சிகள் துணை செய்யும்’’ என்றார் சந்தோஷத்தோடு.
கலெக்டர் சகாயத்திடம் பேசினோம்.
‘‘உழவர் திருநாள் என்பதே உழவுத் தொழிலை வணங்குவதுதானே. வருஷ முழுமைக்கும் விவசாயத்துக்கு மட்டுமல்ல, நமது குடிதண்ணீர் தேவைக்குமான தன்ணீரை காவிரித் தாய்தானே தருகிறாள். அப்படிப்பட்ட தாய்க்கு முதல் மரியாதை தர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்கள் அதற்கு வரவேற்பும் கொடுத்து இனிமேல் வருடா வருடம் உழவர் திருநாளன்று காவிரியை வணங்குவோம் என்று உறுதி கூறியுள்ளார்கள்’’ என்றார் நெகிழ்வாக. ‘‘காவிரி எப்போடா காயும்... எப்படா மணல் அள்ளலாம்’’ என்று லாரியுடன் பலர் காத்திருக்கும் நிலையில், கலெக்டர் சகாயத்தின் இந்தக் ‘காவிரியைக் காண்போம், காவிரியைக் காப்போம்’ நிகழ்ச்சிதான் உண்மையான, அர்த்தமுள்ள பொங்கல் நிகழ்வாக அமைந்திருக்கிறது.