ரஜீவனின்
எரியும் தேசம்
பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து
பாசமில்லை பரிவில்லை
மனிதமில்லை மானிடத்தொல்லை
அத்தனையும் நடக்குது என் தேசத்திற்குள்
மார்புக்குள் ஈரம் ஈரத்திர்குள் தாகம்
தடுமாறுகிறது வாழ்வியல் தடுக்க ஒருவழியில்லை
கேட்டதோ
பிறந்தமண் வழ்ந்தமண்
என்வீடு தாய்மனை
அத்தனையும் மறுக்கப்படுகிறது மாற்றானொருத்தனால்
பார்க்க மட்டும் வழிகிடைத்த
என் பார்வைக்கு
கரிசனை சொல்ல வழி ஏது?
பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து
ஒ
யாரங்கே என் தாயா மரணித்துப்போன
என் சகோதரனை மார்பில் தாங்குவது...
பக்கத்தில் யார் அட என் சகோதரி
மனை புகுந்தவனால் மானவங்கபடுத்தப்பட்டு..
கூட ஓடுவது என் தந்தையா
ஒற்றைக்கால் எங்கே? தாய் மண்ணிற்கு தானமா?..
கீழே கிடப்பது
ம்ம்... உறவுக்காரர்களின் உருகிப்போன உடல்கள் ..
அங்கே ஒரு உளறல்
பரவாயில்லையே
பிணங்கள் கூட கத்துகிறதே
“காப்பற்றுங்கள்” என்று
மன்னித்து விடு
நீ பிணமில்லயா?
உயிரைப்பிடிச்சு வைத்திருக்கும்
என் தம்பியா?
பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து
ஓடுங்கோ ஓடுங்கோ அடிக்கிறாங்கள் அங்க
ஒடுறதுக்குள்ள விழுந்துட்டு, மகன் அதிலேயே சரி..
பிள்ளைய காணோமே.. அம்மா எங்கே?
ஐயோ ஏன்டா பிள்ள.. ஐயோ ஏன்டா அம்மா..
ஐயோ அப்பா.. ஐயோ கடவுளே...
வானுக்கும் கேக்கும் சத்தம்
என் செவிக்கு மட்டும் கேட்கலையே
அரிசி கொஞ்சம் பருப்பு கொஞ்சம்
சேர்த்து வெச்ச துணி கொஞ்சம்
காணிப்பத்திரம் அடையாள அட்டை
பாயொண்டு படுக்கையொண்டு
சொட்டுமருந்து புட்டிப்பால்
காத்துப்போன சைக்கிள்ள கட்டி,
போற இடம் தேடயிலே
வா என்றழைக்க
வாயில்லை என்னக்கு மட்டும்
பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து
அதோ வருகிறார்கள்
ரத்தத்தில் தோய்ந்த என் உறவுக்காரர்கள்...
கர்ப்பிணித் தாயோன்று பிரசவம் நடத்தி
தங்கையோன்று அவசரமாய் பூப்பெய்தி
அறைக்குள் நடக்கும் தமிழர் பண்பாடு
அம்பலத்தில் நடக்கிற பரிதாபம் இங்கே
இது என்ன இது
அதற்குள் பிள்ளையொன்று
அழுகிறதே பாலுக்கு
மார்பில் பால் சுரந்தும்
பசிதீர்க்காமல் கதறுகிறதே தாய்மை..
முடிப்பதற்குள் இன்னொன்று
"அம்மா பசிக்குது" கேக்குது பிள்ளையொன்று
"பேசாம நடந்து வா" சொல்கையில்
பற்றி எரிகிறதே தாய்வயிறு..
இவையெல்லாம் எம்மாத்திரம்
அங்கேயொன்று
காலிழந்த தமையன் கதறி அழுகையிலே
சாகட்டும் போ காப்பாத்த வழியில்லை
உயிரைப் பிடிச்சிட்டு வாறானே தம்பி..
அகமும் காதல் வைத்து புறமும் வீரம்கொண்ட
என் இனம் வாழ இடம்தேடயிலே
கட்டியணைக்க கையில்லை எனக்கு
பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து
உறக்கம் தொழைத்த உணர்வுகளை
பகிர்ந்துவிடேன் கண்ணீரோடு..
முடிவுரைக்கோ வழியில்லை
என் இனமே என் சனமே
உணர்வுள்ள தமிழனே
எழுது ஒரு முடிவுரை நீ
என் கவிக்கல்ல
இனி வரும் தமிழினத்திற்கு..