கொல்கத்தாவில் கடந்த 1914 ம் ஆண்டு ஜுலை 8 ந் தேதி அன்று ஜோதிபாசு பிறந்தார். அவரது தந்தை நிஷிகந்தா பாசு, ஒரு டாக்டர். தாயார் பெயர் ஹேமலதா. மிகவும் கட்டு பெட்டியான குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு, 1920 ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள லொரெட்டோ பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பள்ளி கல்வியை கொல்கத்தாவில் முடித்த அவர், 1935 ம் ஆண்டு பாரிஸ்டர்' (வக்கீல்) பட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றார். அந்த சமயத்தில், இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்தது. எனவே, லண்டனில் இருந்தபடியே அங்கிருந்த இந்திய மாணவர்களுடன் இணைந்து ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜோதிபாசு போராடினார். அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் உள்ள கம்யூனிச தலைவர்களின் நெருக்கம் அவருக்கு கிடைத்தது. ரஜனி பால்ம் தத்தா உள்ளிட்ட தலைவர்களின் வழியில் கம்யூனிஸ்டு பாதையில் நடக்க ஆரம்பித்தார்.
1940ம் ஆண்டில், பாரிஸ்டர்' பட்டம் பெற்றார். பின்னர், ஒரு வக்கீலாக மட்டுமல்லாமல் தீவிர கம்யூனிஸ்டாகவும் இந்தியாவுக்கு திரும்பினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பிய அந்த ஆண்டில் தான் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. 1943ம் ஆண்டு நடந்த கம்யூனிஸ்டு கட்சியின் சட்ட மாநாட்டில், மாகாண கமிட்டி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ரெயில்வே தொழிற்சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
1946ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடந்த வங்காள சட்டசபை தேர்தலில், ரெயில்வே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன் முதலில் களம் கண்ட தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அன்றில் இருந்து 2001 ம் ஆண்டு வரை மேற்கு வங்காள சட்டசபைக்கு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இடையே, 1972 ம் ஆண்டு மட்டும் தோல்வி அடைந்தார்.
1962ம் ஆண்டில் சீனாவில் போர் நடந்தபோது கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அவர் சிறையில் இருந்தார். பின்னர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் தோன்றியதும் அதில் அவர் இணைந்தார். இந்தியாவிலும் சரி, மேற்கு வங்காளத்திலும் சரி மார்க்சிஸ்ட் கட்சியை நிலை நிறுத்திய முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். 1989ம் ஆண்டிலும், 1996 ம் ஆண்டிலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத ஆட்சி மத்தியில் வரும் அளவுக்கு அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் ஜோதிபாசு என்றால் அதுமிகையாகாது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ மற்றும் மத்திய கமிட்டியில் உறுப்பினராக தொடர்ந்து நீடித்து வந்தார். 2000 ம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக பொலிட்பீரோ பதவியில் இருந்து அவர் விலகினாலும், கட்சி விடவில்லை. எனவே, கட்சியின் வற்புறுத்தல் காரணமாக 2008 ம் ஆண்டு வரை கட்சி பொறுப்பில் நீடித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல், 1952ம் ஆண்டு நடந்தது. அந்த தேர்தலில், அப்போதைய வங்காள மாநில கல்வி மந்திரி ராய் ஹரேந்திரநாத் சவுத்திரியை வீழ்த்தினார். பின்னர், 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் பரனகோர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அப்போது முதல் 1972ம் ஆண்டு வரையிலும், அந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 1967 மற்றும் 1969 ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் துணை முதல் மந்திரியாக பொறுப்பு வகித்தார். சரியாக 8 ஆண்டுகள் கழித்து, 1977ம் ஆண்டு முதல் மந்திரியானார்.
அந்த ஆண்டு முதல் 2000ம் ஆண்டுவரை இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 23 ஆண்டு காலம், மேற்கு வங்காள முதல் மந்திரியாக இருந்தார். இந்தியாவில் யாருமே இவ்வளவு நீண்ட காலம் முதல் மந்திரியாக இருந்தது கிடையாது. மேலும், தொடர்ந்து 23 ஆண்டு காலம் பதவியில் இருந்ததும் கிடையாது. அத்தகைய அபூர்வ சாதனையை ஜோதிபாசு நடத்தி காட்டினார்.
மேற்கு வங்காள முதல் மந்திரியாக ஜோதிபாசு இருந்தபோது, காங்கிரஸ் அல்லாத முதல் மந்திரிகள் மாநாட்டை கொல்கத்தாவில் கூட்டினார். என்.டி.ராமராவ், ராமகிருஷ்ண ஹெக்டே உள்ளிட்ட பல மாநில முதல் மந்திரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜோதிபாசுவின் தீவிர முயற்சியால், 1989ம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் அமைந்தது. 1991ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களை ஜோதிபாசு கடுமையாக எதிர்த்தார். எனினும், நாட்டு வளர்ச்சிக்கு அவசியம் என்பதால் மேற்கு வங்காளத்தில் கூட பொருளாதார சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்.
1996ம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளும் அல்லாத புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை மத்தியில் உருவானது. அப்போது, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். வி.பி.சிங் உள்பட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலேயே ஆட்சி அமைக்கலாம் என்றும், ஜோதிபாசு பிரதமராகலாம் என்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்தனர். கட்சி பாகுபாடின்றி ஜோதிபாசுவுக்கு ஆதரவு பெருகியது.
ஆனால், கூட்டணி ஆட்சிக்கு தலைமை ஏற்பதில்லை' என்ற கொள்கையை பின்பற்றி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூறிவிட்டது. இரண்டு முறை அந்த குழு கூடியபோது, இந்த முடிவில் உறுதியாக இருந்தது. கட்சி எடுத்த அந்த முடிவால், ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது.
மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு, மிகப்பெரிய வரலாற்று பிழை' என ஜோதிபாசு அப்போது தெரிவித்தார். அது உண்மை, என்பதை பின்னாளில் அந்த கட்சியின் தலைவர்கள் உணர்ந்தனர். சுதந்திர இந்தியாவில் மார்க்சிஸ்ட் தலைமையில் அரசு அமைக்கும் ஒரு வாய்ப்பு வலிய வந்த போதிலும் அதை அந்த கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2004ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு உதவிய மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஜோதிபாசுவும் ஒருவர். எனவே நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், வாஜ்பாய் என பல்வேறு பிரதமர்களுடன் அரசியல் நட்பு பாராட்டிய ஜோதிபாசுவோடு சோனியா, மன்மோகன்சிங் ஆகியோரும் நட்பு பாராட்டினர்.
மேற்கு வங்காளத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் ஆட்சியே நடக்கிறது. 23 ஆண்டு காலம் முதல் மந்திரியாக இருந்த ஜோதிபாசு நினைத்தால் இன்னமும் அந்த பதவியில் நீடித்து இருக்க முடியும். ஆனால், வயதாகி விட்ட காரணத்தால் 2000ம் ஆண்டு, தானாகவே அந்த பதவியை விட்டு விலகினார். தனக்கு பதிலாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு அந்த பதவியை அளித்தார்.
இந்தியாவின் கீழ்வானில் உதித்து, மார்க்சிஸ்ட் கட்சியை இந்தியாவின் தலைமை பீடத்தின் அருகில் வரை அழைத்துச் சென்ற சிவப்பு சூரியன்' அஸ்தமித்து விட்டது. கடந்த 70 ஆண்டுகளாக, இந்திய அரசியலில் சுடர் விட்டு பிரகாசித்த மார்க்சிஸ்ட் தீபம் அணைந்து விட்டது. அவருடைய மறைவினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மேற்கு வங்காளம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு தூய்மையான அரசியல் தலைவரை இழந்து விட்டது.
ஜோதிபாசுவின் மனைவி கமலா பாசு, கடந்த 2003ம் ஆண்டு மறைந்து விட்டார். ஜோதிபாசுவுக்கு சந்தன் பாசு என்ற ஒரு மகன் இருக்கிறார். தொழிலதிபரான அவருடன் தான் ஜோதிபாசு வசித்து வந்தார். சந்தன் பாசுவுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு
தொகுப்பு
அரசியல்