புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் ""ஜுமெரா பாம்'' எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.
ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரக சமஷ்டி கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக்கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலகமகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ""துபாய் வேர்ல்ட்'' என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. நகீல் என்ற அரசின் துணை நிறுவனம் இத்திட்டத்திற்கான கடன் பத்திரங்களை ""சுகுக் பாண்டுகள்'' என்ற பெயரில் 2004இல் வெளியிட்டது. அது 2009இல் முதிர்வடைவதால் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டும். ஆனால், நகீல் நிறுவனத்தால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை.
துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4,00,000 கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத காலஅவகாசம் கேட்டுள்ளது. இந்தச் செய்தி பரவி, பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதும் தடதடவென ஆரம்பித்து விட்டது சரிவு. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அவசரமாக திரும்ப எடுத்துச் செல்லத் தொடங்கின. முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும் போது மீண்டும் சரிவு ஏற்பட்டது.
ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ரஸ் அல்கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால், வீட்டுமனைத் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையில் துபாய் அதிக அழுத்தம் கொடுத்தது. கொளுத்தும் வெய்யிலில் பாலைவனத்தின் நடுவேயுள்ள முகாம்களில் வாழும் ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்தேர்ச்சி பெற்று அதிக சம்பளம் வாங்கி நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடும்பத்தோடு வாழும் நடுத்தர வர்க்கத்தினர், கோடானுகோடிகளை முதலீடு செய்துள்ள உலகின் பணக்கார வர்த்தகர்கள் எனப் பல்வேறு பிரிவு வெளிநாட்டவர்கள் துபாயில் குடியேறியுள்ளனர். துபாயின் மொத்த மக்கள்தொகையில் இவர்கள் ஏறத்தாழ 80 சத வீதம். துபாயில் கட்டப்படும் ஆடம்பர வீடுகளை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்று அரசு ஆசை காட்டியது. இதனால் நடுத்தர வர்க்கமும் பெரும் வர்த்தகர்களும் உல்லாசிகளும் இத்தகைய புதிய ஆடம்பர வீடுகளை வாங்கப் போட்டி போட்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கியில் கடன் வாங்கியாவது வீடு வாங்க முண்டியடித்தனர்.
கடல் நடுவே பேரீச்சை மர வடிவில், உலக வரைபட வடிவில் என்றெல்லாம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக்கட்டித் தரும் திட்டங்களை பன்னாட்டுக் கட்டுமானக்கம்பெனிகள் அறிவித்தன. கட்டடங்களை எழுப்பும் முன்னரே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். நம்ம ஊரில் தேக்குப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ஒரு மோசடித் திட்டத்தை அறிவித்து, இதோ உங்கள் தேக்கு கன்று வளர்ந்து வருகிறது என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி ஏய்த்ததைப் போலத்தான், வெறும் கட்டடப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை வீட்டுக்காகப் பலரும் பணத்தைக் கட்டினர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்கிக் கட்டினர்.
""இன்றைய உலகில் வீட்டுமனைகட்டடத் தொழிலில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. வீடுகளின் விலை குறைந்ததாக வரலாறில்லை'' என்ற பங்குச்சந்தை சோதிடர்கள் கூறும் அருள்வாக்கை பலரும் நம்பினர். பங்குச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டு வீட்டுமனை விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்த அனைத்துலக ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோடிகோடியாகக் கொள்ளையடித்த பிறகு, உண்மை மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. முதலீடு செய்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வரப்போகும் வீழ்ச்சியை அறிந்து முன்கூட்டியே தமது முதலீடுகளை திரும்ப எடுத்துச் சென்றன. இதனால், கடன்சுமை அதிகரித்து துபாய் வேர்ல்டு என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் திவாலாகியது.
எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்துவசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.
மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து செய்யப்படும். ஒரு மாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக் கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்துதான் கடனை அடைக்கவேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டைவிட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு, எவரிடமும் விற்கமுடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்திமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.
""இருப்பினும் இது தற்காலிக நெருக்கடிதான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டுவிட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்'' என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக் கூடாது. மீறினால், இலட்சக்கணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவைகாலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்தியகிழக்கு நாடுகளது மன்னர்கள்அமீர்களது பொருளாதாரநிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.
இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
1997இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம் தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.
லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த öஹச்.எஸ்.பி .சி . ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.
அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது. கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.
· கலைமதி