ஆனால் புதுக்கோட்டை தர்மலிங்கத்தின் வழி... தனி வழி! புதுக்கோட்டை அருகே கேப்பரையித்து பகுதியில் இருக்கும், செல்போன் டவர்தான் தர்மலிங்கத்தின் போராட்டக் களம்.
ஜனவரி 2ம் தேதி காலை 7.30 மணிக்கு டீ குடித்த தர்மலிங்கம் கடகடவென ஷார்ட்ஸ் டிராயருடன் அந்த செல்போன் டவரின் உச்சிக்கு சென்றுவிட்டார். “நான் குதிக்கப் போறேன்” என்று அவர் கத்திய பிறகுதான் ஊரே டவரின் கீழ் கூடி அண்ணாந்தது. ஊர்ப் பெரியவர்கள் “வேண்டாம்டா” என கத்த டவர்க்கு கீழே பதற்றம்.
‘ஏன் சார் மேல ஏறுனீங்க?’ கீழே இருந்தபடியே பேட்டி எடுக்க நினைத்தோம். ஆனால் அதற்கு பதில் கூறியவர் அவரது மனைவி அஞ்சலை.
“என் வீட்டுக்காரர் மோட்டார் மெக்கானிக்குங்க. ஏழைப்பட்டவங்க நாங்க. 15 வருஷமா இருக்குற வீட்டுக்கு பட்டா கேட்டுக் கேட்டு அலுத்து போயிட்டோம். ஒரு தடவை தாலுகா ஆபீஸ் முன்னாடி பட்டாவேண்டி எங்க வீட்டுக்காரர் தீக்குளிக்க போயிட்டாரு. அப்படியும் இதுவரை அதிகாரிங்க நடவடிக்கை எடுக்கல. அரசு கொடுக்கிற கலர் டி.வி., கேஸ் அடுப்பு எதுவும் எங்களுக்குக் கிடையாது. நாங்களும் இந்த ஊர் பிரஜைதானே? அதுக்காகத்தான் அவர் இப்ப டவர் ஏறிட்டாரு’’ என்றார்.
“எனக்கு இலவச கலர் டி.வி, வேணும், நான் பதினஞ்சு வருஷமா குடியிருக்கிற என் வீட்டிற்கு பட்டா தரணும்” என மேலே இருந்தபடியே கத்த ஆரம்பித்தார் தர்மலிங்கம். அதை விட “பத்தாவது பெயில் ஆன என் பொண்ணு மேல்படிப்பை அரசாங்கம் ஏத்துக்கணும்’’ என கூடுதல் கோரிக்கையையும் வைத்தார்.
டென்ஷன் எகிறிய தீயணைப்புப் படையினர் டவரில் ஏறினர். அவ்வளவுதான், ‘இதுக்கு மேல யாராவது ஏறினா கீழே குதிச்சுடுவேன்’ என மிரட்ட ஏறியவர்கள் பின்வாங்கிவிட்டனர்.
கீழே மைக் மூலம் தர்மலிங்கத்தின் மனைவி அஞ் சலையை விட்டு இறங்கச் சொல்லி காக்கிகள் கெஞ்ச அப்போதும் தர்மலிங்கம் இறங்கி-வரவில்லை. உடனே, கீழே நின்ற அதிகாரிகள் அவசர அவசரமாக பக்கத்து டீ கடையில் ஒடிக் கொண்டிருந்த இலவச டி.வி.யை கொண்டு வந்து காட்டி ‘இப்போது இறங்கு’ என்றனர்.
“இது டீ கடை டி.வி.ன்னு எனக்குத் தெரியும். எனக்கு புது டி.வி. வேணும்’’ என தர்மலிங்கம் பிடிவாதமாக போராட... ஒருவழியாக புது இலவச டி.வி.யை எடுத்து வந்தனர் அதிகாரிகள்.
விடவில்லை தர்மலிங்கம்... “கலெக்டர் இங்க வரணும். பட்டா உடனே தரணும்’’ என்றார். அதற்குள் அதிகாரிகள் கீழே ஒரு வெள்ளைத் தாளில் டுபாக்கூர் பட்டா ரெடி பண்ணி அவரிடம் காண்பித்தனர்.
காலை மணி 10.30 தாண்டியும் இறங்காததால்... அவரது வீட்டை அளக்கும் ஆக்ஷனை வருவாய் துறை ஊழியர்கள் மேற்கொண்டனர். இதை நம்பி தனது நான்கு மணி நேரப் போராட்டத்தைக் கைவிட்டு 11.30க்கு சாதித்த மகிழ்ச்சியுடன் இறங்கினார் தர்மலிங்கம். நிம்மதி மூச்சு விட்ட போலீஸார், பத்திரமாக அரவணைத்து அப்படியே தர்மலிங்கத்தை அள்ளிச் சென்றனர். போராட்டத்தால் கிடைத்த இலவச டி.வி.யை உஷாராக எடுத்துச் சென்றார் தர்மலிங்கத்தின் மனைவி.
சிலநேரம் இப்படி போராடித்தான், மிஸ்டர் பொதுஜனம் வெற்றி அடைய வேண்டியிருக்கிறது. யோசிக்க வேண்டிய விஷயம் இது!