முன்னுரை:
தமிழ்த் தேசியச் சிந்தனைகள் இப்போது தமிழர்களிடையே உணர்வு, அறிவு என்கிற இரண்டு தளங்களிலும் விரைந்து பரவி வருகிறது. இந்தச் சிந்தனைகளின் பக்கம் நம்மைத் திருப்புகிற தலைவர்களும் சிந்தனையாளர்களும் இப்போது நம்மிடையே நிறைந்து காணப்படுகிறார்கள். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிந்தனைகளைத் தமிழர்களிடையே வளர்த்த பெருமை வ.உ. சிதம்பரனாரைச் சேரும்.
அதிசயமான அரசியல் உலகில் ஒட்டு மொத்த அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகளே இப்போதைய ‘மக்கள் - தலைவர்களாக’ வலம் வருகின்றனர். பொதுமக்களின் நினைவாற்றல் பசுமையாக நிலைத்து நிற்பதில்லை. அவர்களின் நினைவுச் சுரங்கங்களில் வ.உ.சி. போன்றோர் அமர்வது இப்போதைய தலைவர்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து பல அரசியல்வாதிகளும் வ.உ.சியை மக்கள் அரங்கில் கொண்டு செல்வதில்லை.
இப்போது தில்லிப் பட்டணத்துச் சீமானாக விளங்கும் இராகுல் காந்தி அண்மையில் தமிழகம் வந்தார். தமிழர்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த வ.உ.சி., காமராசர் இருவரும் வாழ்ந்த ஊர்களுக்கும் அவர் சென்றார். ஆனால், அவரை அழைத்துச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் விருதுநகரில் காமராசர் நினைவில்லத்திற்கோ, நெல்லையில் வ.உ.சி, நினைவிடத்திற்கோ அழைத்துச் செல்லவில்லை. அவ்வாறெனில் இராசீவ் மகன் இராகுல் மேற்கண்ட தலைவர்களின் தியாகங்களை அறியக்கூடாது என்பதில் தமிழகத் தலைவர்களே முன்னிற்கின்றனரா? புது தில்லியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களுக்கும் சிலை உண்டு. வெகு சாதாரண பார்ப்பனத் தலைவர்களுக்கெல்லாம் சிலை உண்டு. ஆனால் வ.உ.சி. என்கிற மாபெரும் தலைவருக்கு சிலையும் இல்லை. வடக்கில் அவரை அறிந்தவரும் இல்லை. தமிழர்களின் தேசிய உணர்வைத் தட்டியயழுப்பிய வ.உ.சி. காந்தியாரின் காலத்திற்கு முற்பட்டவர். அவரின் திசைவழி, அரசியல் சிந்தனைகள் ஆழ்ந்த கருத்துடையவை. அவற்றை அறிந்து கொள்வதால் நம் சிந்தனைகள் செழுமையடையும்.
1872ஆம் ஆண்டில் பிறந்து 1936ஆம் ஆண்டு காலமான அம்மாமேதை 64 ஆண்டுகளில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்காக உழைத்தவர். இவரது கருத்துகளின் அடிநாதம் மொழிப்பற்று, தேசப்பற்று, ஆன்மிக வழி இறைப்பற்று என்பவையாக இருந்தன.
சுதேசாபிமானம்:
1906 பிப்ரவரியில் ‘விவேக பானு’ என்னும் இதழில் ‘சுதேசாபிமானம்’ என்ற தலைப்பில் வ.உ.சி ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவர் வயது 34. ஏறத்தாழ அவரின் அரசியல் சிந்தனைகளைத் தாங்கி வெளிவந்த முதல் கட்டுரை இதுவாகத்தான் இருக்கவேண்டும்.
1885இல் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் 1898 ஆகஸ்டு 15ஆம் நாள் வ.உ.சி. தம்மை இணைத்துக் கொண்டார். ‘சுதேசமித்திரன்’ பத்திரிக்கைச் செய்தி இதனை உறுதி செய்கிறது. காங்கிரஸ் மகாசபையின் மூன்றாவது ஆண்டுக்கூட்டம் 1887இல் சென்னையில் நடைபெற்றதை வ.உ.சி. அறிந்திருந்தார்.
இதனடிப்படையில் தமது சுதேசிய உணர்வுகளை உள்ளடக்கியே சுதேசாபிமானம் என்கிற பெயரில் ஏழு பக்கக் கட்டுரை ஒன்றை ‘விவேகபானு’ இதழில் எழுதினார். அதில் அவர் கூறும் செய்திகள் அப்போதைய காலக்கட்டத்தில் மிக முக்கியமானவை:
1. நோய், உணவுஇன்மை, உடைகள்இன்மை போன்றவை மக்களிடையே அதிகமாகும்போது அடிமைத்தனம் கொண்ட மக்கள்தொகை பெருகும்.
2. ஒருவர் பிறப்பதற்கு ஆதாரம் தாய். அவ்வாறெனில் அவரும் அவரது முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாக இருந்த சுதேசம் அவரைப் பெற்ற தாயினும் மேலானது என்க.
3. சுதேசத்தார் ஒன்று சேர்வதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கியமான தடைகள் ஜாதியபிமானம், மதாபிமானம் ஆகியவையே ஆகும்.
4. அவரவர் ஜாதி மதாபிமானங்களை அவரவர் சொந்த வியங்களில் மாத்திரம் கவனித்துக் கொண்டு, சுதேசம் பற்றிய பொது வியங்களில் பாராட்டாது, பலரும் ஒன்றுகூடி ஒரே மனத்துடன் சுதேச அடிமைத் தனத்தை நீக்கி சுயார்சிதம் பெற உழைக்க வேண்டும். சுதேச நன்மைக்காக ஒவ்வொருவரும் சமயம் வாய்ந்துழி அவரவர் உடல்,பொருள், ஆவிகளை சித்தம் பண்ணத் தயாராக வேண்டும்.
1906இல் வெளியான மேற்கண்ட கட்டுரையில் வ.உ.சி. முக்கியமாக வலியுறுத்துவது சுதேசியம் என்பதை முன்னிறுத்திச் செயல்பட ஜாதியும் மதமும் போன்றவை தடைகளாக இருக்கின்றன என்பதாகும்.
நமது நாட்டில் மேற்கண்ட இரண்டு தடைகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக நம்பியவர் வ.உ.சி. இப்போதைய நிலை என்ன? இல்லாத இந்தியத் தேசியத்திற்கு வலுச் சேர்க்க மதவாதமும் ஜாதியமும் உதவுகின்றன.
மதமும், ஜாதியும் தவிர்த்த மொழி, இன வழித் தேசியம் என்கிற தமிழர்களின் நலன் நாடும் தமிழ்த் தேசியம் உருவாக வேண்டும் என்றால், ஜாதியும், மதமும் இப்போது இதற்குத் தடைகள் என்பதை நாம் உணர வேண்டும்.
வ.உ.சி.யின் மேற்கண்ட சிந்தனைகள் அப்போதைய இந்தியத் தலைவர்களிடம் இல்லை என்பதே உண்மை.
இந்து மதத்தையும், அதன் கூறுகளான பல ஜாதிகளையும் ஆதரிக்கிற மனுதர்மவாதியாக விளங்கியவர் திலகர். இவரை வ.உ.சி. தமது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். வெள்ளையர்கள் இந்தியா முழுவதும் ஆதிக்கத்தில் இருந்தனர். எனவே வடக்கில் திலகர், மக்களால் அறியப்பட்டவராக இருந்தார். வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காத இந்திய விடுதலையை எதிர் நோக்கிய வ.உ.சி. திலகரை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது கொள்கைகள் பலவற்றிலும் வ.உ.சி. மாறுபட்டு நின்றார்.
வ.உ.சி. மிகச் சிறந்த சைவ சமயப் பற்றாளர் எனினும் சைவசமயப் புராணங்களை மக்கள் படித்துணர்ந்து அதன்வழி நடக்க வேண்டும் என்று கூறினாரில்லை. திலகரோ பகவத் கீதையை மக்கள் படித்துணர்ந்து அதன் வழி வாழ வேண்டும் என்றார். அதற்கென ஓர் உரை எழுதி ‘கீதா ரகசியம்’ என்று பெயரிட்டு, மக்கள் கீதையைப் படித்து இந்து மத உணர்வு பெறவேண்டும் என வலியுறுத்தினார். அதன் மூலமாகவே சுயராச்சியம் அடைய முடியுமென்றார். ஆனால், மதம் என்பது பொதுவானதன்று, அதனை உன் வீட்டிற்குள் வைத்துக் கொள் என்று வ.உ.சி போதித்தார்.
சிறையில் இருந்த பொழுது திலகர் ‘கீதா ரகசியம்’ எழுதினார். சுமார் 800 பக்கங்கள் கொண்ட அந்த நூலை, மணிக்கு 25 பக்கங்கள் வீதம் 32 மணி நேரத்தில் படித்து முடித்ததாக வினோபாஜி கூறுவார். திலகர் என்கிற மராட்டிய சித்பவா பிராமணரைப் போலவே, இன்னொரு மராட்டிய சித்பவா பிராமணர் வினோபாஜி, காந்தியின் சீடராக அறியப்பட்ட இவர் ஒரே மூச்சில் திலகரின் நூலைப் படித்து விட்டு, “இந்த நூலில் ஏற்றுக் கொள்ள சில கருத்துகள் மட்டுமே உள்ளன. பலவற்றை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை”என்றாராம். திலகர் மனிதாபிமானத்தோடு இந்தியத் தேசியம் பேசினார். அதுவும் மராட்டியர் களின் இந்து உணர்வை மேம்படுத்தியே தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டார்.
மதம், ஜாதி என்கிற இரண்டையும் ஒதுக்கித் தள்ளிய திருக்குறளுக்கு, வ.உ.சி. உரை எழுதினார். சுமார் 1,000 பக்கங்கள் கொண்ட அந்த நூலை எழுதிய வ.உ.சி. பின்வருமாறு கூறுகிறார்:
“தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 திருக்குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத் தமிழர் முற்றுந்துறந்த முனிவரே ஆயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை.”
மதநூல்களைவிட திருக்குறளையே வ.உ.சி. நேசித்தார் என்பது இதிலிருந்து விளங்கும். தமிழர்கள் அனைவரும் ஒரே திசையில் பயணித்துக் குறளை நேசிக்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் உயர்வைப் பிற இனங்கள் உணரும் என்பதற்கு வ.உ.சியை விடச் சிறந்த சான்று யார்?
புகழ்பெற்ற வரலாற்று நூலாசிரியர் டாயின்பீ கூற்றுப்படி மகாராஷ்டிராவில் இந்துக் கொள்கைகள் மேலெழுந்த நிலையில் இருந்தபொழுது, மொகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தது. மேற்கண்ட சாம்ராஜ்ய வீழ்ச்சியின் இடையில் புகுந்த பிரிட்டிஷார் இந்தியாவைத் தம் பிடிக்குள் கொண்டு வந்தனர். இவ்வாறு வந்த பிரிட்டிஷாரை ஒழிக்கின்ற வல்லமை இந்துமத நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்குமே உண்டு என திலகர் நம்பினார். எனவே அவர் மதாபிமானத்தைப் புறந்தள்ளாமல் இந்து என்கிற சொல்லுக்கு வலிமை சேர்த்தார். ஜவகர்லால் நேருவும் ‘இந்தியாவைக் கண்டெடுத்தல்’(Discovery of India) நூலில் இந்தியத் தேசியமானது சமயச் சீர்திருத்தங்கள் வாயிலாகச் சமயக் கோட்பாடுகளை வைத்தே தேசியமாக வெளிப்படுத்திக் கொள்ள முயன்றது என்றார்.
இவ்வாறான சிந்தனைகள் அனைத்திலும் மாறுபட்டு நின்ற வ.உ.சி, போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர் பிரஞ்சுக்காரர்கள் அனைவரையும் ஒழிக்கவும் அவர்களைத் தம் நாடுகளுக்கு ஓட்டவும் மதவழிபட்ட மக்கள் கூட்டத்தைவிட சுதேசியம் விரும்புகிற மக்கள் கூட்டத்தையே உருவாக்க வேண்டும் என்று கோரினார். இதில் அவர் ஜாதி, மதம், கடவுள் என்று எதையும் இணைக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியதால்தானோ என்னவோ... இந்துமத ராமராஜ்யக் கனவு கண்ட காந்தி அன்பர்கள் வ.உ.சியைப் புறந்தள்ளினர்.
சுதேசி ஸ்டீம் நேவிகேன்:
“ஒரு காலத்தில் மேற்கே ரோம் தேசத்திற்கும் கிழக்கில் ஜாவா, சுமத்திராவிற்கும் அப்பாலும் தமிழ்க் கப்பல் போய்வந்தது. தமிழர் வாணிபம் சிறப்பாக விளங்கி வந்தது. அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர். எனவே தமிழர்கள் மீண்டும் கடல்மீது செல்வது எவ்வாறு என்று திட்டமிட்டேன். இத்திட்டத்தின் விளைவுதான் சுதேசி ஸ்டீம் நேவிகேன் கம்பெனி” என்று வ.உ.சி. குறிப்பிடுகிறார். மேற்கண்ட தமது சிந்தனையில் தமிழர்களின் மேன்மையையும் வாணிபத் திறமையையும் வெளிப்படுத்தும் வ.உ.சி, இந்தியர் என்கிற சொல்லாக்கத்தைப் பயன்படுத்தாமல் தமிழர்கள் என்றே குறிப்பிடுவது கருத்துக்குரியது.
சுதேசி ஸ்டீம் நேவிகேன் என்று உருவாக்கி ‘சுதேசி’ என்கிற சொல்லுக்கு வலுச் சேர்க்கிறார் வ.உ.சி. ஆனால் இதே காலகட்டத்தில் வங்காளத்தில் சில பணக்காரர்கள் உருவாக்கிய ஸ்டீம் நேவிகேசனுக்கு ‘சுதேசி’ எனப் பெயரிடவில்லை. தங்களது நிலப்பகுதியின் அடையாளமாக ‘பெங்கால் ஸ்டீம் நேவிகேன்’ என்றே பெயர் சூட்டினர்.
“பாரதப்பூமி பழம் பெரும் பூமி
நீர் அதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்!”
என்று பாடிய பாரதி...
“வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்;
வாழிய பாரத மணித்திரு நாடு!”
என்று தமிழ் - தமிழரை முதலாவதாகவும், பாரத நாட்டை இரண்டாவதாகவும் வைத்துப் பாடிய காலமும் இருந்தது. ஆனால் தமிழர்களே மற்ற இனமக்களைவிட நாட்டுப்பற்று மிக்கவர்களாகச் சிறந்து விளங்கினர்.
சன் கபிரியேல் என்கிற போர்ச்சுக்கல் நாட்டு மன்னனின் கொடி கட்டிய கப்பல் 1498 மே மாதம் 27ஆம் நாள் கேரளத்தின் கள்ளிக் கோட்டையை அடைந்தது. அதன் பின் 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் பிரித்தானிய யூனியன் ஜாக் கொடி கட்டிய கப்பல்களில் ஏறி, மும்பை இந்தியா கேட் பகுதியிலிருந்து வெள்ளையர் வெளியேறினர்.
இடைப்பட்ட 450 ஆண்டுகள் கடல் வழியில் வாணிகமும், ஆதிக்கமும் அயலார் கையில் இருந்தது. இவர்கள் இந்தியச் செல்வத்தைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு கொள்ளை யடிப்பதைத் தடுக்கத் தமிழன் வ.உ.சி. உருவாக்கியதே சுதேசி ஸ்டீம் நேவிகேன் என்கிற ‘சுதேசி நாவாய்ச் சங்கம்.’ இதில் தமிழர்கள் மட்டுமன்றி ஆசிய நாட்டவர் யார் வேண்டுமானாலும் இணைந்து பங்காற்றலாம் என்று வ.உ.சி. அறிவித்தார். ஆயினும் இந்தியாவின் பிற மாநிலத்தவர் கூட இதில் இணையாததால்... முழுக்க முழுக்கத் தமிழர்களைக் கொண்டதாகவே இச்சங்கம் விளங்கியது. பிரிட்டிஷாரின் மூல பலங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்ட, கப்பல் வாணிபத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தவே இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பொருளாதாரத் தேசியத்தை வளர்த்தெடுப்பதில் தமிழர்களே அக்காலங்களில் முன்னின்றனர் என்பதற்கு இச்சங்கமே சான்று. வெள்ளையர்களின் வணிகக் கொள்ளையை எதிர்க்கிற போர் முனையாக ‘சுதேசி நாவாய் சங்கம்’ விளங்கியது. தமிழர்களின் தொல்பெருமையை உலகுக்கு உணர்த்தி நிலைநாட்டுவதும் இதன் குறிக்கோளாக இருந்தது.
‘நான் ஆரம்பித்த இந்தக் கப்பல் கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல... மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காகவும் சேர்த்தே இந்தக் கப்பல்கள் பயன்படும்’ என்று வ.உ.சி. அறிவித்தார்.
இதனை அறிந்த வ.உ.சி.யின் நண்பர் சிவா... “மூட்டை முடிச்சுகளை வெள்ளையர்கள் இங்கேயே விட்டு விட வேண்டும். ஏனெனில் அவை நம்மிடம் கொள்ளையடிக்கப்பட்டவை. அவற்றை விட்டுவிட்டே வெள்ளையர் ஓட வேண்டும்” என்று உரக்கக் கூறினார். பாரதியாரோ...
“ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே
கப்பல் ஓட்டினாய்...”
என்று வெள்ளைக்கார கலெக்டர் விஞ்ச் துரை, ஒரு தேசபக்தனைப் பார்த்துக் கூறுவதைப் போலத் தமது கவிதையயான்றில் காட்டினார்.
எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ். லாவோ என்கிற பெயருடைய இரண்டு கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. “வெகு காலமாகக் குழந்தை இல்லாத தாய் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பெற்றால் எவ்வாறு மகிழ்ச்சியடைவா¼ளா, அவ்வாறு பாரததேவி இந்த இரண்டு கப்பல்கள் தூத்துக்குடி வந்ததால் மகிழ்ந்தாள் ” என்று பாரதியார் எழுதினார்.
தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
இதுபற்றி மக்களிடம் பேசி பிரிட்டிஷாரின் கொள்ளையை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பிய வ.உ.சி. 1906 ஏப்ரல் மாதம் கொழும்பு நகருக்குச் சென்றார். அந்த நகரில் பிரபலமாக விளங்கிய ‘அப்சர்வர்’ என்கிற பத்திரிகை வ.உ.சி. யைப் பேட்டி கண்டு எழுதியது.
அந்தச் சமயத்தில் “உள்ளூர் நெசவு இயந்திரங்களைப் பெருக்கி வெள்ளையரின் நெசவாலைத் துணிகளின் உற்பத்தியைத் தடுக்க வேண்டும்” என்று வ.உ.சி கூறினார். இவ்வாறு கூறியதை இன்னொரு இலங்கைப் பத்திரிகையான, கிறித்துவச் சார்புடைய ‘உதயதாரகை’ வரவேற்று எழுதியது.
வ.உ.சி. மேலும் மூன்று சுதேச அமைப்புகளையும் நிறுவினார்:
1. சுதேசப் பண்டக சாலை:
சுதேசப் பண்டங்களை வாங்கி விற்பனை செய்யும் பண்டக சாலை.
2. தரும நெசவுச் சங்க சாலை:
இதன் மூலம் நிறுவப்பட்ட நூற்பாலை வெள்ளையர்களுக்கு எதிரான சுதேச உணர்வுடன் தனது பணிகளைச் செய்தது.
3. ஜன சங்கம்:
இந்தப் பெயரில் உருவாக்கப்பட்ட மக்கள் சங்கம் அந்நிய ஆடைகள், சர்க்கரை, எனாமல் பூச்சுள்ள பாத்திரங்கள் உள்ளிட்டு சகல அந்நியப் பண்டங்களையும் புறக்கணிக்க மக்களை வலியுறுத்தியது. தாம் எழுதிய நூல்களின் அச்சு, காகிதம், மை உள்ளிட்டு அனைத்தையும் சுதேசிய முறையிலேயே வ.உ.சி. தயாரித்தார். இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இவ்வாறாக, சுதேசி ஸ்டீம் நேவிகேன் உள்ளிட்டு மேலும் பல அமைப்புகளை ஏற்படுத்திய வ.உ.சியின் அமைப்புகளில் தமிழ்நாட்டினரைத் தவிர பிற மாநிலத்தவர் பங்கேற்கவில்லை. இந்தியத் தேசியம் பேசுகிற எவரும் அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை தமிழர்கள் உருவாக்கும் அமைப்புகளில் இடம் பெறுவதில்லை. வ.உ.சியின் சிந்தனைகளில் தமிழர்களின் மேம்பாடு ‘சுதேசியம்’ என்று அறியப்படுவதை தமிழ்த்தேசிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
வ.உ.சி.- காந்தி காங்கிரஸ்
காந்தியை ஏற்றுக் கெண்டு, காந்தி கூறியவற்றை அடியயாற்றியே வ.உ.சி. பணியாற்றினார் என்றும், காந்தி இட்ட கட்டளைகளை வ.உ.சி. சிரமேற்கொண்டு செயல்பட்டார் என்றும் விவரமறியாத சிலர் பாடநூல்களிலும், பொதுநூல்களிலும் எழுதுகின்றனர். ஒருவேளை காந்தியை வ.உ.சி. முழுமையாக ஏற்றிருந்தால், காந்தி, தம் நூல்களில் வ.உ.சி. பற்றிக் குறிப்பிட்டிருப்பார். நூற்றுக்கணக்கான காந்திய நூல்களில் வ.உ.சி. என்கிற பெயரையே நாம் காணமுடியாது. அந்த அளவிற்கு காந்தியும் காந்திய வழி அன்பர்களும் வ.உ.சியை ஒதுக்கித் தள்ளினர். வட இந்தியாவின் எந்தக் காங்கிரஸ் தலைவனும் தன் செல்வத்தை இழக்கவில்லை. ஆனால், செல்வந்தராகப் பிறந்த வ.உ.சி. இறுதியில் வறுமையோடு போராடியே காலமானார்.
1898இல் காங்கிரசில் சேர்ந்த வ.உ.சி. 1920இல் கல்கத்தா மாநாட்டுக்குப்பின் அதிலிருந்து விலகியிருந்தார். பின்னர் 1927இல் காங்கிரசில் இணைந்து 1936 வரை காந்தியை - முழுமையாக - அல்ல: தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார். காந்தியின் அகிம்சையை அவர் ஏற்கவில்லை. எனவேதான், ஜீவாவின் சிராவயல் ஆசிரமத்தில் இளைஞர்கள் இராட்டை சுற்றுவதைப் பார்த்து வெறுத்த வ.உ.சி. “வாளேந்த வேண்டிய தமிழக இளைஞர்கள் இராட்டை சுழற்றுவதா?” எனக் கடிந்து கொண்டார்.
“கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது”
என்று பாட்டு எழுதிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1919 அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று வந்த வ.உ.சி.க்கு அகிம்சை மார்க்கத்தில் அணுவளவேனும் நம்பிக்கையில்லை என்று எழுதினார். “பகைவனை வெல்லுவதில் பரிசுத்தம் பார்க்கமுடியாது. போர் மூண்டுவிட்ட பின்பு பாவம் புண்ணியம், பொறுமை என்றெல்லாம் ஆலோசிக்க அவசியம் இல்லை” என்று வ.உ.சி. கருதுவதாக நாமக்கல் கவிஞர் எழுதினார்.
1917இல் ருஷ்யப் புரட்சி நடந்தது. 1918இல் ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்தது. 1919இல் காங்கிரஸ் மாநாடு அமிர்தசரஸில் நடந்தது. இது 34ஆவது தேசியக் காங்கிரஸ் மாநாடு ஆகும்.
இதன் விளைவாக 1917இன் ருஷ்யப் புரட்சியை ஆதரித்து வ.உ.சி. பேசினார். ஆனால் ருஷ்யாவின் லியோ டால்ஸ்டாயைக் குருவாக ஏற்றுக் கொண்ட காந்தி புரட்சியாளர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ருஷ்யாவின் போல்ஷ்விக்குகளை ஆதரித்து வ.உ.சி. பேசினார். “துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தால், முன்னேறிவரும் போல்ஷ்விக்குகள் இந்தியாவிற்குள் நுழைந்தால்... முன்பு போல யுத்தத்தின் பொழுது இந்துக்களும் முஸ்லீம்களும் பிரிட்டிஷாருக்கு, ஆளும் பணமும் தரமாட்டார்கள்”. என்று வ.உ.சி பேசினார். இதிலிருந்து ருஷ்யாவின் புரட்சியாளர்களை ஆதரித்து வ.உ.சி. கருத்துரைத்ததை அறியலாம்.
சிறை செல்ல அஞ்சக்கூடாது என்றும், சுதந்திரப்பயிர் தண்ணீர்விட்டு வளர்க்கப்படவில்லை, அது கண்ணீர் விட்டே வளர்க்கப்பட்டது என்றும் வ.உ.சி. கூறி வந்தார்.
1915இல்தான் காந்தி இந்திய அரசியலில் கால்பதித்தார். ஆனால் வ.உ.சி. அதற்கு முன்பே சிறை சென்று திரும்பிவிட்டார். 1919இல் நடந்த அமிர்தசரஸ் மாநாட்டுக்குப் பின்னரே காந்திய சகாப்தம் தொடங்கியது.
இதற்கு முன்னர் இந்தியர்களை நிர்வாகத்தில் பங்கெடுப்பதை விரிவுபடுத்த 1918 ஜல்லை 12இல் அப்போதைய வெள்ளையர் அரசு தீர்மானித்தது. அதன்படி மாண்டேகு செம்ஸ்போர்டு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தார். இதனை, 1918 ஆகஸ்டில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் அவசரக் கூட்டம் நிராகரித்தது. இதன் விளைவாக மிதவாதிகள் பலர் காங்கிரஸிலிருந்து வெளியேறி ‘இந்திய லிபரல் கட்சி’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தனர்.
இவை குறித்து விவாதிக்க அமிர்தசரஸில் காங்கிரஸ் மகாசபை கூடியது. திலகர் “மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு, மேலும் பெறக் கிளர்ச்சி செய்க” என்றார். அன்னிபெசண்ட் அம்மையார் திட்டத்தை முழுமையாக ஏற்க வேண்டும் என்றார். காந்தி,இத்திட்டத்தை நிராகரித்தார். எனவே புதிதாக வந்த காந்தியின் சிந்தனைகள் அனைவரையும் கவர்ந்தன.
இந்த மாநாட்டுக்கு நேரு தலைமை தாங்கினார். திலகர், காந்தி போன்றோருடன் தமிழகத்தின் சி.விஜயராகவாச்சாரி, சி.பி. ராமசாமி ஐயர், ‘இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார், சுதேசமித்திரன் ஏ.ரங்கசாமி ஐயங்கார், எஸ். சத்தியமூர்த்தி ஐயர் போன்றோர் கலந்து கொண்டனர்.
‘காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய அமைப்பாளர் கள் பிராமணரல்லாதார். ஆனால் இப்போது காங்கிரஸ் பிராமணர்களின் கைகளில்தான் உள்ளது’ என்கிற எண்ணத்தை தந்தை பெரியார் வ.உ.சி. இருவருக்கும் இந்த மாநாடு ஏற்படுத்தியது. கையில் காசில்லாத சிதம்பரனாரைப் பெரியாரின் உதவியுடன் தண்டபாணிப் பிள்ளை இந்த மாநாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
மாநாட்டிலிருந்து சென்னை திரும்பிய அன்னிபெசண்ட் என்கிற அயர்லாந்துப் பெண்மணி யை திரு.வி.க. வரவேற்றார். வ.உ.சி. இதை ஏற்க வில்லை. சென்னை கடற்கரைக் கூட்டத்தில் வ.உ.சி. எதிர்த்துப் பேசினார். இறுதிவரை இந்த அயர்லாந்துப் பெண்ணை எதிர்த்தவர்கள் வ.உ.சி., பாரதியார் இருவரும்தான். ‘பொன்வால் நரி’ என்று பெசண்டை எதிர்த்து பாரதியார் ஒரு நூல் எழுதினார். திலகர் பெசண்டை ஆதரித்தார். அவ்வாறு ஆதரிப்பது தவறு என்று வ.உ.சி. திலகரையும் எதிர்த்தார். எங்கோ இருந்து வந்த பெசண்டை ஆதரித்த பிராமணர்கள், வ.உ.சியை இதன்பின் ஆதரிக்கவில்லை.
கல்கத்தா மாநாடு:
அமிர்தசரஸ் மாநாட்டுக்குப் பின்பு நடந்த கல்கத்தா மாநாட்டுக்குச் சென்றிருந்த வ.உ.சி. காந்திக்கு எதிரான கருத்துடையவர்களை ஒன்று சேர்க்க முயற்சித்தார். அமிர்தசரஸ், கல்கத்தா இரு மாநாடுகளிலும் வ.உ.சி.க்குப் பேச வாய்ப்பு தரப்படவில்லை. விபின் சுதந்திரபால், சித்ரஞ்சன் தாஸ் போன்ற வங்காளத் தலைவர்களின் செல்வாக்கு உயர்ந்து நின்ற காலமது.
கல்கத்தா மாநாட்டில் காந்திக்கு ஆதரவாக 1586 வாக்குகளும் எதிராக 864 வாக்குகளும் கிடைத்தன. அதே வேளையில் தமிழகப் பிரதிநிதிகளில் காந்திக்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. இம்மாநாட்டால் காந்தி இந்தியா முழுவதும் அறிமுகமானார். அதன் பின்னர் நாடெங்கும் காந்தி பயணம் செய்தார். தனது ஒத்துழையாமை இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் சென்றார். ஆனால் ‘ஒத்துழையாமை மூலம் சுயராஜ்யம் பெறுவதை விரும்பவில்லை’ என திலகர் அறிவித்தார். வ.உ.சியும் அதனை ஏற்றார்.
காந்தி ஜனநாயகவாதி, அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்ற எண்ணத்தை உடைத்தெறிகிற ஒரு கடிதம் நமக்குக் கிடைக்கிறது. வ.உ.சி. காந்தியாரின் கொள்கைகளில் மாறு பட்டிருந்தது போலவே... சிவாவும் காந்தியாரை வெறுத்தார்.
13.09.1920இல் நண்பர் சின்னமுத்து முதலியாருக்கு சிவா ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் இவ்வாறு கூறுகிறார்: “அனுபவம் மிகுந்த தலைவர்கள் அனைவரின் கருத்தையும் காந்தி எதிர்த்தார். தன் மனம் போன போக்கில் காரியங்களை நடத்தினார்... காந்தி காங்கிரசை ஊழல் செய்து விட்டார்.”
இதன் பின்பு 1920இல் திலகர் மறைந்தார். தொடர்ந்து 1948 வரை... 28 ஆண்டுகள்... இந்தியா காந்தியின் வழியில் செல்லலாயிற்று.
சுதந்திரத்திற்கு முன்பே 1936இல் வ.உ.சி. காலமானார். காங்கிரஸ் இயக்கம் அவரைக் கண்டுகொள்ள வில்லை. பெரியார் வ.உ.சியைத் தம்மோடு வரக் கூறினார். சிந்தனையிலும் செயலிலும் ஒத்திருந்தும் கூட வ.உ.சி. இந்த அழைப்பை ஏற்காமல் இறுதிவரை காங்கிரசிலேயே இருந்துவிட்டார்.
இலக்கிய உலகில் தனிப்பெரும் அறிஞராகத் திகழ்ந்த வ.உ.சி. திருக்குறள், தொல்காப்பியம், சிவஞான போதம் போன்ற தமிழர்களின் வாழ்வியல் நெறிகளை நேசித்தார். இவற்றுக்கு உரை எழுதினார். இறைப்பற்றுடையவர். எனினும், கடவுளர் காப்பியங் க¼ளா, மதநூல்களோ எழுதவில்லை. தமிழர்களை நேசித்த வ.உ.சியைத் தமிழர்கள் பெரிய அளவில் நேசிக்கவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.
முடிவுரை:
தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்கள் எங்குமே... இப்படி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி இருந்தார் என எவரும் அறிந்து வைக்கவில்லை. காந்தியாரின் நூல்களில் வ.உ.சி. கண்டு கொள்ளப்படவில்லை. திலகரைக் குறித்து மலேசிய, இலங்கை இதழ்களில் வ.உ.சி. எழுதினார். ஆனால், வட இந்தியாவிலிருந்து வெளிவரும் திலகர் வரலாற்று நூல்களில் வ.உ.சியின் பெயரே இல்லை.
லாலா லஜபதிராயும், சுபாஷ் சந்திரபோசும் தமது நூலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வ.உ.சி.யை நினைவுகூர்ந்து எழுதி உள்ளனர். அவ்வாறெனில், புவியியல் வழிப்பட்ட உலக அரங்கில் எடுத்துக்காட்ட... அரசியல் வழிப்பட்ட நில அமைப்பாகிய இந்தியா என்னும் ‘தேசம்’ வ.உ.சி. போன்ற தலைவர்களை ஏற்கவில்லையா?
இவ்வாறு எண்ண வைக்கிற நம் சிந்தனைத் திவலைகள் ஒன்றுகூடி... பெருவெள்ளமாக மாறும்போது மட்டுமே... இறையாண்மை, நாடு, மக்கள், இனம், மொழி போன்றவற்றில் சரியான அணுகுமுறையுடன் கூடிய தீர்வை நாம் எட்ட முடியும்.
இந்தியாவின் மண்ணைப் பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர் களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை தமிழன் வ.உ.சி.யைச் சாரும். இந்தியாவில் வேறெங்கும் பிற தலைவர்களுக்கு. இவ்வாறான சிந்தனைகள் எழவில்லை.
வட இந்தியாவின் மார்வாரி, பனியா இனத்தவர் வெள்ளையர்களை அண்டிப் பிழைத்துக் கொழுத்த போது... வெள்ளையரை ஓட்ட நினைத்த முதல் குரல் தென் தமிழக மக்களிடமிருந்தே ஒலித்தது.
1806ஆம் ஆண்டின் வேலூர் புரட்சியைக் கண்டு கொள்ளாதவர்கள், 1857இன் சிப்பாய் புரட்சியே பெரிதென்கின்றனர். இவற்றை மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் கடமை.
எனவே, எதிர்வரும் காலத்தில் மக்கள் கூட்டம் உணர்வு பெற... வ.உ.சியின் வரலாற்றிலிருந்தும் அவருடைய அரசியல், இலக்கியப் படைப்பு களிலிருந்தும் தமிழ்த் தேசிய உணர்வும் அறிவும் பெறுவோம்.
- அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
(சமூக நீதித் தமிழ்த் தேசம் டிசம்பர் 2009 இதழில் வெளிவந்தது)