தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சிறுகதைகள் - திசைகளும் சவால்களும்

சிறுகதை என்னும் வடிவம் இலக்கியத்திற்கு இருபதாம் நூற்றாண்டு வழங்கிய கொடை. பிற வகைமைகளான நாவல், கவிதை, நாடகம் போன்ற வற்றில் மொழி, இன, பிரதேச, பண்பாட்டு அடையாளங்களுக்குத் தக மரபின் அழுத்தமான பீடிப்புகளைக் காண முடியும். ஆனால் உலகெங்கிலும் சற்றேறக் குறைய ஒரே காலகட்டத்தில் அறிமுகமான சிறுகதையில் அத்தகைய பாதிப்பு குறைவே. காரணம் அதில் வெளிப்படும் காலப் பிரக்ஞைதான். இப்பொழுது, இந்நிலையில் எனும் சமகாலத் தன்மையிலேயே சிறுகதையின் ஆதாரம் மையம் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக உருவாகி மேலெழுந்துவந்த தனிமனிதன் என்னும் கருதுகோளின் அடிப்படையில் அவனுடைய சிந்தனைகள், நினைவுகள், கனவுகள் ஆகியவற்றிற்குப் பிரதான இடம் தந்து எழுதப்படுவது சிறுகதை. ஆகவேதான் ஒரு சிறுகதையின் உருவாக்கம் எப்போதும் சமகாலக் கோட்பாடுகளோடும் அறிவுத் துறைகளோடும் நெருக்க மான உறவுகொண்டதாகவும் மொழியிலும் தொடர்புறுத்தலிலும் புதிய போக்குகளைப் பரிசீலிப்பதாகவும் அமைகிறது. புராண, இதிகாசத் தொன்மங்களைத் தொட்டு ஒரு சிறுகதை எழுதப்பட்டாலும் அதன் நோக்கு தற்கால அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அவ்வகையில், இப்புத்தாயிரத்தின் தொடக் கத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கும் நோக்கும் எவ்விதமாக அமைந்துள்ளன, அவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் எவையெவை என்பதைப் பற்றிய ஒரு தோராயமான கோட்டுச் சித்திரத்தை வரைய இக்கட்டுரை முற்படுகிறது.

கடல் முகத்துவாரத்தில் உட்கலந்தோடும் நதி நீரைப் போலவே இலக்கியத்தின் போக்குகளும் உள்ளார்ந்த சுழிப்புகளைக் கொண்டவை. முன்னைப் பழமையினின்றும் பின்னையப் புதுமையைக் காலத்தை ஒட்டிக் கறாராக வெட்டிப் பிரிக்க இயலாது. என்றாலும், பத்தாண்டுகளை உத்தேச வரையறையாகக் கொண்டு மதிப்பிடுவது என்பது நடைமுறை வசதி கருதியேயாகும்.

கடந்த பத்தாண்டுகளில் அச்சு ஊடகங்களில், ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் மிக வெளிப்படையாக நமக்குத் தெரியவருவது, வெகுசனப் பத்திகைகளில் சிறுகதை என்னும் வஸ்துவே இப்போது இடம்பெறுவ தில்லை என்பதுதான். தப்பித் தவறி இடம்பெற்றாலும் அது கால், அரைக்கால் பக்கத் துணுக்காகவே இருக்கும். இது ஆரோக்கியமான விஷயமா அல்லவா என இப்போது திடமாகச் சொல்ல முடியவில்லை. காட்சி ஊடகங்களால் ஏற்பட்ட பாதிப்பு இது. எனவே உரைநடை இலக்கியம் என்பது இப்போது முழுக்க, முழுக்கச் சிறுபத்திரிகைகளை நம்பியே இயங்கிவருகிறது.

முன்பைப் போல வெறும் இலக்கிய இதழாக மட்டும் இல்லாமல், சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங் களில் நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் விதமாகத் தங்களை மாற்றித் தகவமைத்துக் கொண்டு விட்ட பல்வேறு சிறு, நடுவாந்திரப் பத்திரிகைகளிலும் சிறுகதைகளுக்கு இதழுக்கு ஒன்று அல்லது இரண்டு என்னும் அளவிலேயே இடம் ஒதுக்கப்படுகிறது. இதில் விதிவிலக்கு உயிர் எழுத்து. அப்பத்திரிகை இதழுக்குச் சராசரியாக ஐந்து கதைகள் எனப் படைப்பிலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்து பிரசுரித்துவருகிறது. பல புதிய இளம் கதையாசிரியர்களின் பெயர்களை இப்பத்திரிகை வாயிலாகவே நான் அறிந்துகொண்டேன்.

இதை விடுத்து நோக்கினால், கடந்த பத்தாண்டுகளில் பிரசுர வாய்ப்புக் கணிசமாகப் பெருகியுள்ளது. சராசரிக்கும் மேலாக எழுதும் எந்தவொரு அறிமுக எழுத்தாளரும் தன் நூலைப் பதிப்பிக்க அலையவோ காத்திருக்கவோ தேவையில்லாத சூழல் சந்தையில் நிலவுகிறது. இது ஆரோக்கிய மான விஷயம். 2007இல் எழுதத் தொடங்கிய பா. திருச்செந்தாழையின் கதைகள் தொகுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே 2008 இறுதியில் நூலாக வெளிவந்திருப்பதை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமல்ல.

நண்பர்களுடன் இலக்கியம் பற்றிய உரையாடல் நிகழ்ந்த பல சந்தர்ப்பங்களிலும் பொதுவாக எழுந்த ஒரு கருத்து ‘சமீபகாலமாக சிறுகதை இலக்கியம் நலிந்து வருகிறது. 70, 80களில் வெளிவந்ததைப் போலச் செறிவான நூல்கள் அதிகம் வரவில்லை’ என்பதாகும். பலரின் ஆமோதிப்பை உடனடியாகப் பெற்றபோதிலும் இக்கூற்று மேலெழுந்தவாரியான ஒரு மனப்பதிவுதான் என்பதை இக்கட்டுரைக்கான விவரங்களைச் சேகரிக்கும்போது உணர முடிந்தது.

எப்போதாவது ஓரிரண்டு சிறு கதைகள் எழுதியவர்களைத் தவிர்த்துவிட்டு, தொடர்ச்சியாகவும் சீரான தரத்திலும் எழுதுபவர்கள் என்பதை அளவீடாகக் கொண்டு ஒரு பட்டியல் தயாரித்தால் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நாற்பது, ஐம்பது பெயர்களாவது அதில் இடம்பெறும். ஒரு மொழியில் ஒரு சமயத்தில் இத்தனை பேர் பங்களிக்கும் இலக்கிய வடிவமொன்று தேய்ந்துவிடும் என நம்ப எவ்வித ஆதாரமும் கிடையாது.

இப்போதும் எழுதிவருபவர்களில் அசோகமித்திரன், ந. முத்துசாமி, பா.செயப்பிரகாசம், கி. ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், மா. அரங்கநாதன், சா. கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணதாசன், அம்பை முதலியோரை மூத்த தலைமுறையினராகக் கொண்டால் அடுத்து வரும் இரண்டாம் தலை முறையினராக திலீப்குமார், ஜெய மோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, சுரேஷ்குமார இந்திரஜித், கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், தேவிபாரதி, பெருமாள்முருகன், பிரேம்-ரமேஷ், சு. வேணுகோபால், கௌதம சித்தார்த்தன், சோ. தர்மன், வேல. ராமமூர்த்தி, ச. தமிழ்ச்செல்வன், கண்மணி குணசேகரன், குமார செல்வா, பவா செல்லதுரை, ஆதவன் தீட்சண்யா, அழகிய பெரியவன், இமையம், பாமா, எம். கோபாலகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், சிவகாமி, லெட்சுமணப் பெருமாள், விழி. பா. இதயவேந்தன், அபிமானி, அ. முத்துலிங்கம் முதலியோரைக் கருதலாம். மூன்றாம் தலைமுறையினர் வரிசையில் ஷோபா சக்தி, கோகுலக்கண்ணன், ஜீ. முருகன், காலபைரவன், ஜே. பி. சாணக்யா, வா.மு. கோமு, லஷ்மி மணிவண்ணன், யூமா. வாசுகி, அரவிந்தன், சல்மா, போப்பு, ஷாராஜ், புகழ், என். ஸ்ரீராம், ஹரிகிருஷ்ணன், உமாமகேஸ்வரி, சு. தமிழ்ச்செல்வி, எஸ். செந்தில்குமார், அஜயன் பாலா, க. சீ. சிவக் குமார், திருச்செந்தாழை, கே. என். செந்தில், பாலமுருகன், குமாரநந்தன், சுதாகர் கத்தக், முஜிபுர் ரஹ்மான், ரவி சுப்ரமணியன், களந்தை பீர்முகம் மது போன்றோரைச் சேர்க்கலாம்.

இவ்வெழுத்தாளர்களுக்கிடையே வயது, அனுபவம், முதிர்ச்சி ஆகியவற்றில் மட்டுமின்றிப் படைப்பாக்கத் திறன் சார்ந்த இடைவெளிகளும் வேறுபாடுகளும் உண்டு. பால், வர்க்கம் மற்றும் நிலவியல் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படையிலான வித்தியாசங்களும் உள்ளன. தவிர இவர்களுடைய அரசியல் நோக்கும் இவர்களுடைய எழுத்தின் அடிப்படையைத் தீர்மானிக்கிறது.

காட்சி ஊடகங்களின் பெருக்கம், ஆங்கிலவழிக் கல்வியின் பரவல் ஆகியவற்றின் காரணமாகத் தமிழில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகப் பொதுவாகக் கூறப்பட்டாலும் புதிய தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் அதிகரித்தே வருகிறார்கள். உயர்கல்வி வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, இணையப் பயன்பாடு போன்றவற்றின் காரணமாக வாசகர்களின் சராசரி அறிவுத்திறன் என்பது இன்று வெகுவாக உயர்ந்துள்ளது. பல சமயங்களில் எழுத்தாளனைவிடக் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அதற்கெல்லாம் ஈடுகொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் தேடுதலும் உழைப்பும் இன்றைய எழுத்தாளனுக்கு அவசியமாகின்றன.

அவ்வகையில் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட முக்கியமான சிறுகதை நூல்கள் எனப் பின்வருவனவற்றைக் கூறலாம். இதில் நான் சிறந்தவை எனக் கருதும் சில நூல்களும் என்னுடைய ரசனைக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் கருத்தியல் மற்றும் வடிவரீதியாகப் பொருட்படுத்தி வாசிக்கவும் பரிசீலிக்கவும் வேண்டியன எனக் கருதும் சில நூல்களும் உள்ளன. அவையாவன தெற்கத்தி கொம்பு மாடுகள், மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம், ஊமைச் செந்நாய், பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, பரதேசி, மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள், மணற்கேணி, மாபெரும் சூதாட்டம், பீக்கதைகள், ஒரு பனங்காட்டு கிராமம், உயிர்த்தலம், வெண்ணிலை, வெள்ளெருக்கு, மரப்பாச்சி, மயில் ராவணன், வீடியோ மாரியம்மன், பனைமுனி, பிறகொரு இரவு, எம்.ஜி.யார் கொலை வழக்கு, சாயும் காலம், விலகிச் செல்லும் நதி, நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் கருவறை, தவளைகள் குதிக்கும் வயிறு, சித்திரப்புலி, மாடவீடுகளின் தனிமை, ஒரு மாமரமும் சில பறவைகளும், ஏழு லட்சம் வரிகள், மானுட வாழ்வு தரும் ஆனந்தம், சைக்கிள் முனி, நெரிக்கட்டு, பச்சைப் பறவை, முத்தி, வார்த்தைப் பாடு, உயிர்த்திருத்தல், மீசை, சாமுண்டி, பாலகாண்டம், இருளப்ப சாமியும் 21 கிடாக்களும், முனிமேடு, புனைவின் நிழல், வற்றும் ஏரியின் மீன்கள், குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது, கடவு, விசும்பு, வேர் நுனிகள், அம்பாரம், அழிவற்றது, பதிமூன்று மீன்கள், கனவுப் புத்தகம்.

இப்பட்டியலில் என் வாசிப்பு மற்றும் நினைவுகூர்தலின் எல்லைகளால் சில நூல்களின் பெயர்கள் விடுபட்டிருக்கவும்கூடும். முன்னோடி எழுத்தாளரான புதுமைப்பித் தன் தொடங்கி இத்தலைமுறை இளைஞரான அழகிய பெரியவன் வரைக்குமான எழுத்தாளர்களின் மொத்தக் கதைகள் அடங்கிய தொகை நூல்கள் 2000க்குப் பிறகு தொடர்ந்து வெளிவந்துள்ளன. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அம்பை, பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ண நிலவன், பா. செயப் பிரகாசம், பூமணி, ஜெயகாந்தன், கந்தர்வன், தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன், ராசேந்திர சோழன், ஆ. மாதவன், சா. கந்தசாமி, ஜி. நாக ராஜன், ஆதவன், கி. ராஜநாராயணன், கோணங்கி, கு. அழகிரிசாமி, கு.ப.ரா., தி. ஜானகிராமன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் தொகை நூல்கள் அவ்வகையில் முக்கியமானவை. இத்தொகை நூல்கள் எழுத்தாளர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஒரு வழிக் குறிப்பை இன்றைய வாசகனுக்கு வழங்குவதாக அமையும். இவை தவிரவும் பெண்களின் படைப்புகள், தலித் எழுத்தாளரின் எழுத்துக்கள், நெல்லை, தஞ்சை, கரிசல், கொங்கு என வட்டார அடிப்படையிலான கதைகள் எனவும் பல சிறுகதைத் தொகுப்புகள் இப்பத்தாண்டுகளில் வெளிவந்துள்ளன.

மேலும் ஆர். சிவக்குமார், எம். எஸ்., ரவிக்குமார், நாகூர் ரூமி, ஜி. குப்புசாமி, சா. தேவதாஸ், நஞ்சுண்டன், பாவண்ணன், சுகுமாரன், திலகவதி, நிர்மால்யா, சாருநிவேதிதா, அமரந்தா, லதா ராமகிருஷ்ணன், பிரம்மராஜன், ஸ்ரீராம், ராஜகோபால் எனப் பலரது மொழிபெயர்ப்புகளும் தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய உள்ளோட்டங்களைக் கொண்டுவந்து சேர்த்துள்ளன. இவற்றையெல்லாம் ஒரு நுட்பமான வாசகன், தன் வாசிப்பு அனுபவத்திற்கும் ரசனை முதிர்ச்சிக்கும் ஏற்ப வகைப்படுத்திப் புரிந்துகொள்வான் எனினும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையின் போக்கில் தென்படும் மாற்றங்கள், எழுச்சிகள் என்னென்ன என்பதை மதிப்பீடுகளின் வழியே பொதுமைப்படுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். புறவயமான இத்தகைய அவதானிப்புகளே இலக்கிய விமர்சனத்திற்கு அடிப்படை. அவ்விதமாக நோக்குகையில் எனக்குத் தென்பட்ட சில அம்சங்களைத் தொகுத்துப் பின்வருமாறு கூறலாம்.

உத்தி சார்ந்த பிரமைகளும் மயக்கங்களும் வடிந்துபோய்விட்டன. யதார்த்தமோ (அ) புனைவோ நேர்க் கோட்டுப் பாணியோ (அ) அ-நேர்க் கோட்டு வகையோ எவ்வித எழுத்தாயினும் அதன் வடிவத்தைச் சார்ந்து அல்லாமல் அதன் உள்ளார்ந்த பெறுமானத்தைப் பொறுத்தே அதன் இலக்கியத் தகுதி மதிப்பிடப்படுகிறது.

கதை மொழியில் தென்படும் எளிமையும் சரளமும் சகஜத் தன்மையும் மற்றொரு முக்கிய மாற்றம். சுவாரசியத்தையும் வாசிப்பு இன்பத்தையும் குறைந்தபட்ச நிபந்தனைகளாகக் கொண்டே பெரும்பாலான கதைகள் இப்போது எழுதப்பட்டு வருகின்றன.

மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தற்போதைய எழுத்துகளில் விவேகமும் கனிவும் மொழியில் மிருதுவும் நகைச்சுவையும் இழைந்தோடுவதைக் காண முடிகிறது. வயதும் அனுபவமும் தந்த பக்குவம் இதுவென்றால் இளம் எழுத்தாளர்கள் பலரும் மொழியை மிகுந்த ஆற்றலோடும் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய எழுத்தில் முன்னோடிகளின் நிழல் விழாது கவனமாகத் தனி வழி நடக்க முயல்கின்றனர்.

மைய ஓட்டத்தினின்றும் உள் ஒதுங்கிய, பிரதேச மணம் கொண்ட, மொழிக் கொச்சையுடன் கூடிய தனித்த கூறுகள் கொண்ட அனுபவங்களைச் சிரத்தையுடன் தேடிப் பதிவுசெய்வதில் ஆவல் கொண்டவையாகவே இன்றைய கதைகள் தென்படுகின்றன.

பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், வட்டார வழக்கு, பின் நவீனத்துவம், விளிம்புநிலைக் கதையாடல் என எந்தக் கருத்தியல் அடிப்படையைக் கொண்டு பேசப்பட்டாலும் அக்கதைகள் வெறும் பிரதி பலிப்புகளாக அல்லாது எழுத்தின் உள்ளார்ந்த அழகியலை அதன் அரசியலுக்கு இணையாக முன்னிறுத்துபவையாகவே அமைகின்றன.

எழுத்து மரபிற்கு இணையாக, வாய்மொழி மரபான கதை சொல்லும் பாணியிலான புனைவு மொழியும் கணிசமான இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது.

குற்றம், வன்முறை, பாலியல் சிடுக்குகள், மனப்பிறழ்வு, போதை வயப்பட்ட சுயநசிவு, இவை சார்ந்த இருண்ட பிரதேசங்களுக்குள் வெகு இயல்பாகவும், ஒழுக்கப் பார்வைக்கப்பாற்பட்ட கரிசனத்துடனும் பயணிக்க இன்றைய தலைமுறைக்குச் சாதாரணமாக முடிகிறது.

நம் மொழியின் மரபு இலக்கியங்கள், சிந்தனைகள் பற்றிய அக்கறையும் கவனமும் பரிசீலனையும் அதிகரித்திருப்பதுடன் அவற்றுடனான ஆக்கபூர்வமான உறவுக்கும் தொடர்ச்சிக்குமான முயற்சிகளும் தொடங்கியுள்ளன.

இவையெல்லாம் காலத்தை ஒட்டி மேலெழுந்திருக்கும் மாற்றங்கள் என்றால் சிறுகதையாசிரியர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்களாகத் தொடர்ந்து இயங்க ஆசைப்படும் அனைவருமே பொதுவாகச் சந்திக்க வேண்டிய சவால் ஒன்று இன்றுள்ளது. மொத்த உலகமும் நுகர்வுக் கலாச்சாரத்தின் வலைக்குள்ளாகச் சுருங்கிவரும் சூழலில், இலக்கியம் ஒரு படைப்புச் செயல்பாடு என்னும் நிலையிலிருந்து விலகி ஒரு உற்பத்திப் பொருளாக மாறும் தருணத்தை எவ்விதமாக எதிர்கொள்வது என்பதுதான் அது. பணம், புகழ், அதிகாரம் போன்ற உடனடி அங்கீகாரங்களுக்கு ஆட்பட்டு படைப்பின் அந்தரங்கமான குரலை, ஆன்மாவின் சிறு வெளிச்சத்தைத் தொலைத்துவிடாமல் எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதில்தான் ஒரு எழுத்தாளனின் எதிர்காலமும் அவன் எழுத்துக்களின் தலைவிதியும் அடங்கியுள்ளன.

ஒரு மொழியில் படைப்பிலக்கியம் பெரும் பாய்ச்சலுடன் முன்னெழும் காலகட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் அவ்வெழுச்சிக்கான திசைகளையும் தத்துவார்த்த அடிப்படைகளையும் வடித்துத் தருபவர்களாகச் சில கோட்பாட்டாளர்கள் இருந்திருப்பதைக் காணலாம். 70, 80களில் ஓங்கி ஒலித்த அத்தகைய குரல்கள் இப்போது அருகிவிட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாகிறோம்.