தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ராஜிவ் படுகொலை - மர்மம் விலகும் நேரம்

ராஜிவ் கொலை வழக்கின் தலைமை புலானாய்வு அதிகாரி ரகோத்தமன் எழுதிய ‘ராஜீவ் படுகொலை - மர்மம் விலகும் நேரம்’ என்ற புத்தகத்தை நண்பர் பிரசன்னா எனக்கு கொடுத்தார்.

இந்த நூலை 3 மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம் என்று பிரசன்னா சொன்னார். எனக்கு இரண்டரை மணி நேரம் ஆனது. அவ்வளவு விறுவிறுப்பு. வேகமான நடை.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தனக்கு மேலதிகாரியாக இருந்த கார்த்திகேயன் ஐபிஎஸ் அவர்களை குறி வைத்தே இந்த புத்தகத்தை ரகோத்தமன் எழுதியுள்ளார். பல இடங்களில் அது வெளிப்படுகிறது. வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் ஆகியோரை விசாரிக்க முகாந்திரம் இருந்தும் விசாரிக்கவில்லை. நடத்தப்பட்ட விசாரணைகள் மிகவும் மேலோட்டமாகவே இருந்தது என்பது அவரது குற்றச்சாட்டு.

rajiv-kolai-book-coverராஜிவ் கொலை குறித்து முன்கூட்டியே வைகோவுக்கு தெரியும். அவர் மூலம் கருணாநிதிக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்பதைப் பல இடங்களில் ரகோத்தமன் சொல்கிறார். ராஜிவ் கொலை நடந்த 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் தேர்தல் பிரசாரமும் நடக்கவிருந்தது. ஆனால் 21-ம் தேதி காலை திடீரென அந்தக் கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்துவிட்டார். அதனை ஓர் உதாரணமாகக் காட்டுகிறார்.

மகன் லலித் சந்திரசேகர் மூலம் மரகதம் சந்திரசேகரை நெருங்கி ராஜிவ் காந்திக்கு மாலையிட சிவராசன் குழுவினர் அனுமதி பெற்றதே ராஜிவ் கொலைக்கு முக்கிய காரணம். ராஜிவ் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மரகதம் சந்திரசேகர் தன்னை அறியாமல் ராஜிவ் கொலைக்கு துணை போய்விட்டார் என்பது ரகோத்தமனின் குற்றச்சாட்டு. தங்களுக்கு பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்துக்கு ராஜிவ் கொலை பற்றி முன்கூட்டியே தெரியும். அதுமட்டுமல்ல அதற்கு அவர் உதவியும் செய்துள்ளார் என்கிறார் ரகோத்தமன். இந்த நூலை படித்ததும் நான் சுபா சுந்தரத்திடம் ஆண்டுக்கணக்கில் பணிபுரிந்த சிலரிடம் விசாரித்தேன். அவர்களில் ஒருவர் எனது நெருங்கிய நண்பர்.

அவர் சொன்னதில் இருந்து….

சுபா சுந்தரம் மிகவும் திறமையான போட்டோகிராபர். விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை எடுக்கும் ஆர்டர் அவருக்கு கிடைத்தது. அதன் மூலம் அவருக்கு அதிக வருமானமும் கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஹரிபாபு, பாக்கியநாதன் நளினியின் சகோதரர் ஆகியவர்களே அதிகம் பயன்படுத்தினர். ராஜிவ் கொலை நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹரிபாபு, பாக்கியநாதன் ஆகியோருடன் சுபா சுந்தரத்துக்கு தொடர்பு இல்லை.

அந்தக் காலகட்டத்தில் அனைத்து பத்திரிகை போட்டோகிராபர்களும் சுபா சுந்தரத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்கள். பலர் அவரது மாணவர்கள். அதனால் ராஜிவ் பொதுக்கூட்டத்தை படம் பிடிக்கச் சென்ற போட்டோகிராபர்கள் பற்றி அவருக்குத் தெரியும். ராஜிவ் கொலை நடந்ததும் அந்த சம்பவத்தில் ஹரிபாபுவும் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் சுபா சுந்தரத்தின் தொழில் புத்தி விழித்துக் கொண்டது. ராஜிவ் கொலை பற்றிய அரிய புகைப்படங்கள் ஹரிபாபுவின் கேமராவில் இருக்கும் என்பதை ஊகித்த அவர் அதனைப் பெற பல வழிகளில் முயற்சி செய்தார். நேரிலும் தேடினார். அதுதான் அவரை சிக்க வைத்துவிட்டது. கொலை நடந்த இடத்தில் ஹரிபாபுவின் கேமராவை சுபா சுந்தரம் தேடினார் என்பதை ரகோத்தமன் நூலில் குறிப்பிடவில்லை.

ராஜிவ் கொலையில் சுபா சுந்தரத்துக்கு தொடர்பு இல்லை. அவரது வியாபார நோக்கமே அவரை சிக்க வைத்து விட்டது. சுபா சுந்தரம் கைது செய்யப்பட்டதும் அவரது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வசதியான அவரது குடும்பம் அதன்பிறகு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டது. சுபா சுந்தரத்தின் மகன் இப்போது என்டிடிவி சேனலின் தலைமை கேமராமேன்.

கோடியக்கரை சண்முகம் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை விவரிக்கும்போது ரகோத்தமன் எதையோ மறைக்க முயல்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. சில சந்தேகங்கள், சில ஏற்க முடியாத அம்சங்கள் இருந்தாலும் இந்த நூல் ராஜிவ் கொலையில் பல உண்மைகளை சொல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு விஷயம். முருகன் மீது நளினி கொண்ட காதல் தான் ராஜிவைக் கொன்றது. அந்தக் காதல் இல்லையெனில் ராஜிவ் தப்பியிருக்கவும் வாய்ப்புள்ளது என்பது ரகோத்தமனின் அழுத்தமான வாதம்.
நளினியின் காதல் ராஜிவை ஒரே நாளில் கொன்று விட்டது. ஆனால் ராஜிவின் காதல் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறது.