இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை...
புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார்.
இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார்.
எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை.
- சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் -
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான்.
மூன்று வருடங்களின் பின்னர் தாயக மண் நோக்கிய எனது பயணம் கடந்த டிசம்பர் 31ஆம் நாள் ஆரம்பமானது. வவுனியா நகரில் இருந்து எங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி "தேக்கவத்தை" என்ற இடத்தில் இறக்கி விட்டது.
இந்த ஊர் முன்னர் 'தேக்கங் காடு' என்றே அறியப்பட்டிருந்தது.
ஈரப்பெரிய குளத்திற்குப் பதிலாக படையினரின் சோதனை நிலையமாக இப்போது அந்த இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
அது ஒரு பழைய விளையாட்டுத் திடல். முகமாலை மாதிரியே அரைச் சுவர் வைத்த சோதனைச் சாவடிகள் அங்கேயும் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் ஓய்விடத்திற்கு அருகிலேயே பேருந்துகள் தரிப்பிடத்திற்கான நிலம் செம்மையிடப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்தச் சோதனை நிலையம் இன்னும் பல பத்தாண்டுகள் சிறப்பாக இயங்குவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்தும் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்து அங்கே வரத் தொடங்கின.
பிற்பகல் 2 மணிக்கு 6 பேருந்துகள் ஒரே அணியாக அங்கிருந்து புறப்பட படையினர் அனுமதித்தார்கள்.
நாங்கள் 12 மணிக்கே அங்கே போயிருந்தோம். எமது பொதிகள், பைகள் சோதனையிடப்படவில்லை அடையாள அட்டைகளின் பிரதிகள் வாங்கப்படவில்லை.
ஆனாலும் ஓய்விடத்தில் படை ஆட்கள் சொல்லும் படியே அமர்ந்து, அடையாள அட்டைகளை அவர்கள் பார்வையிட்ட பின்னர், அவர்கள் காட்டிய வழியில் நடந்து, அவர்களின் வழிகாட்டலில் பேருந்துகளில் ஏறிக்கொண்டோம்.
அந்த மைதானத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் இருந்து பயணிகளுக்கு பழங்களும் தேநீரும் விற்கப்படுகின்றன. விற்பவர்களில் சிங்களவர்களும் அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.
பேருந்துகள் தாண்டிக்குளம் ஜோசப் முகாம் தாண்டி ஓமந்தையை அடைகின்றன. அங்கே எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன.
சோதனைச் சாவடிகளுக்கு பேருந்துகளில் இருந்து இறங்கி நெருக்கி அடித்தபடி ஓடும் மக்களையும் சோதனைக்காக கால்கடுக்கக் காத்திருப்பவர்களையும் மட்டும் தான் காணவில்லை.
அமைதிக்காகக் காத்திருந்த 2000 முதல் 2006 வரையான ஆண்டுகளில் இந்தச் சோதனைச் சாவடி வழியாக பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சென்று வந்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் பல தடவைகள் சிங்களப் புலனாய்வாளர்களுடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்திருக்கின்றது.
அந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் தமது பொற்காலத்திற்காக ஏங்கி அப்படியே கிடக்கின்றன.
பழையபடியே பிரதான சாலையைத் தவிர்த்து சாவடிகளைச் சுற்றிக் கொண்டு பயணிக்கின்றன பேருந்துகள்.
தமிழீழம் வரவேற்கிறது பலகையைக் கண்கள் தேடுகின்றன. ஒன்றும் இல்லை. அங்கே முன்பு ஏதோ இருந்தது என்பதற்கான தடயங்களே கிடையாது.
அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த "பாஸ்" வழங்கும் இடம், தமிழீழ காவல்துறைப் பணியகம், தமிழீழ வருவாய்த்துறை நிலையங்கள் எல்லாமும் அழிக்கப்பட்டு விட்டன, எதுவும் இல்லை, இருந்த இடம்கூடத் தெரியவில்லை.
வெறும் பச்சைப் பசேல் என்ற புல் வெளிகளாக வீதி ஓரங்கள் அனைத்தும் விரிந்து கிடக்கின்றன.
ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரு மருங்கும் சுமார் அரைக் கிலோ மீட்டருக்கு இப்போது ஒன்றுமே இல்லை.
செம்புழுதி படிந்தபடி கிடந்த காட்டு மரங்கள் இல்லை. பாலை மரங்களும் ஏனைய பெரிய மரங்களும் அங்கு இருந்ததற்கான அடையாளங்களும் இல்லை.
மேற்கு நாடுகளின் முற்றங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட புல் தரைகளாக அவை காட்சி அளிக்கின்றன. ஏன் அகற்றினார்கள் தமிழீழத்தின் அத்தனை பெரிய மரங்களையும் அடிக்கட்டை கூட இல்லாமல்.....? புரியவில்லை.
அந்தப் புல் வெளிகளுக்கு நடுவே 200 மீட்டர் தூரத்திற்கு ஒன்றாக காவல் அரண்கள் -- கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
காட்டு மரங்கள் நட்டு, ஓட்டுக் கூரை போட்டு, அரை வாசிக்குச் சரிவாக அணைக்கப்பட்டுள்ள மண்ணில் அறுகம் புற்கள் வேர்விட்டு பசுமையாய் படர்ந்திருக்கின்றன. இந்த காவல் அரண்களுக்கு இடையே தான் மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள்.
அவர்களுக்கு எல்லாமும் கொடுக்கப்படும் தகரங்கள் தான். காட்டுத் தடிகளால் நான்கு கப்பு நட்டு, கூரை போட்டு மேலேயும் தகரம், சுற்றி வரவும் தகரம். இது தான் இப்போதைக்கு அவர்களின் இல்லம்.
பக்கத்தில், மிக நெருக்கமாக, அவர்களுக்கு இருக்கும் துணை - படை ஆட்களின் காவல் அரண்கள் மட்டும் தான்.
மீளக் குடியமர்ந்த மக்களின் வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் காவல் அரண்கள் கண்ணுக்குப்படுகின்றன.
இல்லை.... நான் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்.... சரியாகச் சொன்னால், காவலரண்களில் இருந்து 20 அடி தூரத்தில் கொட்டகை அமைப்பதற்கு தான் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
வெய்யில் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மேலேயும் சுற்றி வரவும் தகரங்களும் தரப்பாள்களும் கொண்ட கொட்டகைகளில் வாழ்வு எப்படி இருக்கும் என்பதன் அனுபவம் 1996-இல் கிளிநொச்சியை விட்டு ஓடி ஒட்டுசுட்டானில் இருந்த போதே எனக்குத் தெரியும்.
அந்தத் தற்காலிகக் கொட்டகைகளின் அருகிலேயே பெண்களும், சிறுமிகளும், இளைஞிகளும் காணப்படுகிறார்கள். காவல் அரண்களில் படை ஆட்கள் இருக்கிறார்கள்.
சில இடங்களில் காவல் அரண்களுக்குப் பதில் காவல் துறையினரின் நிலைகள். மக்களின் தற்காலிகக் கொட்டில்களை விட அவை உறுதியானவையாகவும், அரை நிரந்தரமானவையாகவும் ஓடு போடப்பட்டவையாகவும் காட்சி தருகின்றன.
கிணறுகளுக்கு அருகில் காணப்படும் இந்தக் காவல் நிலையங்களில் உள்ளவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைப் பேருந்தில் இருந்தபடியே பார்க்க முடிகிறது.
பேருந்து அந்த இடத்தைக் கடக்கையில் 10 அடி தூரத்தில் அடுத்த கொட்டில் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களைப் பேருந்தில் இருந்தும் பார்க்க முடிகிறது.
வீதியோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இன்னும் உயிர் வாழும் வாய்ப்பு அரச மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அரச மரங்கள் காணும் இடங்களில் எல்லாம் அதைச் சுற்றி வெள்ளை வெளீர் என்று சுவர்கள் கண்ணைப் பறிக்கின்றன.
கௌதம புத்தர் அந்த மரங்களின் கீழே சத்தியத்தையும், அமைதியையும், வாழ்க்கையின் நிலையாமையையும், அகிம்சையையும் போதித்தபடி அமர்ந்திருக்கிறார்.
பேருந்துகள் மாங்குளத்தை நெருங்கிவிட்டன. முறிகண்டியில் அவை ஓய்வுக்காக நிறுத்தப்படும் என்றும் அங்கே ஒட்டுசுட்டான் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சாப்பாட்டுக் கடை ஒன்று திறந்திருக்கிறது என்றும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது உறவினர் முறிகண்டியில் தான் இருப்பார் என்பதும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.
பல வருடங்களின் பின்னர், முக்கியமாக கடைசிப் போரில் எப்படியோ உயிர் தப்பிய அவரைப் பார்க்கும் ஆவல் என்னிடம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமாகி விட்ட தமிழர்களில் நான் விதிவிலக்கா என்ன...? மாங்குளத்தில் உள்ள படைகளின் உணவு விடுதியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன.
சிற்றுண்டிகளுக்கான பட்டியல் முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலுமாக எழுதப்பட்டு நீட்டாகத் தொங்க விடப்பட்டிருக்கிறது.
புறப்படும் போது மதியச் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை எனினும் அங்கே எதையும் சாப்பிட மனம் இடங்கொடுக்கவில்லை. முறிகண்டியில் இனி பேருந்துகள் நிற்காது என்ற ஏமாற்றமும் எரிச்சலும் வேறு மனதை அலைகழித்தது.
சலத்தையாவது கழிப்போம் என்று எதிர்ப் புறத்தில் Toilet என எழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனேன். உள்ளே என்ன கந்தறு கோலமோ என நினைத்துக் கொண்டே பற்றைப் பக்கமாக ஒதுங்கினேன்.
சரசரப்புடன் ஏதோ ஒன்று நகர்ந்தது. கூர்ந்து பார்த்தபோது பச்சை உடையில் கைகளில் ஆயுதங்களுடன், தன் மீது தெறித்து விடாதபடிக்கு அந்த மனிதன் நகர்ந்து கொண்டான்.
இழுத்த ஜிப் அரைவாசியில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறையப் பேர் அந்த மனிதன் போன்றே நின்றிருந்தார்கள்.
பேருந்துகளில் வந்தவர்கள் காடுகளுக்குள் போய் விடாமல் இருக்கக் காவல்.
அந்த நாற்றத்திற்குள் நின்று காவல் செய்ய வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டிருந்தால், நான் என்ன செய்வது...? என் வேலை முடித்து வந்து பேருந்தில் ஏறிக் கொண்டேன்.
மாங்குளம் முகாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஏ-9 வீதிக்குக் கிழக்காக விரிந்து கிடக்கிறது. 200 ஏக்கரா அதற்கும் மேலா என்று எனக்கு மதிப்பிடத் தெரியவில்லை.
(மாங்குளம் சந்தியி்ல் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை. ஊர்களின் பெயர்கள் சிங்களத்தில் இரு முறை எழுதப்பட்டுள்ளன: ஒன்று - அந்த ஊர்களுக்கு உரிய சிங்களப் பெயர்கள் (யாப்பாணய). அடுத்தது - சிங்களவர்களால் அந்த ஊர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் (யாப்பா பட்டுவ)
முகாமைக் கடந்ததும் மீண்டும் ஒரு அரச மரம், சுற்றி வெள்ளைச் சுவர் அமைதியைப் போதிக்கும் பெரிய கௌதம புத்தர். இதுவரை பார்த்தவர்களிலேயே பெரியவர்.
மீண்டும் வீதியின் இரு மருங்கும் அதே காட்சிகள். எங்கெல்லாம் ஓடு போட்ட கட்டடங்கள் தெரிகின்றனவோ, அவை எல்லாம் ஒன்றில் படையினரின் முகாம்களாக, அல்லது காவல்துறை நிலையங்களாக இருக்கின்றன.
தன் தாய் நிலத்தில் தகரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறான் தமிழன்.
கனகராயன் குளத்தில் பாடசாலைக் கட்டம் அப்படியே இருக்கின்றது. வெள்ளைச் சீருடையில் சில மாணவர்களைக் காண முடிகிறது.
ஆனால், பாடசாலைகளைக் கடக்கும் போது எப்போதும் கேட்கும் அந்தத் தனித்துவமான இரைச்சல் சத்தம் கேட்கவே இல்லை.
ஆங்காங்கே இடிந்து போன கோயில்களின் எச்சங்கள் தங்களைப் புனரமைக்கப் போகும் மீட்பர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.
பேருந்துகள் கிளிநொச்சியை நெருங்குகின்றன.
அமைதிக்காகக் காத்திருந்த காலங்களில் எனக்கு மிக நெருக்கமான ஊர் அது. பணி நிமித்தம் பல தடவைகள் அந்த நகரத்துக்கு வந்து போயிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்திற்குப் பின்னர் எனது பாதங்கள் அதிகம் நடந்தது அந்த நகரத்தில் மட்டும் தான்.
55 ஆம் கட்டையில் புலிகளின் குரல் ஒலிபரப்புக் கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது வேறு கோபுரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒன்றல்ல இரண்டு.
கிளிநொச்சியை நெருங்குகையில் புலிகளின் குரல் வானொலிப் பணியகம் இருந்த இடத்தில் சிறிலங்கா படைகளின் சமிக்ஞை மத்திய நிலையம் நின்று கொண்டிருக்கின்றது.
முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வலுவாக நிரந்தரக் கட்டங்களுடன் அது காட்சி தருகிறது. அந்த இடமே சமிக்ஞை தருவதற்குத் தான் உகந்தது போல் இருக்கிறது.
கிளிநொச்சி நகரைப் பார்ப்பதற்கு கண்களும் இதயமும் துடிக்கின்றன. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் ஓட்டையாகிப் போன சுவர்கள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அருகில் வேறு எவற்றையும் காணவில்லை.
பாண்டியன் உணவு விடுதி இருந்த இடம் தெரியவில்லை.
முன்னாலேயே பூங்காவில் முதிர்ந்த மரங்கள் தவிர பெரிதாக நினைவிடம் ஒன்று எழுந்து நிற்கிறது. போரில் இறந்த படையினருக்கானது அது.
மேலிருந்து வெடித்துப் பிளந்து பூமி நோக்கி ஒரு வேர் போவதாக அமைத்திருக்கிறார்கள். மிகப் பிரமாண்டமாக இருக்கிறது.
அதே இடத்தில் முன்னர் ஏதோ இருந்ததாக எனக்கு ஞாபகம். நினைவுபடுத்திப் பார்க்க விருப்பம் வரவில்லை.
கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதையின் மேற்குப் புறத்தில் ஒன்றும் இல்லை. கற்குவியல்கள் மட்டுமே கிடக்கின்றன.
சந்தை, கடைகள், மதுக் கடை, எதிர்ப் புறத்தில் இருந்த சேரன் வாணிபம்... கற்குவியல்களுக்குள் தேடினால் தடயங்கள் கிடைக்கக் கூடும்.
எல்லாமும்... எல்லாமுமே... போய்விட்டன. எஞ்சி இருக்கும் கடைகளில் சிங்களம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.
நெஞ்சு விம்மி வெடித்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
பேருந்தில் மயான அமைதி. எல்லோர் கண்களும் கடப்பதற்குள் பார்க்க முடிந்தவற்றைப் பார்வையால் விழுங்கிக் கொள்கின்றன.
புதிதாகக் கட்டப்பட்டிருந்த தமிழீழ காவல்துறை அலுவலகம் கூரைகள் ஏதும் இன்றி எஞ்சி நிற்கிறது.
முன்பு - அடிக்கடி போய் வந்திருக்கிறேன். சில வேளைகளில் இரவு நேர ஓய்வுகூட அங்கே தான் எடுத்திருக்கிறேன். மூன்று வருடங்களில் எல்லாமும் மாறி விட்டன.
அந்தத் தண்ணீர் தொட்டி மீண்டும் உடைந்து கிடக்கிறது. முன்னர் அதன் தண்டுப் பகுதி நொருங்கி தொட்டிப் பகுதி மண்ணில் அரைவாசியாகப் புதையுண்டு கிடந்தது. இப்போது அடியில் தண்டுப் பகுதியுடன் முறிந்து கிழக்கு நோக்கிச் சாய்ந்து கிடக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறைச் செயலகம், மாணவர் அமைப்புச் செயலகம் அமைந்திருந்த அந்தப் பகுதி இப்போது அதி உயர் பாதுகாப்ப வலயமாகத் தோன்றுகின்றது.
அந்த இடத்தில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை தொடங்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் படை முகாம்கள் மட்டுமே தெரிகின்றன.
அந்தப் பக்கத்தில் கடைகள் கொஞ்சம் எஞ்சி இருக்கின்றன. தமிழர்கள் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக அவற்றின் மேல் எழுதப்பட்டுள்ள தமிழ் வாசகங்கள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன.
மறு புறத்தில் - மருத்துவமனைப் பகுதியை கடந்து நிமிர்ந்தால், ஞானம் கிடைக்காதவர்கள் மனிதர்களே இல்லை.
அங்கும் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் கௌதம புத்தர். நயினாதீவு நாக விகாரை சின்னதாகத் தோன்றியது எனக்கு.
பெரிய அரச மரத்தை விட்டு சற்று வெளியே அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தால் தனது இருப்பு மறைக்கப்பட்டு விடும் என்று நினைத்தாரோ என்னவோ வீதியில் செல்வோரைப் பார்த்தபடியே தியானம் செய்கிறார்.
கண்ணைப் பறிக்கும் வெள்ளை மதில் சுவர்கள் கணிசமான பிரதேசத்தைச் சுற்றி வளைத்து நிற்கின்றன.
கிளிநொச்சிப் பிள்ளையார் கோயில் குண்டுக் காயங்களுடன் ஆனாலும் ஓட்டுக் கூரையுடன் முடிய கதவுகளுடன் இன்னும் அங்கேயே இருக்கின்றது.
இனி பேருந்துக்கு வெளியே பார்ப்பதை நிறுத்திக் கொள் என்று மூளையில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதனை மதிக்கத் தவறும் உணர்வுகள் பரந்தன் சந்தியில் அலை மோதுகின்றன.
விசுவமடு நோக்கிச் செல்லும் பாதையின் மூலையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தனியார் நிறுவனம் ஒன்று கட்டிவிட்ட ‘பருவகால வாழ்த்துக்கள்’ பதாகை தொங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தக் கட்டத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குச் சிங்களம் படிக்கவோ பேசவோ வராது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எதிரே இருந்த கடைகளில் சில திறந்திருக்கின்றன. சிற்றுண்டிச் சாலைகள் என்பது பார்த்தால் தெரிகிறது.
ராணுவ உருமறைப்பு உட்சட்டை அணிந்தவர்கள் சிலர் அங்கே அமர்ந்து தேநீர் அருந்துகிறார்கள். அங்கே எழுதி இருப்பவையும் அவர்களுக்கு மட்டும் தான் புரியும்.
இத்தனைக்கு மேல் இனியும் பார்க்க வேண்டுமா...? மனம் அங்கலாய்க்கிறது.
நான் பார்க்க விரும்பவில்லை என்பதற்காக உண்மைகள் மறைந்துவிடப் போவதில்லையே!
ஆணையிறவு....!
முகமாலை சோதனைச் சாவடியை மூடிவிடப் போகிறார்களே என்ற காரணத்திற்காக மாலை 4.30 மணிக்கு உந்துருளியில், கண்களில் நீர் தாரையாக வழிய, 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே, முகத்தில் வந்தறையும் உப்புக் காற்றை எதிர்த்து நான் ஓடித் திரிந்த பாதை.
பளையின் அந்த வளைவுகளைக் காணும் போது மட்டுமே என் உந்துருளியின் வேகம் குறையும். அந்தப் பக்கம் தமிழீழ காவல்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆட்கள் நிற்பார்கள் என்ற பயம்.
உப்புக் கடலைத் தாண்டி, வாடி வீடு இருந்த இடத்தில் முதலில் உடைந்து போன பீரங்கி வண்டி ஒன்று முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது எதுவும் இல்லை.
2000-இல், சிறிலங்கா படைகளிடம் இருந்து ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவிடம் நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருந்த இடத்தில் இப்போது ‘ஆனையிறவு மாடி வீடு’ என்ற மிகப் பிரமாண்டமான நினைவிடம் நின்று கொண்டிருக்கிறது.
சிமென்ட்டினால் போடப்பட்ட அடித்தளத்தின் மேலே செப்புப் படிமங்களால் ஆக்கப்பட்ட பல கைகள் முழு இலங்கையைத் தூக்கிப் பிடித்து நிற்கின்றன.
தாமரைப் பூவும் மொட்டும், அந்த இலங்கையின் ஆனையிறவுப் பகுதி வழியாகப் பின்னிருந்து முன்பாகக் கவிழ்ந்து கிடக்கின்றன.
பணிகள் இன்னும் நடைபெறுகின்றன. கீழே மலர்ச் செடிகளும் வண்ணத் தாவரங்களும் வளர்ப்பதற்கும் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், கட்டத்தைச் சுற்றி இருந்த மறைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதுவரை அதனைத் திறந்து வைக்கவில்லை. ஆனாலும், சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள்.
பளையில் விடுதலைப் புலிகளின் சோதனை நிலையங்களும் "பாஸ்" அலுவலகங்களும் இருந்தன என்பது என் நினைவில் மட்டுமே இப்போது இருக்கின்றது.
பளை நகருக்கு அருகிலேயே எனது தோழிக்கு பல ஏக்கர் தென்னந் தோட்டம் இருக்கிறது.
இப்போது வந்தால் அவளுக்கு அது எங்கிருந்தது என்று அடையாளம் தெரியுமா...? சொல்லத் தெரியவில்லை.
எறிகணைகளும் குண்டுகளும் கழுத்தறுத்த தென்னைகள் நின்றிருக்க வேண்டுமே..? 2001-இல் வந்த போது அவற்றைத் தானே முதலில் கண்டோம்.
இப்போது அந்தக் கழுத்தறுந்த தென்கைள் கூட இல்லை. ஆங்காங்கே சில மீட்டர் தூரங்களில் இருக்கும் காவல் அரண்கள் அதற்கான காரணத்தைச் சொல்லக்கூடும்.
இந்தப் பாதை முழுவதும், மீணடும், இடை இடையே கௌதம புத்தர் ஞானம் வேண்டித் தியானம் செய்து கொண்டே இருக்கிறார்.
முகமாலை சோதனை நிலையம் இருந்த இடம் இது தானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கக் கடினமாக இருக்கிறது. மிருசுவில் வந்துவிட்ட பின்னர்தான் இந்த இடங்களை எல்லாம் நாம் தாண்டி வந்து விட்டோம் என்பது உறைக்கிறது.
ஒரு நாடு ஒரே மக்கள் ((one nation one people) எழுத்துக்கள் மஞ்சள் பலகையில் கறுப்புப் படிமங்களாகச் சிரிக்கின்றன.
இந்தப் பயணத்தின் முடிவில் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதில் தவறு இருப்பதாக எனக்கு கிஞ்சித்தும் தோன்றவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்டதன் அடையாளமாக நிறுத்தப்படும் வரையில் கௌதம புத்தனும் ஒரு ஆக்கிரமிப்பாளனே தான்.
சித்தார்த்தனாகத் தான் பிறந்த போது செய்யத் தவறியதை சிறிலங்காவில் அவன் செய்கிறான்.
யாழ்ப்பாணம் அப்படியே தான் இருக்கிறது. அபிவிருத்தி அடைந்ததாய் ஊடகங்கள் சொன்னவற்றைக் கண்களால் காண முடியவில்லை.
வங்கிகள் மட்டுமே அவசர அவசரமாக குக்கிராமங்களையும் ஒழுங்கைகளையும் தேடிச் சென்று கிளைகள் திறக்கின்றன.
மதுச் சாலையின் முன்பாகத் தான் வங்கிக் கிளை அமைக்க இடம் கிடைக்குமா...? அது பற்றிக் கவலையில்லை; எங்கே இருந்தாலும் கிடைக்க வேண்டியது பணம் தானே...?
வாழ்ந்த இடங்களும் திரிந்த இடங்களும் இப்படிக் கிடக்கையில் மக்கள் என்ன சொல்கிறார்கள்...?
தாங்கள் பட்ட துன்பங்களின் வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.
ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த பழைய நண்பன் ஒருவனுடன் தெருவோரக் கடை ஒன்றில் தேனீர் அருந்தினேன்.
உதயன் படித்துக்கொண்டு அரசியல் பேசிய பெரியவர் ஒருவரிடம், "தளர்ந்து போகாதங்கோ, ஐயா, எல்லாம் வெல்லலாம். பேராட்டத்தை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது" என்றான் என் நண்பன்.
பத்திரிகையிலிருந்து கண்களை எடுத்து அவனை நேரே பார்த்து அவர் சொன்னார் -
“வெளிநாட்டில இருந்துவிட்டு வந்து இங்க போராடுறதைப் பற்றிக் கதைக்கக் கூடாது, ராசா. இங்கயே சீவிச்சால் தான் இங்க என்ன நிலைமை எண்டு விளங்கும்."
திரும்பி என்னைப் பார்த்தான் நண்பன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
நன்றி
தட்ஸ் தமிழ்
தட்ஸ் தமிழ்