ஓசூர் சாலையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்குப் போய்ச் சேருவதற்குள் உயிர் போய் திரும்பி வந்து விடும். அந்த அளவுக்கு டிராபிக் ஜாம். இந்த சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களும், ஐடி ஊழியர்களும் பட்டு வரும் நரக வேதனைக்கு முடிவு கட்ட எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிகள் தொடங்கின. ரூ. 776 கோடியைச் சாப்பிட்டுள்ள நிலையில் தற்போது 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ்' சாலை அமைக்கும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன்தாஸ் பய் கூறுகையில், நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் மலைப்பாக உள்ளது. 1994ல் தொடங்கி இன்று வரை எங்களது போக்குவரத்துக் கஷ்டத்திற்கு முடிவே இல்லாமல் போய் விட்டது.
இந்த சாலையில் பயணித்து மாள முடியாது என்ற ஒரே காரணத்திற்காகவே கிட்டத்தட்ட 15 முதல் 16 ஆயிரம் ஊழியர்கள் வரை நாங்கள் இழந்துள்ளோம். இதிலிருந்தே இந்த ஓசூர் சாலையின் அவல நிலையை புரிந்து கொள்ள முடியும்.
சில்க் போர்டு சந்திப்பிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வரையிலான தூரத்தைக் கடக்க பீக் ஹவர் எனப்படும் கூட்ட நெரிசலான சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும். காரணம், இந்த சாலை 2 வழிப் பாதையாக இருப்பதால்.
தற்போது போடப்பட்டுள்ள நான்கு வழி மேம்பால எக்ஸ்பிரஸ் சாலை மூலமாக 10 நிமிடங்களில் இந்த தூரத்தைக் கடந்து விட முடியும். எக்ஸ்பிரஸ் சாலைக்குக் கீழே உள்ள சாலையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் கீழேயும் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் சாலை இல்லாத காரணத்தால், கடந்த பல வருடங்களாக ஓசூர் சாலைக்குள் நுழைந்து விட்டு பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மக்கள் ஏராளம், ஏராளம். குறிப்பாக ஐடி ஊழியர்கள் படாதபாடு பட்டு விட்டனர்.
தற்போது வந்துள்ள எக்ஸ்பிரஸ் சாலையால் இந்த நிலை மாறும் என நம்பப்படுகிறது.
....பகலவன்....