தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பாம்பாற்றில் தடுப்பணை: அமராவதி ஆற்றுக்கும் ஆபத்து! கேரள அரசின் அடுத்த அத்துமீறல்


தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையே இன்னும் முடிவுக்கு வராமல் இரு மாநில அரசுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் தலையில் இடிவிழுந்ததுபோல் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறது கேரள அரசு!

கேரளாவின் ஆணைமுடி சிகரத்தில் உற்பத்தியாகி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக வரும் பாம்பாற்றை தடுத்து கோவில் கடவு என்ற இடத்தில் அணை கட்டப்படும் என அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. அதற்காக 230 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது என்ற செய்திதான் திருப்பூர், கோவை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பையும், கோபத்தையும் உருவாக்கியதோடு, அம்மக்களின் உறக்கத்தையும் கெடுத்திருக்கிறது.

முதலில் உடுமலை அமராவதி அணையைப்பற்றி தெரிந்துகொள்வது நல்லது. காமராஜர் முதல்வராக வந்ததுமே கோவை, கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீர் ஆதாரங்களை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படும்படி அணை கட்டித்தர வேண்டும் என காமராஜரிடம் கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை மட்டுமல்ல. பல கோடி ரூபாயையும் திரட்டிக் கொடுத்தார்கள். வியந்துபோன காமராஜர், ‘நீங்களாக முயற்சி எடுக்கும்போது, இந்த அரசு சும்மா இருக்காதுண்ணேன்’ என்று சொல்லி 90 அடி உயரமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் உள்ளபடி, நான்கு டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட அமராவதி அணையை 1958ம் ஆண்டு கட்டிக்கொடுத்தார்.

இந்த அமராவதி அணைக்கு நீர் ஆதார பகுதியாக, கொடைக்கானல் மலையிலிருந்து உற்பத்தியாகும் தேனாறு, வால்பாறை, டாப்சிலிப் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு மற்றும் கேரள மலைப்பகுதியில் உற்பத்தியாகி வரும் பாம்பாறு இவை அனைத்தும்தான் அமராவதி அணையை நிரப்பி வருகிறது. இந்த மூன்று ஆறுகளும் சிறு சிறு ஓடைகளையும், அருவிகளையும் இணைத்து வந்து அமராவதியில் கலக்கிறது.

இந்த அமராவதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் கல்லாற்றில் தொடங்கி கரூர் வரையிலும் நேரடியாக 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், முப்பதுக்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்களும் பயன்பாட்டில் இருக்கிறது.

திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்நாடியாக இருக்கும் அமராவதி அணைக்கு, 60 சதவிகிதத்திற்கு மேலான நீர் ஆதாரம் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் பாம்பாறுதான். இந்த பாம்பாற்றை கேரளா வனப்பகுதியிலேயே தடுத்து அணை கட்டிவிட்டால் அமராவதி அணைக்கு நீரவரத்து பெருமளவு குறைந்துவிடும். அதனால் பசுமையாக இருக்கும் அமராவதி ஆற்றின் பாசனப்பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக் கூடாது என்றுதான் விவசாயிகள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் வரிந்து கட்டிக்கொண்டு இடைவிடாத போராட்டங்களை நடத்திவருகிறது ம.தி.மு.க. பாம்பாறு பிரச்னை குறித்தும் களத்தில் இறங்கியிருக்கும் அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பனிடம் பேசினோம். ‘‘அமராவதி அணையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதிக்குட்பட்ட ஆணைமுடி சிகரத்தில், பாம்பாறு தொடங்குகிறது. முழுவதும் கேரள வனப்பகுதியிலே பயணித்து வரும் பாம்பாற்றை தடுத்து கோவில்கடவு என்ற இடத்தில் அணை கட்ட ஜனவரி மாதம் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அமராவதி அணையின் தற்போதைய நிலைமையே மிகவும் மோசமானது. நான்கு டி.எம்.சி. கொள்ளளவு உள்ள அணைக்கு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை சரியாகப் பெய்தால் மட்டுமே மூன்றுமுறை அணை நிரம்பி முப்போகம் விளையும். முப்போகம் என்பது உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான். அடுத்து திருப்பூர், கரூர் மாவட்டங்களில் எல்லாம் இருபோகம், அல்லது ஒரு போகம்தான்.

அமராவதி ஆற்றை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய நிலங்கள் மட்டுமல்ல, உடுமலையை ஒட்டியே 13 காகித தொழிற்சாலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட இதர தொழிற்சாலைகள் உள்ளன. கேரள அரசாங்கம் தன்னிச்சையாக நீதிமன்றத்தின் ஆணையைக்கூட மதிக்காமல் பாம்பாறு பயணித்து வரும் காந்தலூர் பகுதியிலும், கோவில் கடவிற்கு அருகிலும் இரு செக் டேம்களை கட்டி தண்ணீரைத் தேக்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதைக்கூட நாம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மலைப்பகுதியிலே 230 கோடி ரூபாய் செலவில் அணையைக் கட்டி நமக்கு வரும் நீரை தேக்கி மின் உற்பத்தி செய்யப்போகிறார்களாம். இதெல்லாம் நம்முடைய அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது. ஆனால், கேரள அரசாங்கம் நம்மை சட்டை செய்யாமல் மத்திய அரசின் அனுமதியைப் பெற முயற்சிக்கிறார்கள். இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் முல்லைப் பெரியாறு அணையைத் தாரைவார்த்து கொடுத்ததைப் போல, பாம்பாற்றையும் கொடுத்துவிட்டு, செழிப்பான கொங்கு மண்டல மக்கள் குடிநீருக்குக் கூட கையேந்தி நிற்க வேண்டிய நிலை வந்துவிடும்’’ என்றார் ஆதங்கமாய்.

தென்னை வாரியத்தின் துணைத்தலைவரும், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவருமான செல்லமுத்துவிடம் பேசினோம். ‘‘கோவில் கடவு பகுதியில் கட்டப்படும் அணையின் மூலம் தேக்கப்படும் தண்ணீரை மூன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு மலைகளைக் குடைந்து டனல் அமைத்தும், 80 மீட்டர் அகலத்திற்கு பைப்களை அமைத்து தினமும் 40 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாக, கேரள அரசு தெரிவித்துள்ளது.

மின்சாரம் தயாரித்துவிட்டு தன்ணீரை மீண்டும் கீழேதானே விடுவார்கள். அதனால் நமக்கு நீர்வரத்து பாதிக்காது என்று நினைக்கக் கூடாது. அந்தத் தண்ணீரை அப்படியே திருப்பி பன்னாட்டு குளிர்பான நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதனால் நமக்கு பாம்பாறு மூலம் கிடைக்கின்ற தண்ணீர், முழுமையாகத் தடைபட்டுப்போகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கேரள அரசாங்கம் இந்த அணையைக் கட்டுவதே முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்கவும், தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்து பணம் ஈட்டவும்தான். நம்மைப்போல அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கி பாசனம் செய்ய அவர்களுக்கு வறட்சியான பூமி கிடையாது.

பாம்பாற்றைத் தடுத்து அணையைக் கட்டிவிட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதுபோல், அமராவதியின் கிழக்கு கரையோர திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் விளையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மஞ்சள் விவசாயம் முழுவதும் பட்டுப்போகும். பாம்பாற்றின் நடுவே அணை கட்டுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசும் அனுமதி தரக் கூடாது என விவசாயிகள் சங்கம், பாசன சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சேர்ந்து, வரும் பிப்ரவரி 6ம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்தப்போகிறோம்’’ என்றார் செல்லமுத்து.

முல்லைப் பெரியாறு கேரளத்திற்கும், காவிரியை கர்நாடகத்திற்கும், பாலாற்றை ஆந்திரத்திற்கும் தாரைவார்த்து கொடுத்ததைப்போல், பாம்பாற்றை பறிகொடுத்துவிடாமல் தடுக்கவேண்டும் என்பதே அமராவதி அணையை நம்பியிருக்கும் லட்சோப லட்சம் தமிழர்களின் வாழ்வாதார எதிர்பார்ப்பு!

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?