என்னை பாதித்த கவிதையை இங்கு பதித்து உள்ளேன். படிக்கும் பொழுதே மனதை கலங்கடிக்கும் இந்த வரிகளை எழுதியவரின் பெயர் அடையலாம் காட்டப்படவில்லை.
எல்லோருக்கும் இரவில்
உறங்கும் சூரியன்,
எங்களுக்கு மட்டும்
பகலில்.
உயிர்களிடத்தில்அன்பு
காட்டவேண்டுமாம்,
எங்களாலும் முடியும்
மனிதர்களை தவிர
மற்றவைகளிடம்
வாழத்தான் வேண்டியுள்ளது
ஆறுதல் கூறிகிறேன் என்று,'
அவன் எங்கெல்லாம் தொட்டான்'
என கேட்பவர்களிடையிலும்,
ஆதரவு தருகிறேன் என்று,
அந்தரங்கத்தை தொடுபவர்களிடையிலும்.
விலை மதிப்பில்லாததாம் கற்பு,
கூவாமலும் கூசாமலும் அதைத்தான்
வீதியில் விற்கின்றோம்
தினமும்விலை வைத்து.
காந்தியின் கனவை
நனவாக்க இரவில்
தனியாக நடப்போம்.
என்ன அதிகமாக போனால்,
அன்றைய உழைப்பிற்கு
ஊதியம் இருக்காது.
இறுதியாக என் தாயிடம்
ஒரு விண்ணப்பம்.'
தயவு செய்து என் அப்பன்
யாரென்று சொல்லிவிடு'.
அவனை தெரிந்துகொள்வது,
என்னின் இந்த நிலைமைக்கு
நியாயம் கேட்கவோ,
ஆறுதலாக அவன்தோள்களில்
சாய்ந்துக்கொள்வதற்கோ அல்ல.
என்னுடைய இரவுகளில்
அவனைசந்திக்காமல் இருப்பதற்கு.
பெயர் வெளியிட விரும்பாதவள்