பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்த ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழர்களை ஈவு இரக்கிமின்றி கொன்றழித்த சிங்களத் தீவிரவாதிகளின் கொலைவெறி கொடூரத்தின் கடைசி மணித்துளி நிகழ்வுகளை ‘புதினம்’ இணையத்தள செய்தியாளர் அந்த நிறுவன ஆசிரியருக்கு உயிரிழக்கும் தருவாயில் 17&05&2009 ஆம் நாள் தெரிவித்த மரண வாக்குமூலம்... “என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுவே கடைசியாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். |
“பீரங்கி குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள்மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங் கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்ன மும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக் கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏது மற்ற நிலையிலும், சிங்களப் படையினர்களை கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தியும் மேற்கொண்ட வாறு மக்களைக் கொன்று குவித்து வருகின் றனர். கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோ ரினது உடல்களும் நாலாப்புறமும் சிதறிக் கிடக் கின்றன. திரும்பிய பக்கம் எல்லாம் பிணக் குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட் டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசு கின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிங்களப் படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் வீழ்ந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவமளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மைச் சுட்டுக்கொன்று விடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல், காயமடைந்து, மருத்துவத்திற்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு ‘சையனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்கு குழிகளுக்குள் இருந்த போதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சி யிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காக பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது. இப்பேர்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்து கொண் டிருக்கும்போது, ஆய்தப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும்போது, மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது.” ...இத்துடன் ‘புதினம்’ செய்தியாளரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. நன்றி தமிழ் உலகம் |
தமிழின அழிப்பின் இறுதி மணித்துளிகள்..!
தொகுப்பு
ஈழ தமிழர்