திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பஞ்சாயத்-துக்கு உட்பட்ட தென்னம்பட்டி கிராமத்-திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்தான் இந்த தகிடுதத்தம். இந்த ஊரைச் சேர்ந்த பழனி என்பவர் நடந்ததை நம்மிடம் கொட்டத் தொடங்கினார்.


அ.தி.மு.க.வின் வேடசந்தூர் தொகுதி செயலாளரான பழனிச்சாமி நம்மிடம், ''இந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைபார்த்த நுற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பர்சனல் லோன் இந்த கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த மில் மூடப்பட்டுவிட, அந்தத் தொழிலாளர்களிடம் மலையப்பனே, நேரடியாக போய் கறாராக லோன் தொகையை வசூலித்திருக்கிறார்.
பணத்தை வசூல் செய்தவர் சொசைட்டி கணக்கிலே கொண்டுவரவில்லை. அந்த சமயத்தில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி தள்ளுபடி என்று அரசு அறிவித்தும்... அறிவிப்பு வர, அந்த தொகையையும் மலையப்பனே எடுத்துக்கொண்டாராம். அதில்லாமல் சிறு தொழில், விவசாயக் கடன் என்று பல விஷயங்களில் கை வைத்திருப்பதாக மலையப்பன் மீது மலை மலையாய் புகார்கள் இருக்கின்றன'' என்றார்.
சின்ராஜ் என்ற விவசாயியோ, ''பத்து வருடமாக என்னோட நிலத்துக்கு விவசாய கடன் கேட்டு நடக்கிறேன். இன்று வரை எனக்கு எந்த லோனும் தரவில்லை. ஆனால் அவருடைய சொந்த பந்தம், நண்பர்கள் என ஏகப்பட்ட நபர்களுடைய பெயரில் இவரே லோன் போட்டு எடுத்திருக்கிறார். என்னைப் போன்ற விவசாயிகளுக்கு லோன் தராமல், அவர் குடும்பத்திலுள்ள பலரது பெயரில் லோன் போட்டு அவரே எடுத்திருப்பதை தகவல் உரிமை சட்டம் மூலமாக பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன்'' என்று பட்டியலை நம்மிடம் காட்டினார்.

விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்தபோதும் தென்னம்பட்டி மக்கள் மட்டும் அந்த தள்ளுபடி சலுகையை அனுபவிக்க-வில்லை. அதை அனுபவித்தது மலையப்பன் மட்டும்தான். அதோடு அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர் பெயரில் மட்டும் இதுவரைக்கும் இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் லோன் போட்டு எடுத்திருக்கிறார். பத்து பதினைந்து வருடமாக இங்கு வேலை செய்யும் மலையப்பனுக்கு உயரதிகாரிகள் கூட முழு ஆதரவுதான். ஊர்க்-காரர்-கள் போய் கேட்டால், 'நான் யார் தெரியுமா? நான் சொல்வதைத்தான் அந்த அமைச்சரே கேட்பார் என இந்த மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு அமைச்சர் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார். ஆனால் ஊர் மக்கள் அசராமல் இவர் மீது ஆதாரத்தோடு புகார்களை அனுப்ப... மலையப்பனையும் அவருடன் வேலை பார்க்கும் இரண்டு ஊழியர்களையும் இப்போது சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதன் பிறகே பலர் வயிற்றில் அடித்து அபகரித்த பல லட்சம் ரூபாயை வங்கியில் திரும்பக் கட்டியிருக்கிறார் மலையப்பன்'' என்று விவரித்தார் குப்புசாமி.
நாம் மலையப்பனிடம் பேசியபோது, ''எல்லாம் சரி பண்ணியாச்சு... இப்ப ஒண்ணும் பிரச்னை இல்ல. இதுக்குமேல சொல்ல எதுவும் இல்லை'' என்றார் சாதாரணமாக.
மலையப்பன் மீதான புகார்களைப் பற்றி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் வில்வசேகரனிடம் கேட்டோம். ''மக்கள் பணத்தை மலையப்பன் சட்டவிரோதமாக கையாடியது உறுதியாகி-விட்டது. அவரோடு இன்னும் இரண்டு நபர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதுவரை 38 லட்ச ரூபாய் திரும்பக் கட்டியிருக்கிறார். இருப்பினும் விசாரணை முடிந்தவுடன்தான் அவர் மீது துறை ரீதியான மேல் நடவடிக்கை என்ன என்று முடிவு செய்யப்படும்'' என்றார். இதற்கிடையே... சில கீழ்நிலை அதிகாரி-களும், சென்னையிலுள்ள உயர் அதிகாரிகள் சிலரும் ஜாதி ரீதியாக மலையப்பனுக்கு உதவுவதாக ஒரு தகவல். இவர்கள் கட்டப்பஞ்சாயத்து பேசி, 'மோசடி செய்த பணத்தை மலையப்பன் திரும்ப கட்டிவிடுவார். எனவே அவர் மீது போலீஸ் நடவடிக்கை வேண்டாம்' என்று பிரஷர் கொடுத்து வருகிறார்களாம். துறை ரீதியாகவோ உள்ளூர் ரீதியாகவோ சம்பந்தமே இல்லாத ஓர் அமைச்சரே இந்தக் கட்டப் பஞ்சாயத்தை வெற்றிகரமாக முடிக்க பிரயத்தனப்படுவதாகவும் தகவல்!
இந்த தடைகளைத் தாண்டி, விரைவில் விசாரணையை முடித்து மலையப்பனுக்கு கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த விவசாயிகளின் கோபமான கோரிக்கை.