தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மரத்தடி படிப்புக்கு முற்றுப்புள்ளி! -ஆக்ஷனில் ‘தமிழக அரசியல்’

மர நிழலும், மரத்தடிக் காற்றும் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால்
வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக மழையிலும், வெயிலிலும் மரத்தடியிலேயே
உட்கார்ந்து மாணவர்கள் கல்வி கற்பது எந்த வகையில் நியாயம்? அதுவும்
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில்!

விருதுநகர் & மதுரை சாலையில் இருக்கும் சத்திர ரெட்டியாபட்டியில் உள்ள
அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இப்படி மரத்தடி வகுப்புகள்
நடந்துவருகின்றன.

800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் கடந்த 5
ஆண்டுகளாக மாணவர்கள் மரத்தடியில் படித்துவருகிறார்கள். இந்த அவலங்களைப்
போக்க மாவட்ட நிர்வாகத்திடம் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும்,
ஊர்மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற மாவட்ட
நிர்வாகம் நபார்டு வங்கியின் உதவியை நாடி 1 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம்
ரூபாய் நிதியைப் பெற்று 17 வகுப்பறைகள், ஆய்வகங்கள், நவீன கழிப்பறைகள்,
குடிநீர் வசதி, பள்ளியைச்சுற்றி தடுப்புச் சுவர் என கட்டித்தரும்படி
பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டது.

வேகமாக களத்தில் இறங்கிய பொதுப்பணித் துறையினர் அடித்தளம் தோண்டி,
கம்பிகள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென பணியை
நிறுத்திவிட்டனர்.

இதுபற்றி பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் சர்மிளா நம்மிடம், "வகுப்பறை
பற்றாக்குறை காரணமாக 400 பிள்ளை-களுக்கும் மேல் மரத்தடியில்தான்
படிக்கிறார்கள். கட்டடப் பணிகள் நின்றது பற்றி நாங்கள் மாவட்ட
நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த
பிரச்னையை நீங்களாவது தீர்த்து வையுங்களேன்" என்றார் வேதனையாக.

இப்பிரச்னை சம்பந்தமாக பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுகுமாரனை
தொடர்பு கொண்டு பேசினோம். ''பள்ளியில் கட்டடப் பணிகள் திடீரென
நிறுத்தப்பட்டது உண்மைதான். அந்தப் பணியைச் செய்த ஒப்பந்தக்காரர் பணியைத்
தொடர முடியவில்லை என வேலையை ஆரம்பித்த மூன்று மாதத்திலேயே
போய்விட்டார். அதன்பின்பு மறு டெண்டர் மூலம் செய்யலாம் என
முடிவெடுத்திருக்கிறோம்" என்றார்.

மாணவர்களின் பிரச்னையை மாவட்ட கலெக்டர் சண்முகத்தை தொடர்பு கொண்டு
தெரிவித்தோம். விபரத்தை பொறுமையாகக் கேட்டவர், 'இரண்டு மணி நேரம்
கழித்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன்' என உறுதியளித்தார். சொன்னபடியே
மீண்டும் நம்மைத் தொடர்புகொண்ட கலெக்டர், ''பொதுப்பணித் துறை
அதிகாரிகளிடம் இந்த பிரச்னை பற்றிப் பேசி, சத்திர ரெட்டியாபட்டி அரசு
மேல்நிலைப் பள்ளிக்கு இன்னும் 10 மாதத்துக்குள் புதிய கட்டடம் கட்டித்
தரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறேன். இதைத் தொடர்ந்து கண்காணிப்பேன்.
விரைவில் பள்ளிப் பிள்ளைகள் புதிய வகுப்பறைகளில் பயிலலாம்'' என
தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி பொதுப் பணித்துறையினர்,
பள்ளிக்கு வந்து, நின்றுபோன பணியை பார்வையிட்டு, மீண்டும் பணிகளைத்
துவக்க முதலடி எடுத்துவைத்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள்,
மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், ஐந்தாண்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை
எடுத்த கலெக்டருக்கும், 'தமிழக அரசியல்' இதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.