தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நதிகள் இணைப்பு அவசியம்: தண்ணீருக்காக போர் மூளும்-கலாம் எச்சரிக்கை

நதிகளை இணைக்க வேண்டியது அவசியம், அவசரம். எதிர்காலத்தில் தண்ணீருக்காக உலக அளவில் போரே மூளும் வாய்ப்பு உள்ளது. தமிழகமும், இந்தியாவும் தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடபட நதிகளை இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கோவையில் சிறு துளி பெருவெள்ளம், அன்றும்...இன்றும் என்ற தலைப்பில் மழை நீர் சேகரிப்பு முறைகள் பற்றிய கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நதிகள் இணைப்பின் அவசரம், அவசியம் குறித்து அவர் விரிவாகப் பேசினார். நதிகளை இணைப்பது தமிழகத்திற்கு மிகவும் அவசியம் என்ற கலாம், எதிர்காலத்தில் தண்ணீருக்காக போர்கள் மூளும் அபாயமும் இருப்பதாகவும் எச்சரித்தார்.

கலாமின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

எனக்கு ஒரு கனவு உள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற நதிகளை பிற நதிகளுடன் இணைத்து அதை ஏரிகள், நீர்நிலைகள், கண்மாய்களை இணைக்க வேண்டும். இது முடியுமா? என்றால் முடியும். கரிகாலன் முடியாது என்று நினைத்து இருந்தால் தமிழகத்தில் கல்லணை அமைந்திருக்காது.

இஸ்ரோ போன்ற தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதுகுறித்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நீராதாரங்களை இணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

தாமிரபரணி, காவிரி, பாலாறு, வைகை போன்றவற்றை இணைத்தால் தமிழகத்தின் நீர்த் தேவைகளை தாராளமாக நிறைவேற்ற முடியும்.

சோழர் காலத்து நொய்யல் ஆறு இன்று எந்த நிலையில் இருக்கிறது?. பாழ்பட்டு, மாசுபட்டு வீணாகிக் கிடக்கிறது. தேம்ஸ் நதியை சீர்படுத்தியது போல இதையும் சீர் செய்ய வேண்டியது அவசியம்.

3-வது உலகப் போர் மூளும்

உத்தரபிரதேசம், கேரளா, ஆந்திராவில் நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 3-வது உலகப்போர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான்.

இந்தியாவை சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்சினைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை.

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் எதிர்காலத்தில் அடைத்து வைப்பார்கள். அதை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்திருக்கமாட்டோம். ஆனால் அது இன்று நடைமுறை ஆகிவிட்டது.

இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் விற்பனை 10 ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறார்கள். மிகப்பெரும் கம்பெனிகள் எல்லாம் இந்த தண்ணீர் விற்பனையில் குதித்திருக்கின்றன. வெளிநாட்டு கம்பெனிகளும் இந்தியாவில் குடிநீரை பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலை தொடங்கி தண்ணீர் விற்பனைகளை ஆரம்பித்து இருக்கின்றன.

யுத்தம் ஏற்படக் கூடாது என்றால்..

இது பெரும் ஆபத்து. தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக் கூடாது என்றால் அதற்கு தேவை தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைமை. இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான், என்பதை புரிந்து கொண்டு அந்த இயக்கம் அதற்கான முன்முயற்சிகளை ஆரம்பித்தாக வேண்டிய கால கட்டம்தான் இது.

நமது நாடு தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம்.

மாணவர்கள் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைப் பாதுகாப்போம், சேமிப்போம், அதன் நீராதாரங்களை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கலாம்.

கடந்த தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நதி நீர் இணைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. பின்னர் ஆட்சி போன பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் நதி நீர் இணைப்பு குறித்து கவலையே படவில்லை. மாறாக இதெல்லாம் சரிப்படாது, நடைமுறைக்கு சாத்தியமற்றது, அறிவுப்பூர்மானதல்ல என்று ராகுல் காந்தி சொன்னார். அதைத் தொடர்ந்து அரசும் கூட இது சரிவராது என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது நினைவிருக்கலாம்.