தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

‘இன்னும் அதிகம் பேசுவேன்!’’ சீற்றம் குறையாத சீமான் பேட்டி

''நான் சிறைக்கு செல்கிறேன் என்றால் அந்த சிறையிலும் நாம் தமிழர்
இயக்கத்தின் கிளையை துவங்கப்போவதாக பெருமிதப்படுவேன்' என தன்
இயக்கத்தினரிடம் உற்சாகமாகச் சொல்வார் இயக்குனர் சீமான். அதன்படியே
வேலூர் மத்திய சிறையில் 'நாம் தமிழர்' இயக்கத்தின் கிளையை துவக்கி வைக்க
சீமானை அங்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.

இனப் படுகொலை குற்றவாளியான இலங்கைக்கு உதவும் ரஷ்ய, சீன அரசுகளை
கண்டித்தும், இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக்
கடற்-படைக் காடையர்கள் சுட்டும் அடித்தும் கொன்றதைக் கண்டித்தும் 'நாம்
தமிழர்' இயக்கம் சார்பில் ஜூலை 10 &ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம்
முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற சீமான், ''தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள் இருக்கின்றனர்
என்று, 'நாம் தமிழர்' இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒருமுறை
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால், சிங்களர்கள் யாரும் உயிருடன் இலங்கை
திரும்ப முடியாது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் சிங்கள மாணவர்கள்
யாரும் வெளியில் நடமாட முடியாது'' என்று பேசினார். இந்தப்
பேச்சுக்-காகத்தான் இனக்கலவரத்தை தூண்டியதாக சீமான் மீது வழக்குப் பதிவு
செய்தது தமிழக போலீஸ். சீமான் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்து-விடக்
கூடாது எனத் திட்டமிட்டு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்குள் கைது செய்ய
களமிறங்கியது போலீஸ். போலீஸாரின் முயற்சி பலிக்கவில்லை. அவர்
கோர்ட்டில் சரணடைவதை தடுக்க சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன்
உள்ளிட்ட பல கோர்ட்டுகள் முன்பும் உளவுத் துறை போலீஸார் கண்காணித்து
வந்தனர்.

இந்த நிலையில்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (பிரஸ் கிளப்)
செய்தியாளர்களை 12&ம் தேதி காலை சந்தித்துவிட்டு அங்கேயே கைதாக
திட்டமிட்டார் சீமான்.

இந்தத் தகவல் பரவ... அன்று காலை 6 மணி முதலே பிரஸ் கிளப் அமைந்திருக்கும்
சேப்பாக்கம், அரசினர் தோட்டத்தை ஆக்கிரமித்தது போலீஸ். இதற்கிடையில்
சீமான் சார்பில் தீரன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய ஷாகுல் அமீது, 'பத்திரிகையாளர் முன்னிலையில் சீமான்
கைதாவார்' என்று தகவலை கசியவிட்டார்.

கைதாகும்போது சீமானின் வாயிலிருந்து ஒற்றைச் சொல் கூட உதிர்ந்துவிடக்
கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டனர் போலீஸார். அரசினர்
தோட்டத்துக்கு வந்த எம்.எல்.ஏ.க்களின் கார்களைக் கூட... கண்ணாடியை
இறக்கி சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்தனர். ஏதோ காஷ்மீர்
தீவிரவாதியைப் பிடிப்பதைப் போல பிரஸ் கிளப் பின்புறம் இருந்த
முட்புதர்களுக்குள்ளும் போலீஸார் பதுங்கியிருந்தனர். இதில் வேடிக்கை
என்னவென்றால் ஓமக்குச்சி நரசிம்மன் சைசில் மொபட்டில் ஹெல்மெட் அணிந்து
வந்தவரைக் கூட தடுத்து நிறுத்தி ஹெல்மெட்டைக் கழற்றச் சொல்லி, அவர்
சீமானா என்று பார்த்ததுதான்.

இத்தனை பரபரப்புக்கிடையில் காலை 11.30 மணிக்கு சிகப்பு நிற காரில் பிரஸ்
கிளப் வந்தார் சீமான். காரைவிட்டு இறங்கி அவர் பேட்டியளிப்பதை தடுத்து,
சீமானை கைது செய்ய காருக்கு அருகே விரைந்தது போலீஸ். இதனால் சில
நிமிடங்கள் காருக்குள்ளேயே இருந்தார் அவர். பத்திரிகையாளர்கள்
வட்டத்தில், தான் இருப்பதை உறுதி செய்துகொண்ட சீமான் வெளியே வந்து பேசத்
தொடங்கினார். எனினும் அவரை பேசவிடாமல் பத்திரிகை-யாளர்களை தள்ளிவிட்டு
சீமானை இழுத்துச் செல்ல முனைந்தது போலீஸ். இதில் பல பத்திரிகையாளர்கள்,
டி.வி. கேமரா மேன்கள் காயமடைந்தனர். இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள்
ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே சீமான், தன் கைப்பட எழுதி கொண்டுவந்த நான்கு பக்க கடிதத்தை
பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரை வேனில்
ஏற்றிய போலீஸார் சென்னை மெரினா பீச் வழியாக கொண்டு சென்றனர். ரகசிய
இடத்தில் அவரை சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வைத்திருந்து...
பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் ஏழாவது கோர்ட்டில்
ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவு வாங்கினர்.

சிறைக்குச் செல்லும் முன் நீதிமன்ற வளாகத்தில் சீமானை சந்தித்தோம்.

உங்கள் கைதுக்கான காரணத்தைப் போலீஸார் சொன்னார்களா?

நான் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியதாக என்
மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நான் இலங்கை அரசைத்தான்
கண்டித்து பேசியிருக்கிறேன். இதில் எங்கே இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து
வந்தது? அப்படி ஆபத்து என்றால் இலங்கை, இந்திய மாநிலங்களில் ஒன்றா? இந்த
என் கேள்விக்கு கலைஞர் பதில் சொல்ல வேண்டும். எந்த சொந்த நாடாவது தன்
மக்களை கொல்லுமா? தமிழகத்தில் 537 மீனவர்களை கொன்று இருக்கிறது இலங்கை
அரசு. அவர்களை கண்டிக்க வக்கில்லாத தமிழக அரசு என் மீது பொய் வழக்கு
போடுகிறது.

உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்-பட்டதும் ஏன் தலைமறை-வானீர்கள்?

தமிழக போலீஸார் என்னை இரவு நேரத்தில் கைது செய்திருப்பார்கள். அதற்கான
காரணத்தை முறையாக என்னிடம் சொல்லியிருக்க மாட்டார்கள். எங்கோ என்னை
கொண்டு சென்று மறைத்து வைத்து நாடகமாடியிருப்பார்கள். என் கைதின் மூலம்
சட்டம்& ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம், எங்களை மக்கள் விரோத கட்சியாக
சித்தரிக்கலாம் என்ற கலைஞரின் திட்டத்துக்கு நாங்கள் பலியாகவில்லை.
அதனால்தான் இன்று (12&ம் தேதி) பத்திரிகை-யாளர்களை சந்தித்துவிட்டு,
உங்கள் முன்னிலையில் போலீஸாரிடம் கைதாகும் திட்டத்தோடு இருந்தேன்.
ஆனால், என்னை பத்திரிகையாளர்களிடம் பேச விடாமல் தடுத்து போலீஸார் கைது
செய்திருக்கிறார்கள்.

உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் போலீஸார் முயற்சி
மேற்கொண்டுள்ளார்களாமே?-

''ஈழத் தமிழர்கள் பற்றி என்னை பேச விடாமல் தடுக்கவும், எமது இயக்க
வளர்ச்சியை முடக்கவும் கலைஞர் எடுத்த நடவடிக்கைதான் இந்தக் கைது. என்
மீது அவர் ஆயிரம் பொய் வழக்குகள் பதிவு செய்தாலும் அதில் இருந்து நான்
வெளியே வருவேன். இதைவிட அதிகம் பேசுவேன் என்று என்னைவிட கலைஞருக்கு
நன்றாகத் தெரியும்.

தமிழக மீனவர்கள் நலன், ஈழத் தமிழர்கள் நலனுக்காக போராடும் நான் குண்டர்
என்றால்... உண்மையான குண்டர்களை இந்த அரசு என்ன சொல்லும் தியாகி என்றா?
அவர்களை என்ன செய்யும்?'' என்று ஆவேசமாகக் கேட்டுவிட்டு சிறைக்குக்
கிளம்பினார் சீமான்.