தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வைகோ வின் சிறைவாசம்.

இந்த செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது.



சிறையில் அடைக்கப்பட்ட கட்சியினரை பார்க்க வந்த உறவினர்கள் பிஸ்கட், ரொட்டி, பழங்களை கொண்டு வந்து கொடுத்தனர். சிறை அறையில் இருந்த தின்பண்டங்களின் வாசனை அறிந்து எலி ஒன்று அறைக்குள் நுழைந்துள்ளது. எலியை கட்சியினர் கண்டதும், கூச்சல் எழுப்பி அதை அடித்து விரட்டினர். கூச்சலைக் கேட்டு சிறை வார்டன்கள் கைதிகள் அறையில் சண்டை நடக்கிறதோ என, "கிலி' அடைந்து ஓடி வந்தனர். "எலி' பிரச்னை என தெரியவந்ததும் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிவிக்கும் போராட்டங்கள் அனைத்தும் மற்ற கட்சியினரின் போராட்டங்களில் இருந்து வேறுபட்டவையாகவே இருந்து வருகின்றன. வைகோவின் ஆர்ப்பாட்டங்களில், இருக்கும், "உணர்ச்சி' வேகமும், கட்டுப்பாடும் அவர்களுக்கே உரித்தானவை.



அந்த வகையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, சென்னையில் கடந்த வாரம் நடந்த கண்டன ஆர்ப்பாட்டமும் அமைந்திருந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும், இலங்கை தூதரகத்திற்கு ஆவேசமாக புறப்பட்ட தொண்டர்கள், தலைவர்களை போலீசார் கைது செய்து, மயிலாப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.



போலீசாருக்கு, "ஆக்ஷன் ட்ராப்' என்ற உத்தரவு மேலிடத்திலிருந்து வந்தால், கைது செய்யப்பட்டவர்களின் பெயர், விலாசத்தை வெள்ளை பேப்பரில் போலீசார் எழுதுவது வழக்கம். மாறாக, போலீஸ் ரிக்கார்டு புத்தகத்தில் ,பெயரை பதிவு செய்யும் போதே, கைது படலம் தொடருகிறது என தொண்டர்கள் யூகித்து விட்டனர்.


"சிறைக்கு செல்லத் தயாராக வந்தவர்கள் மட்டும், தங்களது பெயரை கொடுக்கலாம், வயதானவர்கள், பெண்கள் சிறைக்கு வரவேண்டாம்' என வைகோ கேட்டுக் கொண்டார். அதன் பின் கட்சியின் பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, மாவட்டச்செயலர்கள் மணிமாறன், செங்குட்டுவன், ஜீவன், சோமு, கவுன்சிலர் பூவை கந்தன் உட்பட 160 பேர் சிறைக்கு செல்ல பெயரை கொடுத்தனர்.



சிறை செல்ல விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, தலா ஒரு துண்டு, பற்பசை, பிரஷ், சோப்பு ஆகிய பொருட்களை வைகோ வழங்கினார். அவர்களை 15 நாள் சிறைக்காவலில் வைக்க, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் மலர்விழி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களை தனித்தனிச் சிறைகளில் அடைக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இத்தகவல் வைகோவுக்கு தெரியவந்ததும், "அனைவரையும் ஒரே சிறையில் தான் அடைக்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்தார்.



போலீசாருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை கடைப்பிடித்ததால், புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அனைவரும், நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். ஏற்கனவே 26 முறை சிறை சென்ற அனுபவம் வைகோவிற்கு இருந்தாலும், பழமை வாய்ந்த கடலூர் சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டது முதல்முறை.



தனது அரசியல் வாழ்வில், 1,400 நாட்கள் சிறையில் இருந்துள்ள வைகோவிற்கு, கடலூர் சிறைவாசம் 27வது சிறைவாசமாக மாறியுள்ளது. அதிகாலையில், "வாக்கிங்'கில் துவங்கி, மரத்தடியில் கருத்தரங்கம், சொற்பொழிவு கூட்டங்கள் என கலகலப்பாக இருந்துள்ளனர் கைதானவர்கள். மற்ற கைதிகளைப்போல், வரிசையில் நின்று வைகோ உணவு வாங்கிச் சாப்பிட்டதை பெருமையோடு சொல்கின்றனர். ம.தி.மு.க., தொண்டர்கள்.

 


இந்த சிறையில், 24 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பாரதியாரின் நினைவு சிறைக்கூடத்தை வைகோ பார்வையிட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் பலர், தங்களுடைய குறைகளை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இத்தகவவல் சிறையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு தெரியவந்தது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கட்சியினரிடம், அந்த போலீஸ் அதிகாரி பேசும்போது, "சிறையில் குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்; நிறை இருந்தால் வெளியில் சொல்லுங்கள்' என சிரித்துக் கொண்டே வழி அனுப்பி வைத்துள்ளார்.