தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இரத்தக் காட்டேரியால் பொட்டல் காடாக மாறிய 'அயர்னப்பள்ளி'

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழி தெரியும். கரும்புள்ளியாய்
உருவாகி சுழன்றடித்துச் செல்லும் சூறைக்காற்று கொத்துக் கொத்தாய் உயிரை
பலிவாங்கும் என்ற அதிர்ச்சி தகவல் குலை நடுங்க வைக்கிறது. பீதி கிளப்பும்
இந்த கிராமத்தின் பெயர் அயர்னப்பள்ளி. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி
அருகே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெரிய நகரமாக
இருந்திருக்கிறது.


ஆட்சி செய்த சிறு மன்னர்களின் தலைநகரமாகவும் விளங்கியதாக சொல்கிறார்கள்.
சிதிலமடைந்த நிலையில் இங்கு இருக்கும் அரண்மனைகள் சாட்சி. "இங்க ஒரு
காலத்துல காட்டேரி நடமாட்டம் இருந்திச்சாமே? "ஒரு காலத்துல என்ன?
இப்பக்கூட இருக்கு என்று ஆரம்பத்திலேயே திகிலை கிளப்பிவிட்டு சொல்ல
ஆரம்பிக்கிறார். இப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர்... "இந்த பகுதி
ராஜாவோட அரண்மனை அயர்னப்பள்ளியிலதான் இருந்திச்சு.


மூன்றரை அடி அகலம் கொண்ட ராட்சத மதில் சுவர், அரண்மணையை சுத்தி வீடுகள்,
அருகே திம்மராயசுவாமி கோயில், சாக்கியம்மா கோயில்னு எந்நேரமும்
ஜனநடமாட்டத்தோட இருந்த ஊர் இது. ராஜா தலைமையில கோயில் திருவிழா கோலாகலமா
நடக்கும். நாகேந்திரபட்டினம், சிகரநாயக்கனப்பள்ளி, சாலப்பள்ளி, போடூர்னு
சுத்துவட்டாரத்துல இருக்கிற 7 கிராமத்திலேர்ந்தும் மக்கள் வருவாங்க. ஊர்
ஜேஜேனு இருக்கும். யார் கண்ணு பட்டுதோ தெரியல. கெட்ட சக்தி ஒண்ணு
திடீர்னு ஊருக்குள்ள புகுந்திச்சி.


ஒருநாள் பட்டப்பகல் ஒரு மணி இருக்கும். ஊரே அதிரும்படி பயங்கர சத்தம்.
புழுதிய கிளப்பிக்கிட்டு பூமிக்கும் வானத்துக்குமா நிக்கிற உருவம் ஒண்ணு
மின்னல் போல இங்கும் அங்கும் பறந்திச்சு. தலைமுடியை விரிச்சு போட்டு ஒரு
ராட்சதன் சிரிக்கிற மாதிரி பயங்கர உருவம். ஈட்டி போல கூர்மையான பல். அந்த
புழுதி கடந்துபோன வழித்தடத்துல இருந்த ஆம்பள, பொம்பள, குழந்தைங்க,
வயசானவங்க எல்லாரும் குடம்குடமா வாந்தி எடுத்தாங்க. வயிறே காலியாகி ரத்த
வாந்தி எடுத்து எல்லாரும் கொஞ்ச நேரத்துல கண்ணு சொருகி செத்துப்
போய்ட்டாங்க.


கண்ணெதிர்ல ஜனங்க செத்து விழுந்தத பாத்து மக்கள் ரொம்ப ஆடிப்போய்ட்டாங்க.
அன்னைக்கி சாயந்திரம் 6 மணி. புழுதிப்புயல் திரும்பவும் வந்திச்சு.
இப்பவும் அது போன பாதையில இருந்த எல்லாரும் சுருண்டு விழுந்தாங்க.
நள்ளிரவு 12 மணிக்கு திரும்பவும் புயல். அன்னிக்கு ஆரம்பிச்சதுதான்.
தினமும் மூணு வேளையும் அது வர ஆரம்பிச்சுது. என்ன நடக்குது? இது யாரோட
வேலை? ராட்சத உருவத்துல பறந்து போறது பேயா, மோகினியா? யாருக்கும் தெரியல.
ஊர் முக்கியஸ்தங்க அவசர அவசரமா கோயில்ல உக்காந்து பேசினாங்க.


காட்டேரிதான் புயல் வடிவம் எடுத்து வருதுனு முடிவு பண்ணாங்க. கொத்துக்
கொத்தா பலர் செத்து விழுந்தாங்க. ஊர் மக்கள்தொகை கிடுகிடுனு கொறஞ்சிது.
வெளியூர் மக்கள் வர பயப்பட்டாங்க. ஊர் மக்களும் குழந்தை, குட்டிங்க,
மூட்டை, முடிச்சு, ஆடு, மாடுகளோட ஊரை காலி பண்ணினாங்க. ராஜா வம்சமும்
அழிஞ்சுபோச்சு.


கொஞ்ச நாள்லயே 200க்கும் அதிகமானவங்க இறந்தாங்க. வீராப்புக்கு ஒண்ணு
ரெண்டு குடும்பம் மட்டும் அதே ஊர்ல இருந்திச்சு. புயல் வர்றதுக்கு
முன்னாடியே கதவை சாத்திட்டு அவங்களும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சிடுவாங்க.
காலப்போக்குல அயர்னப்பள்ளி நகரம் இருந்ததுக்கான தடயமே இல்லாத நிலை
ஏற்பட்டிச்சி... என்று பழைய பயங்கரத்தை விவரிக்கின்றனர் இப்பகுதியினர்.


இந்த ஊரில் இருந்தவர்களது பேரன், கொள்ளுப் பேரன் வகையறாக்கள் சிலர் அருகே
உள்ள உத்தனப்பள்ளி, அலேசிபம் பகுதிகளில் வசிக்கின்றனர். காட்டேரிப் புயல்
பற்றி திம்மராயசுவாமி, சாக்கியம்மா கோயில் பூசாரி வம்சத்தை சேர்ந்த
சீனிவாசன் (50) சொல்கிறார்... "அயர்னப்பள்ளியில நடந்த சம்பவங்களை என்
தாத்தா, அப்பா சொல்லியிருக்காங்க. கேட்கும்போதே குலைநடுங்கும். சொன்னா
அதிர்ச்சி அடைவீங்க. அந்த காட்டேரி இப்பக்கூட இருக்கு.


அயர்னப்பள்ளியில நூறாண்டு பழைய புளியமரம் இருக்கு. அதுலதான் அந்த
காட்டேரி இருக்கு. மதியம் 1 மணி, மாலை 6 மணி, நடுராத்திரி 12 மணிக்கு
இப்பவும் அது ரத்த வெறியோட சுத்திக்கிட்டிருக்கு. காட்டேரி பத்தி விஷயம்
தெரிஞ்ச யாரும் கோடி ரூபாய் கொடுத்தாக்கூட அந்த நேரத்துல ஊருக்குள்ள
போகமாட்டாங்க. விவரம் தெரியாம யாராச்சும் போய்ட்டா, உயிரோட திரும்புறது
கஷ்டம்தான். மூதாதையர் வாழ்ந்த இடம் பொட்டல் காடா இருக்கு. மழைக்காலத்துல
மட்டும் விவசாயம் நடக்குது.


தினமும் இந்த மூணு நேரமும் வேலையை அப்பப்படியே போட்டுட்டு எல்லாரும்
வெளியேறிடுவாங்க. கொலைவெறி காட்டேரி நடமாட்டம் அடங்கின அப்புறம்
திரும்பவும் வேலைய ஆரம்பிப்பாங்க. மூச்சு வாங்க அவர் சொல்லி
முடிக்கும்போது மணி மதியம் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. "காட்டேரி
வர்ற நேரம். கிளம்புறேன் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் விடுவிடுவென
புறப்பட்டார்.