தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வீரப்பனுக்கு பின் சத்தியமங்கலம்!

கி.மு., கி.பி. என்பதைப் போல சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வீ.மு.,
வீ.பி. என்றால்தான் பொருத்தமாக இருக்கும். அதாவது வீரப்பனுக்கு முன்,
வீரப்பனுக்குப் பின்!

சில்லென்ற சீதோஷ்ணம், அடர் மலைகள், பச்சை வனம், காதுக்கினிய பறவைகளின்
ரீங்காரம்... இப்படி அழகும் ஆபத்தும் நிறைந்த வீரப்பனின் சாம்ராஜ்யமாக
திகழ்ந்த சத்தியமங்கலம் இப்போது எப்படி இருக்கிறது?

ஈரோடு, தர்மபுரி, சேலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள்
வழியாக தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களை இணைக்கும் வகையில் மேற்குத்
தொடர்ச்சி மலையின் மையப் பகுதியில் உள்ளது சத்தியமங்கலம். இதில் 6
ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தமிழகத்தில் உள்ளது. இங்குள்ள சுமார்
120 மலை கிராமங்களில் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2008&ம் ஆண்டு தமிழக அரசு சத்தியமங்கலம் வனப்
பகுதியில் 524 சதுர கிலோ மீட்டரில் உள்ள மாயாறுப் பள்ளத்தாக்கு,
தெங்குமரடா, மங்களபட்டி, காளிதிம்பம் உள்ளிட்ட பகுதிகளை வனச் சரணாலயமாக
அறிவித்துள்ளது. இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சுற்றுலாத் தலமாய்
அவதாரம் எடுத்துவருகிறது சத்தியமங்கலம்.

வீரப்பனுக்குப் பிறகான சத்தியமங்கலத்தின் சத்தியமான நிலையை அறிந்துகொள்ள
அங்கே புறப்பட்டோம். ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள
சத்தியமங்கலத்திலிருந்து மலைப் பாதை வழியாக ஆசனூரை அடைந்தோம்.
கெத்தேசால் வன குழு தலைவர் ஜடையனிடம் பேசினோம்.

''வீரப்பன் இருந்த சமயத்தில் நாங்கள் அவனுக்கு பயந்து வீட்டை விட்டு
வெளியே வர முடியாத நிலை இருந்தது. அவனுக்கு பயந்ததை விட அதிரடிப் படை
மீதுதான் பயம் அதிகம். இதனால் இங்கே நடமாட்டமே குறைவுதான். இந்த மலைப்
பகுதிக்கு யாருமே வராததால் 1 ஏக்கர் நிலம் 1 லட்சத்துக்கு குறைவாகத்தான்
விலை போனது.

ஆனால் வீரப்பன் இறந்த பின் எங்கள் நிலைமையே மாறிவிட்டது. அதுவும் கலைஞர்
ஆட்சிக்கு வந்த பின் மழைவாழ் மக்களுக்கு கிராம குழுக்கள் ஆரம்பித்தனர்.
இந்தக் குழுவை சேர்ந்த பெண்கள் சீமாறு பின்னுவது, காட்டுக்குள் சென்று
கடுக்காய், நெல்லிக்காய் பறிப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர்.

வனத்துறை சார்பில் எங்களுக்கு விவசாய லோன் கொடுக்கிறார்கள். பொதுவாக
இயற்கை விவசாயத்தை மட்டுமே இங்குள்ளவர்கள் பயன்படுத்துவதால் இங்கு
விளையும் காய்கறிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும்,
கர்நாடகாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இங்குள்ள வனச் சரணாலயத்தைப்
பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எங்கள் பகுதியில் தங்குவதால் தற்போது
பொருளாதாரம் சிறிது உயர்ந்துள்ளது. இவ்வளவு இருந்தும் சட்டமன்ற
உறுப்பினர் தொகுதி நிதி இன்னும் எங்கள் பகுதிக்கு கிடைக்காமல் உள்ளது.
அது போன்ற நிதி உதவிகள் கிடைத்தால் இந்த பகுதியின் அடிப்படை வசதிகளை
இன்னும் பலப்படுத்த முடியும்'' என்றார். அடுத்ததாக நம்மிடம் பேசிய பிரபு
மற்றும் சண்முகமும், ''வீரப்பனை நாங்கள் பார்த்ததே கிடையாது. ஆனால் அவனது
ஆட்களுக்கு நாங்கள் உணவு பொருட்கள் கொடுத்ததாக அதிரடிப் படையினர்
எங்களை கைது செய்தனர். எங்களைப் போல காரணமே இல்லாமல் இது போன்ற
சித்ரவதைகளை ஏராளமானோர் அனுபவித்தனர். ஆடு மேய்க்க காட்டுக்குச்
சென்றால் அவர்களைக் கொன்றுவிட்டு வீரப்பன் ஆட்கள் இறந்தது போல அதிரடிப்
படையினர் ஜோடித்து விடுவார்கள். அதிலிருந்து இப்போதுதான் மெல்ல மெல்ல
விடுபட்டு வருகிறோம்.

ஆனால் சுற்றுலாத் துறை சார்பில் விலங்குகளைப் பார்க்க வனத்துறை சார்பில்
அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்துக்குச் செல்லும் வழித் தடம்
பராமரிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அங்கும் செல்லமுடியவில்லை. இதைச்
சரிசெய்து கொடுத்தால் பொது மக்களின் வருகையும் அதிகரிக்கும், எங்கள்
நிலையும் சிறிது உயரும்'' என்றனர்.

வனச் சரணாலயம் தொடர்பான சத்தியமங்கலம் வன அதிகாரி ராமசுப்பிரமணியனிடம் பேசினோம்.

''சத்தியமங்கலம் வனப்பகுதியை தமிழக அரசு வனச் சரணாலயமாக அறிவித்ததை
அடுத்து, விலங்குகளைப் பாதுகாக்க சுமார் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது. இதைக் கொண்டு வனக் குட்டைகள் அமைப்பது, யானைகளுக்கு
மருந்துகள் கொடுக்க, கிராமப்புறத்தில் உள்ள கால்நடைகள் மூலமாக வன
விலங்குகளுக்கு நோய் பராவாமல் தடுக்க அவற்றுக்கு மருந்து கொடுப்பது
போன்ற பணிகள் மேற்கொள்ளபட்டது. தற்போது இந்த ஆண்டுக்கான நிதி
கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்த உடன் இந்தப் பணிகள் நடைபெறும்.
வனப் பகுதிக்குள் மக்களின் நடமாட்டம் குறைந்தால் மட்டுமே வன விலங்குகள்
அதன் இருப்பிடத்தை மாற்றாமல் இருக்கும். வீரப்பன் மறைவுக்கு பிறகு
யானைகள் இறப்பு குறைந்துள்ளது. தற்போது அதிரடிப் படையினர் எங்களோடு
இணைந்து செயல்படுவதால் வனக் குற்றங்கள் அதிகளவு தடுக்கபட்டுள்ளன. இதற்காக
ராமரனை, இரட்டே, தடசலட்டி, பெஜலட்டி உள்பட 70 இடங்களில் கடத்தலை
கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்-பட்டுள்ளனர்.

இங்கிருக்கும் மழைவாழ் மக்களுக்கு தேவையான வேலை-வாய்ப்புகளை அரசே செய்து
கொடுப்பதால் அவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர்.
தட்டவாடி, குமட்டாபுரம், கேர்மாளம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள
கண்காணிப்பு கோபுரங்களை தற்போது மக்களின் வசதிக்காக திறந்து
வைத்துள்ளோம். இங்கு செல்லும் பாதை சற்று கடினமாக இருந்தாலும்
பாதுகாப்பு கருதி அங்கு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. ஆனால் அரசு அனுமதி
கொடுத்தால் அங்கு நிச்சயம் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளபடும்.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஆசனூரில் இரண்டு டென்ட் அமைக்கபட்டுள்ளது.
தேவை அதிகரித்தால் அங்கு கூடுதல் டென்ட் அமைக்கப்படும்'' என்றார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சூறையாடப்பட்ட
மலை மக்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்குமான இழப்பீடு இன்னும் மலை
மக்களுக்கு முழுதாக சென்றடையவில்லை என்ற கூப்பாடும் மலைக் காற்றில்
கலந்திருக்கிறது.