முடியாதபடி... வந்துகொண்டே இருக்கின்றன போலிகள். அதிலும் அனைத்தையும்
சரிப்படுத்த வேண்டிய கல்வி உலகத்தையே 'போலி மதிப்பெண் சான்றிதழ்
கும்பல்' கரையானாக அரிக்க ஆரம்பித்துவிட்டதுதான் காலக் கொடுமை.
எப்படி சிக்கினர் போலிகள்?
மருத்துவ, பொறியியல் சீட் கவுன்சிலிங் நடப்பதால் இரண்டு வாரங்களாக
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் சில மாணவர்களின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த பல்கலைக்கழக
அதிகாரிகளுக்கு மூக்கு வேர்த்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம் போன்ற
மொழிப் பாடங்களில் மிகக் குறைந்த பாஸ் மார்க் வாங்கியவர்கள்... 'கீ
சப்ஜெக்டுகள்' எனப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற
பாடங்களில் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தனர். இதில் சந்தேகம் முட்ட,
அந்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அடங்கிய சி.டி.யை தேர்வுத் துறை
இயக்குனகரத்திலிருந்து வாங்கி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்
அதிகாரிகள்.
அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சி.டி.யில் இருந்த
மதிப்பெண் பட்டியலை விட அம்மாணவர்கள் கொண்டுவந்த மதிப்பெண் பட்டியலில்
மார்க்குகள் அதிகம் இருந்தன.
இந்த வகையில் சுமார் 51 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் போலி என
தெரியவந்திருக்கிறது. மேலும் அதிர்ச்சி என்னவென்றால், மருத்துவ
கவுன்சிலிங்கின்போது போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்த பத்து
மாணவர்களில் ஒன்பது பேர் மாணவிகள்.
''கவுன்சிலிங் ரேங்க்கில் முன்வரிசை, விரும்பிய படிப்பு, டாப் டென்
கல்லூரியில் இடம் போன்றவற்றை அடைய, வாங்கிய மார்க்குகளை விட ஒரு சில
மார்க்குகள் அதிகம் பெற வேண்டியிருக்கிறது. இந்த போட்டியை சமாளிக்க
முடியாத சில பெற்றோர்கள்தான் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும்
ஏஜன்ட்டுகளை நாடி தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதாக நினைத்து
உலைவைத்துவிட்டனர்' என்கிறார்கள் பல்கலைக்கழக வட்டாரத்தில்.
போலீஸாரின் பிடியில் சிக்கிய மாணவிகள், ''எங்களுக்கு ஒன்றும் தெரியாது.
எங்களை கைது செய்துவிடாதீர்கள்'' என்று கதறி அழுதுள்ளனர். அவர்களின்
நிலையை உணர்ந்த போலீஸார் பெற்றோரிடம் விசாரித்தபோதுதான் போலி
மதிப்பெண் ஏஜென்ட்டுகளான திருவேங்கடம், ஏகாம்பரம் ஆகியோரைக் கைது
செய்துள்ளனர்.
திருவேங்கடம் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவித் தலைமை
ஆசிரியர். அவரைப் பொறிவைத்து பிடித்த போலீஸார் அவரை வைத்துக் கொண்டு
முக்கிய குற்றவாளியான கல்லூரிக் கல்வி இயக்குனரக ஆவணப் பிரிவு எழுத்தர்
ஏகாம்பரத்தை மடக்கினர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள
ஏகாம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தியதில் தயாரித்து தயாராக
வைக்கப்பட்டிருந்த 48 போலி மதிப்பெண் பட்டியல் சிக்கியது. மேலும் போலி
மதிப்பெண் பட்டியல் தயாரிக்கத் தேவையான அனைத்து விதமான ஆவணங்கள்,
முத்திரைகள், ஹாலோகிராம் ஆகியவையும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் திருவேங்கடத்தின் பங்கு முக்கியம். இவருக்கு தமிழகத்தின் வடக்கில்
இருந்து தெற்கு வரை நெட்வொர்க். அதற்கு அவருக்கு உதவியது புனிதமான
ஆசிரியர் பணி. தனக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் ஆட்கள்
இருக்கிறார்கள் என்று பெற்றோரிடம் வலை விரிப்பது இவரின் பாணி.
மாணவர்களின் வசதிக்கு ஏற்ப 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை
கட்டணம் கைமாறியுள்ளது. குறிப்பாக மருத்துவ படிப்பு என்றால் அதற்கு
ரிஸ்க் அதிகம் என்று சொல்லி பல லட்சங்களை கறந்துள்ளனர். கிடைக்கும்
பணத்தில் 'பிப்டி பிப்டி' என்று பங்கு பிரித்துக் கொண்டனர் ஏகாம்பரமும்,
திருவேங்கடமும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சந்தேகமே வராத வகையில்
சென்னையில் இருந்து அரசு தபால் போலவே கூரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை
அனுப்பி வந்திருக்கிறார்கள் இவர்கள்.
பிடிபட்ட திருவேங்கடம் போலீஸ் விசாரணையில், ''நாங்கள் தரும் மதிப்பெண்
பட்டியல் ஒரிஜினல். நீங்கள் வித்தியாசம் காணமுடியாது. ஏற்கனவே எங்கள்
சான்றிதழ் பெற்றவர்கள் இன்று இந்தியா மற்றும் வெளி-நாடுகளில்
டாக்டர்களாகவும், இன்ஜினியர்-களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்னும் பலர் அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். பலர் ராணுவத்தில்
பணியில் உள்ளனர். இதுவரை அதுபோல எந்தப் பிரச்னையும் வரவில்லை. தமிழகம்
முழுவதும் ஒவ்வொருவர் மூலம் ஆட்களை பிடித்து என்னை வந்து
சந்திப்பார்கள். நாங்கள் உடனே சான்றிதழ் வழங்க மாட்டோம். எங்களுக்கு
நம்பிக்கை வந்தால்தான் சான்றிதழ் அளிப்போம்'' என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர்
நம்மிடம், ''பல்கலைக் கழக ரேங்க்கில் கூடுதல் இடம் பிடிக்க வேண்டும்
என்பதற்காக மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு
விண்ணப்-பித்தவர்-களிடம் உங்களுக்கு மதிப்பெண் பட்டியல் வர
காலதாமதமாகும், நாங்கள் அதிக மதிப்பெண்ணோடு பட்டியல் வாங்கித்
தருகிறோம் என்று சொல்லி பணம் வாங்கியுள்ளனர். போலி மதிப்பெண் பட்டியல்
கொண்டுவந்த மாணவிகளிடம் முழுமையாக விசாரித்துவிட்டோம்.
திருவேங்-கடத்தையும், ஏகாம்பரத்தையும் மீண்டும் விசாரிக்கும்போதே முழுத்
தகவல்கள் தெரியவரும்'' என்றார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹரிடம் பேசினோம்.
''இந்த மதிப்பெண் மோசடியில் சிக்கிய மாணவ, மாணவிகள் அனைவரும் நல்ல
மதிப்பெண் பெற்றவர்கள்தான். ஆனால், குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க
வேண்டிய பெற்றோர், நல்ல கல்லூரி, விரும்பிய பாடங்கள் கிடைக்க இதுபோன்ற
நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய-வந்துள்ளது. தமிழகத்தில் பொறியியல்
தொழிற்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் நிச்சயம் இடம்
கிடைக்கும். எனவே மாணவர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஆர்வம்
காட்டவேண்டாம்'' என்றார்.
திருவேங்கடத்தின் வாக்குமூலப்படி இன்று அரசுப் பணிகளில் உள்ளவர்களை
கணக்கெடுத்தால் இதுபோன்ற ஆயிரக்கணக்கான போலிகள் சிக்குவார்கள்.
அவர்களில் பலர் இன்று ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர். இந்த போலிகளை
'பொலி' போடுமா அரசு?