தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை

தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் 1987 ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் நடக்கும் சூழ்நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். தேர்தலை மனதில் வைத்து சொல்லவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற காத்திருப்போம். இல்லை என்றால் 87 ல் நடைபெற்றது போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எடுத்து சொல்லவே இந்த போராட்டம் நடக்கிறது. வன்னியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கேட்கிறோம்.

அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க போராடியதும் நான்தான். எனவே வன்னியர்களுக்காகவும் போராடுகிறேன். எல்லா மக்களுக்கும் சேர்ந்து போராடுவதால் இது குறுகிய நோக்கம் உடையதாக ஆகாது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது ஜாதி வெறியால் அல்ல. 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்கள். அனைத்து நிலைகளிலும் வன்னியர்கள் பின்தங்கி உள்ளனர்.

1983 ம் ஆண்டு சட்டநாதன் பரிந்துரையை அமுல்படுத்தி இருந்தால் இந்த சமுதாயம் முன்னேறி இருக்கும். இடஒதுக்கீட்டுக்காக 1987 ம் ஆண்டு 7 நாள் தொடர் சாலை மறியல் செய்தோம்.

இந்த போராட்டதை பார்த்து உலகமே அதிசயப்பட்டது. வாகனங்கள் ஓடாததால் சென்னை மக்கள் பதறினார்கள். பின்னர் எம்.ஜி.ஆர். எங்களை அழைத்து பேசினார். அதன்பிறகும் வன்னிய சமுதாயத்துக்கு நீதி கிடைக்கவில்லை.

இப்போதைய முதல்வர் கருணாநிதியும் எங்களுக்காக குரல் கொடுத்தவர்தான். ஆனாலும் வன்னியர்களுக்கு இன்னமும் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. 109 ஜாதிகளுக்கு சேர்த்துதான் இடஒதுக்கீடு உள்ளது.

வன்னியர் பிரச்சினை பற்றி பேச எந்த கட்சி இருக்கு? யாருமே இல்லை. அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு கொடுத்ததுபோல் வன்னியர்களுக்கும் கேட்கிறோம்.

தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் 87 ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் நடக்கும் சூழ்நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். தேர்தலை மனதில் வைத்து சொல்லவில்லை. தேர்தலை 2 ம் பட்சமாக நினைக்கிறோம். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேற காத்திருப்போம். இல்லை என்றால் 87 ல் நடைபெற்றது போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு நடத்துவோம் என்று எச்சரித்தார் ராமதாஸ்.