கழகத்துக்கு கடிதம் கொடுத்தால், கலியபெருமாளை பார்க்க வேண்டும்
என்றார்கள். அவரைப் பார்த்தால், நாமக்கல் டி.எஸ்.பி.யை பாருங்கள்
என்றார்கள். அங்கே போனால், 'இந்த பதவிகளுக்கு எவ்வளவு பணம் தருவீங்க?'
என்று கேட்கிறார். உலகத்திலேயே ஒரு கட்சியோட பதவியை நியமிக்கிற
அதிகாரத்தை டி.எஸ்.பி.யிடம் கொடுத்திருக்கிற கொடுமை அ.திமு.க.வைத் தவிர
வேற எங்காச்சும் நடக்குமா?'' & சில வாரங்களுக்கு முன்பாக முன்னாள்
அமைச்சர் கரூர் சின்னசாமி சொன்ன வார்த்தைகள் இவை.
அந்த டி.எஸ்.பி. வேறு யாருமில்லை. சமீபத்தில் ஓன்றரை லட்சம் ரூபாய்
லஞ்சம் வாங்கி, சிக்கிக் கொண்ட நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன்தான்.
யாரிந்த சீனிவாசன்? 1972ம் ஆண்டு கிரேடு ஒன் காவலர். 1985ம் ஆண்டு
எஸ்.ஐ.யானார். திடீரென கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, 'என் பெற்றோர்
எனது வயதை அதிகமாகக் காட்டிவிட்டார்கள். எனவே, வயதைக் குறைக்க வேண்டும்'
என்று வயதை மாற்றிக் கொண்டார். எல்லா விஷயத்திலும் கில்லாடி.
மன்னார்குடி வகையறாக்களின் உறவினர் என்று சொல்லி, 1991 முதல் 96 வரை
எக்கச்சக்க ஆட்டம். அந்த ஆட்டத்தின் கடைசி இன்னிங்ஸ் முடிய இன்னும்
ஒன்பது மாதங்களே இருந்தது. அதற்குள் சிக்கிக் கொண்டார் சீனிவாசன்.
லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் பேசியபோது ''நாகப்பட்டினம் மாவட்டத்தைச்
சேர்ந்த ஆரோக்கியசாமி, மோகனூருக்கு பக்கத்தில இரண்டு கோழிப் பண்ணை
வைச்சிருக்கார். அவருக்கு லோன் வாங்கி தர்றதுக்கு உதவியா இருந்த ஷேக்
நவீத் (ராசிபுரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராணியின் பி.ஏ.) தன்னையும்
கோழி பண்ணையில், ஒரு பார்ட்னராக சேர்த்துக்க சொல்லியிருக்கார்.
ஆரோக்கியசாமியும் சேத்துக்கிட்டாரு.
ஒரு கட்டத்துல ஷேக் நவீத், பண்ணையில எனக்கு சரி பாதி பங்கு இருக்குன்னு
கோர்ட்ல கேஸ் போட்டிருக்கார். மேலும் ஆரோக்கியசாமியை மிரட்டி
வைக்கணுமுன்னு நினைச்சி, அவரோட இரண்டு பண்ணையில இருந்த 85 ஆயிரம்
கோழிகளை ஜூலை 6&ந் தேதி தனது நண்பர்கள் ரவி, சண்முகம் மூலமா
கடத்தியிருக்கார் ஷேக் நவீத். இந்த தகவலை கேள்விப்பட்ட டி.எஸ்.பி.
சீனிவாசன் லாரியை மடக்கி மீட்டுக் கொடுத்து, ஷேக் நவீத் குரூப் மேல கேஸ்
போட்டுட்டார். கேஸ் போடாமல் வெளிய வர ஷேக் குரூப், டி.எஸ்.பி.கிட்ட
பேரம் பேசினாங்க. முதல்ல அவரு கேட்ட ஒரு லட்சத்தை ஜூலை 7&ந் தேதி தனது
நண்பர் சண்முகம் மூலமா, ஷேக் கொடுத்துட்டார். காசு பத்தாதுன்னு சொல்லி
மறுபடியும் 50 ஆயிரம் ரூபாயை வாங்கியிருக்காரு டி.எஸ்.பி.
மறுபடியும் ஒன்றரை லட்சத்தை ஜூலை 10&ந் தேதி கேட்டிருக்காரு. அதுக்கு
பிறகுதான் ஷேக் குரூப் எங்ககிட்ட புகார் கொடுத்தாங்க. ஷேக்கின் நண்பர்
சண்முகம் கூடவே நாங்களும் போனோம். சண்முகம் பணம் கொடுக்கும்போது
அதிரடியா டி.எஸ்.பி. வீட்டுல புகுந்து அவரை கைது செஞ்சோம். வீட்டுல பல
கோடி பெறுமானமுள்ள டாக்குமெண்ட் கிடைச்சிருக்கு. அத பத்தி எல்லாம் இப்ப
சொல்லமுடியாது'' என்றார்கள்.
'டி.எஸ்.பி. சிக்கிக் கொண்டதுக்கு காரணமே வேற' என்று
கிசுகிசுக்கிறார்கள் சில காவல்துறை அதிகாரிகள். அவர்களிடம் பேசியபோது
''அ.தி.மு.க ஆட்சியில இவரோட பவரே தனி. 'அ.தி.மு.க.வுல சசிகலாவும்,
தி.மு.க.வுல பழனி மாணிக்கமும் எனக்கு நெருங்கின சொந்தம்' என்று
சொல்லிக் கொண்டு மேலதிகாரிகளுக்கே டிரான்ஸ்பர் விசயத்தை கச்சிதமா
செஞ்சி கொடுப்பாரு.
இப்படி யோகமா வாழ்ந்த இவருக்கு நாமக்கல் எஸ்.பி.யாக பாரி வந்ததும்
நெருக்கடி ஆரம்பமாச்சு. அ.தி.மு.க. கட்சி பதவிக்கு நடக்கும் எல்லா
பஞ்சாயத்தையும் சீனிவாசன் தன்னோட ஆபீஸ்ல வச்சு பேசறாருன்னு ஏகபட்ட
புகார். அதுபற்றி எஸ்.பி. கேட்டப்ப, அவரை அலட்சியப்படுத்தி பதில்
சொன்னாரு. மத்திய அமைச்சர் காந்தி செல்வன் பாதுகாப்பு விஷயமும்
சீனிவாசன் கையிலதான் இருந்தது. சரியான நேரத்துக்கு காவலர்களை
அனுப்பாததால், அமைச்சருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எல்லமுமாகச்
சேர்ந்து இப்ப லஞ்ச வழக்கு வடிவில் சிக்கிக்கொண்டார்'' என்றார்கள்.
சீனிவாசன் சிக்கிக் கொண்டதுமே, அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பட்டாசு
வெடிக்காத குறைதான். அ.தி.மு.க.வினர் சிலரிடம் பேசிய போது ''கரூர்,
சேலம், நாமக்கல், தருமபுரின்னு இந்த நாலு மாவட்டத்திலயும் கரை வேட்டி
கட்டாத கட்சிக்காரர் போல சீனிவாசன் வலம் வந்தாரு. அ.தி.மு.க. மண்டலத்
தலைவர் கலியபெருமாள் மருமகன், இவரோட சொந்த அண்ணன் மகன்தான்.
கலியபெருமாளை யார் போய் பார்த்தாலும், அவரு அடுத்த நிமிடமே சொல்ற
வார்த்தை 'நாமக்கல் போலீஸ் அதிகாரிய கான்டாக்ட் பண்ணுங்க'என்பதுதான்.
இவரைப் போய் பார்த்தா, இந்த பதவிக்கு இவ்வளவு விலைன்னு சொல்லுவாரு.
அந்த விலைய பாத்து பல பேரு மலைச்சி போயிருக்காங்க.
இவரைப் பத்தி கேள்விப்பட்ட பல ஒன்றிய, நகர நிர்வாகிகள் தனியாகவே
சந்தித்து பதவிக்கு பண பேரம் பேசுவாங்க. அப்படி பல பேரு இவருகிட்ட பணத்தை
கொடுத்திட்டு அல்லாடிய கதையும் உண்டு. புரட்சித் தலைவரு இயக்கத்துக்கு
துரோகம் செஞ்சவங்களை அவரோட ஆன்மா சும்மா விடாதுன்னு போன வாரந்தான்
ஓ.பி.எஸ். நாமக்கல்ல பேசிட்டு போனாரு. ஆன்மா வேலை செய்ய
ஆரம்பிச்சிடுச்சி'' என்றனர் அ.தி.மு.க.வினர்.
சீனிவாசன் தரப்பினரோ ''இது அவருக்கு தெரியாமலேயே பின்னப்பட்ட சூழ்ச்சி
வலை. அதில் அவர் சிக்கிகொண்டார். அவருக்கு எதிராக சிலர் திட்டம் போட்டு
இதை செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க கட்சி விவகாரத்திலும் அவரை அளவுக்கு
மீறி சம்மந்தப்படுத்துகிறார்கள். அவர் ஜாமீனில் வெளியே வந்ததும்
கண்டிப்பாக உண்மை வெளியுலகுக்கு தெரியும்'' என்று அடித்து பேசுகிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்ததுமே, தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி,
நாமக்கல் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகிவிட்டார் சீனிவாசன். இவரது
வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சில முக்கிய வி.ஐ.பி.களுக்கு இவர்
பினாமியாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில் இன்னும் பல
அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.