வனத்துறையின் சுலோகன். ஆனால், ஆயிரக்கணக்கான மரங்களையும், மூலிகைகளையும்
வனத்துறை அதிகாரிகள் உதவியோடு வெட்டிச் சாய்த்துவருகின்றன சில
சமூகவிரோதி கும்பல்கள்.
& இப்படி ஒரு தகவல் கல்வராயன் மலையிலிருந்து வந்து நம் காதைத் தொட,
கல்வராயன் மலைக்கே விரைந்தோம்.
மலைப் பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து புகைந்து-கொண்டிருந்தது. அவற்றை
நம்மிடம் காட்டிய ஒரு ஜே.சி.பி. டிரைவர் பேசத் தொடங்கினார்.
''வேலையிருக்குன்னு சொல்லி சில பேரு என்னை மலைக்கு கூப்பிட்டாங்க.
வண்டியோடு வந்தேன். கூட்டிக்கிட்டு போய் நிலத்தை திருத்தணும்னு ஒரு மலை
குன்றைக் காட்டினாங்க. 'பாரஸ்ட் கார்டு வந்தா எங்கள
பிடிச்சிடுவாங்களேய்யா'ன்னு கேட்டேன். ஆனா, 'அவங்க வரமாட்டாங்க, நீ
ஓட்டு'ன்னு சொன்னாங்க. நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு வண்டி
ஓட்டிக்கிட்டு இருக்கும்போதே பாரஸ்ட் கார்டு வந்து வண்டியப்
பிடிச்சிட்டார். நான் வண்டிய விட்ருங்கன்னு கெஞ்சிக் கேட்டேன். ஆனா
அவரோ, இருபதாயிரம் பணம் கொடுத்தாதான் வண்டிய எடுக்க முடியும்னு
சொல்லிட்டார். க்ளீனரை அங்கயே விட்டுட்டு பணத்த ரெடி பண்ணி பாரஸ்ட்
கார்டுகிட்ட கொடுத்துட்டுதான் வண்டிய எடுத்துட்டு வந்தேன்.
அதுக்குப் பிறகு விசாரிச்சிப் பார்த்தப்பதான் மலையில வாழற சிலரே மலையில
இருக்குற மரங்கள் அடியில தீ வச்சி கொளுத்திடறாங்க அப்படிங்குற விசயம்
தெரியவந்துச்சு. தீ வச்சிட்டா அந்த மரம் செத்துப் போயிடும். மரத்த
வெட்டி காயப் போட்டுட்டு, மீதி இருக்கிற செடிகளயும் தீ வச்சி
கொளுத்திடுவாங்க. மறுபடி அங்க கெடக்குற கல்லை எல்லாம் பொறுக்கிப்
போட்டுட்டு அத அப்படியே விவசாயம் செய்யற நிலமா மாத்திடறாங்க. வெட்டிப்
போட்ட மரங்களை சேலம் மாதிரி ஊர்களுக்குக் கொண்டு போயி ஆயிரக்கணக்குல
வித்துக் காசாக்கிடறாங்க. வனத்துறை அதிகாரிங்களுக்கு அதுல கணிசமான
தொகையை ஒதுக்கிடறாங்க.
கல்வராயன் மலையில இருக்கிற பெரும்பாலான கிராமங்களில் வனத்தை அழிச்சி
விவசாய நிலமா மாத்தற அட்டூழியம் நடக்குது. மலையில அங்கங்கே புகையுற
காரணம் இப்ப புரியுதா?'' எனக் கேட்ட அந்த டிரைவர், ''வனத்துறை
அதிகாரிகளோட தொடர்பு வச்சிருக்கற சிலர்தான் இப்படி காட்டை
அழிக்கிறாங்க. இதனால தேக்கு, வேம்பு, கருங்காலி போன்ற மரங்களும் பல
மூலிகை செடிகளும் நாசமாகுது. வனத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே,
இப்படி அரசாங்க சொத்த அபகரிக்கிற காரியத்துக்கு துணை போறாங்க.
அப்பப்போ என்னை மாதிரி ஆளுங்களையும் மடக்கி பணம் பிடுங்குறாங்க'' என்று
அதிர்ச்சியாக முடித்தார்.
தாழ் வெள்ளார் என்ற பகுதியில் எதிர்ப்பட்ட வெங்கடேஷிடம் இந்த விஷயத்தைப்
பற்றி பேச்சுக் கொடுத்தோம்.
''பாரஸ்ட் கார்டுங்க அப்பப்ப வந்து, வேண்டிய பணத்தை வாங்கிட்டு
போயிடுவாங்க சார். இப்படி காடு பிடிக்கிறவங்க எல்லாம் ஊர்ல பெரிய
மனிதர்களா இருக்கிறவங்கதான். வனத்துறைக்கு கொஞ்சம் பணத்தை
வெட்டினீங்கன்னா இப்பவே நீங்க கூட நாலு மரத்தை வெட்டிக்கிட்டுப்
போகலாம்'' என்றார் சாதாரணமாக.
மேல் வெள்ளார் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி நம்மிடம் ''இந்த மலையில பாதிப்
பகுதி விழுப்புரம் வனத்துறை கட்டுப்பாட்டிலும், மீதிப் பகுதி சேலம்
வனத்துறை கட்டுப்பாட்டிலும் வரும். ஆனா, இரு மாவட்ட அதிகாரிகளும் லஞ்சம்
வாங்குறத்துல பேதம் பாக்கறதில்லை. அதனாலதான் இப்படி வனத்தை அழிச்சி நிலமா
உருவாக்குறாங்க. தொடர்ந்து மூணு வருஷம் விவசாயம் பண்ணிகிட்டு இருந்தா
அப்புறம் எப்படியாவது பட்டா வாங்கிடலாம். இதுதான் அந்த ஆளுங்களோட
ஐடியா'' என்றார்.
நேர்மையான வனத்துறை அதிகாரிகள் சிலரை மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம்
கண்டு பேசிய போது ''இந்த மலைப் பகுதி மட்டுமில்லை... கொல்லிமலை,
பச்சைமலை, சேர்வராயன் மலை என எல்லா இடங்களிலும் இப்படி வனத்தை அழித்து
விவசாய நிலமாக மாற்றும் விபரீதம் நடந்துவருகிறது. கிராம முக்கியஸ்தர்களாக
இருப்பவர்கள்தான் இப்படி ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலரை நாங்கள்
பிடித்துச் சென்றாலும், சில எம்.எல்.ஏ.க்கள், உயரதிகாரிகள் எல்லாம்
அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? வனங்களை
நிலத்துக்காக இப்படி அழிப்பதால்தான் காட்டு விலங்குகள் மக்கள் வாழும்
பகுதிகளுக்குள் வருகின்றன. இப்படி வனத்தை அழிப்பது நமது எதிர்கால
சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்'' என்றனர் கவலையாய்.
கயவர்களால் கல்வராயன் மலை வனம் அழியும் அவலத்தை வனத்துறை அமைச்சர்
செல்வராஜின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ''நீங்கள் சொல்லித்தான்
இந்த விஷயம் என் கவனத்துக்கு வருகிறது. உடனடியாக விசாரிக்கச்
சொல்லுகிறேன். பழங்குடியினருகென்று சில சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
அதை தவறாகப் பயன்படுத்தி மரங்களை வெட்டுவது போன்ற தவறுகள் செய்தால்
நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அக்கறையுள்ளவராக. கல்வராயன் மலைப்
பகுதிகளில் இன்னும் பல இடங்களில் புகைந்து கொண்டிருக்கிறது. வனத்துக்கு
மட்டுமல்ல... நமது எதிர்காலத்துக்கும் நெருப்பு வைப்பவர்களை அரசு
உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இல்லை-யெனில் சில வருடங்களில்
கல்வராயன் மலை கரைந்துவிடும்.