தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தகுதி இல்லாத தமிழக மற்றும் மத்திய அரசின் ஆட்சியாளர்கள் !

இந்த தலையங்கம் நேற்று தினமணியில் வந்தது , இதில் உள்ள சில விடயங்கள் விவாதத்திற்குரியது என்றாலும் , ஒட்டுமொத்த பார்வை நேராய் உள்ளதால் அப்படியே மீள் பதிகிறோம். மீள் பதிகிறோம் என்றால் , நாங்களும் இந்த நிலை பாட்டில் உள்ளோம் என்று அர்த்தம்.


அதன்  முழு விபரம் வருமாறு,




இலங்கைத் தமிழர் பிரச்சினையை மட்டுமல்ல, இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்சினையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அந்நிய நாட்டின் பிரச்சினை என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.


இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு பிரச்சினை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.



அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இலங்கையில் முல்லைத்தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.



இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணை புரிகிறோம் என்கிற சாக்கில், பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன் இலங்கை இராணுவத்துக்கும் அதிக அளவில் உதவ முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.


கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் தகர்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே. விவசாயம் முழுமையாக அழிந்து விட்ட நிலைமை. தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது. பழைய நிலைமைக்குத் திரும்பி இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும் என்கிற சூழ்நிலையில், இவர்கள் மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து விடுமோ என்கிற நியாயமான அச்சம் எழுகிறது.



இலங்கையில் முல்லைத்தீவுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு, பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக் காத்திருந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நந்திக்கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக வந்த தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


நந்திக்கடல் பகுதிகளில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதன் மூலம், மீன் பிடிப்பதன் மூலம் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில் சீனர்கள் ஈடுபடுவர் என்று கருத வாய்ப்பிருக்கிறது. இந்த இறால் பண்ணைத் திட்டத்தை சீன அரசின் உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

ஒருவேளை, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் உடல்கள் இந்தப் பகுதியில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்றும், சீனர்களின் உதவியுடன் அந்த உடல்களை முறையாக அழிக்காவிட்டால், தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் சில இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.


இறால் பண்ணை என்கிற பெயரில், சீன உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பிணங்களை அப்புறப்படுத்தித் துப்புரவு செய்யும் நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி நடை பெறுகிறது என்கிற ஐயம் ஏற்படுகிறது.



எது எப்படி இருந்தாலும், இலங்கையின் வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை சீனர்களுக்குத் தரப்படுவதை இந்தியா அனுமதிப்பது என்பது, தேவையில்லாத பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய வரவழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசு, சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டிருப்பது போதாதென்று, இன்று இல்லையென்றால் நாளை, சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது.


ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுக்குக் கருத்துச் சொல்லும் உரிமையும், தனது பாதுகாப்புக் கருதித் தலையிடும் உரிமையும் உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் தெரிவிக்கிறார். நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால் அந்த நாட்டு நிகழ்வுகளில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை கொண்டாடுகிறார்.


மியன்மாரிலும், பங்களாதேஷிலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.


ஆனால், இலங்கை பற்றிய பேச்சு வரும்போது மட்டும், இவர்கள் அனைவருமே ஒத்த குரலில் "அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம்' என்று கைகழுவி வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்களே, ஏன்?



அறுபதுகளில் காமராஜ், பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும், இந்தியாவின் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன், தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால் இலங்கைப் பிரச்சினையில் அன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளித்து வந்தனர்.



எழுபதுகளில், சி. சுப்பிரமணியம், பழ. நெடுமாறன் போன்றோர், தென்னிந்தியா அமைதிப் பூங்காவாக இருக்க இலங்கை இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம் என்பதை டில்லிக்கு உணர்த்திச் செயற்பட வைத்தனர்.




எண்பதுகளில் எம்.ஜி.ஆர்., ஆர். வெங்கட் ராமன், ஜி.கே. மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு டில்லி செவி சாய்த்தது. இலங்கை அரசு நமது கட்டுக்குள் அடங்கி இருந்தது.


இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும், தமிழர்கள் மீதான தொடர் தாக்குதல்களும், வருங்காலத்தில் தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து, மத்திய அரசைப் புரிய வைத்து, நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டதன் விளைவு, இப்போது சீனா இலங்கையில் பலமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.




இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அருணாசலப் பிரதேசம், அந்தமான், நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படப் போகிறது. ஒரு ராஜபக்ஷவை எதிர் கொள்ளும் இராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின் கையில் நாடும் ஆட்சியும் அதிகாரம் சிக்கிச் சீரழிகிறது. இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும் இலங்கையும் மீன்பிடிக்க முற்படாது?


#1 unmai 2010-07-18 07:14

ஈழத்தமிழர்கள் நன்றாக வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்றான் என்று தெரிந்த சிங்களவன் ஆங்கிலேயர் கையாண்ட மோசமான் பிரிப்பை பாவித்து அவதந்திரதினால் எம் ஈழத்தை குழப்பி குட்டையாக்கினான ்.அபகரித்துகொண்டு இருக்கிறான்.சீனா இந்தியாவிற்கு குறி வைத்து கொண்டிருப்பது அதன் விளைவு தான்.இதை உணராத இந்தியா ஒருநாள் பாம்பின் வாய் கவ்வப்பட்ட எலியின் நிலைக்கு தள்ளப்படும் அப்போதாவது ஈழத்தமிழன் ஏன் தனக்கு என்று ஒரு நாடு தேவை என்றும் ஏன் விடுதலையை அவன் விரும்பினான் என்பதையும் துரோகிகளும் துட்ட அரசியல் வாதிகளும் கேட்க நாதியற்ற தமிழ் நல்ல உள்ளங்களும் உலக மக்களும் உணர்வார்கள்.அன்றுதான் தமிழன் விடிவும் உதயமாகும்.அது வரை இருப்பதை சுரண்டவும் சுருட்டவும் யார்தான் பின்னுக்கு நிற்பார்கள்?தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்பது பட்டினத்தாரின் செய்கையால் நியாய படுத்தப்பட்ட விடயம். இந்த அடியேனது கருதும் அதுவே அன்றி வேறொன்றில்லை.