தமிழக அளவில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தருவதற்கு பல அரசுப் பள்ளிகள் அல்லல்பட நேரிடுகிறது. சுயநிதி அடிப்படையில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டாலும், மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வழி இல்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள். ஆங்கில வழி கற்பித்தல் கட்டணமாக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் ஆண்டுக் கட்டணத்தை ரத்து செய்வதோடு, ஆங்கில வழி வகுப்புகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொடக்கத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிப் பாடத் திட்டத்தை மட்டுமே கொண்டிருந்தன. தனியார், மெட்ரிக் பள்ளிகளின் தாக்கத்தால், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியும் தேவை எனும் சூழல் எழும்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை அரசு தொடங்கியது. பின்னர் அதை சுயநிதி அடிப்படையில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கான ஆசிரியர்களை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமித்து, ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மாணவர்களிடம் இருந்து கற்பித்தல் கட்டணத்தை வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவில் கூறப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு தலா ரூ.200, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு தலா ரூ.250, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு தலா ரூ.500 எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, அரசுக்கு செலுத்தப்படுகிறது. ஆனாலும், மற்ற மாணவர்களுக்கு வழங்குவதைப்போல இலவச புத்தகங்கள், சீருடைகள், உணவு போன்ற பிற சலுகைகளை அரசு வழங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 5 முதல் 12 ஆசிரியர்கள் வரை பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் நியமித்துள்ளன. தொடக்கத்தில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சேர்க்கைக் கட்டணம் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒவ்வொரு அரசுப் பள்ளியும் ஒரு மாணவரிடம் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு தலா ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் போதிய நிதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை நீடித்தால், ஆங்கில வழி வகுப்புகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.