தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பலியாயினர்.

இந்த வழக்கை அதிமுக தரப்பு இழுத்தடித்தது. அதிமுக ஆட்சி இருந்தபோது வழக்கை நடத்த போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை.

எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் 28 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டு நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்தது. இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடந்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அல்தாப் அஹமத் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி குற்றவாளிகளுக்கு கீழ்க் கோர்ட்டுகள் விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதாடினர்.

அதிமுகவினர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார், இந்த வழக்கில் சாட்சிகள் நம்பகத்தன்மையுடன் இல்லை. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அனுமானத்தின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும் இவர்கள் செய்திருப்பார்கள் என்று கருதியும் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ள நிலையில் இந்த 3 பேரும் தான் பஸ்சை எரித்திருப்பார்கள் என்பது யூகமே.

மேலும் வாக்குமூலங்களை முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே இவர்கள் மீது குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இல்லாததால் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.சவுஹான் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

சொத்து குவிப்பு-கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா மனு:

இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது குடும்பத்தினர் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சிகளின் ஆவணங்களின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் மனு செய்யப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தின் நகல் வழங்கப்பட்டது. அந்த நகலில் தவறுகள் இருப்பதாகவும், எனவே அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் ஜெயலலிதா தரப்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிமன்றம், மொழி பெயர்க்கப்பட்ட ஆவணத்தில் இருக்கும் தவறுகளை மட்டும் சரி செய்ய மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடிப்பதாகக் கூறி திமுக போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டான்சி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மரணம்:

ஜெயலலிதா தலைமையிலான முதல் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

3வது தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா, அதிமுக ஆட்சி ஊழல் வழக்குகளை அவர் விசாரித்தார். டான்சி வழக்கில் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 68.