தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

13 வகை ரசாயாணக் கழிவுகள் கலந்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நினைத்தால் அச்சமாக இருக்கிறது-ஜெ.

இரு வேறு ரசாயனப் பொருட்கள் கலந்தாலே புதிய நச்சு வாயுக்கள் உருவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்ற போது, 13 வகையான நச்சுக் கழிவுகள் சேர்ந்தால் எத்தனை பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அதிமுக.பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அபாயகரமான கழிவுப்பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தி.மு.க. அரசின் கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த திட்டத்திற்கான அறிக்கை அப்பகுதியிலுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வுரி மையை பறிப்பதாக அமைந்துள்ளதே தவிர, கழிவுப் பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்று வதற்கான நடவடிக்கையாக தெரியவில்லை.

ஏற்கனவே, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்வளாகத்தில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 575 தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டில் வெளியாகும் 28,900 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை சேமித்து வைக்க பெருந்துறை சிப்காட் வணிக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் சேமிப்புக்கிடங்கு அமைக்க இருப்பதாகத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சேமிப்புக் கிடங்கு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நிறுவப்பட்டால், பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், ஏற்கனவே கூத்தம் பாளையம், செங்குளம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று நீர் உவர் நீராக மாறி விட்டதாகவும், சில பகுதிகளில் காற்றடிக்கும் போது, வயிற்றை குமட்டும் அளவுக்கு துர்நாற்றம் வீசு வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கையில், இத்திட்டம் அமையும் இடத்தைச்சுற்றி வறண்ட விவசாய பூமி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், 20 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி நீர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இத்திட்டம் அமையும் இடத்தைச்சுற்றியுள்ள கிராமங்களில் வாழை, தென்னை முதலியவை பெருமளவு விளைகின்றன என்றும், இந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் நதி இருக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வரைவு திட்டத்தில், 13 வகையான நச்சுக்கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இரு வேறு ரசாயனப் பொருட்கள் கலந்தாலே புதிய நச்சு வாயுக்கள் உருவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்ற போது, 13 வகையான நச்சுக் கழிவுகள் சேர்ந்தால் எத்தனை பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இந்த நச்சுக்கழிவுகளோடு மழை நீர் கலந்து பூமிக்குச் சென்றால், நிலத்தடி நீரும் மாசுபடும். ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக இப்பகுதியில் மழை வளமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், மக்கள் வாழும் பகுதிகளில் நச்சுக்கழிவுகளை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என்ற விதிமுறை மீறப்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பெருந்துறை மக்களின் கடுமையான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அறிவுரையையும் மீறி, இத்திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டம் 28.7.2010 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கருத்து கேட்புக்கூட்டம் என்ற பெயரில், இந்தத்திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை மட்டும் திரட்டி அரசுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஐயப்படுகிறார்கள்.

எனவே, ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அறிவுரையையும் புறந்தள்ளி விட்டு, இந்தத் திட்டத்தினை நடை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் அரசைக் கண்டித்தும், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நச்சுக் கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்தினை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில், வருகின்ற 2.8.2010 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பெருந்துறை தாலுகா அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தலைமை நிலையச் செயலாளர், கே.ஏ. செங்கோட்டையன், தலைமையிலும், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி. சிவசாமி, எம்.பி., மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் சி. பொன்னுதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.