செயல்பட்டதே விபத்துக்கான காரணம்' என, சயிந்தியா ரயில்வே ஸ்டேஷனின்
சிக்னல் பொறுப்பாளர் ரகுமான் அலி கூறியுள்ளார்.
மேற்கு வங்கம், பிர்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கோரமான ரயில்
விபத்து ஏற்பட்டது. சயிந்தியா ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த
வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மீது, அதே பிளாட்பாரத்தில் வந்த உத்தர்பங்கா
எக்ஸ்பிரஸ் ரயில், அசுர வேகத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில்,
66 பேர் பரிதாபமாக பலியாயினர். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து சயிந்தியா ரயில்வே ஸ்டேஷனின் சிக்னல்
பொறுப்பாளராக பணியாற்றும் ரகுமான் அலி கூறியதாவது:
நான்காம் எண் கொண்ட பிளாட்பாரத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று
கொண்டிருந்ததால், அந்த பிளாட்பாரத்தில் வேறு எந்த ரயிலும் வந்து விடக்
கூடாது என்பதற்காக, "ரெட் சிக்னல் போடப்பட்டு இருந்தது. இது நூறு சதவீதம்
உண்மை. சிக்னல் பழுதடைந்து இருக்கலாம் என, சிலர் கூறுவதில் எந்த
உண்மையும் இல்லை. உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நான்காம்
பிளாட்பாரத்துக்குள் நுழைந்தபோது, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், உடனடியாக,
"வாக்கி டாக்கி மூலம், உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் டிரைவரை தொடர்பு கொண்டார்.
அந்த பிளாட்பாரத்தில் ஏற்கனவே ரயில் நிற்பதை தெரிவித்தார். ஆனால், ரயில்
டிரைவரிடம் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை. அடுத்த 30
வினாடிகளுக்குள் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மீது மோதி
விட்டது. சிக்னலை பொருட்படுத்தாமல், டிரைவர் செயல்பட்டதே இந்த
விபத்துக்கு காரணம். ரயிலின் பிரேக் கோளாறாகி இருக்கலாம் என்றும் சிலர்
கூறுகின்றனர். அவ்வாறு கோளாறாகி இருந்தால், ரயிலின் டிரைவர், கார்ட்,
உதவி டிரைவர் என, யாராவது ஒருவர் எங்களை தொடர்பு கொண்டிருப்பர். ஆனால்,
யாரும் அதுபோல் கூறவில்லை. உத்தர்பங்கா எக்ஸ்பிரசின் டிரைவர் தவறு
செய்ததே விபத்துக்கு காரணம். இவ்வாறு ரகுமான் அலி கூறினார்.
தொடரும் குழப்பம்? டிரைவரின் தவறே, ரயில் விபத்துக்கு காரணம் என, ரயில்வே
தரப்பில் உறுதியாக கூறப்பட்டாலும், தவறான சிக்னல் காரணமாகவும் விபத்து
நடந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள்
கூறியதாவது: தானியங்கி, "இன்டர்லாக்கிங் என்ற முறை மூலம், ரயில்களின்
போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. ரயில் சந்திப்பு, கிராசிங் போன்ற
நேரங்களில் விபத்து நடந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது. இந்தமுறைப்படி, ஒரு பிளாட்பாரத்தில் ரயில் நின்று
கொண்டிருந்தால், அந்த பிளாட்பாரத்தில் மற்ற ரயில் வந்து விடக்கூடாது
என்பதற்காக சிக்னலில் தானாகவே, "ரெட் விழுந்து விடும். சில நேரங்களில்
இந்த சிக்கனல்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது உண்டு.
அந்த நேரத்தில் சிக்னல் இயங்காது. இந்த சமயங்களில் சம்பந்தப்பட்ட ரயில்
டிரைவருக்கு இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும். ஆனால்,
உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் டிரைவருக்கு அதுபோல் எதுவும்
தெரிவிக்கப்படவில்லை. சிக்னல் கோளாறு காரணமாகவும் இந்த விபத்து
நடந்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும், உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ், ரயில்வே
ஸ்டேஷனுக்குள் அதி வேகமாக வந்ததற்கான காரணமும் தெரியவில்லை. ஸ்டேஷனில்
நிற்பதற்காக வரும் ரயில், இத்தனை வேகத்தில் வர வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.