தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வகுப்புகள் ரத்தாகும் அவலம்: அரசுக் கல்லூரிகளில் தொடரும் காலிப் பணியிடங்கள்


தமிழகத்தின் பல அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்  காலிப் பணியிடங்கள் நிகழாண்டிலும் நிரப்பப்படவில்லை. இதனால் வகுப்புகள் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,055 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்தப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வது தொடர்பாக ஆசிரியர் தேர்வாணையம் மார்ச் 29-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலைப் பட்டத்துடன் மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலைப் பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டது.  விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, சென்னையில் முதல் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது.  இதில், கல்வித் தகுதிகளுக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்களும், கல்லூரி அல்லது பல்கலைக்கழகக் கற்பித்தல் பணி அனுபவத்துக்கு ஆண்டொன்றுக்கு இரு மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்களும் என மொத்தம் 24 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பணி நாடுநர்களின் கற்பித்தல் அனுபவத்துக்கான மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்கு இடையேயும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்தது. அடுத்த கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவோம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுவரை நேர்காணலுக்கான அழைப்பாணை அனுப்பப்படாததே இதற்குக் காரணம்.  இதனால், அரசுக் கல்லூரிகளில் நிகழாண்டிலும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கின்றன.  இந்நிலையில், கெüரவ விரிவுரையாளர்கள் பணி நியமனத்திலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால், அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு எடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.  எனவே, ஒவ்வொரு அரசுக் கல்லூரியிலும் சராசரியாக 10 முதல் 15 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி, திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 60 பணியிடங்கள் காலியாக இருக்கும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து பேராசிரியர்கள் மேலும் தெரிவித்தது:  "அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், வகுப்புகள் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.  இதனால், நாள்தோறும் ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணிநேரமோ வகுப்புகள் ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.  நிகழாண்டில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், நிகழாண்டிலும் காலிப் பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளது.  இந்நிலையில், அடுத்த 3 மாதங்களில் பருவத் தேர்வு தொடங்கவுள்ளது. எனவே, நிகழாண்டிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை நிலவுகிறது' என்றனர்.  எனவே, ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பணி நாடுநர்களுக்கு நேர்காணல் நடத்தி காலிப் பணியிடங்களில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்பதே பேராசிரியர்களின் எதிர்பார்ப்பு.