தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மருத்துவரின் மாவட்டத்தில் மாங்கனியை துண்டாடுவது யார்?

''சாராய சாம்ராஜ்யம், கட்டப் பஞ்சாயத்து ராஜ்யம் செய்பவரும், பல
கொலைகளைச் செய்தவருமான அலெக்ஸ் ரவி அவர்களை மாவட்டச் செயலாளராக நியமனம்
செய்ய பரிந்துரைத்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரத சோதி
வேல்முருகன் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்''

-இப்படியான சுவரொட்டிகள் மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டமான
விழுப்புரத்தில், வன்னியர் சங்கத்தின் பெயரால் ஒட்டப்பட பரபரப்பு பற்றிக்
கொண்டிருக்கிறது பா.ம.க.வில்.

யார் இந்த அலெக்ஸ் ரவி? ஏன் இந்த சுவரொட்டிகள்? வன்னியர் சங்க
வட்டாரங்களில் துருவினோம்.

''விழுப்புரத்தில் பிரபல ரவுடி மின்னல்ராஜா, தி.மு.க. பிரமுகர் கே.எஸ்.
ஆனந்த் ஆகியோர் கொலை வழக்கு உள்ளிட்ட சுமார் 40&-க்கும் மேற்பட்ட
வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அலெக்ஸ் ரவி. இவர் பா.ம.க.வில் மாவட்ட
மாணவரணிச் செயலாளராக இருந்தபோது டாக்டர் கொடுத்த காரிலேயே சாராயம்
கடத்தியதாக வழக்கு உள்ளது. அதன் பிறகு அடிப்படை உறுப்பினர்
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலெக்ஸ் ரவிக்கு இப்போது மாவட்டச் செயலாளர்
பதவி அளிக்கப்பட்டதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது'' என்றனர்.

பரபரப்பு கிளப்பிய அந்த போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்த பா.ம.க. மாணவரணி
செயலாளர் ஸ்ரீராமிடம் பேசினோம்.

''அலெக்ஸ் ரவியை சாராய வியாபாரி, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற
புகார்களின்படிதான் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார்
டாக்டர். ஆனால், மீண்டும் பா.ம.க.வில் வந்து சேர்ந்த அவருக்கு மாவட்ட
செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக பரிந்துரை செய்தவர்
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.

இவர், கடலூர் மாவட்டத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு விழுப்புரம்
மாவட்டத்தில் அரசியல் செய்கிறார். அதுவும் ரவுடிகளுக்கெல்லாம் பதவிக்கு
பரிந்துரை செய்கிறார். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, பா.ம.க.
தொண்டர்களின் கருத்தும்கூட. இதைச் சொன்னதற்காக என் மீது தலைமை
நடவடிக்கை எடுத்தாலும் சரி.. நான் சாகும்வரை பா.ம.க-.வுக்கு உண்மை
தொண்டனாக இருப்பேன்'' என்றார்.

இப்போது அலெக்ஸ் ரவி நியமிக்கப்பட்ட பதவில் இருந்த முன்னாள் மாவட்டச்
செயலாளர் அன்பு-விடம் பேசினோம். ''நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன் எந்த
செய்தியையும் பத்திரிகைகளுக்கு கூற எனக்கு அதிகாரம் இல்லை. எதுவாக
இருந்தாலும் தலைமைதான் சொல்லவேண்டும்'' என்று ஒதுங்கிக் கொண்டார்.

அவரது ஆதரவாளர்களிடம் பேசியபோது,

''கடந்த ஜூன் 13&ம் தேதி -தைலாபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழு
கூட்டத்தில் அன்புவை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், மறு
நாள் அலெக்ஸ் ரவி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதாக செய்திவருகிறது.
6 ஆண்டுகளாக அன்புதான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். விழுப்புரம்
மாவட்டத்தில் எஸ்.சி., எம்.பி.சி. இன மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.
இவர்களிடையே அடிக்கடி மோதல் வரும். அன்பு பதவியில் இருக்கும் வரை
இவர்களிடையே மோதல் குறைந்திருந்தது. இவர் பொன்முடியை எதிர்த்து
போராட்டம் நடத்தி அவர் உருவபொம்மையை எரித்து வழக்கில் ஜெயிலுக்கு
போனபோது, அன்புவின் அப்பா இறந்துவிட்டார். அப்பாவுக்கு கொள்ளி போடக்
கூட முடியாமல் கட்சிக்காக சிறையில் இருந்தார் அன்பு. இப்படிப்பட்டவரை
நீக்கிவிட்டு அலெக்ஸ் ரவி போன்றவர்களை பதவிக்குக் கொண்டுவருவது
கட்சிக்கு நல்லதாகத் தெரியவில்லை'' என்றனர்.

இந்த விவகாரம் குறித்து பா.ம.க.வின் புதிய மாவட்ட செயலாளராக
நியமிக்கப்பட்ட அலெக்ஸ் ரவியிடம் பேசினோம்.

''எனக்கு பதவி கொடுக்கக்கூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஏதோ காலத்தின் சூழ்நிலையால் தி.மு.க. அமைச்சர் பொன்முடி என் மீது போலி
வழக்குகள் போடவைத்தார். நான் கொலை செய்தேன் என்று சொல்லப்படும்
மின்னல்ராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவரையா நான் கொலை
செய்வேன்?

தி.மு.க.வின் தூண்டுதலால்தான் ஸ்ரீராம் எனக்கு எதிராக நோட்டீஸ் அடித்து
வன்னியர் சங்கம் சார்பில் வெளியிடுகிறார். நான் பதவிக்கு வந்தால் கட்சியை
வளர்க்கமாட்டேன் ரவுடியிசத்தைதான் வளர்ப்பேன் என்று சொல்கிறார்கள்.
ஆனால் எனக்கு ரவுடியிசமே தெரியாது'' என்றார்.

இந்த விவகாரம் பற்றி பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகனிடம் கேட்டபோது,
''இது முழுக்க முழுக்க ஒரு நாளிதழின் தூண்டுதலில் செய்யப்படும் வேலை.
அந்த நாளிதழில் எங்கள் கட்சிபற்றி தவறான செய்தி வெளியிட்டதை
கண்டித்தோம். அதனால் அவர்கள் இப்படி நூறு சுவரொட்டிகள் அடித்து ஒட்ட
வைத்திருக்கிறார்கள்'' என பட்டென முடித்துக் கொண்டார்.

பா.ம.க.வின் விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி தலை உருட்டப்படுவதைப் பற்றி
தி.மு.க.வினரிடம் பேசினோம்.

''அமைச்சர் பொன்முடிக்கு தனது அமைச்சகப் பணிகளையும், கட்சிப் பணிகளையும்
பார்க்கவே நேரம் போதவில்லை. அவர் ஏன் அடுத்த கட்சியின் உள் விவகாரத்தில்
தலையிடப் போகிறார்? எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி டாக்டர் ராமதாஸின்
தம்பியான சீனு கவுண்டரின் சிபாரிசால்தான் அலெக்ஸ் ரவிக்கு மாவட்ட
செயலாளர் பதவி கிடைத்ததாக பேசிக் கொள்கிறார்கள்'' என சூடாக
பதிலளிக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டத்திலேயே
மாங்கனியை துண்டாட சிலர் திட்டம் தீட்டுவது மட்டும் உறுதியாகப்
புரிகிறது.