தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மேம்படுத்தப்படுமா கிராமக் கல்விக் குழுக்கள்?


அரசுப் பள்ளிகள் வளர்ச்சியில் பள்ளி நிர்வாகத்துக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுபவை கிராமக் கல்விக் குழுக்கள். தமிழகத்தின் பல இடங்களில் இக்குழுக்கள் சரிவர செயல்படாததால் கிராமப்புறக் கல்வி வளர்ச்சியில் எதிர்பார்த்த வேகம் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. இக்குறையைப் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.   அரசுப் பள்ளிகளில் 1997-ம் ஆண்டில் கிராமக் கல்விக் குழுக்கள் தொடங்கப்பட்டன. இந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதி தலைவராகச் செயல்படுவார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் துணைத் தலைவராகச் செயல்படுவார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலராகச் செயல்படுவார். கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர், ஆதிதிராவிடர், தொண்டு நிறுவனப் பிரதிநிதி, பட்டதாரிகள் எனக் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் 6 பேர் என 15 பேர் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.  ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 17 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 22 ஆயிரத்து 500, உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 60 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் என்கிற அளவில் இக்குழுவின் நிர்வாகத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிதியில், மத்திய அரசின் பங்கு 85 சதவீதம்; மாநில அரசின் பங்கு 15 சதவீதமாகும்.  இந்தக் குழுவின் பொறுப்பாளர்கள் மாதந்தோறும் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து விவாதித்து, இந்நிதியைத் தேவையானதற்குப் பயன்படுத்த வேண்டும்.  இந்த நிதியானது ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும்,பள்ளிகள் தம் உடனடித் தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறது. பெற்றோர்களுக்கும் பள்ளி வளர்ச்சியில் அக்கறையுள்ள அந்தந்தப் பகுதியில் உள்ள கல்வியாளர்களுக்கும் சிறிய அளவில் ஓர் அதிகாரத்தை அளிக்கிறது. பள்ளி வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தும் ஒரு குழுவாக இதை முன்னெடுக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது.  உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் குக்கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்படும் கல்விக் குழு சிறப்பான செயல்பாட்டால் பல பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.   இந்தக் குழுவினர் கல்விக் குழுவின் செயல்பாடுகளையெல்லாம் தாண்டி, ஒரு நல இயக்கமாக உருவெடுத்து, பல்வேறு நலத் திட்டங்களை அந்தப் பள்ளியில் நிறைவேற்றியுள்ளனர். பல்வேறு கட்டுமானங்களுடன் மின் விசிறிகள்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காட்சிகள் வாயிலாக பாடம் நடத்த வகுப்பறைகள்தோறும் தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள் என ஏறத்தாழ ரூ. 7 லட்சத்தில் பல்வேறு வசதிகள் கல்விக் குழுவினர் முயற்சியில் இப்பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளன.   குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் சுயநிதி மற்றும் நன்கொடைகள் வாயிலாக இந்தப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையான வசதி கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கின்றனர்.  ஆனால், பல இடங்களில் இந்தக் குழுக்கள் பெயர் அளவிலேயே இருக்கின்றன. குழுவினர்  முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் பலர் கூட்டங்களில் பங்கேற்பதோ, ஆக்கபூர்வமாக செயல்படுவதோ கிடையாது. இதனால், பல இடங்களில் இக்குழுக்கள் பெயரளவிலேயே - பள்ளி நிர்வாகிகளில் கைப்பாவைகளால் நடத்தப்படும் அமைப்பாக - செயல்படுகின்றன.  இதற்குப் பள்ளி நிர்வாகங்கள் இந்தக் குழுக்களை தம்முடைய கட்டுப்பாட்டில் தமக்கு வேண்டியவர்களைக் கொண்டு அமைப்பதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தவிர, கல்வித் துறை இக்குழுக்களைக் கண்காணிக்காததும் இன்னொரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.    இதுகுறித்து மாங்குடி நடுநிலைப் பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் பாலாமணி ரங்கசாமி கூறியது:  ""கிராமக் கல்விக் குழுக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளன. ஒரு குக்கிராமத்திலுள்ள எங்கள் பள்ளி நகரப் பள்ளிகளுக்கு இணையாக இருக்க கல்விக் குழுவின் செயல்பாடும் ஒரு காரணம். ஆனால், இந்தக் குழுவின் வெற்றிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமணியே முக்கியப் பங்கு வகித்தார். அவர்தான் இக்குழுவின் செயல்பாடுகள் என்ன, ஆசிரியர்கள் - பெற்றோர்கள் கூட்டுமுயற்சியால் என்னென்ன செயல்களை சாதிக்கலாம் என்றெல்லாம் எங்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்.  அதேபோல, பல இடங்களில் கல்விக் குழுக்கள் செயல்படவில்லை என்றால், அதற்குக் காரணமும் பள்ளி நிர்வாகங்கள்தான். குழுக்கள் பெயர் அளவில் இருப்பதையே பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள்  விரும்புகின்றன. அரசும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் அவர்.   அரசு நல்ல நோக்கங்களுடன்தான் கல்விக் குழுக்களை அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட குழுக்களின்  ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்வதிலும் அரசுக்குப் பங்கு உண்டு. ஆகையால், கிராமக் கல்விக் குழுக்களின் நோக்கம் நிறைவேற இந்த அமைப்புகளின் மீது அரசின் பார்வை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.