சினிமாவில் காமெடியாகக் காட்டுவார்கள்.
ஆனால், தொழிலாளர்களின் தோழன் என கூறிக்கொள்ளும் அ.தி.மு.க.வின் அண்ணா
தொழிற்சங்கப் பேரவை பொறுப்பாளரே இப்படி ஒரு மோசடியை செய்திருக்கிறார்.
அதுவும் அரசு அதிகாரி ஒருவரின் பரிபூரண ஆதரவோடு. இந்த 'கொள்ளை
காம்பினேஷனை' திருச்சி மாவட்ட அழகிய மணவாளம் ஊராட்சி தலைவர் அனந்தராமன்
நம்மிடம் விளக்கினார்.
"எங்கள் ஊர் அருகே பழையூரில் அரிசி ஆலை கட்டும்போது கடந்த டிசம்பர்
மாதம் விபத்து ஏற்பட்டது. அதில் எங்கள் ஊரைச் சேர்ந்த விஜயா, புஷ்பவள்ளி,
ராஜேஸ்வரி மற்றும் பழையூரைச் சேர்ந்த மேகலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே
இறந்துவிட்டனர். இந்த விபத்தைப் பார்வையிட கலெக்டர் சவுண்டையா, மாவட்ட
தொழிலாளர் நல அதிகாரி இந்துமதி ஆகியோர் வந்தபோது, 'விபத்தில் இறந்த
கூலித் தொழிலாளர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்குமா?' என்று கேட்டோம்.
உடனே இந்துமதி, 'இந்த கிராமத்தில் யாரும் தொழிலாளர் நல வாரியத்தில்
உறுப்பினராக இல்லை. எனவே இவர்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்காது.
அரசு என்ன தர்மசத்திரமா?' என்று ஏளனமாகக் கேட்டார். ஆனால்... விபத்தில்
இறந்தவர்களின் உடல்களை பழையூர் மெயின் ரோட்டில் கிடத்தி வைத்திருந்த
போது திருப்பைஞ்சீலியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில இணைச்
செயலாளரான மாரியப்பன் அங்கே வந்திருக்கிறார். இறந்து கிடந்தவர்களையும்,
காயம் அடைந்தவர்களையும் போட்டோ எடுத்திருக்கிறார். இதெல்லாம் அப்போது
எங்களுக்குத் தெரியாது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு
தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தலா 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்,
காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தையும் மாரியப்பனிடம்
அதிகாரி இந்துமதி கொடுத்திருப்பது தெரியவந்தது. உடனே அதிர்ச்சியாகி
அதிகாரி இந்துமதியைப் போய்ப் பார்த்தோம்.
'அன்னிக்கு பணமே கிடைக்காதுன்னு சொன்னீங்க. இன்னிக்கு எப்படி நிவாரணத்
தொகை கொடுத்தீங்க? அதுவும் பாதிக்கப்பட்டவங்க யாரும் விண்ணப்பிக்கவே
இல்லையே... செக்கை கிராஸ் பண்ணித்தானே தருவீங்க. மாரியப்பன் எப்படி இந்த
நிவாரணத்தை வாங்கினார்?' என கேள்வி மேல் கேள்வி கேட்க, 'எனக்கு ஒண்ணும்
தெரியாது' என்று சொல்லி அழுதார் இந்துமதி. ஆனால்... தொடர்ந்து
விசாரித்தபோதுதான் இந்துமதி-, மாரியப்பன் இருவருமே கூட்டுக்
கொள்ளையர்கள் என்பது தெரிந்தது. அதனால், ஏமாற்றப்பட்டவர்கள் சார்பில்
மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தோம். இங்கு நடவடிக்கை இல்லாத
காரணத்தால் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அதன்பிறகுதான்
மாரியப்பன் கைது செய்யப்பட்டார்" என முடித்தார் அனந்தராமன்.
அந்த அரிசி ஆலை விபத்தில் பலத்த காயமடைந்த ராணியிடம் பேசினோம். ''சுவர்
இடிஞ்சு விழுந்ததுல சாரம் கட்டியிருந்த சவுக்கு மரத்துல போய் குத்தி,
ஒரு கிட்னியையே எடுக்கவேண்டியதாப் போச்சுங்க. கண்ணுல கல் விழுந்ததுல
பார்வையும் சரியா தெரியலை. நான் இப்படி கஷ்டப்படும்போது என் பேரைச்
சொல்லி மாரியப்பனுக்கு 50 ஆயிரம் ரூபா கொடுத்திருக்காங்க. இது எந்த ஊர்
நியாயம்?'' என்று பரிதாபமாகக் கேட்கிறார். இதுபற்றி திருச்சி தொழிலாளர்
நல அலுவலக வட்டாரங்களில் விசாரித்தோம். ''அமைப்பு சாரா தொழிலாளர்
நலவாரியத்தில் உறுப்பினராக ஏதேனும் ஒரு தொழிற்சங்கத்தின் பரிந்துரை
தேவை. தொடர்ந்து அந்தப் பதிவை புதுப்பித்து வந்தால் அவர்களுக்கு திருமண
உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து காப்பீடு, இயற்கை மரண உதவித்
தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை ஆகியவற்றை தொழிற்சங்கத்தினரே
பெற்றுத் தருவார்கள். இதைப் பயன்படுத்திதான் அண்ணா தொழிற்சங்கத்தின்
மாநில இணைச் செயலாளரான மாரியப்பன் வாரியத்தில் உறுப்பினராக
இல்லாதவர்களுக்கு முன்தேதியிட்ட உறுப்பினர் கார்டு போட்டு அவர்களது
வாரிசுகள் பெயரில் இழப்பீடு வாங்கி, அதைத் தானே
எடுத்துக்-கொண்டிருக்கிறார்.
இதற்காக இவர் சமர்ப்பித்த ஆவணங்களான எப்.ஐ.ஆர்., இழப்பீடு கோரும்
வாரிசுகளின் கடிதம், வாரிசுச் சான்றிதழ் அனைத்துமே போலியானவை. இதை
சரிபார்க்க வேண்டிய தொழிலாளர் நல அதிகாரி இந்துமதி கமிஷன்
பெற்றுக்கொண்டு கிராஸ் செய்யப்படாத செக்குகளை கொடுத்துள்ளார்.
இந்துமதி கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருச்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அவர் இங்கு வந்த 15 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட செக்குகளில் 95
சதவிகிதம் கிராஸ் செய்யப்படாத செக்குகள்தான். அவருக்கு வேண்டப்பட்ட,
கமிஷன் தரும் தொழிற்சங்கத்தினருக்கு மட்டுமே அப்படி வழங்கியுள்ளார்.
இந்த அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் இவர் வழங்கிய சுமார் ரூ. 1 கோடி
மதிப்புள்ள 358 செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது.
இதனால் மாதாமாதம் சுமார் ரூ.28 ஆயிரம் வங்கிக்கு அலுவலகம் தண்டத்தொகையை
செலுத்தி வருகிறது.
இது குறித்து புகார்கள் சென்றதால், மண்டல தொழிலாளர் நல இணை ஆணையர்
சங்கரி, இந்துமதியின் அலுவலகத்தை சோதனையிட்டார்.அப்போது, 'என் அனுமதி
இல்லாமல் என் அலுவலகத்தில் புகுந்து நான் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை
திருடிவிட்டார். மேலும், சங்கரி என்னை சாதியைச் சொல்லி
இழிவுபடுத்துகிறார்' என தன் மேலதிகாரி மீதே புகார் வாசித்தார் இந்துமதி.
அதனால், மண்டல இணை ஆணையர் பயந்து போய்விட்டார். இதுதான் இந்துமதியின்
டெக்னிக். அதனால்தான் மோசடி செய்த மாரியப்பனை கைது செய்தபோதும், அதற்கு
உறுதுணையாக இருந்த இந்துமதி மீது இன்னும் நடவடிக்கையே இல்லை. அவர் நீண்ட
விடுப்பில் போய்விட்டார்'' என்றனர்.
''இந்துமதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?'' என்று மண்டல
தொழிலாளர் நல அதிகாரி சங்கரியிடம் கேட்டோம். ''அதெல்லாம் உங்களுக்குத்
தேவையில்லாத வேலை'' என்று பொறுப்பாக (!) பதிலளித்தார். இந்துமதியிடம்
விளக்கம் கேட்க தொடர்பு கொண்டால் செல்போன் அணைத்து
வைக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரும் உதவித் தொகையை இப்படி ஈரமே இல்லாமல்
கொள்ளையடிப்பவர்களை அரசு இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் வேடிக்கை
பார்க்கப்போகிறது?