தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஏழை மாணவரின் ‘பறக்கும்’ கனவு: எட்டிப் பிடிக்க உதவுவார்களா நல்ல உள்ளங்கள்?

முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவதிலும், ஏழை மாணவர்களின் கல்விக்கு
வழிகாட்டுவதிலும் முனைப்பு காட்டும் 'வெளிச்சம்' அமைப்பின் தலைவர் ஷெரின்
சில நாட்களுக்கு முன் நம்மைத் தொடர்பு கொண்டார்.

''தோழர்... சிறகடிச்சு பறக்க ஆசைப்படும் கோவையைச் சேர்ந்த ஒரு ஏழை
மாணவன் பணம் இல்லாத ஒரே காரணத்தால் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கிட்டிருக்கான். அவனுக்கு உங்க உதவி தேவை. படிக்குற
காலத்துலேர்ந்து பணம் சேர்த்து வாங்கின செல்போனை வித்துட்டு அந்த
பணத்துலதான் இப்ப உதவி கேட்டு கோவையிலேர்ந்து சென்னைக்கு
வந்திருக்கான்'' என்றார் ஷெரின்.

உடனே ஷெரினை சந்தித்தோம். அவர் கூட வந்த அந்த மாணவர் அல்லிமுத்து. நம்மிடம் அவர்,

'' கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பக்கத்துல பிரஸ்காலனி பகுதியில
இருக்கேன். எங்க அப்பா கோயமுத்தூர்ல ஒரு கம்பெனியில அச்சுல வார்க்குற
இரும்பை வெட்டி எடுக்கும் தினக் கூலி வேலை பாக்குறாரு. ஆனா அவர்
கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சாரு. பி.எஸ்.சி. படிக்கும்போது
என்.சி.சி.யில சேர்ந்தேன். நான் நல்லா ப்ராக்டிஸ் பண்றதைப் பாத்துட்டு
'ஏர் விங்'கில் சேர்த்தாங்க.

'ஏர் விங்'ல சிறப்பா செயல்பட்டதுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர்
அப்துல் கலாம், முன்னாள் தமிழக ஆளுனர் ராம்மோகன் ராவ் ஆகியோரிடம்
விருதுகள் வாங்கியிருக்கேன். சின்ன வயசுலயே எனக்கு விமானம் ஓட்டணும்னு
ரொம்ப ஆசை. அப்துல் கலாம் ஐயா கையால விருது வாங்கினதால அது
வெறியாயிடுச்சு. இதுவரை சுமார் 30 மணி நேரம் விமானத்தை ஓட்டிப்
பறந்திருக்கேன்'' என கண்கள் விரியப் பேசிய அல்லிமுத்து அடுத்தடுத்துப்
பேசும்போது பரிதாபப் பள்ளத்தில் விழுந்தார்.

''இந்தியாவுல மொத்தம் 42 விமானப் பயிற்சி கல்லூரிகள் இருக்கு சார்.
தமிழ்நாட்ல சேலத்துலயும், சென்னையிலயும் ஃப்ளையிங் ஸ்கூல் இருக்கு.
எனக்கு சேலம் ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்கு. இப்ப எனக்கு கமர்ஷியல்
ஃப்ளையிங் ஸ்கூல்ல படிக்க வாய்ப்பு வந்திருக்கு. 'ஆகஸ்ட் ரெண்டாவது
வாரத்துலேந்து கோர்ஸ் ஆரம்பிக்குது எப்போ வந்து சேரப் போறீங்க?'ன்னு
கேக்குறாங்க. ஆனா அதுக்கான வசதி இல்ல சார்.

எனக்கு சுதான்னு ஒரு தங்கச்சி இருக்கு. வீட்ல யாராவது ஒருத்தரைத்தான்
படிக்க வைக்க முடியும்கிற நிலைமை. அதனால சுதா, 'அண்ணே நீ நல்லா
படிண்ணே'ன்னு சொல்லி தன் படிப்பையே நிறுத்திட்டு வேலைக்கு போய்
சம்பாதிச்சு எனக்கு கொடுத்துச்சு. விமானத்தை ஓட்ட ட்ரைனிங் எடுக்கணுமே.
மொத்தக் கட்டணம் 18 லட்ச ரூபாய்.

இதுக்காக நான் வங்கிக் கடன் வாங்கலாம்னு முடிவு பண்ணி அதுக்கு
விண்ணப்பிச்சேன். என் காலேஜ் கேம்பஸ்ல இருக்குற 'ஸ்டேட் பேங்க் ஆஃப்
இண்டியா' வங்கியிலேர்ந்து எனக்கு கடன் தர சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனால்,
18 லட்ச ரூபாய் பெரிய அளவுங்குறதால அதுக்கு இணையான அசையா சொத்துக்கான
பத்திரம் கொடுத்தாதான் கல்விக் கடன் வழங்கப்படும்னு சொல்லிட்டாங்க.
கலெக்டருக்கு மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டதுன்னு லெட்டர்
வந்துச்சு. இப்ப வானத்துல விமானம் பறக்குறதப் பாத்தாலே மனசு கெடந்து
அடிச்சுக்குது. ஆனா, கையில காசு இல்லையே...'' என தன்னைத் தானே
நொந்துகொண்டார் அல்லிமுத்து. உடனே நமது கோவை நிருபரை சந்திக்கச்
சொல்லி அல்லிமுத்துவை கோவைக்கு அனுப்பினோம். கோவையில் 'தமிழக
அரசியல்' ஆக்ஷன் ஆரம்பித்தது.

அல்லிமுத்து கல்வி உதவி கேட்டு கலெக்டருக்கு அனுப்பிய மனு, கலெக்டரை
சுற்றியுள்ள அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட விஷயம் தெரிந்தது. உடனே,
அல்லிமுத்துவை அழைத்துக் கோண்டு, கலெக்டர் உமாநாத்தை நேரில்
சந்தித்தோம். தனது சான்றிதழ்களைக் காட்டி தனது குடும்ப நிலையை
அல்லிமுத்துவே கலெக்டரிடம் விளக்க... ஆச்சரியப்பட்டார் கலெக்டர்.

''கல்விக் கடன் 5 லட்ச ரூபாய் வரை எந்த ஷ்யூரிட்டியும் தேவையில்லை.
அதனால் 5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், இப்போதே வழங்குமாறு வங்கிக்கு
உத்தரவிட்டு விடுவேன். ஆனால் 18 லட்ச ரூபாய் என்றால் வங்கிகள் ஷ்யூரிட்டி
கேட்கத்தான் செய்வார்கள். இருந்தாலும் அல்லிமுத்துவுக்கு கல்வி கடன்
கிடைக்க ஏதாவது வகை செய்யமுடியுமா? என்பதை நானே நேரடியாக ஆராய்ந்து
கல்விக் கடன் கிடைக்க என்னால் முடிந்ததை விரைவாக செய்து கொடுக்கிறேன்,
அதோடு வேறு யாராவது மூலமாகவும் அல்லிமுத்துவுக்கு உதவ முடியுமா என்றும்
பார்க்கிறேன்'' நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, அல்லிமுத்துவுக்கு
வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார் கலெக்டர்.

அல்லிமுத்து படித்த பெரியநாயக்கன் பாளையம் ராமகிருஷ்ணா கல்லூரி
வளாகத்துக்குள் உள்ள 'ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா' கிளையின் தலைமைக்
காசாளர் பாபுவிடம் பேசினோம்.

''அல்லிமுத்து கல்விக் கடன் கேட்டு இங்கே விண்ணப்பித்திருந்தார். ஆனால்,
கடன் தொகை பதினெட்டு லட்சம் என்பதால் ஷ்யூரிட்டி இல்லாமல் கடன் கொடுக்க
சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே, அல்லிமுத்துவின் ரத்த சொந்தம் அல்லாத
வேறு யாராவது சொத்து ஆவணங்களை சமர்ப்பித்தால் அல்லிமுத்துவுக்கு கடன்
வழங்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.

அல்லிமுத்துவின் பைலட் கனவு மலர்ந்து அவர் வானில் பறக்க-வேண்டுமென்றால்
நல்ல உள்ளம் கொண்ட பணக்காரர்கள் மனது வைக்க வேண்டும். தொழிலதிபர்கள்
நிறைந்துள்ள கோவை, திருப்பூர் பகுதியில் அல்லிமுத்துவை பைலட் ஆக்க
யாரேனும் உதவினால்... அவர்-களின் புகழும் அல்லிமுத்துவைப் போலவே
வானளாவப் பறக்காதா என்ன?