மதில்சுவர் பிரகாரத்தில் அடைத்து வைக்கப்பட்ட வழியை, திறந்துவிடக் கோரி
தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியினர்
போராட்டம் நடத்தினர்.
தெற்குவாசல் வழியாக ஊர்வலமாக வந்தவர்கள் கோயிலில் நுழைய முயன்றபோது 472
பேர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் குறித்து முதல்வர் கலைஞர்
அடித்த கமென்ட்தான் தற்போது பெரும் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி
போட்டிருக்கிறது.
''சிதம்பரம் கோயிலுக்குள் நந்தனார் நடந்து வந்த பாதை இது. அந்தப் பாதையை
மதில் வைத்து அடைத்துள்ளார்கள். அதை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்
கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். நந்தனார் இருந்தாரா இல்லையா
என்பது வேறு விவகாரம். நந்தனாரை கோயில் உள்ளே போகவே விடவில்லை. அப்படி
இருக்க அவர் எப்படி இப்பாதையில் போயிருக்க முடியும்? இவர் உள்ளே
வந்தபோது நந்தி மறைத்தது. வழி மறைத்திருக்கிறதே நந்தி என்று பாடிய
பாட்டெல்லாம் இருக்கிறது. நந்தி மறைத்தது. ஆகவே நந்தனார் உள்ளே
போகவில்லை. நந்தி மறைத்தால் நந்தனைக் காண்பதற்காக உள்ளேயிருந்த சாமி,
நந்தா நீ விலகி வா என்று சொன்னாரே தவிர, நந்தா உள்ளே வா என்று சாமியும்
சொல்லவில்லை, நந்தனும் போகவில்லை இதுதான் கதை.
இந்த கதையை மாற்றி இந்த வழியாகதான் நந்தனார் போனார். போகும்போது, நான்
பார்த்தேன். என்னிடம் வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக்கொண்டு போனார்
என்றெல்லாம் சொல்லி, நந்தன் பாதையை அடைக்கக்கூடாது, அது தீண்டாமைச்
சுவராக ஆகிவிடும் என்று கூறி போராடுகிறார்கள். எதற்கு நந்தனுக்காகவா?
அல்ல இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு நந்தியாக இருந்து கெடுக்க
வேண்டும் என்பதற்காக'' -என்பதுதான் கலைஞர் பேசிய பேச்சு.
இதுபற்றி சிதம்பரம் வெங்கடேச தீட்சிதரிடம் கேட்டோம். ''நந்தனார் வாழ்ந்த
காலம் 5 அல்லது 6-ம் நூற்றாண்டு. இவரைப் பற்றி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையில் 'செம்மையே திருநாளைப்
போவார்க்கு மடியேன்' என்ற வரியாலும், அவருக்குப் பின் 11-ம்
நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர்
திருவந்தாதியில் 'நாவார் புகழ்த்தில்லை' என்ற பதிகத்தாலும் அறியலாம்.
வைத்தீஸ்வரன்கோயில் அருகே-உள்ள ஆதனூரில் நந்தனார் வாழ்ந்தார் என்றும்,
கோயில்களுக்குத் தேவையான தோல் கருவிகள் செய்து தரும் தொழில் செய்தார்
என்றும் செய்திகள் உண்டு. 12&ம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய
புராணத்தில் 'திருநாளைப் போவார்' புராணத்திலுள்ள 37 பாடல்களில் நந்தனார்
பற்றிய செய்திகள் வந்துள்ளன.
ஆனால் நந்தனார் நுழைவுவாயில் என, தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற
மூன்றாம் மதில் பிரகாரம் கி.பி.1178 முதல் 1218 வரை ஆட்சிபுரிந்த
குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக இந்திய தொல்பொருள்
கல்வெட்டு ஆராய்ச்சி குறிப்பு (80/1928) உள்ளது. இதுபற்றிய வடமொழி
கல்வெட்டு கும்பகோணம் அருகேயுள்ள திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலில்
இன்றும் உள்ளது.
ஆக 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தனார் எப்படி 11-ம் நூற்றாண்டில்
கட்டப்பட்ட மதில் சுவர் வழியாகச் சென்றிருக்க முடியும்? 1937 முதல் 1987
வரை நடந்த 4 குடமுழுக்கு திருப்பணி நடந்த காலங்களில் மட்டும் கருங்கல்
மற்றும் இதர கட்டுமானப் பொருட்கள் எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக அந்த
மதில்சுவர் திறக்கப்பட்டு பின்பு மூடப்பட்டுவிடும்.
அதே நேரத்தில் இறைவன் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த நந்தனார்
ஹோமகுளத்தில் இறங்கி தெற்கு கோபுரத்தை தரிசனம் செய்து கொண்டே
இறைவனுடன் ஐக்கியமானார் என்பதும் புராணத்துச் செய்தி.
அதனால்தான் இன்றும் சேக்கிழார் குருபூஜையன்று நந்தனார் உள்பட
அறுபத்துமூவர் வீதியுலாவும், நந்தனார் குரு பூஜையை புரட்டாசி மாதம்
ரோகிணி நட்சத்திரத்தன்று மிகச் சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்நிலையில்
நந்தனார் நடராஜரை தரிசிக்க வந்தவழி மூடப்பட்டுவிட்டது என்பது பொய்''
என்று கூறியவர்,
''அதே நேரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால்தான் சுவர்
இடிக்க முடியாத சூழல் உள்ளது என்று தமிழக அரசு கூறுவதும் தவறு'' என்று
முடித்தார்.
இந்த சர்ச்சை பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராமச்சந்திரன்,
மாவட்டக் குழு உறுப்பினரான நடராஜன் ஆகியோர் நம்மிடம்,
''சிதம்பரத்தை சுற்றியுள்ள நான்கு மாவட்ட தலித் மக்களிடையே நந்தனார்
தெருக்கூத்து நாடகங்கள் எல்லாம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.
ஆதிக்க சக்திகளால் நந்தனாருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அதில்
விளக்குவார்கள். கிழக்கு அல்லது மேற்கு கோபுர வாசல் வழியே நடராஜரை
தரிசிப்பதைவிட தெற்கு கோபுர வாசல் வழியே வந்து அடைப்பட்டுக் கிடக்கிற
சுவரை திறந்துவிட்டால் தரிசனம் செய்வது மிகவும் எளிது. அதனைச் செய்வதில்
என்ன தவறு? நந்தனார் சென்று வழிபட்ட ஒரே காரணத்துக்காக சுவர்
வைத்திருக்கிறார்கள். அது தீண்டாமைச் சுவராக தலித் மக்கள் மனதில் ஆறாத
சுவடாக இருக்கிறது. தமிழக அரசு வசம் கோயில் இருப்பதால், அந்தத்
தீண்டாமைச் சுவரை அகற்றுங்கள் என்று போராட்டம் நடத்தினால், முதல்வர்
நக்கலடிக்கிறார். விரைவில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அந்தச் சுவரை
இடிப்போம். இது உறுதி'' என்றனர். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 11&ம் தேதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தா.பாண்டியன் தலைமையில் இதே காரணத்துக்காக
கண்டனப் போராட்டம் நடத்துகிறது.
வரும் செப்டம்பரில் நந்தனாரின் குருபூஜை நடக்க இருப்பதால் அதற்குள் என்ன
வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பரபரப்பு இப்போதே
தொற்றிக்கொண்டிருக்கிறது சிதம்பரத்தில்!